அறிவியல் துளிகள்-17

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


65. தொலைக்காட்சி ஆன்டெனாக்களைச் செய்ய அலுமினிய உலோகத்தை மட்டுமே பயன் படுத்துவது ஏன் ?

மின்சாரத்தை எளிதில் கடத்துகிற எந்த உலோகத்தையும் ஆன்டெனாவிற்காகப் பயன் படுத்தலாம். ஆனால் அலுமினியத்தைப் பயன்படுத்துவதற்கு அதன் சிறந்த பண்புநலன்களே (Properties) காரணம். அலுமினியம் எடை குறைந்த, இலேசான உலோகமானாலும் வலிமை மிக்கது. ஆன்டெனா செய்வதற்குத் தேவையான குழாய்களாகவும், தட்டுகளாகவும் அதனை எளிதாக வடிவமைக்கலாம். இவ்வுலோகம் அரிமானத் தடுப்பு (Corrosion resistance) கொண்டது. மழை, வெயில், காற்று போன்ற இயற்கைச் சூழலுக்கு ஆட்படும் ஆன்டெனா வுக்கு இப்பண்பு மிகவும் இன்றியமையாதது. மேலும் செம்பு, பித்தளை போன்ற உலோகங்களுடன் ஒப்பிடுகையில் அலுமினியம் விலை மலிவானது. எனவேதான் இவ்வுலோகம் ஆன்டெனா செய்வதற்குப் பெரிதும் பயன்படுகிறது.

66. நீண்ட தூரம் செலுத்துவதற்கு மாறுதிசை மின்னோட்டத்தைப் (Alternating current — AC) பயன் படுத்துவது ஏன் ?

நீண்ட தூரச் செலுத்துகைக்கு மாறு மின்னோட்டத்தைப் பயன்படுத்துவதற்கு இரு காரணங்கள் உள. முதலாவது மாறு மின்னோட்டத்தின் அழுத்தத்தை (Voltage) மின் மாற்றிகளைப் (Transformer) பயன்படுத்திக் கூட்டவோ, குறைக்கவோ இயலும். எடுத்துக்காட்டாக 400,000 வோல்ட் மினழுத்தமுள்ள மாறு மின்னோட்டத்தை 220 வோல்ட் அழுத்தமுள்ள மின்னோட்டமாக, இறக்கு மின்மாற்றியைப் (Step down transformer) பயன்படுத்தி, வீட்டுப் பயன்பாட்டிற்காகக் குறைத்திட இயலும். அடுத்து மாறு மின்னோட்டத்தை உயர் அழுத்தத்தில் நீண்டதூரம் செலுத்தும்போது ஏற்படும் இழப்பு மிகவும் குறைவு.

67. பட்டாசைப் பிரித்து அதனுள்ளே இருக்கும் வெடித்தூளை எடுத்துப் பற்றவைத்தால் ஏன் வெடிப்பதில்லை ?

பட்டாசினுள் வெடித்தூள் மற்றும் வேதிப்பொருள்கள் ஒருங்கிணைக்கப்பெற்று இறுக்கமாக அடைக்கப்படுகிறது. பட்டாசைப் பற்றவைக்கும்போது, வெடித்தூள் உடனடியாகப் பற்றிக் கொண்டு எராளமான புகை உற்பத்தியாகிறது. இதே நேரத்தில் வெடித்தூள் இறுக்கமாக அடைக்கப்பட்டுள்ள பட்டசினுள் மிகுந்த அழுத்தம் உண்டாகி அதன் காரணமாக பேரொலி எழும்பி வெடிச் சத்தம் உண்டாகிறது. மாறாகப் பட்டாசைப் பிரித்து வெடித்தூளைத் தனியாக எடுத்துப் பற்றவைத்தால் மிகுதியான புகை உண்டாகும் என்பது உண்மையே; ஆனால் அவ்வாறு உண்டாகும் புகை உடனடியாகக் காற்றில் கலந்துவிடுகிறது. இதனால் அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அறவே இல்லாமற் போகிறது. எனவே வெடிப்பொலி ஏதும் உண்டாவதில்லை.

68. நறுக்கிய ஆப்பிள் துண்டுகளைக் காற்றுப்பட வைத்தால், அவை ஆரஞ்சு நிறத்திற்கு மாறுவது ஏன் ?

ஆப்பிளில் டானின் (Tannin) என்னும் கரிமச் சேர்மங்கள் உள்ளன. அவை துவர்ப்பு ஊட்டிகளாகச் (Astringent agent) செயலாற்றுபவை. பழத்திலுள்ள ஈரப்பசையை அவை நீக்கிவிடும். பருவ காலங்களுக்கு ஏற்பவும், பழத்தின் முதிர்ச்சிக்கு ஏற்பவும் டானின் அளவு பழத்தில் அமைகிறது. ஆப்பிள் பச்சையாக இருக்கும்போது டானின் அளவு கூடுதலாகவும், பழுக்கப்பழுக்க அதன் அளவு குறைவாகவும் இருக்கும். ஆப்பிளைத் துண்டாக நறுக்கும் போது, அத்துண்டுகள் மீது சுற்றுப்புறக் காற்றுப் படிகிறது; அப்போது ஆப்பிளிலுள்ள நொதிகளின் (enzymes) வினையூக்கத்தால் டானின் மற்றும் காற்றிலுள்ள உயிர்வளி இரண்டும் கலந்து ஆக்சைடுகள் உண்டாகின்றன. இந்த ஆக்சைடுகள் காரணமாகவே நறுக்கிய ஆப்ப்பிள் துண்டுகளில் ஆரஞ்சு வண்ணம் உண்டாகிறது.

Dr R Vijayaraghavan முனைவர் இரா விஜயராகவன்

BTech MIE MA MEd PhD பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

Email ragha2193van@yahoo.com

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர