அவரவர் வாழ்க்கை

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

வசீகர் நாகராஜன்


பொருட்காட்சியில் அப்பாவிடம் அடம்பிடித்து
அழுதுவாங்கிய பொம்மை காருக்கு
அண்ணாவுடன் கட்டிப்புரண்டு
சண்டையில் உடைந்திட்ட பற்கள்

விடுமுறை மாலையில் பொழுதுபோக்க
மாடித் தண்ணிர் தொட்டி சுவற்றில்
மழழை ஆசிரியராய் கையில் பிரம்புடன்
அன்புத் தங்கை எடுத்திட்ட பாடங்கள்

முதல் தோசை தனக்குத்தானென்று
முந்தின நாள் இரவே சமையலறையில்
அம்மாவிடம் கொஞ்சி கொஞ்சி
முன்பதிவு சொல்லிவைத்த நாட்கள்

மின்சாரம் நிறுத்திய இரவுகளில்
மெழுகுவர்த்திச் சுடர் வெளிச்சத்தில்
முத்திரைக் கைவிரல்களில் தோன்றிக்
குதித்தோடிடும் கொம்புப் புள்ளி மான்கள்

இன்று அப்பாவும் அம்மாவும் ஓரிடத்தில்
அண்ணாவும் நானும் ஆளுக்கோர் பக்கம்
குடும்பத்தலைவியான தங்கை வேறுலகம்
தொலைபேசிக் குரல்களே தொடர்புகளான ஓருலகம்

பிரிவுகளில் மலர்கிறது
நினைவுகளில் முகிழ்கிறது
உணர்வுகளில் தளிர்க்கிறது
அவரவர் வாழ்க்கை

Vasikar Nagarajan
vnagarajan@us.imshealth.com

Series Navigation

வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)

வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)

அவரவர் வாழ்க்கை

This entry is part [part not set] of 20 in the series 20011111_Issue

லாவண்யா


நான் தன்னந்தனியாய் இருளில் உட்கார்ந்திருந்தேன். என்னைச்சுற்றி வட்டமாய் சிறு மேடை, அதில் யாரும் இல்லை. வட்டத்தின் இரண்டு பக்கங்களிலும் நவராத்திாி கொலு போல படிகள் அமைத்து அதில் நிறைய ஜனங்கள். பாவாடைசட்டையில் ஒரு சிறுபெண்குழந்தை எதற்காகவோ செப்புக்கைகளைத்தட்டி சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தது, கல்லூாி இளைஞர்கள், ஜீன்ஸ் பெண்கள் சேர்ந்து நடனமாடுவதற்குத் தயாராக கொத்துக்கொத்தாய் அங்கங்கே உட்கார்ந்திருந்தார்கள், பட்டுப்புடவை மாமிகள் தங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டிருக்க, கண்ணாடி ஃப்ரேமில் கயிறுகட்டி கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டு ஒரு தாத்தா மூன்றாவது வாிசை மூலையில் பரவசத்தோடு உட்கார்ந்திருந்தார். நாற்பது, ஐம்பதுபேர் இருக்கலாம். எல்லோரும் டிவியில் தோன்றப்போகிற சந்தோஷப்பெருமிதம் முகத்தில் துளிர்க்க, கண்களில் சிாிப்பை மறைக்கமுடியாமல் மேடையை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருவர் என்றால் ஒருவர்கூட என்பக்கம் திரும்பக்காணோம். உண்மையில் நான் இங்கே உட்கார்ந்திருப்பதே யாருக்கும் தொியாது, இருட்டில் சிரமப்பட்டு தேடிப்பார்த்தால் மசமசவென்று ஒரு உருவம் இருப்பது தொியுமேதவிர, நான்தான் அது என்பது யாருக்கும் சொல்லப்படவில்லை. என் பெயரை மேடையில் அறிவித்ததும் மேலே இருக்கிற நான்கு விளக்குகளும் ஒளிபாய்ச்ச, நான் எழுந்துவரவேண்டும் என்று திட்டம், இதுவரையில் இவர் எங்களுக்குப் பக்கத்தில்தான் உட்கார்ந்திருந்தாரா என்று எல்லோரும் ஆச்சாியமாய் வாய்பிளக்கவேண்டும், அந்த சந்தோஷ அதிர்ச்சியைப் படம்பிடித்து டிவியில் காட்டவேண்டும். ‘அட, இது புதுசா இருக்கே ! ‘ என்று பார்க்கிறவர்களும் வியக்கவேண்டும், இப்போதெல்லாம் போனநிமிடம் செய்தது இந்த நிமிடம் பழசாகிவிடுகிறது. எப்போதும் யோசித்துக்கொண்டே இருக்கவேண்டும், ஏதாவது புதிதாகச் செய்யவேண்டும். இல்லாவிட்டால் வெளியே தள்ளி கதவைச் சாத்திவிடுகிறார்கள்.

நான் பொறுமையில்லாமல் இருக்கையில் நெளிந்து உட்கார்ந்தேன். நல்ல குஷன் நாற்காலிதான், அரசியல் மேடைகளில் தலைவர்கள் உட்காருவதற்காகப் போடுகிற சிம்மாசனம்போல உசத்தியான வகை, ஆனாலும் காத்திருப்பது முள்ளாய் உறுத்துகிறது. புதுமை செய்கிறேன் பேர்வழியென்று பார்வையாளர்கள் வருவதற்கு வெகுநேரம் முன்னாலேயே என்னை இங்கே கொண்டுவந்து உட்கார்த்திவிட்டார்கள், ஒவ்வொருவராய் வந்து எனக்கு இருபுறமும் உட்கார்வதையும், மேடையில் அறிவிப்பாளினி சின்னக் கண்ணாடியில் நெற்றிப்புருவத்தை ஒழுங்கு படுத்திக் கொள்வதையும், மாடிப்படியின் பிடிப்பில் சறுக்குகிற குழந்தைகள்போல குட்டி க்ரேன்களில் மேலும் கீழும் ஏறி, இறங்கும் கேமெராமேன்களையும் மெளனசாட்சியாய் பார்த்துக்கொண்டு எப்போது என் பெயரை அறிவிப்பார்கள் என்று காத்திருக்கிறேன்.

