அறிமுகம்

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

புதியமாதவி


மாமாவின் நேர்க்காணல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. வீட்டில் எல்லோரும் தொலைக்காட்சியின் முன்னால் கூடியிருந்தார்கள். தாத்தாவை தொலைக்காட்சியில் காண்பதில் பேரன் பேத்திகளுக்கெல்லாம் கொண்டாட்டம். தொலைக்காட்சி நிகழ்ச்சியை அப்படியே சின்னவன் விடியோ சூட்டிங் செய்தான்.தொலைக்காட்சியில் விளம்பரம் வரும்போதெல்லாம் ஹாலில் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருந்த தன் அப்பாவையும் பல்வேறு கோணங்களில் தன் வீடீயோ காமிராவுக்குள் பொருத்திக்கொண்டிருந்தான். அவன் மனைவி அவனருகில் போய் ஏதொ காதில் சொல்லிவிட்டு வந்தாள்.

அவன் தன் அப்பாவை பெரிய சோபாவில் இருந்து எழுந்து ஹாலில் சுவரை ஒட்டி இருக்கும் ஷோகேஷ் அருகில் ஒரு சேரைப் போட்டு உட்கார்ந்து புன்னகைக்கச் சொன்னான். அவரும் தன் சால்வையை சரி செய்து கொண்டே ரெடிமேட் புன்னகையுடன் அவன் காமிராவைப் பார்த்தார். இதற்குள் வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். மூத்தவன் அவருடைய புத்தக அலமாரி பின்புலத்தில் தெரிகிற மாதிரி எடுக்கச் சொன்னான். அவருக்கும் அது சரியாகவே பட்டது.
இதற்குள் அவருடைய புத்தக அலமாரியில் தூசித்தட்டாமல் இருந்த அவருடைய தலைவரின் புகைப்படத்தை எடுத்து அப்படியே துடைக்காமல் மேசையில் நடுவில் வைத்தார் அவருடைய மனைவி. இப்படியாக தொலைக்காட்சி நேர்க்காணல் சூட்டிங்குடன் சேர்ந்து வீட்டில் ஒரு மெகா சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. சின்னக்குழந்தை போல வீட்டில் சிறுசுகள் பெரிசுகள் சொல்கிற எல்லாத்தையும் கேட்டுக் கொண்டு சூட்டிங் சிறப்பாக நடக்க பெரும் ஒத்துழைப்பு கொடுத்துக்கொண்டிருந்தார் சிதம்பரம்.

அதற்குள் விளம்பரம் முடிந்துவிட்டது. மீண்டும் எல்லோரும் தொலைக்காட்சியின் முன்னால் அணிவகுத்தார்கள். மலர்விழி மட்டும் தன் இருக்கையை மாற்றாமல் இவர்கள் கூத்தடிப்பதைக் கண்டு ரசித்துக்கொண்டிருந்தாள். வழக்கம்போல அவர் அரசியல் -சமூக வாழ்க்கையுடன் கலந்த குடும்ப வாழ்க்கையைப் பற்றி கேள்வி திரும்பியது. எம் மூத்த மகன் டாக்டர். இளவரசு. அவன் திருமணம் செய்திருப்பது எங்கள் இயக்கத்திலிருந்த ஒரு தாழ்த்தப்பட்ட தோழரின் மகளைத்தான். அதற்கு மேலாக தன்னைப் பற்றி என்ன செல்லப்போகிறார் என்று ஆர்வத்துடன் தொலைக்காட்சியின் திரையைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மலர்விழி. வழக்கம்போல அதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை என்கிற மாதிரி அவர் தன் அடுத்த மகனைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். அவளால் அந்த இடத்தில் இருக்க முடியவில்லை. ஆனால் உடனே எழுந்து செல்வதும் சரியாக இருக்காதே என்று நினைத்துக் கொண்டு எல்லோருடனும் சேர்ந்து அவளும் தொலைக்காட்சியுடன்உட்கார்ந்திருந்தாள்.

ஆச்சி மசாலா வழங்கும் பெப்சி உமாவின் உங்கள் உங்கள் சாய்ஸ் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.

