அவரவர் பார்வையில்

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

T.V.ராதாகிருஷ்ணன்


அவள்:-

நான் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகை நந்தினி.நான் கதானாயகியாக
நடிக்கும் தொடர் தினமும் இரவு 9 மணிக்கு தொலைக்காட்சியில் ஒலி/ஒளி
பரப்பாகிறது.அதில் என் நடிப்பைப் பாராட்டி போற்றாதவர்கள்
இல்லை.மாமியாரால் கொடுமைப்படுத்தப்படும் மருமகள் பாத்திரம் என்னுடையது.

எனக்கு 26 வயது.என் பெற்றோர்கள் எனக்கு வரன் பார்க்க ஆறம்பித்துவிட்டார்கள்.

ஒரு திருமணத் தரகர் மூலமாக ரவி என்பவரின் ஜாதகம் வந்திருக்கிறது.அவர்
சென்னையில் ஒரு மென்பொருள் வல்லுநராக இருக்கிறார்.மாதம் கிட்டத்தட்ட ஒரு
லட்சம் சம்பளம்.

அம்மா சொன்னாள் ‘நந்தினி இந்த வரன் மட்டும் உன்னை மணக்க சரி சொல்லிட்டா
வாழ்க்கையில் நீ ராசாத்தி மாதிரி இருக்கலாம்.நடிப்புத்தொழிலுக்கே
முழுக்கு போட்டுடலாம்’ என்று.

அவரை மணந்தால் வாழ்க்கையில் சோகம் என்றால் என்ன என்றே தெரியாமல்
இருக்கலாம்.சிரித்த முகத்துடன் வலம் வரலாம்.

இன்று அந்த தரகர் நல்ல முடிவுடன் வருவார் என எதிர்ப்பார்க்கிறேன்.

ரவியின் தாயார்:-
—————–
என் மகன் ரவிக்கு நந்தினியின் ஜாதகம் வந்திருக்கு.பாவம் அந்த
பொண்ணு.ரொம்ப கொடுமையை அனுபவிச்சுட்டா.ரவி அந்த பெண்ணை திருமணம்
பண்ணிக்க சம்மதிச்சுட்டா, ஒரு மாமியாரா நடக்காம, என் பெண்ணா நினைச்சு
நான் அன்பை செலுத்துவேன்.இன்னிக்கு அவன் சம்மதத்தை எப்படியாவது
வாங்கிடணும்.

அவன்:-
———-
நான் ரவி.மென்பொருள் தொழில் நுட்ப வல்லுநராக இருக்கேன்.28
வயசு.என்னுடைய தாய்,தந்தைக்கு ஒரே பையன்.எனக்கு திருமணமாகி மருமகள்
வீட்டிற்கு வரணும்னு அம்மா ரொம்ப தொண தொணக்க ஆரம்பிச்சுட்டார்.

திடீரென ஒருநாள் இரவு 9 மணிக்கு கணிப்பொறி முன்னால்
அமர்ந்துகொண்டிருந்த என்னைக்கூப்பிட்டு, தொலைக்காட்சி பெட்டி முன்னால்
அமர வைத்துவிட்டு ‘இந்த தொடரை கொஞ்சம் பாரேன்’என்றாள்.
நானும் பார்த்தேன்.
பாவம்..அந்த நந்தினிப் பெண்..மாமியாரால் மிகவும்
கொடுமைப்படுத்தப்படுகிறாள்.அவள் முகத்தில் ஒரு அழிக்க முடியா சோகம்
குடிகொண்டிருந்தது.
அம்மா கேட்டாள் ‘டேய் ரவி அந்த நந்தினியோட ஜாதகம்
வந்திருக்கு..பாவம்..பார்த்தா..நல்ல பெண்ணா தெரிகிறாள்.உனக்குப் பேசி
முடித்து விடலாமா?’

‘வேண்டாம் அம்மா..எனக்கு வரப்போகிறவள் மகிழ்ச்சியா சிரித்த முகத்துடன்
இருக்கவேண்டும்.இந்தப்பெண் அந்த பாத்திரமாகவே மாறி விட்டதால்..அவளை
அறியாமல் ஒரு துயரம் அவள் முகத்தில் குடியேறிவிட்டது.அதை மாற்ற
முடியும்னு நான் நினைக்கவில்லை.மேலும் வீட்டிற்குள் நுழையும் போதே
மாமியார் என்கிறவள் ஒரு கொடுமைக்காரி என்ற எண்ணத்திலேயே வருவாள்.அதனால்
இந்த பெண் எனக்கு வேண்டாம்’ என்று சொல்லி விட்டேன்
.
T.V.ராதாகிருஷ்ணன்

Series Navigation