‘லைட்ஸ் ஆன் ‘ – யாரோ கத்தினார்கள், பளீரென்று எல்லா திசைகளிலிருந்தும் விளக்குகள் எாிய என் முன்னே இருந்த அரங்கம் பிரகாசமாகியது. ‘சைலன்ஸ் ப்ளீஸ் ‘ என்று அதேகுரல் மீண்டும் உச்சஸ்தாயியில் சத்தமிட்டதும், கொஞ்சம்கொஞ்சமாய் பார்வையாளர்கள்மத்தியில் சலசலப்பு குறைகிறது, கேமெரா வழியாக பார்த்துக்கொண்டிருந்த தாடிக்காரர் ஒருவர் நிமிர்ந்து இடதுபுறத்தில் உச்சியிலிருந்த விளக்கின் அருகில் நின்றவாிடம் ஏதோ கோபமாய்ச் சொன்னார், தவறு சாி செய்யப்பட்டதும் மறுபடி கேமெராப்பார்வை பார்த்துவிட்டு தோளில் போட்டிருந்த துண்டை எடுத்துமுகம் துடைத்துக்கொண்டு, ‘ரெடி சார் ‘ என்றார். ஏகமாய்க் களைத்திருந்த டைரக்டர் உட்கார்ந்த நிலையிலிருந்தே, ‘ஸ்டார்ட் கேமெரா ‘ என்றதும், ‘விர்ரூம் ‘ என்று பத்து ஸ்கூட்டர்கள் ஒரே நேரத்தில் கிளம்பியதுபோல ஒரு சப்தம் எழுந்து, உடனே அடங்கியது.

சட்டைப்பையில் மைக் குத்தியிருந்த அறிவிப்பாளினி தமிழ்நாடுமுழுக்க பிரசித்தமான அவளது ரெடிமேட் புன்னகையைச் சிந்தி, ‘வணக்கம் நேயர்களே ‘ என்றாள், ‘இந்த சாிகமபதநி நிகழ்ச்சியில் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் பெருமையடைகிறோம் ‘.

ஆரம்பத்திலேயே எனக்கு சலிப்புத்தட்ட ஆரம்பித்துவிட்டது, ஒவ்வொருவாரமும் இதே வசனம், இதே போட்டி, இதே நான்கு சுற்றுக்கள், இதே விதிமுறைகள், கிட்டத்தட்ட இதே போட்டியாளர்கள், இதே முடிவுகள், எப்போதாவது பார்க்கிற எனக்கே போரடிக்கிறதென்றால் இவர்களுக்கு எப்படி இருக்கும் !

எப்போதாவது பார்க்கிறேன் என்று சொல்வது சாியில்லை, இப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமை காலைகளில் நிறைய நேரம் கிடைக்கிறது, இசை தொடர்பாக வெவ்வேறு சானல்களில் வருகிற நிகழ்ச்சிகளில் ஓரளவு உருப்படியானது இதுதான் என்பதால், இந்த நிகழ்ச்சியைத் தவறாமல் வாராவாரம் பார்க்கிறேன். மேடையில் பேசுகிறபோது இதைச் சொல்லவேண்டும் என்று மனசுக்குள் குறித்துக்கொள்கிறேன்.

மேடையில் அந்தப்பெண் என்னைப்பற்றி சொல்லிக்கொண்டிருப்பதை உற்றுக் கேட்கிறேன், ‘இன்றைய நடுவர் ஒரு மிகச்சிறந்த பாடகர், இவரை தமிழ்த் திரைப் பாடகர்களில் முடிசூடாத மன்னர் என்று சொல்லலாம் ‘, ஆரோகணம்போல ஒவ்வொரு வர்ணனைக்கும் குரலின் சுருதி ஏறிக்கொண்டேபோக என்னை வர்ணித்துக்கொண்டிருக்கிறாள், எப்போதும்போல அதுவும் எனக்கு சலிப்பு மூட்டுகிறது. ‘முடிசூடா மன்னர் ‘ என்று சொல்லிப்பார்த்துக்கொள்கிறேன், மண்ணாங்கட்டி., முடிசூடவும் வேண்டாம், இவ்வளவு சீக்கிரம் அது தலையைவிட்டு இறங்கவும் வேண்டாம், திடாரென்று பழகியசுகம் வந்தவேகத்திலேயே இல்லாமல்போனதை மனதளவில் ஏற்றுக்கொள்ளமுடியாமல் பொம்மை பறிக்கப்பட்ட குழந்தையாய்த் தவிக்கவும் வேண்டாம்.

‘இதற்குள் நீங்கள் எல்லோரும் ஊகித்திருப்பீர்கள், நேயர்களே, இன்றைய நம் நடுவர், சிறந்த பின்னணிப்பாடகர் திரு. பத்மநாபன் அவர்கள் ‘ என்று அந்தப்பெண் உச்சகட்டகுரலில் அலறியதும் சிலர் சோகையாய்க் கைதட்டுகிறார்கள், பின்னால் எடிட்டிங்கின்போது நிறைய கைதட்டல்கள் சேர்த்துக்கொள்வார்கள் என்று நான் நினைத்துக்கொண்டபோதே மேலிருந்து விளக்குகள் எாிய, ஒளி என்னை நனைக்கிறது, நான் எழுந்துகொள்கிறேன். ‘கட் ‘ என்று ஒரு சத்தம் அவசரமாய்க் கேட்கிறது. கேமெராக்கள் இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன.

