ஆட்டோ பயோகிராஃபி ஆஃப் சைல்ட் – 3

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

சூர்யா லட்சுமிநாராயணன்18.06.2010
வெ ள்ளிக் கிழமை

நேற்று சினிமாவுக்கு கூட்டிச் சென்றுவிட்டு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்காமல், பாப்கார்ன், இரண்டு கேக், ஒரு முட்டை போண்டா, ஒரு புல் பெப்சி, ஒரு சமோசா சென்னா போன்ற சில்லறை ஐட்டங்களை மட்டுமே வாங்கிக் கொடுத்து ஏமாற்றி விட்ட இந்த பொறுப்பற்ற பெற்றோர்களை என்ன செய்வதென்று எனக்கு நிஜமாகத் தெரியவில்லை. சினிமாவுக்கு கூட்டிச் சென்றால் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என நூறு முறை இம்போசிசன் எழுத வைக்கலாமா? இல்லை, நூறு ஐஸ்கிரீமை வாங்கி வரச் சொல்லி வரிசையில் நிற்கச் செய்து ஒவ்வொன்றாக டேஸ்ட் பண்ணிப் பார்க்கலாமா? இல்லை, ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்காத குற்றத்துக்கு குழந்தைகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பலாமா? ஒன்றுமே புரியவில்லை. ஏதோ சிங்கம் படத்துக்கு கூட்டிச் சென்றதால் மன்னித்து விட்டுவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

படம் பார்த்துக் கொண்டிருந்த போது நான் என் அப்பாவிடம் கூறினேன். ஒவ்வொரு முறையும் என் பள்ளிச் சீருடையை அளவு பெரிதாகத் தைத்துவிடும் அந்த டெய்லரை கூப்பிட்டு இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லுங்கள் என்று. என் தந்தை ஏதோ தன்னை மறந்த நிலையில், அநிச்சையாக கேட்டார் ஏன்? என்று. நான் இந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டிருந்த போது அனுஷ்கா ஆன்டி ஒரு பாடலுக்கு திரையில் ஆடிக்கொண்டிருந்தார்.

நான் என் அப்பாவிடம் கூறினேன். அடுத்தமுறை எனது பள்ளிச் சீருடைக்கு அனுஷ்கா ஆன்டியின் டிரஸ்தான் அளவு டிரஸ். இதை அந்த மரமண்டை டெய்லருக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது. அதனால்தான் படத்தைப் பார்க்கச் சொல்ல சொன்னேன். இந்த முறை என் அப்பா பதில் கூறவே இல்லை.

நான் எனக்குள் இப்படி கூறிக் கொண்டேன். நாம் ஒவ்வொரு முறையும் அப்பா சிங்கம் படத்தின் பாடல் காட்சியை கவனித்தது போல், கணித வகுப்பை கவனித்தோமேயானால் நிச்சயமாக நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கலாம் என்று. நான் என் தந்தையிடம் இதை மட்டும் உறுதியாக கூறிவிட்டேன். (படம் முடிந்த பின்) அதாவது இனிமேல் என் டெய்லர், அனுஷ்கா ஆன்டி டெய்லர் இருவரும் ஒருவரே. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.

என் தந்தை ஏன் என் பேச்சை கவனிக்கவில்லை என்பதில் எனக்கு கடுமையான கோபம் இருந்தது. அதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என இப்பொழுதுதான் எனக்குப் புரிகிறது. படம் ஆரம்பித்த பொழுது கதாநாயகனின் முத்தையும், சிங்கத்தின் முகத்தையும் கிராஃபிக்சில் மாறி மாறி காண்பித்தார்கள். நான் பயந்தே போனேன். பயத்தில் என் தந்தையிடம் கண்ணீர் விட்டபடி அவசரப்பட்டு இவ்வாறு கூறினேன்.

” என்னை கடைசில விஜயகாந்த் படத்துக்கு கூட்டி வந்துட்டீங்களேப்பா. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?, உங்க நெஞ்சுல ஈரமே இல்லையா?. இதயம்னு ஒண்ணு இருந்தா இப்படியெல்லாம் செய்வீங்களா?. இதுக்கு நான் எங்க கணக்கு வாத்தியார் வகுப்புக்கே போயிருப்பேனே, நான் லீவு போட்டதெல்லாம் வீணா போச்சே”

சற்று தாமதித்து பார்த்த பொழுதுதான் தெரிந்தது. அது சூர்யா அங்கிள். படம் 5 நிமிடம் போனாலும் பரவாயில்லை என நினைத்த நான், கண்களை மூடிக்கொண்டு அந்த கடவுளுக்கு மனமுருக நன்றி கூறினேன். கண்களை திறந்து பார்த்த பொழுது அனுஷ்கா ஆன்டி ஆடிக்கொண்டிருந்தார்கள். அந்த நிமிடத்திலிருந்து தான் என் தந்தை என்னிடம் சரியாக பேசவில்லை. அவருக்கு என் மேல் கடுமையான கோபம் போல.