கணவன், குழந்தைகள் என்று அவளுடன் நேரடியாகச் சம்மந்தப்பட்டவர்கள் அருகிலிருந்தும் அவள் தனியாக இருப்பது போலிருந்தது. எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அவளும் அவர்களுடன் சேர்ந்து சிரிக்க முயன்று அது முடியவில்லை என்பதை உணர்ந்தவுடன் அவர்களிடமிருந்து விலகி எங்கெயோ பார்வையைச் செலுத்தினாள். அவள் திருமண மண்டபத்தில் நிற்கிறாள். கூட்டம் நிரம்பி வழிகிறது. அவளுடைய அப்பாவும் அவளுடைய கணவனின் அப்பாவும் தன் தோள்களில் தொங்கும் துண்டுகளைச் சரிய விட்டுக்கொண்டே அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். உட்காருவதற்கு மணமக்களுக்கு ஊஞ்சல் போலஅலங்காரம் செய்யப்பட்ட இருக்கை இருந்தும் அவர்கள் இருவராலும் ஒரு நிமிடம் கூட அந்த ஊஞ்சலில் உட்கார முடியவில்லை. ஒவ்வொரு மாவட்ட, வட்ட செயலாளர்களும் தலைவர்களும் இயக்கத் தோழர்களும் எழுத்தாளர்களும் வந்திருந்தார்கள். அவளுடைய அப்பாவோ மாமாவோ யாராவது அவர்களுடன் மேடையில் ஏறி போட்டோவுக்கு நின்றார்கள். அவளும் இளவரசுவும் கழுத்தில் கனத்த மாலையுடன் ஒவ்வொரு முறையும் எழுந்து நின்று போட்டோவில் நடுநாயகமாக நின்றார்கள்.

அமைச்சர்களும் எதிர்க்கட்சி தலைவர்களும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களும் வரும்போது அவளுடைய அப்பாவும் மாமானாரும் சேர்ந்து வந்து அவர்களுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்கள். மேடையில் வாழ்த்திப் பேசிய எல்லோருமே அவள் தாழ்த்தப்பட்ட தோழரின் மகள் என்பதை மறக்காமல் சொல்லி தங்கள் இயக்கப் பெருமையைப் பேசிப் பேசி புல்லரித்துப் போனார்கள்…அவளுடைய அப்பாவுக்கும் இதிலெல்லாம் சந்தோஷம் இருந்ததை அவள் பார்த்தாள். அவர்கள் பேசுவது எதையும் எந்த அர்தத்திலும் எடுத்துக் கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை. அவள் பார்வை எல்லாம் பக்கத்தில் கோட்டு -சூட்டுடன் கம்பீரமாக தன்னை உரசிக்கொண்டு நின்ற இளவரசு மீதிருந்தது.

தொலைக்காட்சியின் முன் மீண்டும் அவர்கள் குடும்பம் முட்டி மோதியது.

இரண்டாவது மகன் கல்லூரியில் பேராசிரியர். அவன் மனைவியும் பெண்கள் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். அதுமட்டுமல்ல இலக்கியத்தில் எங்கள் இயக்கத்தின் தாக்கத்தைப் பற்றி ஆய்வு செய்து அண்மையில் முனைவர் பட்டம் வாங்கியிருக்கிறார். எங்கள் குடும்பமே இந்த இயக்கத்துடன் ஒன்றிப்போய் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றார்.

அவருடைய மகள் திருமணமாகி தற்பொது அமெரிக்காவில் இருப்பதையும் மறக்காமல் சொன்னார். அமெரிக்க வல்லரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர், உலகமயமாதலை அமெரிக்க மயமாதல் என்று தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கும் அவருக்கு மகள் அமெரிக்காவில் இருப்பதைச் சொல்லிக்கொள்வதிலும் அவளைப் பார்க்க அவரும் அவர் மனைவியும் போய்வந்ததைச் சொல்வதிலும் தனிப் பெருமை இருக்கத்தான் செய்தது.