கசமுசவென்று தங்களுக்குள் நம்பமுடியாமையை அவசரமாய் பேசிக்கொள்கிற பார்வையாளர்கள், ஒருவர் என்னைநோக்கி பலகாலம் பழகிய புன்னகையோடு வணக்கம்போடுகிறார். நான் பதிலுக்கு வணங்கியதும் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற மனைவியைப் பெருமையோடு பார்க்கிறார். ஒரு பையன் என்னிடம் ஆட்டோகிராஃப் புத்தகத்தை நீட்ட முயல்கிறான், ‘பொறுமை ‘ என்பதுபோல் தலையசைத்துவிட்டு டைரக்டாிடம், ‘என்ன சார் ஆச்சு ? ‘ என்கிறேன்.

‘நீங்க நடந்துவரதை தனி ஷாட்டா எடுத்துக்கலாம் சார், அப்போதான் ராயலா இருக்கும் ‘ என்கிறார் அவர். எனக்குக் கோபம் வருகிறது, ஒருமனிதன் நடந்து வருவதில் என்ன ராயல் இருக்கமுடியும் ? நிற்பது ஒரு ஷாட், நடப்பது ஒரு ஷாட், உட்கார்வது ஒரு ஷாட் என்று டிவியும் இயல்பு தொலைத்து சினிமாபோல் ஆகிவிட்டது என்று எண்ணிக் கொள்கிறேன். முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் அவர் சொன்னபடி நடக்கத் தயாராகிறேன். எல்லா கெமெராக்களும் என்பக்கம் திரும்புகின்றன, பார்வையாளர்களையும் மேடையையும் இணைக்கிற சிவப்புக் கம்பளத்தில் நான் நடக்க, அதை எல்லாக் கோணங்களிலிருந்தும் படம்பிடித்துக் கொள்கிறார்கள். என் நடையில் இயல்பு தவறிப்போனதான ஒரு பிரம்மையில் தடுமாறுகிறேன்.

மேடையில் ஏறி மைக்கைக் கையில் வாங்கும்வரை கைதட்டல்கள் தொடர்கிறது, ‘எல்லோருக்கும் வணக்கம் ‘ என்று சொல்கிறேன். பிறகு சில சம்பிரதாய வார்த்தைகள் பேசுகிறேன், அவற்றில் என்ன சொன்னேன் என்பது நினைவில் தங்க மறுக்கிறது. ‘இன்றைய நிகழ்ச்சியை நடத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் ‘ என்று அறிவிப்பாளினி போலிப்பணிவோடு சொன்னதும் என் இருக்கையில் சென்று அமர்கிறேன். காதில் மாட்டுவதற்கு ஏதோ தந்திருக்கிறார்கள், அதை ஓரமாய் ஒதுக்கி வைக்கிறேன். ஆறு போட்டியாளர்கள், மூன்று ஆண்களும், மூன்று பெண்களும், அவர்கள் பெயர்களை ஒவ்வொன்றாய்ச் சொல்கிறாள் அவள். முதலாவதாக இருந்த நடுத்தர வயதுக்காரர் எழுந்துவந்து, ‘என் பெயர் சிவக்குமார் ‘ என்கிறார் அவசியமில்லாமல். எப்படியும் சப்டைட்டில் போடப்போகிறார்கள். ‘எங்கேயிருந்து வந்திருக்கீங்க ? ‘ என்று அவள் எடுத்துக்கொடுத்ததும், நினைத்துக்கொண்டவர்போல, ‘சேலம் ‘ என்கிறார் அவர்.

சொந்த ஊர் பெயரைக் கேட்டதும் எழுகிற இயல்பான உணர்ச்சியில் சட்டென்று தலைதூக்கிப் பார்க்கிறேன். என் செயலை ஏற்கெனவே ஊகித்திருந்தவள்போல அவள், ‘சேலமா ? நம்ம நடுவர்கூட சேலத்தைச் சேர்ந்தவர்தான் தொியுமா ? ‘ என்கிறாள் சிாித்து. அவர் தலையசைத்தும், ‘பன்னிரண்டு வருடங்களுக்குமுன் நம்முடைய மதிப்பிற்குாிய நடுவர் சேலத்திலிருந்து சென்னைக்கு வந்து திரைப்படப் பின்னணிப் பாடகராக அறிமுகமாகி … ‘ என்றுதொடங்கி சொன்னகதையை மீண்டும் சொல்கிறாள். அவள் பேசிமுடிக்கும்வரை காத்திருந்துவிட்டு, ‘சாரை எனக்கு நல்லாவே தொியும், அவருக்குதான் என்னை ஞாபகமிருக்கா-ன்னு தொியலை ‘ என்கிறார் அவர்.