அன்றொரு நாள் என் விளையாட்டு ஆசிரியர் இந்த கேள்வியை என்னிடம் கேட்டார். உலகிலேயே வேகமாக ஓடக்கூடிய மனிதர் யார் என்று. நான் வேகமாக கையைத் தூக்கி சற்றும் தாமதிக்காமல் அந்த பதிலைக் கூறினேன். என் ஆசிரியரும் சற்றும் தாமதிக்காமல் ‘சலுப்’ என்று கன்னத்தில் அறைந்து விட்டார். அவர் கூறுகிறார், யாரோ உசைன் போல்ட்டாம், அவர்தான் உலகத்திலேயே வேகமாக ஓடக் கூடியவராம். என்ன ஒரு மோசமான பொய் இது. நான் என் இரண்டு கண்களால் பார்த்திருக்கிறேன். வேகமாக ஓடக்கூடிய அந்த நபரை. உசைன்போல்ட் கூட வெறும் கையை வீசிக் கொண்டுதான் ஓடியிருப்பார். ஆனால் நான் பார்த்த அந்த மனிதர் தன் கைகளில் படச்சுருள் நிரம்பிய கேமராவை தூக்கிக் கொண்டு ஓடோ ஓடு என்று ஓடியிருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை. சிங்கம் படத்தின் கேமராமேன் அங்கிள்தான். என்ன வேகமாக ஓடி ஓடி படமெடுத்திருக்கிறார். நான் எப்படி தெரிந்தே ஒரு பொய்யை ஏற்க முடியும். இந்த நாட்டில் உண்மைக்கே இடமில்லை. திருநெல்வெலியில் உள்ள நல்லூருக்கும், ஆந்திராவில் உள்ள நெல்லூருக்கும் இடையே நாயாய் ஓடியிருக்கும் அந்த ஆன்மாவை புரிந்துகொண்ட ஒரே உயிர் நான் மட்டுமே. ஏற்கனவே ஒரு படத்தில் சென்னையிலிருந்து, திண்டுக்கல்லுக்கு 10 நிமிடத்தில் வந்து கின்னஸ் ரெக்கார்ட் நிறுவனத்தை அசிங்கப்படவைத்த, வெட்கி தலைகுனிய வைத்த ஹரி அங்கிள், இந்தப் படத்தில் தனது ரெக்கார்டை தானே முறியடித்துவிட்டார். அவ்வளவு வேகம், ஆம் சற்று கண்ணிமைத்துவிட்டால் பாதிபடம் முடிந்துவிட்டது போன்ற ஒரு உணர்வு. ஆனால் நமது இந்திய அரசாங்கத்துக்கு ஒரு முக்கிய கடமை உண்டு. அது என்னவெனில் கின்னஸ் நிறுவனத்தை சேர்ந்த எவரையும் படத்தை பார்க்கவிட்டுவிடக் கூடாது. ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையின் உச்சத்தில் உள்ள அவர்கள் இதைப் பார்க்க நேர்ந்தால் அந்த நிறுவனத்தை மூடிவிடலாம். அல்லது……… அல்லது………..தற்கொ……….. ஐயோ அதைக் கூறவே பயமாய் இருக்கிறது. ஒளி¤யின் வேகம்தான் இருப்பதிலேயே அதிகம் என ஐன்ஸ்டீன் தவறாக கூறிவிட்டார். இல்லை, இல்லை, சிங்கம் படம்தான் வேகம் என தன் கூற்றை வாபஸ் வாங்கியிருப்பார் அவர் மட்டும் உயிரோடிருந்தால்.

ஆனால் ஹரி அங்கிளுக்கு இந்த படத்திற்கு “சிறந்த சமுதாய உணர்வு மிக்க திரைப்படம்” என்கிற அவார்டு நிச்சயம் கிடைக்கும். அப்படி மட்டும் கொடுக்கவில்லை எனில், நீண்ட நாட்களாக 4 தகரத்திற்கு பெயிண்ட் அடித்து வைத்து அரசு பேருந்து என்று பொய்யாக எழுதி வைத்திருக்கும் அந்த வாகனத்தை தீயிட்டு கொளுத்திவிடலாம் என்றிருக்கிறேன். அந்த பேருந்து ஒரு இலவச கொசு விரட்டியாக செயல்பட்டு ஊருக்கு நன்மை செய்து கொண்டிருந்தாலும், அந்த நன்மையை நான் பொருட்படுத்தப் போவதில்லை. மேலும் தனது கருத்தை நிலைநாட்ட அரசு பேருந்தை கொளுத்துவதுதான் நமது கலாச்சாரம். நான் என்றுமே கலாச்சார உணர்வுக்கு மதிப்பு கொடுப்பவன். காரணம்…

