அவள் ஒரு தொடர்கதை

This entry is part [part not set] of 28 in the series 20090702_Issue

தெலுங்கு மூலம் K.V.Giridhararao தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


அலாரம் அடித்தது. களைப்பாக இருந்தாலும், எழுந்துகொள்ள வேண்டுமென்று தோன்றாவிட்டாலும், ரொம்ப நேரமாக அலாரம் எப்பொழுது அடிக்குமோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த லதா கண்களைத் திறந்தாள்.
நதியின் இரு கரைகளைப் போல் கட்டிலில் ஒரு பக்கம் கணவன் ராகவன் மறு பக்கம் லதா, அவர்களை இணைக்கும் பாலம்போல் நடுவில் மூன்று வயது மகன் அருண். தாயின் மீது கால்களையும், தந்தையின் மீது கைகளையும் போட்டபடி தூங்கிக் கொண்டிருந்தான். மகனின் கால்களை மெதுவாக நகர்த்திவிட்டு, போர்வையைச் சரியாக போர்த்திவிட்டு, கட்டிலை விட்டிறங்கி ஓசைப்படுத்தாமல் படுக்கையறையின் கதவைச் சாத்தினாள்.
வெளியில் இன்னும் இருட்டாக இருந்தது. சமையலறையில் அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு டீக்கு தண்ணீரை வைத்தாள். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் டீ தூளைப் போட்டாள். அவளுடைய நித்தியபடி வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது. டீயைக் குடித்துக்கொண்டே முதல்நாள் நறுக்கி வைத்த காய்கறியை வெளியே எடுத்து வைத்தாள். அரிசியைக் களைந்து குக்கரில் வைத்துவிட்டு சாம்பாருக்கு புளியைக் கரைத்துவிட்டு அடுப்பில் ஏற்றினாள். குளித்துவிட்டு வருவதற்கும் குக்கர் ஓசை வருவதற்கும் சரியாக இருக்கும். அதற்குள் அருண், ராகவனும் எழுந்து கொள்வார்கள். லதா மகனை ஸ்கூலுக்கு ரெடி செய்யும் போது ராகவனும் ஆபீசுக்குக் கிளம்புதற்கு தயாராகிவிடுவான். அவனை அனுப்பிவிடடு, மகனை டே கேர் ப்ரீ ஸ்கூலில் இறக்கிவிட்டு லதா ஆபீசுக்குப் போவாள். இதெல்லாம் ஒரு வரிசை கிரமத்தில் எந்த விதமான மாற்றங்களும் இல்லாமல் ரொம்ப சகஜமாக செயல்பட்டு வரும் சடங்குகள்.
ராகவனுக்கு அந்தந்த வேளைக்கு புதிதாக சமைக்கணும். உணவு பொருட்களை பிரிஜ்ஜில் வைத்து மைக்ரோஅவேவில் சுட வைத்து சாப்பிட்டால் இல்லாத வியாதிகள் வந்து சேரும் என்பது அவனுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. தினமும் காலையில் எழுந்துகொண்டு சமைப்பது கஷ்டமாக இருந்தாலும், கடைசியில் கணவனுக்காக அந்த அளவுக்கு கஷ்டப்படுவதில் தவறு இல்லை என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டுவிட்டாள். காலப்போக்கில் உடலும் மனமும் சமாதானமாகிவிட்டன.
லதா சுவற்றில் இருந்த கடியாரத்தைப் பார்த்தாள். ஏழு நாற்பது ஆகியிருந்தது. தினமும் தான் செய்யும் வேலைகளை சுவற்றிலிருந்தபடியே கவனிப்பது, தாமதம் ஆனால் மௌனமாக எச்சரிப்பது, சீக்கிரமாக வேலைகளை முடித்தால் பாராட்டுவது … லதாவுக்கு அந்த கடியாரம் ஒரு சிநேகிதியைப் போல் தோன்றும்.
குளிக்கப் போகும் முன் அருணுக்கு போர்வையைச் சரியாக போர்த்திவிட்டாள். குழந்தை அழுதபடியே எழுந்துகொண்டால் ராகவனுக்குக் கொஞ்சம் கூட பிடிக்காது. காலையில் அவனுடைய அழுகைக் குரலைக் கேட்டால் நாள் முழுவதும் அழுதுவடியுமாம். தங்கமான தன்னுடைய தூக்கம் கெட்டுப் போய்விட்டதென்று எரிந்து விழுவான். சரியாக தூங்கவில்லை என்றால் நாள் முழுவதும் களைப்பாக இருக்குமாம்.