இப்போது குடும்பத்தில் எல்லோருடனும் சேர்ந்து அவளும் சிரித்துக்கொண்டாள். அவள் சிரிப்பின் அலை மற்ற அலைகளுடன் சேர்ந்து வராமல் தனித்து எழும்பி எம்பி குதித்து அங்கிருந்த ஒவ்வொருவரையும் இழுத்துச் செல்லும் ஆவேசத்துடன் புறப்பட்டு வீட்டின் கதவுகளில் மோதி சுவர்களில் வளைந்து மெதுவாக வீட்டுக்குள் எட்டிப்பார்த்து அவர்கள் கால்களைத் தொட்டது. அவளிடமிருந்து ஒரு பெருமூச்சு..

கூடப்படித்த ஒருவனை அவர் மகள் ஐந்தாண்டுகள் காதலித்ததும் அடுத்தச் சாதிக்கு நம்ம வீட்டு பெண்ணைக் கொடுக்க முடியுமா என்று மனைவியும் மகன்களும் சொல்ல அவருக்கும் அதுவே சரியெனப்பட்டது. அந்த நேரத்தில் தான் இந்த அமெரிக்கவரன் வந்ததும் அவர்கள் கேட்டதற்கு மேல் சீர் செய்து திருமணம் செய்து கொடுத்தார்கள். ஐந்தாண்டு காதலுக்காக அவருடைய மகள் வீட்டில் எந்தவிதமானப் போராட்டமும் நடத்தவில்லைதான். என்னதான் யுரோ, பவுண்ட் மதிப்பெல்லாம் அமெரிக்க டாலரைவிடக்
அதிகம் தான் என்றாலும் இந்திய மார்க்கெட்டில்அமெரிக்க மாப்பிள்ளைக்குள்ள மதிப்பு மட்டும் எப்போதும் ஏறுமுகம் தான்.சரிவே கிடையாது என்று நினைத்துக் கொண்டவுடன் சிரிப்பு வந்தது. அவள் மட்டும் தனியாகச் சிரிப்பதைக் கண்டு இளவரசு அவளை நிமிர்ந்து பார்த்து ‘என்ன விஷயம்’ என்று கண்களால் கேட்டான்.

அவள் ஒன்றுமில்லை என்று தலையாட்டினாள்.

ஒருவழியாக நேர்க்காணல் ஒலிபரப்பு முடிந்தது. அரசு மருத்துவமனையில் இரவு நேர டூட்டி முடிந்து இந்த நேர்க்காணலைக் காண்பதற்காக காலையிலெயே எழுந்திருக்க வேண்டி இருந்தது. இதன் பின் அவள் தன் கிளினிக் போக வேண்டும். ஞாயிறு விடுமுறைக்குப் பின் கிளினிக்கில் எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும். அவள் வேகமாக எழுந்து மாடிக்குப் போனாள்.

அவரவர் வேலைகளில் எல்லோரும் பிஸியாக இருப்பார்கள். அவள் குளித்து உடைமாற்றிக்கொண்டு தன் கைப்பையுடன் கீழே வரும்போது வீட்டில் எல்லோரும் மீண்டும் தொலைக்காட்சி முன்னால் கூட்டமாக உட்கார்ந்திருப்பதைக் கண்டு அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.அவர்கள் சின்னவன் வீட்டில் எடுத்திருந்த சன்+ வீட்டு மெகா சீரியலை விடியோ காமிராவை தொலைக்காட்சியுடன் இணைத்து தொலைக்காட்சி திரையில் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.அவள் நேராக கிட்சனுக்குள் போய் சாப்பிட என்ன இருக்கிறது என்று ஒவ்வொரு பாத்திரமாக திறந்து பார்த்தாள்,எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை.