எல்லா திரைப்படங்களிலும், ஏதேனும் ஒருமெசேஜ் இருக்கும். வாய் கிழிய வக்கனையாக பேசியிருப்பார்கள். காதில் ரத்தம் வரவர கருத்து சொல்லியிருப்பார்கள். பின் படத்தை பற்றி பக்கம் பக்கமாக எழுதி சம்பாதித்து விட்டு போய்விடுவார்கள். ஆனால் எந்தபடமாவது நேரடியாக சமுதாயத்துக்கு உதவியிருக்கிறதா? பிச்சைக்காரர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி நெஞ்சம் நெகிழ படமெடுத்திருப்பார்கள். ஆனால் பிச்சைக்காரனுக்கு 5 ரூபாய் கொடுக்க மாட்டார்கள். சோம்பேறி பிச்சைக்காரனை கத்தியால் குத்தி கொலை செய்வார் அந்நியன். ஆனால் அவனுக்கு ஒரு வேலைவாங்கி கொடுத்தால் அவன் ஏன் பிச்சை எடுக்க போகிறான் என்று நினைக்க மாட்டார். ஏனெனில் குத்துவது தான் எளிது. உதவி செய்வது கடினம்.

ஆனால் ஹரி அங்கிள் அப்படியில்லை. அவர் ஊரில் உள்ள அத்தனை இயக்குநர்களுக்கும் முன்னுதாரணம். சிறந்த சமுதாய சேவகர். சென்னை கமிஷனர் ராஜேந்திரன் அங்கிளுக்கு வேலையே இல்லாமல் செய்துவிட்டார். சென்னையில் எங்கு தேடினாலும் இனி ஒரு ரவுடி கூட கிடைக்காமாட்டான். சிறப்புப் போலீஸ் படை அமைத்து தேடினாலும் அவர்கள் கிடைக்க மாட்டார்கள். ஒரு வேளை சி.பி.ஐ. சிறப்பு கவனம்செலுத்தி தேடினால் அவர்களுக்கு இதுதான் பதிலாய் கிடைக்கும்.

“அனைத்து ரவுடிகளும் சிங்கம் படத்தில் வில்லன்களாக பொறுப்புடன் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்”

ராஜேந்திரன் அங்கிள் பற்களை நறநறவென கடித்துதான் என்ன பிரயோஜனம். அவர்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துவிட்டது. இனி அவர்கள் கிரைமில் இறங்க மாட்டார்கள். அவர்கள் அனுஷ்கா ஆன்டியை துரத்தோ துரத்து என்று துரத்துவார்கள். அது கூட பொய்தான். கைது செய்ய வாய்ப்பேயில்லை. சூர்யா அங்கிளிடம் கன்னாபின்னாவென சண்டை போடுவார்கள். அப்பொழுதும் ஒன்றும்செய்ய முடியாது. அவர்கள் ஹோம் மினிஸ்டர் பெண்ணை கடத்துவார்கள் அப்பொழுதும் ம்ஹூம்……… எல்லாம் சட்டத்துக்கு உட்பட்டே நடக்கிறது.

இப்படித்தான் படத்தின் நடுவே ஒரு காட்சி.

“சிங்கத்த கூண்டுல பாத்திருப்ப… சினிமால பாத்திருப்ப….ஏன் சர்க்கஸ்ல கூட பாத்திருப்ப….. ஆனா காட்டுல தனியா நடந்து பாத்திருக்கயா……”

என ஆவேசமாக கூறிக்கொண்டிருந்த சூர்யா அங்கிள், கோபம் தலைக்கேற, பிரகாஷ்ராஜ் அங்கிளை அடிக்காமல், பாவம் சிவனே என்று அப்பிராணியாக பின் பக்கம் நின்று கொண்டிருந்த அந்த ரவுடி அங்கிளை ஓங்கி ஒரு அப்பு அப்பிவிடுவார். என்ன ஒரு அநியாயம். கோபத்துடன் பேசுவது ஒருவரிடம், அடிப்பது இன்னொருவரையா?…எனது ஆங்கில ஆசிரியர் கூட இப்படித்தான் முட்டாள்தனமாக நடந்து கொள்வார். தனது பொண்டாட்டியிடம் சண்டை போட்டு விட்டு வரும் அவர். ஆவேசமாக என் முதுகில் குத்து குத்து என குத்துவார். எல்லா தமிழர்களும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்.