நான் இன்னும் ஆர்வத்தோடு நிமிர்ந்து உட்கார்கிறேன், ‘மன்னிக்கணும், என் ஞாபகசக்தி ரொம்பக் குறைச்சல் ‘ என்று சிாிக்கிறேன், அவர் அதைப் பெருந்தன்மையோடு ஏற்கிறார், ‘பரவாயில்லை சார், ஸ்கூல்டேஸ்ல நீங்களும் நானும் ஒரே மேடையிலே இதேமாதிாி ஒரு போட்டியிலே கலந்துகிட்டிருக்கோம், முடிவு என்னாச்சுன்னு நான் சொல்ல வேண்டியதில்லை, நீங்க ஜெயிச்சீங்க, நான் தோத்துப்போயிட்டேன் ‘ என்று முகத்தில் வருத்தமில்லாமல் சொல்கிறார் அவர். ‘ஓ ‘ என்று ஒரே வார்த்தையில் பதில்சொல்லிவிட்டு இருக்கையில் சாய்ந்து கொள்கிறேன். ‘வாவ், வாட் எ சர்ப்ரைஸ் ‘ என்று ஆச்சர்யமுகபாவம் காட்டுகிறாள் அவள், ஏற்கெனவே ஒத்திகை பார்த்ததுதான் என்றாலும், அதை நிஜம்போல் செய்கிறாள். ‘பரவாயில்லை திரு. சிவக்குமார், இன்றைக்கு நீங்க நிச்சயம் ஜெயிப்பீங்க ‘ என்று அறிவிப்பாளினி கட்டைவிரல் உயர்த்திச் சொன்னதும் கூட்டம் கைதட்டுகிறது. அதை நான் சொல்லியிருக்கலாமோ என்று நினைத்துக் கொள்கிறேன். குறைந்தது ஒரு சகஜப்புன்னகையாவது செய்திருக்கலாம்.

முதல் சுற்று ஆரம்பித்து ஒரு கிராமியப்பாடல் பாடிக்கொண்டிருக்கிற சிவக்குமாரையே தொடர்ந்து கவனிக்கிறேன். இவரை இதற்குமுன்னால் பார்த்திருப்பதாக கொஞ்சமும் ஞாபகமில்லை. பார்த்திருக்கலாம், சொந்தஊாில் இருந்தபோது ஏகப்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டது, அவற்றில் ஜெயித்ததுதான் நினைவில் நிற்கிறதேதவிர, எந்த போட்டி, யார் பாிசு கொடுத்தார்கள், என்ன பாடினேன் – எந்தத் தகவலும் ஞாபகமில்லை. ஜெயித்தபிறகு தோற்றவர்கள் யார் என்று பார்க்கத்தோன்றுமா என்ன ? அதுவும் அந்த சின்ன வயதில்.

சிவக்குமார் நன்றாகவே பாடினார், ஹைபிட்ச்சில் பாடும்போது சற்றே பிசிறுதட்டியது, மற்றபடி குறை சொல்வதற்கில்லை, அவருக்குப்பின்னால் வந்தவர்களும் ஒரு தரத்துக்குமேல் பாடியதாகவே தோன்றியது. ஆறாவதாகப் பாடவந்தபெண் ரொம்ப அழகாய் இருக்கிறாள், அவள் பாடுவதற்குமுன்னால் அவளை சற்றுநேரம் கூர்ந்து நோக்குகிறேன். பிறகு ஞாபகம் வந்ததுபோல தலையைத் திருப்பிக் கொள்கிறேன், கேமெராக்காரர்கள் கண்ணில் பட்டுவிட்டால் வெளிச்சம்போட்டுக்காட்டிவிடுவார்கள்.

முகம்தொியாத சிவக்குமார் கிளறிவிட்டுப்போன இழந்த நினைவுகளை மெல்ல யோசித்துப்பார்க்கிறேன். சினிமாவுக்கு வந்தபிறகு எல்லாப் பிணைப்புகளும் விட்டுப்போய்விட்டது, எட்டுவருடங்கள் வேறெதிலும் கவனமில்லாமல் வெறிபிடித்ததுபோல ஒரு நாளைக்கு பத்து பாட்டு, பதினைந்து பாட்டு என்று பாடி, தமிழ்நாடுமுழுக்க எல்லா இடங்களிலும் என்குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. ஒருவர் பாக்கியில்லாமல் எல்லாக் கதாநாயகர்களுக்கும் பாடியாகிவிட்டது, அத்தனைபேருக்கும் என்குரல்தான் பொருத்தம் என்று எல்லாரும் பெருமைசொல்லக் கேட்டாகிவிட்டது. புகழின் உச்சியில் இருந்தபோது முதல் வருடம் வாங்கிய சம்பளத்தைப்போல ஆறுமடங்குவரை வாங்கினேன், அத்தனைக்கும் சாட்சியாய் இப்போதும் என்னைச்சுற்றியிருக்கிற ஆடம்பரக் கார்களும், பிரம்மாண்ட பங்களாவும்.

இரண்டாவது சுற்றில் சினிமாப்பாட்டின் பல்லவியும், கர்நாடக சங்கீதப்பாட்டு ஒன்றின் சரணத்தையும் சேர்த்து முடிச்சுப்போட்டுப் பாடச் சொன்னார்கள், சண்முகப்பிாியாவில் ஒரு ஸ்கூல்பையன் அபாரமாய் ஜாலங்கள் காட்டினான், மகிழ்ந்து கைதட்டினேன், அந்த ராகத்தில் எனக்குப்பிடித்த பாடல் பாடச்சொன்னார்கள், சட்டென்று நினைவுக்கு வந்தபாடலை நான்குவாி பாடினேன், பாடிமுடித்தபிறகு அது வேறு ராகமோ என்று சந்தேகம் வந்தது, கூட்டத்தின் கைதட்டலுக்குக் குறைவில்லை.

கைதட்டல்கள் நிறைய பார்த்தாகிவிட்டது, முன்புபோல அவை பொிய போதை எதையும் உண்டாக்குவதில்லை. இருகை சேர்ந்து எழுவது ஓசை மட்டும்தான், அதனோடு மனதார்ந்த பாராட்டும் சேர்ந்தால்தான் உண்மையான கெளரவம் என்பது புாிந்துவிட்டது. உச்சி என்று ஒன்றிருந்தால் அதையடுத்து சாிவும் இருக்கும் என்பதுதான் உயரத்திலிருந்தபோது புாியவில்லை. நாடகம் முடிந்து விட்டது என்று யாரோ வேகமாய்த் திரையை மூடியதுபோல அதுவரை என்னை மேலேதூக்கிச்சென்ற நிலம், திடாரென்று என்னைக் கீழே இழுத்தது. ஏறிய வேகத்திலேயே இறங்கியிருந்தாலாவது பரவாயில்லை, அதைவிட பலமடங்கு அதிக விரைவுடன் இறங்க நேர்ந்தது., விழ நேர்ந்தது என்று சொல்வதுதான் சாியாக இருக்கும்.