தூக்கம் போறாவிட்டால் தனக்கும் களைப்பாக இருக்கும் என்று ராகவனிடம் சொல்ல வேண்டும் என்று பல முறை எண்ணியதுண்டு. சொன்னால் ராகவனில் ரியாக்ஷன் எப்படியிருக்கும் என்றும் அவளுக்குத் தெரியும். திருமணமான புதிதில் தன்னுடைய விருப்பு வெறுப்புகளை கணவனிடம் தெரிவித்தாள். அவனுடைய விருப்பு வெறுப்புகளைத் தெரிந்து கொண்டாள். நாளடைவில் அவனுடைய சுபாவம் புரிந்த பிறகு மௌனத்தைத் தஞ்சமடைந்தாள். மௌனம் பழக்கமாகிவிட்டது.
“மனைவி கணவனுக்கு நிழலாக இருக்கும் வரையில் குடித்தனம் தெளிந்த நீரோடையைப் போல் நிம்மதியாக கழிந்துவிடும். சமவுரிமை, தனித்தன்மை என்று முழக்கமிட்டுக்கொண்டு புறப்பட்டால் வாழ்க்கை சுழலில் சிக்கிக் கொண்டு விடும். அவசரப்படாமல் குடித்தனத்தைச் சீரமைத்துக்கொள்” என்று தாய் அறிவுரையைப் பின்பற்ற முயன்றாள். முயற்சி பழக்கமாக மாறிவிட்டது.
குளியலறையிலிருந்து வெளியே வரும்போது அருண் லேசாக சிணுங்கிக் கொண்டிருந்தான். மெதுவாக அவனைத் தூக்கித் தோளில் சாய்த்துக் கொண்டு வெளியே வந்தாள். எவ்வளவு ஓசையின்றி செயல்பட்டாலும் ராகவனுக்கு விழிப்பு வந்துவிட்டது.
“ஓ .. மைகாட்! அதற்குள் எட்டு மணியாகிவிட்டதா?” என்றபடி அவசர அவசரமாக பாத்ரூமுக்குள் புகுந்தான்.
மகனைத் தோளில் சுமந்துகொண்டே ஸ்டவ்வை ஆ·ப் செய்தாள். பிரிஜ்லிருந்து மாவை எடுத்து வெளியில் வைத்தாள். காலையில் டிபன் சாப்பிடாமல் ராகவன் கிளம்ப மாட்டான். கார்ன் ·ப்ளேக்ஸ், சீரியல், பேகல் போன்றவை அவனுக்குப் பிடிக்காது. வாய்க்கு ருசியாக நம் நாட்டு இட்லி, தோசை, பூரி என்று சாப்பிடாமல் மருந்து வாசனைக் கொண்ட சீரியல்ஸ் சாப்பிட வேண்டிய தலையெழுத்து என்ன என்பான்.
மகனைப் பல் தேய்க்கச் செய்துவிட்டு, பால் டம்ளரைக் கொடுத்தாள். சமையலறையில் பாத்திரங்களை ஒழித்துக் கொண்டிருந்த போது இந்தியாவிலிருந்து போன். “ரொம்ப நாளாக போன் பண்ணவே இல்லையே? எல்லாம் சரியாக இருக்கிறதா?” என்று அம்மா விசாரித்தாள். நன்றாகத்தான் இருப்பதாகவும், மாலையில் வந்த பிறகு சாவகாசமாக பேசுவதாகச் சொல்லிவிட்டு ·போனை வைத்துவிட்டாள் லதா.
எத்தனை நாளாகிவிட்டது அம்மாவுடன் பேசி என்று யோசிக்கத் தொடங்கினாள். அதற்குள் கூட்டுக்கு தாளிக்க வேண்டும் என்று நினைவுக்கு வந்து சமையலறைக்குள் போனாள். இதுபோல் எண்ணங்கள் பாதியில் அறுந்து போவதும், முதல் நிமிஷம் நடந்ததை அடுத்த நிமிடம் மறந்து போவதும்… சமீபத்தில் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருந்தன.
தோசைக்கல்லை அடுப்பில் போட்டுவிட்டு கூட்டுக்கு தாளித்துக் கொட்டினாள். அருண் பிரேக்·பாஸ்டுக்காக காத்திருந்தான். அவனுக்காக தோசை வார்த்துக் கொண்டிருந்த போது ராகவனின் குரல் பதட்டமாக சமையலறைக்குக் கேட்கும்படியாக “இன்றைக்கு முக்கியமான மீட்டிங்க் இருக்கு. சீக்கிரமாக போகணும்” என்று ஒலித்தது.