இன்னிக்கு எல்லோரும் அய்யா புரோகிராமைப் பார்க்க உக்காந்திட்டோமில்லே’ என்று சமையல் செய்யும் தாயம்மா சொல்லவும் அவளால் அவளிடம் எதுவும் சொல்ல முடியவில்லை. அவளுக்கு நல்ல பசி. சூடாக ஒரு கப் பாலையாவது கொடு என்று அவளிடம் கேட்பதற்குள் அவள் பதிலுக்கு காத்திருக்காமல் தாயம்மாவும் ஹாலில் போய் மற்றவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து
தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இரவு சாப்பிட்ட பாத்திரங்கள் எல்லாம் அப்படியே கிடந்தன. எல்லோரும் காலையில் காபி குடித்துவிட்டு விட்டுப்போயிருந்த கப்புகள் அப்படியே சாப்பாட்டு மேசையில். அவளுக்கு பாலை ஊற்றிக்குடிக்க ஒரு கப் கூட சுத்தமாக இல்லை. அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி கிளாசை எடுத்து தண்ணீரில் கழுவி அதில் முக்கால் கிளாஸ் பாலை ஊற்றிக் கொண்டு திரும்பும்போது மூன்றுவயது அவள் குழந்தை முகில் அவள் கால்களைக் கட்டிக்கொண்டு கண்ணைக் கசக்கிக்கொண்டு அழுவதற்கு ஆயத்தமானது.

முகில் அழ ஆரம்பித்தால் அவ்வளவுதான். கிளினிக் போவதற்குள் அவளுக்கும் ஒரு கப் பாலைக் கொடுத்துவிட்டால் நல்லது என்று நினைத்துக் கொண்டே அவள் குனிந்து முகிலைத் தூக்கினாள். தூக்கக் கலக்கத்தில் தன் ஒரு கைப்பிடிக்குள் வராமல் சரியும் முகிலைத் தூக்கி சாப்பாட்டு மேசையில் வைப்பதற்குள் அவள் இன்னொரு கையில் பிடித்திருந்த கண்ணாடி கிளாஸ் தரையில் விழுந்தது. அதிலிருந்த பால் சாப்பாட்டு மேசை, சுவர், அவள் புடவை எங்கும் சிதறியது. எட்டிப் பார்த்த மாமியார் முகத்தைத் திருப்பிக்கொண்டு ஹாலுக்குப் போனார்கள். நல்ல நாளும் அதுவுமா உன் பொண்டாட்டி கண்ணாடி கிளாசைப் போட்டு உடைச்சுக்கிட்டு இருக்காப் பாரு போடா போயி என்னனு பாரு.. என்று இளவரசிடம் சொல்லவும் அவன் வேகமாக கிட்சனுக்குள் போனான். பால் கொட்டி, கிளாஸ் உடைந்து தன் அம்மாவின் புடவை நாசமாகி ..இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த
முகில் சத்தமாக அழ ஆரம்பித்தாள். கோபமாக உள்ளே வந்தவனுக்கு முகிலின் சத்தம் கோபத்தை அதிகமாக்கியது. ‘தாயம்மா தான் இருக்கே. பாத்துக்க மாட்டாளா? எத்தனைத் தடவை சொல்லியிருக்கேன். எனக்குத் தெரியும் நீ எந்தக் கோபத்தை இப்படி எல்லாம் காட்டிறேன்னு’

அதுவரை அவன் மீது எந்தக் கோபமும் இல்லை. அவன் இப்படிச் சொன்னபின்தான் கோபம் வந்தது. எதுவும் பேசாமல் அவன் பார்வையை எதிர்த்து அவனைப் பார்த்தாள்.

அவள் தங்கையின் திருமணம் அடுத்த வாரம். இரண்டு நாட்களுக்கு முன்பே அவளைக் குடும்பத்துடன் வரச் சொல்லி அம்மாவும் தம்பியும் சொல்லியிருந்தார்கள். அவளுக்கும் ஆசைதான். ஆனால் இரண்டு நாட்கள் கிளினிக்கை அடைக்க முடியாது. ஆனால் திருமணம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சனிக்கிழமை கிளினிக் மூடியபின் எவ்வளவு லேட்டானாலும் திருமணவீட்டிற்குப் போய்விட வேண்டும் என்று அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். அவன் தனக்கு அடுத்தவாரம் அரசு மருத்துவமனையில் நைட் டூட்டி என்பதால் ஞாயிற்றுக்கிழமை காலையில் போனல் போதும் என்று தீர்மானமாகச் சொன்னான். என்னவோ லீவே எடுக்காமல் மருத்துவமனைக்குப் போய் நோயாளிகளின் மீது அக்கறையுடன் சிகிச்சைக் கொடுப்பவன் மாதிரி பேசினான்.
அவளுடன் சேர்ந்து அவனும் தனியாக க்ளினிக் திறந்தான். ஒன்றும் ஓடவில்லை.சில தவறான மருந்துகளை எழுதிக்கொடுக்கப்போய் பிரச்சனையாகிவிட்ட பின் வருகிற வருமானம் க்ளினிக் வாடகைக்கு கூட போதவில்லை என்றவுடன் அவன் க்ளினிக்கை இழுத்து மூடிவிட்டான். ஆனால் அதே நேரத்தில் அவளுடைய க்ளினிக்கில் கூட்டம் அதிகமானது. தன்னுடன் வந்து உதவி செய்தால் என்ன என்று சாடை மாடையாக அவனிடம் சொல்லிப் பார்த்தாள். ஆனால் அவனுடைய ஈகோ அதற்கு இடம் கொடுக்கவில்லை, அவளும் அதற்கு மேல் அவனிடம் அதைப் பற்றிப் பேசுவதில்லை.