கொஞ்சம் கவனித்துக் கேட்கிறபோது இந்தப் பையன்கள், பெண்களில் பெரும்பாலானோாின் தமிழ் உச்சாிப்பில் தெளிவில்லை என்பது தொிகிறது. தன் மனதுக்குத் தோன்றியதுதான் சாி என்பதுபோல் பாடிவிடுகிறார்கள். ஏன், நான்கு வருடங்களாக இதே நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்குகிற இந்தப்பெண்ணின் தமிழே தடுமாறுகிறது., நிறைய ஆங்கிலம் கலந்துதான் சமாளிக்கிறாள். நான் பார்க்கிற பெரும்பாலான நிகழ்ச்சிகளில் இப்படித்தான், இன்றைய தலைமுறைக்கு தமிழ் ஒரு விளையாட்டுப்பொருள், யாரும் அதை சீாியஸாய் எடுத்துக்கொள்வதில்லை. இதற்கு யாரைக் குற்றம் சொல்வது என்றும் தொியவில்லை. நேரடியாக யாரையும் குறைகூறாமல் என்மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்கிறேன். ‘நின்னைச் சரணடைந்தேன் ‘ பாடிக்காட்டுகிறேன். கைதட்டுகிறார்கள். ‘உங்கள் அறிவுரைகள் இந்த இளைஞர்களுக்குப் பொிதும் உதவியாக இருக்கும் ‘ என்று வணங்கிச் சொல்கிற அறிவிப்பாளினியின் வார்த்தைகள் நிஜமாய் இருக்கவேண்டும்.

மும்பை நடிகைகள்போல மும்பைப் பாடகர்களுக்கு மாியாதை கூடிப்போய்விட்டது, ‘சித்தன் சொன்னான் ‘ என்பதை ‘செத்தன் சொன்னான் ‘ என்று அவர்கள் மழலையில் உச்சாித்தால்தான் பாட்டுக்கேட்போம் என்று தமிழ்நாட்டில் எல்லோரும்பிடிவாதம் பிடிப்பதைப்போல நினைத்துக்கொண்டு அரசியல் மாநாட்டுக்கு லாாியில் ஆட்கள்கொண்டுவருவதுபோல புதிது புதிதாய் இசையமைப்பாளர்கள், புதிதுபுதிதாய் பாடகர்களைக்கொண்டுவந்து இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் நன்றாகத்தான் பாடுகிறார்கள், ஆனால் ஒரு பயலுக்கும் தமிழ் தொியாது, பாடல்வாிகளில் என்ன எழுதியிருக்கிறது என்றுகூட தொியாமல் குரலில் என்ன உணர்ச்சிகளைக்காட்ட முடியும் ? காலை விமானத்தில் சென்னைவருகிறார்கள், யார் எழுதிய பாட்டு, எந்த சிச்சுவேஷனுக்குப் பாடப்படுவது, நடிக்கப்போவது டானேஜ் பையனா அல்லது நடுத்தரவயது ஆளா – எந்த கவனமும் இல்லாமல் கையில் கொடுத்ததை எச்சில்துப்பியதுபோல் பாடிவிட்டு மத்தியானம் மறுஃப்ளைட் ஏறிப் போய்விடுகிறார்கள், ஹிந்தியிலோ, தெலுங்கிலோ எழுதிவைத்துக்கொண்டு பாடுவதுதான் தமிழ்ப்பாட்டு என்கிற நிலைவந்துவிட்டது. கேட்டால் ‘ந்யூ வேவ் ‘ என்கிறார்கள். மனசுக்குள் ஒரு கெட்டவார்த்தையை உதிர்த்துக்கொள்கிறேன்.

அவ்வப்போது டைரக்டர் படப்பிடிப்பை நிறுத்தி திருத்தங்கள் சொல்கிறார், அந்தப்பகுதி மட்டும் மீண்டும் படமாக்கப்படுகிறது, எனக்கு இருந்த இடத்தைவிட்டு எழவேண்டியிருக்கவில்லை. நான்காவது ரவுண்ட் வந்துவிட்டது, அவர்கள் கொடுத்திருந்த சீட்டில் ஆறுபேருக்கும் ஒவ்வொரு சுற்றுக்கும் தனித்தனியாய் மார்க்குகள் போடச்சொல்லியிருந்தார்கள், நிகழ்ச்சி சுவாரஸ்யத்திலோ, நினைவு சுவாரஸ்யத்திலோ அதை மறந்துவிட்டேன். போட்டி முடிவதற்கு சற்றுமுன்தான் அதை கவனித்துவிட்டு, அவசரமாய் அதை நிரப்புகிறேன். ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது – ஒருவன் மார்க்கெட்டுக்குப்போய் வெண்டைக்காய் வாங்கினானாம், முனையை உடைத்துப்பார்த்து வாங்குங்கள் என்று அவன் மனைவி கண்டிப்பாய்ச் சொல்லியிருந்தாள், முனையை உடைத்துப்பார்த்தாலோ கடைக்காரன் திட்டுகிறான்., ஆகவே கிடைத்ததை வாங்கிக்கொண்டு, தெருமுனையில் நின்று ஒவ்வொரு வெண்டைக்காயாய் வேகவேகமாய் முனைமுறித்துக்கொண்டிருந்தானாம். என்செயல் அப்படித்தான் இருந்தது., என்னால்முடிந்தவரை நடந்தசுற்றுக்களின் நினைவிலிருந்து சாியாக மார்க்போட முயல்கிறேன்.