“தோசை வார்த்துக் கொண்டிருக்கிறேன்.” லதாவும் ராகவனுக்குக் கேட்கும்படியாகக் குரலை உயர்த்திச் சொன்னாள்.
மளமளவென்று நான்கு தேசைகளை வார்த்து தட்டில் எடுத்து வைத்த பிறகு சட்னி தயாரிக்கவில்லை என்ற விஷயம் நினைவுக்கு வந்தது லதாவுக்கு. தோசைக்கு தேங்காய் சட்னி தொட்டுக்கொள்வது ராகவனுக்குப் பிடிக்கும்.
“இவ்வளவு சம்பாதிக்கிறோம். வாய்க்குப் பிடித்ததைச் சாப்பிடுவதற்குக் கூட வழியில்லை. நம் ஊரில் ரோட்டு ஓரமாக விற்கும் கடைகளில் கூட இரண்டு விதமான சட்னியுடன் சாப்பிடலாம். எங்க அம்மா என்னிக்காவது சட்னியில்லாமல் தோசை செய்திருப்பாளா கேட்டுப் பார்” என்று ராகவன் ஒரு வாரம் வரையிலும் காலையில் பிரேக்·பாஸ்ட் சாப்பிடாமல் முரண்டு பிடித்தது லதாவுக்கு இன்னும் நினைவு இருக்கிறது.
இப்போ என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே ராகவன் சமயலறைக்குள் வந்தான். தனக்காக எடுத்து வைத்திருந்த தோசைத் தட்டை எடுத்துக் கொண்டு “சட்னி பண்ணவில்லையா?” என்று கேட்டான். லதாவின் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியத.
“போகட்டும். தோசை மிளகாய்பொடி போடு. ஏற்கனவே ஆபீசுக்கு லேட்டாகிக் கொண்டிருக்கிறது” என்றான்.
“சாரி, அவசரத்தில் சட்னி அரைக்க மறந்து விட்டேன்” என்று சொல்லிக்கொண்டே தோசை மிளகாய்பொடி போட்டாள் லதா. “அம்மாடா… ஆபத்து தப்பி விட்டது” என்று நிம்மதியாக மூச்சுவிட்டுக் கொண்டாள்.
ராகவனின் செல் ஒலித்தது. “நேற்று இரவு நம் ஆட்கள் ரொம்ப நல்லா ஆடினாங்க. எழுபது பந்துகளில் செஞ்சுரி. மேட்ச் ரொம்ப நல்லா இருந்தது. தூங்கும் போது லேட்டாகிவிட்டது. சீக்கிரமாக ஆபீசுக்குப் போகணும். போய்ச் சேர்ந்த பிறகு கூப்பிடுகிறேன்” என்று யாருடனோ பேசிக்கொண்டே தோசைகளைச் சாப்பிட்டு முடித்தான். போன் வைத்துவிட்ட பிறகு மகனுடன் பேசிக் கொண்டிருந்தான். லதா ராகவனுக்கும், மகனுக்கும் லஞ்ச் பாக்ஸை எடுத்து வைத்துவிடு, தனக்காகவும் மதியச் சாப்பாட்டை பேக் செய்துகொண்டாள்.
“ஓகே பட்டீ… ஸீ யூ டு நைட்… பை லதா.. ஐ ஹேவ் டு ரன்” என்று கிளம்பிப் போய்விட்டான் ராகவன்.
சமையல் மேடையை ஒழித்து விட்டு பாத்திரங்களை சிங்கில் போட்டு விட்டு, மகனை குளிப்பாட்டினாள். மகனை ரெடி செய்துவிட்டு, தானும் உடைகளை மாற்றிக்கொண்டு தன்னுடைய லஞ்ச் பேக்கும். மகனின் ஸ்கூல் மற்றும் லஞ்ச பேக்கும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
மகனை ஸ்கூலில் ட்ராப் செய்விட்டு, ஆபீசுக்குப் போய்ச் சேரும்போது அரைமணி தாமதமாகிவிட்டது.