ஆனால் அந்த ரவுடி அங்கிள் பாவம். எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், எப்பேர்ப்பட்ட ரவுடிகளையும் பிள்ளைப்பூச்சியாக மாற்றிவிடும் ஹரி அங்கிளின் திறமை பற்றிதான். ஒரு கமிஷனர், ஆயிரக்கணக்கான போலீஸ், சட்டம் நீதிமன்றம், இவற்றால் கூட செய்ய முடியாத சாதனையை, மகாத்மா காந்தி கண்ட கனவை, தனது திரைப்படத்தின் வாயிலாக சாதித்து காட்டிய ஹரி அங்கிளின் படத்துக்கு “சிறந்த சமுதாய உணர்வு மிக்க படம்” என்கிற அவார்டை கொடுக்கச் சொன்னது தப்பா? அவ்வாறில்லையெனில் ஒரு அரசு பேருந்தை கொளுத்த நினைத்தது தப்பா? தப்பா? (எக்கோ) தப்பா… தப்பா….

மேலும் முன்பெல்லாம் சூப்பர்மேன் அங்கிள் பறந்து பறந்து வந்து அடிப்பார். ஆனால் ஹரி அங்கிள் படத்தில் கதாநாயகன் அடித்தால் வில்லன் சூப்பர்மேனைப் போல் பறக்கிறார். எல்லா ஹாலிவுட் தனங்களுக்கும் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கும் ஹரி அங்கிளின் புதுமையான சிந்தனைப் போக்கு என்னை சிலிர்க்க வைக்கிறது என்றால் அது மிகையில்லை. இப்படித்தான் ஒரு காட்சியில் கடற்கரையில் பந்து விளையாடிக் கொண்டிருக்கும் பிரகாஷ்ராஜ் அங்கிளை நோக்கி வேகமாக வரும் சூர்யா அங்கிள், வழக்கம் போல் மெயின் வில்லனை அடிக்காமல், சைடு வில்லனை ஓங்கி ஒரு உதை விடுகிறார். சற்று நிதானித்து உற்று பார்த்த பின்தான் தெரிந்தது. அது சென்னை கடற்கரைதான் என்று. நான் தவறாக இலங்கை கடற்கரை என்று நினைத்துவிட்டேன். நல்லவேளை கன்டினியுட்டி மிஸ் ஆகவில்லை. கன்டியுனிட்டி பார்க்கும் அஸிஸ்டெண்ட் டைரக்டர் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

ஆனால், இடைஇடையே விவேக் அங்கிளை போல் ஒருவர் வந்து வந்து போகிறார். என் நண்பன் கூறுகிறான், அவர் டிரிபிள் டிரிபிள் மீனிங்கில் பேசுகிறார் என்று. நான் கோபத்தில் கடித்து வைத்துவிட்டேன் அவனை. அதெப்படி பத்மஸ்ரீ, சனங்களின் கலைஞன், மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறும் ஒரு ஜீவனை இப்படி பழி சுமத்தலாம். அது விவேக் அங்கிளே இல்லை. வேறு யாரோ. அவனை கடித்து வைத்த பின்னும் இவ்வாறு கூறுகிறான். “அது விவேக் அங்கிள்தான்” என்று. பிடிவாதக்காரன்.

ஆனால் ஒருவிஷயம் மட்டும் என்றுமே உறுதி. இன்றைக்கு ஒரு பேச்சு. நாளைக்கு ஒரு பேச்சு கிடையாது. கதை என்றைக்குமே ஒரே கதைதான். திருநெல்வேலியில் பிறக்கிற ஹீரோ வில்லன்களைக் கொன்று, கதாநாயகிய கல்யாணம் பண்ணிக்குவார். தமிழ், கோவில், சாமி, தாமிரபரணி, வேலு,…. சிங்கம்…… பெயர்கள் மாறலாம். கதைகள் மாறக்கூடாது. கதையில் மாறாத உறுதி, நிலைப்புத் தன்மை, ரசிகர்களை குழப்பாத தெளிவு இவை போன்ற நல்ல குணங்கள் என் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் வாய்க்கப்பெற்றால்………ஆஹா………… அவர்கள் பரீட்சையில் இன்று ஒரு கேள்வி கேட்கிறார்கள். நாளை மற்றொரு கேள்வி கேட்கிறார்கள். இதுவா நியாயம். குழந்தைகளும், ரசிகர்களும் ஒன்று போலவே திறந்த மனநிலையுடன் இருப்பவர்கள். அவர்களை அதிகமாக குழப்பக் கூடாது. ஒரே பாடத்திட்டம். ஒரே கதை. இவைதான் நம் லட்சியம்.

Series Navigation

சூர்யா லட்சுமிநாராயணன்

சூர்யா லட்சுமிநாராயணன்