முன்புபோல இப்போது வேகம் இல்லை, எதிலும் ஒரு நிதானம் வந்துவிட்டது, நாள் முழுக்க ரெகார்டிங்குகள் இல்லை, எப்போதாவது ஒன்றிரண்டு பாட்டுக்கள் வரும், அதுவும் பழைய இசையமைப்பாளர்கள் யாராவது ஞாபகம் வைத்துக்கொண்டு கூப்பிட்டுக் கொடுத்தால் உண்டு, அவர்களையும் சொல்லிக் குற்றமில்லை, புதிய ட்ரெண்டுக்கேற்ப இசையமைக்கவேண்டிய கட்டாயத்தில் அவர்களும் அடையாளத்தைத் தொலைத்திருக்கிறார்கள். வழி தப்பியவன் இன்னொருவனுக்கு வழிகாட்டுவது எப்படி முடியும் ? மாதத்தில் ஏழெட்டு நாட்களாவது மேடைக்கச்சோிகளில் பாட வாய்ப்புக்கிடைக்கிறதுதான் பொிய ஆறுதல், சினிமாவில்போல ஒதுக்காமல், சீனியர் பாடகர் என்று விழுந்து கும்பிடாத குறையாய் மதிக்கிறார்கள், சாதாரணமாக பாடுகிற பாடல்களுக்குக்கூட, ‘எக்ஸ்பீாியன்ஸ்-ன்னா சும்மாவா, கஷ்டமான பாட்டை எப்படி ஊதித் தள்ளறார் பாருங்க ‘ என்று பாராட்டுகிறார்கள். காதல் பாட்டுக்கள், காதல்தோல்வி பாட்டுகள், தத்துவப்பாட்டுகள், வைரமுத்து பாட்டுகள், சோகப்பாட்டுகள் என்று பலதலைப்புகளில் புதுமையான கச்சோிகள் செய்ய வாய்ப்புக்கிடைக்கிறது, என்ன, முன்பு லட்சக்கணக்கில் என் பாட்டைக் கேட்டார்கள், இப்போது மூடிய அரங்கத்துக்குள் சில ஆயிரம் பேர்களுக்காக மட்டும் பாடவேண்டியிருக்கிறது, சாியோ, தப்போ, இவர்களின் கைதட்டல் ஆத்மார்த்தமானது என்கிற உணர்வு இருக்கிறது, திருப்தி இருக்கிறது, அது தவிர வேறென்ன வேண்டும் ஒரு கலைஞனுக்கு ?

நிகழ்ச்சி நிறைவுபெற்றது. முடிவுகளை அறிவிக்க என்னை அழைக்கிறார்கள். இயக்குநர் மீண்டும் ‘ராயல் ‘ நடை வேண்டுமென்கிறார். ஒளி வெள்ளத்துக்கிடையில் முன்பைவிட மெதுவாய் நடந்துவருகிறேன், நல்லவேளையாய் அதை ாீடேக் கேட்கவில்லை. ‘எல்லோரும் நன்றாகப் பாடினார்கள், குறிப்பாய் சொல்லப்போனால் ஒவ்வொரு ரவுண்டிலும் ஒவ்வொருவர் முதல்மார்க் வாங்கியிருக்கிறார்கள் ‘ என்கிறேன். கைதட்டுகிறார்கள், ‘ஆனால், ஆண்களில் ஒருவர், பெண்களில் ஒருவர் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள், அதன்படி மார்க் அடிப்படையில் திரு. சுந்தர் மற்றும் செல்வி. சுனந்தா இருவரையும் வெற்றிபெற்றதாக ‘ அறிவிக்கிறேன். நிறைய கைதட்டல்கள் தொடர்கிறது. வெற்றிபெற்ற இருவருமே இளம்வயது, முகம்முழுக்க சிாிப்போடு எழுந்து வந்து என் காலில் விழப்போகிறவர்களைத் தடுத்து வாழ்த்துச் சொல்கிறேன். பாிசுகளை வழங்கும்போது முன்பு பார்த்த சுனந்தாவை இன்னொருமுறை கவனிக்கிறேன், அழகாய்த்தான் இருக்கிறாள்.

மற்றவர்களையும் அழைக்கிறேன். ஆறுதல் பாிசுகள் பொியபொிய டப்பாக்களில் இருந்ததைக் கொடுத்து, ‘பெட்டர்லக் நெக்ஸ்ட் டைம் ‘ என்கிறேன். எல்லோரும் சேர்ந்து ‘அலைபாயுதே கண்ணா ‘ பாடுகிறோம், கேமெராக்கள் எல்லாம் உச்சிக்குப்போய் டாப்வ்யூவில் எங்களைப் படம்பிடிக்கின்றன. நிகழ்ச்சி இனிதே முடிகிறது.

எல்லோாிடமும் விடைபெற்றுக்கொண்டு, ஆட்டோகிராஃப்களை நிரப்பிவிட்டு நான் படிகளில் இறங்கிக்கொண்டிருக்கும்போது பின்னாலிருந்து, ‘சார் ‘ என்று குரல் கேட்டுத் திரும்புகிறேன். சிவக்குமார்.

‘வாங்க சிவக்குமார், நீங்க நல்லா பாடினீங்க ‘ என்கிறேன் சம்பிரதாயமாய் சிாித்து.