ஆபீசிலிருந்து வரும் போது முதலில் இந்தியன் க்ரோசரியில் காய்கறி வாங்கிக் கொண்டாள். பிறகு டே கேர் சென்டரிலிருந்து மகனை பிக்கப் செய்துகொண்டாள். அவனையும் அழைத்துக்கொண்டு கடைக்குப் போனால் ஷாப்பிங் கஷ்டமாக இருக்கும். ஸ்கூல் விசேஷங்களை பேசிக்கொண்டே இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். மகனுக்கு சாப்பிட ஸ்நேக்ஸ் கொடுத்துவிட்டு. டி.வி. ஆன் செய்து முன்னால் உட்கார வைத்தாள். ஸ்நேக்ஸ் சாப்பிட்டுக்கொண்டே கார்ட்டூன் பார்ப்பாது அருணுக்குப் பிடிக்கும். தனக்கும் வேலை சுலபமாக இருக்கும். டீ தயாரித்து குடித்தாள். சிங்கில் இருந்த பாத்திரங்களை டிஷ்வாஷரில் போட்டாள். இரவு சமையலுக்குத் தேவையான காய்கறியை நறுக்கினாள். மறுநாள் காலைக்குத் தேவையான காய்களையும் கட்செய்து ஜிப்லாக்கில் போட்டுவிட்டு பிரிஜ்ஜில் வைத்தாள். மகனை டைனிங் டேபிள் அருகில் உட்கார வைத்துவிட்டு, அவனுடன் பேசிக்கொண்டும், அவன் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டும் இரவுக்கான உணவைத் தயாரிக்க ஆரம்பித்தாள்.
ராகவன் ·போன் செய்து அரைமணியில் வீட்டுக்கு வருவதாகத் தெரிவித்தான். லதா மளமளவென்று மிக்ஸியில் பழத் துண்டுகளை போட்டு ஆன் செய்தாள். மாலையில் வீட்டுக்கு வந்ததும் ராகவன் பழச்சாறு அருந்துவது வழக்கம். ஹாலில் மகன் விளையாடிய பொம்மைகளை எல்லாம் கூடையில் எடுத்து வைத்தாள். சப்பாத்திக்கு மாவை பிசைந்தாள்.
அதற்குள் ராகவன் வந்துவிட்டான். ஆபீசிலிருந்து வரும் போது ராகவன் ஜிம்முக்கு போய்விட்டு வருவான். தன்னுடைய உடல் நலத்திற்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுப்பான். வேளைக்குச் சாப்பிடுவது, தூங்குவது, ஒருநாள் கூட விடாமல் உடற்பயிற்சி செய்வது அவன் பழக்கம். இருவருக்கும் “ஹாய்” சொல்லிவிட்டு “லதா.. கொஞ்சம் டீ கலந்து கொடு” என்றான். ஜிம் பேக்கை பக்கத்தில் வைத்துவிட்டு, ஷ¥க்களைக் கழற்றிக் கொண்டே மகனிடம் ஸ்கூல் விசேஷங்களை கேட்டான்.
லதா மறுபேச்சு பேசாமல் பழச்சாற்றை உள்ளே வைத்துவிட்டு டீ தயாரிக்க முற்பட்டாள். கல்யாணமான புதிதில் இதே போல் இரவு வேளையில் சப்பாத்திதானே சாப்பிடுவான் என்று சாதம் வைக்கவில்லை. அன்றைக்கு ஏனோ சப்பாத்தி வேண்டாம் என்றும் சாதம் சாப்பிடப் போவதாகவும் சொன்னான். எப்படியும் சப்பாத்தி தயாரித்தாகிவிட்டது. இந்த ஒரு வேளை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளச் சொல்லி கேட்டுக் கொண்டதற்கு நடந்த ரகளை லதாவின் நினைவுகளில் இன்னும் பசுமையாக இருக்கிறது. பத்து நாட்கள் வீட்டில் அந்நியனைப் போல் நடந்துகொண்டான். இன்னொரு மனுஷி வீட்டில் இருக்கிறாள் என்ற நினைப்பு கூட இல்லாதவன் போல் தான் உண்டு தன் வேலைகள் உண்டு என்பதுபோல் செயல்பட்டான். அந்த நாட்களில் லதாவும் கொஞ்சம் பிடிவாதமாக இருந்தாள். கல்யாணமான புதிது இல்லையா. பத்து நாட்கள் சென்ற பிறகு லதாவுக்கு நிலைமை ஓரளவுக்கு புரியத் தொடங்கியது. தானே ஒரு படி இறங்கிவந்து சமாதானத்திற்கு வந்தாள்.
அப்பொழுதிலிருந்து எத்தனையோ முறை இருவருக்கும் நடுவில் சின்னச் சின்ன சண்டைகள் வந்தது உண்டு. உப்புச் சப்பில்லாத விஷயங்கள் கூட இருவரும் பிடிவாதமாக இருந்ததால் நாளடைவில் மோசமான சண்டைகளாக உருவெடுத்தன. நாட் கணக்கில் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருப்பார்கள். குடித்தனம் என்றால் சண்டை சச்சரவுகள் வருவது சகஜம். யாராவது ஒருத்தர் சமாதானமாக போகாவிட்டால் சேர்ந்து வாழ்வது கஷ்டம். ஆனால் ஒவ்வொரு முறையும் லதாதான் விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது.
