அழிநாடு

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

PS நரேந்திரன்


I

‘அழிநாட்டின் ‘ பெருமைதனை
அனைவருக்கும் விளம்பிடுவேன்.
தெரிந்தது போலிருந்தால்
தேற்றிக்கொள்வீர் மனததனை.

***

தகுதி இல்லாதோரெல்லாம் இங்கு
தலைவராகலாம்,
தனக்கென ஒரு கூட்டமிருந்தால்.
குறைந்த பட்ச தகுதியிங்கு
‘குண்டனாய் ‘ இருப்பதுவே.

போன தலைமுறை
நடிகைகளும்,
போய்ச்சேர்ந்தவனின்
வைப்பாட்டியும்,
ஆகிடலாம் அந்நாட்டில்
அரசியல்வாதியாய்.

அதையும் தாண்டி
ஏகிடலாம்
முதலமைச்சராய்
இன்னும் பிரதமராய்.

***

மந்திரியாகிட
‘மடையனாய் ‘ இருந்தால்
போதும்.
‘அடி மடையனென்றால் ‘
அதனினும் விசேஷம்.

தொண்டராம்
குண்டரெலாமிங்கு
‘டெண்டர் ‘ முறையிலே
கொள்ளையடிப்பர்.
கண்டு, கேட்கும் அதிகாரியை
கட்டிவைத்து உதைத்திடுவர்.

அரசு இங்கு
முரசு கட்டில்.
ஒய்வெடுத்து,
உண்டு,
உறங்கி
சமுதாயத்தை நாறடிக்கும்
வேசித்தனமான கூட்டமங்கே
விவஸ்தையின்றி ஆட்டமிடும்.

அங்கே,
மனிதாபிமானம் நசுக்கப்பட்டு
மதாபிமானம் வளர்க்கப்படும்.
மதநெறி மறைக்கப்பட்டு
மதவெறி ஊட்டப்படும்.

சாதிப்பேய்
கட்டவிழ்ந்து
சாமானியன்
மோதிச்சாவான்.
சாதனை இதுவென்று
மார்தட்டும்
ஆளும் வர்க்கம்.

***

சோதிடன் சொல்வதுவே
தலைமைக்கு,
போதி மரத்து
புத்தன் வாக்கு.

ஆட்சி பீடத்திலவனுக்கு
அத்தனை அத்தனை
செல்வாக்கு.

சூதுடனவனே
வாய்திறக்க,
சுழலுமே பலரின்
நாற்காலி.

வாதிடவே வலிவின்றி,
வாய் மூடி
மொளனியாகும்
பக்த கோடி.

***
உத்தமராய் வெளிக்காட்டி
ஓராயிரம் கொள்ளை நடக்க
சத்தமில்லாமல்
சுவிஸ் பாங்கில்
சட சடவென
டாலர் ஏறும்.

பத்தரை மாற்றுத்
தங்கங்கமன்று அவர்
நல்ல
பசுத்தோல் போர்த்திய
‘அசிங்கமென்று ‘
எத்துணை பேருக்குத்
தெரியும் ?

***
II
அங்கு நீதிக்கு இடமில்லை.
நெறிமுறைகள் அழிக்கப்படும்.
அறிவாளிகள் அடக்கப்பட்டு
‘அரை ‘வாளிகளின் ஆட்டம்.
அறிவின் அனல் தகித்தால்
வீட்டிற்கு
‘ஆட்டோ ‘ வரும்.
***
சொத்தை சினிமா நடிகனிங்கு
சித்தனாக
சித்தரிக்கப் படுவான்.
புத்தனாக தனை வெளிக்காட்டி
நித்தமொன்று உளறிடுவான்.

அத்தனையும் சத்தியமென்று
பித்துப் பிடித்த கூட்டமொன்று
அவன் பின்னால்
அலைந்தொழியும்.

சொல்வது
அத்தனையும் பொய்யென்று
சொத்தை நடிகனுக்கு மட்டும்தானே
தெரியும் ?.
***
பக்கத்து வீட்டில் குழந்தை
பாலுக்கழுக,
கதவடைத்து,
பால் பாயசம் பருகும்
பரந்த மனப்பான்மையுள்ள தேசமது.

பேதை மக்களுக்கங்கு
போதையே பிரதானம்.
லாட்டரிக் கடையே
தேவாலயம்.
உழைப்பின் உயர் மறந்தவர்
ஆகிற்றே பலகாலம்.
***
கல்விக் கூடமெங்கும்
கனஜோராய்
கலவிப் பாடம்.

காசு கொடுத்தால்
கிடைத்திடுமே
‘டிகிரி ‘ நாலும்!.
***
இத்துணை பெருமை பெற்ற
இழிநாடாம்
அழிநாட்டின் பெருமைதனை
அப்பப்போ தியம்பிடுவேன்.
இப்போதைக் கிதுபோதுமே ?.
************

Series Navigation