‘தேங்க்ஸ் சார் ‘ என்கிறார் அவர் கைகுவித்து, தொடர்ந்து, ‘சின்ன வயசில நாம ஒரேமேடையிலே பாடினோம்-ன்னு சொன்னேனில்ல ? ‘

‘ஆமாம், பட், எனக்கு சுத்தமா ஞாபகமில்லை சிவக்குமார் ‘ என்கிறேன் மீண்டும் வருத்தத்துடன்.

‘பரவாயில்லை சார், நிறைய போட்டிகளிலே கலந்துகிட்டிருப்பீங்க, இதை ஞாபகம் வெச்சிருப்பீங்க-ன்னு எதிர்பார்க்கிறது நியாயமில்லை, பட், ஒரு சின்ன நிகழ்ச்சி சொல்றேன், ஞாபகம் வருதா பார்க்கறீங்களா ? ‘ என்று கண்களில் சிாித்துக் கேட்கிறார்.

‘சொல்லுங்க சொல்லுங்க ‘ என்கிறேன் குழந்தை ஆர்வத்துடன், பார்வையாளர்களுக்காக கீழே போடப்பட்டிருந்த சேர்களில் உட்கார்ந்துகொள்கிறோம்.

‘அந்த போட்டியிலே கலந்துகிட்டபோது எனக்கு பத்து வயசு, எனக்கு பாிசு இல்லைன்னதும் ஓஓ-ன்னு அழுதுட்டேன். என் அப்பா, அம்மா பாவம், என்னை சமாதானப்படுத்த ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க, கூட்டம் முழுக்க என் அழுகையைப் பார்த்துகிட்டிருக்கு, மேடையிலே இருந்த நடுவர், விழாத்தலைவர் எல்லோரும் எனக்கு சாக்லேட்டெல்லாம் கொடுத்துப்பார்க்கறாங்க, ஆனா நான் அழுகையை நிறுத்தலை ‘ அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மழைபெய்த கண்ணாடியை யாரோ பளிச்சென்று துடைத்ததுபோல சட்டென்று எனக்கு நினைவு வந்துவிட்டது, ‘ய்யெஸ், இப்போ ஞாபகம் வருது, நீங்க அழுததைப் பார்த்துட்டு எனக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு, எனக்குக்கொடுத்த ப்ரைஸை உங்களுக்குத் தந்துடலாமா-ன்னுகூட எங்க அப்பாகிட்டே கேட்டு திட்டு வாங்கினேன் ‘ என்றேன். நான் ஜெயித்ததால்தான் அந்தப்பையன் அழுகிறான் என்று என்மேலே குற்றம்சொல்லிக்கொள்ளத்தோன்றிய சின்னப்பிள்ளை மனதை நினைத்து மகிழ்கிறேன்.

அவர் முகம்முழுக்க சந்தோஷம், ‘இன்ஃபாக்ட், நான் மேடையிலேயே பண்ணின அழுகை, கலாட்டாவைப்பார்த்து போட்டியை நடத்தினவங்களே எனக்கு ஒரு ஆறுதல் பாிசு கொடுத்தாங்க ‘ என்று வெட்கத்தோடு சிாித்தார். நானும் அந்த சிாிப்பில் கலந்துகொண்டேன், சற்று பொறுத்து குறும்போடு, ‘என்ன சிவக்குமார், இப்பவும் உங்களுக்கு பாிசு கிடைக்கலையே, கையைக்காலை உதைச்சுட்டு அழப்போறீங்களா ? ‘ என்று கண்ணடிக்கிறேன்.

சட்டென்று அவர் முகத்தில் ஒரு வெறுமை படர்ந்தது, ‘இல்லை சார், இப்போ அழப்போறதில்லை, எல்லாம் பழகிப்போச்சு, மரத்துப்போச்சு ‘ என்கிறார். என்னதான் வெறும் கிண்டல் என்றாலும், அந்த கேள்வியைக் கேட்டிருக்க வேண்டாமோ என்று இப்போது நினைக்கிறேன், அவர் அதைத் தவறாக எடுத்துக்கொண்டு மனம்புண்பட வாய்ப்பளித்துவிட்டேன், ‘சாாி மிஸ்டர் சிவக்குமார், நான் அந்த அர்த்தத்திலே கேட்கலை ‘ என்கிறேன் நிஜமான வருத்தத்துடன்.

‘அச்சச்சோ, நீங்க எதுவும் தப்பா கேட்டுடலை சார், என் மனசிலே பட்டதை சொன்னேன். அப்போ சின்ன வயசு, தோல்வி-ன்னா என்னன்னு தொியாது, என்னைவிட்டுட்டு இன்னொருத்தன் ஜெயிச்சுட்டான்-ங்கறதை என்னால ஏத்துக்கவே முடியலை, அதெப்படி இன்னொருத்தர் ஜெயிக்கமுடியும்-ன்னு மனசுக்குள்ள அந்த வயசுக்கே உாிய ஒரு பிடிவாதம், தாங்க முடியாம அழுதுட்டேன். அப்புறம் வளரவளர, தோல்விங்கறது வாழ்க்கையிலே ஒரு பகுதி, அதுவும் இருக்கும், வெற்றியும் இருக்கும், ரெண்டையும் அரவணைச்சுகிட்டுத்தான் வாழ்ந்தாகணும்-ங்கறது புாிஞ்சு போச்சு ‘ ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு தொடர்ந்து பேசினார்.