ஏன் இப்படி? ஒவ்வொரு முறையும் தானேதான் சமாதானத்திற்கு வந்து, தலை வணங்குவானேன் என்று லதா பல முறை யோசித்திருக்கிறாள். நன்றாக படித்திருக்கிறாள். நல்ல வேலை. கணவனுக்குச் சமமாக சம்பாதிக்கிறாள். அப்படியும் இந்த அடிமைத்தனமான வாழ்வு எதற்கு என்று பல தடவை நினைத்திருக்கிறாள். தனியாக வாழ முடியாது என்ற பயமோ, அல்லது திருமணப் பந்தம் அவ்வளவு சுலபமாக அறுந்து போகாது என்று ரத்தத்தில் ஊறிவிட்ட நம்பிக்கையோ, ஆகமொத்தம் கணவனைச் சார்ந்துதான் வாழ்ந்து வருகிறாள் இன்று வரையிலும்.
ராகவன் தேநீரைக் குடித்துவிட்டு குளிக்கச் சென்றான். அவன் வருவதற்குள் சப்பாத்தி தயாரிக்க ஆரம்பித்தாள். சூடாக தயாரித்த சப்பாத்திகளை ராகவனும், அருணும் சாப்பிட்டு முடித்தார்கள். சாப்பிட்டு முடித்த பிறகு கொஞ்ச நேரம் அப்பாவும் மகனும் விளையாடினார்கள். ராகவனுக்கும், மகனுக்கு சூடாக பால் கொடுத்து விட்டு லதா இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டாள். மகன் பால் சாப்பிட்டு முடித்ததும் பெட் டைம் ஸ்டோரி படித்துவிட்டு மகனைத் தூங்க வைத்தாள். சமையலறையை ஒழுங்குப் படுத்திவிட்டு ஹாலுக்கு வந்தாள் லதா.
ராகவன் சோபாவில் சரிந்தபடி டி.வி.யில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். “லதா… சினிமா டி.வி.டி. ஏதாவது கொண்டு வந்தாயா?” என்று கேட்டான்.
“க்ரோசரி கடையிலிருந்து ஒரு டி.வி.டி. கொண்டு வந்தேன். இங்கேதான் வைத்தேன். எங்கே காணவில்லையே?” லதா டி.வியின் முன்னால் நின்றபடி டி.வி.டி.க்காக அங்கும் இங்கும் பார்த்தாள்.
“லதா… நீ இப்படி நின்று கொண்டிருந்தால் டி.வி. தெரியவில்லை. நாம் இன்னும் கொஞ்சம் பெரிய டி.வி வாங்கணுமோ என்னவோ.” ஜோக்கடித்தபடி உரத்தக் குரலில் சிரித்தான் ராகவன்.
சட்டென்று நகர்ந்து ராகவன் பக்கம் பார்த்தாள் லதா.
“நீயும் என்னைப் போல் ஜிம்முக்குப் போகலாம் இல்லையா?” என்றான் ராகவன்.
லதாவுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. அப்படியே பக்கத்தில் இருந்த சோபாமேல் சரிந்தபடி உட்கார்ந்தாள்.
“உன்னுடைய நலனுக்காகத்தானே சொல்கிறேன்.” என்றான் மேலும்.
லதா பதில் பேசவில்லை. திடீரென்று கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. கணவனிடம் பேச வேண்டும் என்று நினைத்தாள். சண்டை போடணும் என்று நினைத்தாள். ஆனால் அதற்குள் சோர்வு அவளை ஆட்கொண்டது. கோபம், வருத்தம் சோர்வாக மாறி மௌனமாக எஞ்சியிருப்பது புதிதொன்றும் இல்லை.
லதா யோசித்தாள். தன்னால் ஜிம்முக்கு எப்போ போக முடியும்? காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கையில் விழும் வரையில் கடியாரத்தின் முள்ளைப் போல் ஓடிக்கொண்டு…. எப்போ போவது ஜிம்முக்கு? செல் ·போனில் அலாரம் அடித்தது. நாளை காலையில் நேரத்திற்கு எழுந்து கொள்ள வேண்டும் என்றால் உடனே தூங்க வேண்டும். சோர்வுடன், கால்கள் தடுமாற படுக்கையறைக்குள் சென்றாள்.
பொங்கி எழும் கடல் அலைகளுக்கு அணைக்கட்டாக, கட்டிலுக்கு ஒரு பக்கம் விளிம்பில் அருண்!

தெலுங்கு மூலம் K.V.Giridhararao: girirao99@gmail.com
தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்
email id tkgowri@gmail.com

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்