“அவர்கள் காதில் விழவில்லை!”

This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue

கவியோகி வேதம்


கவிஞர்கள் தம் பல கவிதைகளில் ஒரு படப்பிடிப்புபோல்
கவிசொல்லக் கற்றுக்கொள்ளவேண்டும்..
இக்கருத்தை பேராசிரியர் அ.ச.£.ரா.போன்றவர்கள்
வலியுறுத்தி யிருக்கிறார்கள்.அதை ஒட்டி
யானும் சில கவிதைகள் முயன்றிருக்கிறேன்..அதில் ஒன்று..
.சென்னை(.R.B.I) வேலையில் சேர்ந்தபின்,,
ஒரு 15 வருடம் கழித்துதான் என் சொந்த ஊருக்குச் சென்றேன்..
(அத்தாழநல்லூர்)..இரண்டே இரண்டு அக்கிரகாரம்.
ஒரு கோட்டைத் தெரு.(தொழிலாளர்கள் வசிக்கும் தெரு)+
.ஒரு பள்ளர் வசிக்கும் சேரி…அவ்வளவே அவ்வூர்.
சுற்றிலும் பச்சைப்பசேலென வயல்கள்.ஊடே ஊடே
சிறிய வரப்புகள்..நீர்க் கால்வாய்கள்..ஊர் மாறவில்லை.
ஆயின் மக்கள் பலர் வயது காரணத்தால் அங்கு சென்ற என்னைப்
புரிந்துகொள்ளவில்லை.யான் சொன்னபிறகு,”ஓ! நீ கர்கர் பேரனா?”-
என்று என் தாத்தாவை முன்னிலைப்படுத்தி அறிந்துகொண்டனர்.
ஆயின் யான் என் தந்தையார் வைத்திருந்த மிகச் சிறிய
நிலத்திற்குச் சென்றபோது யாருமே கண்டுகொள்ளவில்லை..பலதடவை
முயன்று ஒரு மேஸ்திரி மூலம் பின்பு என்னை அறிமுகப்படுத்த்க்கொள்ளவேண்டியதாயிற்று.
எனக்கு அதில் ஒரே அதிர்ச்சி.. இத்தனைக்கும் என்னை அந்த விவசாயிகள்
என் சிறு வயதுப்பருவத்தில் என்னைப்பலவாறு கொஞ்சி மகிழ்ந்தவர்கள்..
இளநீரும்,மாம்பழமும்,பனை நுங்கும் அடிக்கடி எனக்குத் தந்து
குஷிப்படுத்தியவர்கள்..இப்போதோ..?


“அவர்கள் காதில் விழவில்லை!”

அவர்கள் காதில் விழவில்லை!-எந்த
ஆசை அழைப்பும் பயன் இல்லை!
..
சின்ன வயதில் கொஞ்சியவர்கள்-எனக்குத்
..தின்னப் பண்டம் தந்தவர்கள்
என்னை மறந்தே விட்டார்கள்!-தலையை
..எடுத்து நிமிர்ந்தும் பார்க்கவில்லை!..
..
அவர்கள் காதில் விழவில்லை!-எந்த
..ஆசை அழைப்பும் பயனில்லை!
.
வாலை நீக்கி இருபறவை-வரப்பில்
..வைக்கும் புணர்ச்சி படவில்லை;
காலை உதயம் கண்சிமிட்ட-சேவல்
..கத்தும் குரலும் விழவில்லை!(அவர்கள்..)
..
அருகில் கொடுக்காப் புளிதோப்பின்–அந்த
..அக்காக் குருவி அழைப்புகளும்,
உருகும் வேர்வைத் துளிநீரில்-கரிக்கும்
..உப்புச் சுவையும் தொடவில்லை!(அவர்கள்..)
..
ஓரம் வளர்ந்த ஆல்மரத்தில்-குறும்பாய்
….உரக்கச் சிரிக்கும் கிளிக்குரலும்,
தாரம் இழந்த ஆண்புறவின்-ஓலத்
…தவிப்பும் நெஞ்சில் படவில்லை1
..
நாற்றை வைக்கும் கடும்வேலை-கையில்
..நடனம் செய்யும் போதினிலே
கீற்றும் அழகும் என்குரலும்-நெஞ்சைக்
…கிள்ளி, கவனம் கலைத்திடுமோ?
..
வயிற்றில் கூவும் தனிக்குரல்தாம்–அவர்தம்
..வாழ்வில் என்றும் கேட்கையிலே
பயிற்றும் ‘எழிலின்’ அழைப்பொலிகள்-ஏழை
..பாழ்த்த காதில் விழுவதுண்டோ?
..
அவர்கள் காதில் விழவில்லை!-எந்த
..ஆசை அழைப்பும் பயனில்லை!


(கவியோகி வேதம்)

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்