‘எஸ்எஸ்எல்சி மார்க் குறைஞ்சதால, ப்ளஸ்டூவிலே நான் கேட்ட க்ரூப் கிடைக்கலை., நல்ல காலேஜ் கிடைக்கலை, ஐ ஏ எஸ் படிக்கணும்ன்னு ஆசைப்பட்டேன், கிடைக்கலை, அட்லீஸ்ட் அரசாங்கவேலை வேணும்ன்னு தலைகீழா நின்னேன், பல இடங்களிலே லஞ்சம்கூட கொடுத்துக்கூட பார்த்துட்டேன், ஒண்ணும் நடக்கலை, விதவிதமா அப்ளிகேஷன், நாளுக்கு ஒரு இன்டர்வியூ, ஆனா வேலைதான் கிடைக்கலை, தண்டச்சோறு-ன்னு அப்பா, அம்மா சொல்லலை, எனக்கு நானே சொல்லிகிட்டேன், ம்யூசிக்லயும் பொிசா வரமுடியலை, அங்கொண்ணும் இங்கொண்ணுமா அம்பதுரூபாய் காசுக்கு ஆர்க்கெஸ்ட்ராவிலே பாட சான்ஸ், அவ்வளவுதான், அப்புறம் ஒருவழியா தனியார்பேங்க் ஒண்ணில வேலை கிடைச்சது, ரெண்டு வருஷம் முன்னால கல்யாணம் முடிஞ்சு இப்போ ஒரு குழந்தை இருக்கு ‘ என்றார்.

இத்தனைக்கும் அவர்முகத்தில் சிாிப்பு மாறவே இல்லை என்பதுதான் எனக்கு அதிசயமாய் இருந்தது. தொடர்ந்து, ‘வாழ்க்கையில எல்லாமே தோல்விதானா-ன்னு நான் கவலைப்பட்டு அழுத நாட்கள் உண்டு, தற்கொலை செஞ்சுக்கலாமா-ன்னுகூட யோசிச்சிருக்கேன், ஆனா இப்போ பார்க்கிறபோது நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல குடும்பம், நல்லாதானே இருக்கேன் ? அந்த தோல்விகளால என்னை என்ன செய்ய முடிஞ்சது ? நான் நினைச்சது எதுவுமே கிடைக்கலைன்னாலும், கிடைச்சதிலே இருக்கிற நல்லதைப்பார்க்க கத்துகிட்டேன் சார், இனிமே தோல்வி-ன்னா அழமாட்டேன், ஏன்னா, அது ஒண்ணும் பொிய விஷயமே இல்லைன்னு புாிஞ்சுகிட்டேன் ‘ என்கிறார் அவர்.

நான் மெளனமாய் அவர் சொல்வதை ஏற்கிறேன். மனதில் கனம் ஏறிப்போயிருக்கிறது. கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘சிவக்குமார், உங்க அட்ரஸ் வேணுமே ‘ என்கிறேன். ‘எதற்கு ? ‘ என்று அவர் கேட்கவில்லை. பாக்கெட்டிலிருந்து அட்டை எடுத்துக்கொடுக்கிறார், ‘ப்ளீஸ், பீ இன் டச் ‘ என்கிறார். ‘நிச்சயமா ! ‘ என்று சிாிக்கிறேன். என் கார்டையும் அவாிடம் கொடுக்கிறேன். கைகுலுக்கி விடைபெற்றுக்கொள்கிறோம்.

காாில் திரும்பி வந்துகொண்டிருக்கும்போது அவர்கொடுத்த கார்டைப் பார்க்கிறேன். அஸிஸ்டென்ட் மேனேஜர் என்று இருக்கிறது, க்ளார்க்காக சேர்ந்திருப்பார், இப்போது உதவி மேனேஜர், அடுத்து மேனேஜர், அதற்குமேல் இன்னும் ஏதாவது இருக்கும், ஒழுங்காக வேலை செய்தால் ாிடையராகிறநாள்வரையில் ஏற்றம்தான், இறக்கத்துக்கு வாய்ப்பில்லை. சிவக்குமாரை நினைக்க பொறாமையாய் இருக்கிறது. அதேசமயம் நான் கொடுத்த கார்டிலிருக்கிற மைக்பிடித்த என் அலங்கார ஓவியத்தைப் பார்த்து அவர் அங்கே சலனப்பட்டுக்கொண்டிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது, மனதுக்குள் ஏதோ குறுகுறுக்கிறது.

என் சிநேகித இசையமைப்பாளர்களிடம் கேட்டு சிவக்குமாருக்கு சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்பு வாங்கிக்கொடுக்கலாம் என்று உள்ளே ஒரு யோசனை ஓடுகிறது. இப்போது என் வார்த்தைக்கு சினிமாவில் அவ்வளவு மதிப்பு இருப்பதாய்ச் சொல்லிவிட முடியாது, ஆனால் நான் சொன்னால் கண்டிப்பாக வாய்ஸ் டெஸ்ட்டாவது செய்வார்கள், இப்போதுதான் யார்யாரோ பாட வருகிறார்களே, அதிர்ஷ்டமிருந்தால் சிவக்குமாருக்கும் ஒரு சான்ஸ் கிடைக்கும் என்றுதான் தோன்றுகிறது.

ஜன்னலுக்கு வெளியே ஒளிர்கிற அலங்கார மின்விளக்குகளைப் பார்த்துக்கொண்டே செல்ஃபோன் எடுத்துப் பிாித்துவைத்துக்கொண்டு நீண்டநேரம் யோசிக்கிறேன். அன்றுமாலைமுழுதும் நினைவுகளாய் என்னைச்சுற்றி ஓடுகிறது, குழப்பமாய் இருக்கிறது.

சில நிமிடங்களுக்குப் பிறகு ஃபோனையும், சிவக்குமாாின் அட்டையையும் பைக்குள் திரும்ப வைத்துக்கொள்கிறேன். ‘கொஞ்சம் மெதுவாப் போப்பா ‘ என்று டிரைவாிடம் சொல்லிவிட்டு சாய்ந்து கண்மூடிக் கொள்கிறேன். ***

Series Navigation

லாவண்யா

லாவண்யா