தங்கையின் திருமணத்திற்கு அதிகாலையிலேயே எழுந்து கிளம்பினாள். மாமனார் வராவிட்டாலும் பரவாயில்லை. யார் வீட்டு திருமணத்திற்கோ அவர்கள் போவது மாதிரி உட்கார்ந்திருந்தார். தன் அப்பாவுடன் தன் வீட்டுக்கு வந்து எப்போதும் சிரிக்க சிரிக்க பேசி, தன் அம்மாவின் கையால் சாப்பிட்டுவிட்டுதான் போவேன் என்று சொல்லி உட்கார்ந்திருந்த அவரா இவர்? மனிதர்கள் தான் இந்த 10 வருடத்திற்குள் எவ்வளவு மாறிவிட்டார்கள்?

பள்ளிகூடத்தில் ஆசிரியராக வேலை செய்யும் தம்பியும் தம்பி மனைவியும் அவர்கள் வேலை செய்யும் பள்ளி கூடத்தின் ஒரு சின்ன அரங்கில் தான் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவன் மெதுவாகக் காரை ஓட்டிக்கொண்டு வந்தான். அவளால் அவனிடம் சொல்ல முடியவில்லை, கொஞ்சம் வேகமாக ஓட்டுங்களேன் என்று. நேரம் ஆக ஆக அவளுக்கு அவனருகில் உட்கார்ந்திருப்பதே அருவருப்பாகப்பட்டது. ஒருவழியாக மூகூர்த்த நேரம் கடந்து 10 நிமிடங்கள் கழித்து அவர்கள் வந்து சேர்ந்திருந்தார்கள்.

அவர்கள் கார் பள்ளிகூடத்து வாசலில் நின்றவுடன் தம்பியும் தம்பி மனைவியும் ஒடிவந்தார்கள்.

‘உங்களுக்காக தான் அத்தான் காத்திருக்கிறோம்’ என்று சொல்லிக்கொண்டே அவள் தம்பி அவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே போனான்.

‘என்னடி இது நீ உன் தங்கச்சி கலியாணத்திற்கு வர்ற நேரமாடீ’ என்று அம்மாவின் பார்வை கேட்டது. மருமகனைக் கண்டவுடன் தன் புடவை முந்தானையைத் தூக்கி கழுத்தைச் சுற்றிப் போட்டுக்கொண்டு ‘அப்பா அம்மா எல்லாரும் செளக்கியமாய்யா?’ என்று கைகளால் வணக்கம் சொல்லிக்கொண்டேகேட்டாள்.

‘என்னமா செய்யட்டும்? உன் மருமகனுக்கு அதிகாலையில் ஓர் அவசர ஓ.பி. அந்த ஆபரேசனை முடிச்சுட்டு அவசரம் அவசரமா வர்ற மாதிரி ஆயிடுச்சு’ என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள். தம்பியின் குழந்தைகள் அத்தை என்று இவளருகில் வந்து ஒட்டிக்கொள்ளாமல் தூரத்தில் நின்று அவளை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதில் குழந்தை முகில் வேறு ஏதோ வேற்று கிரகத்து மனிதர்களைப் பார்ப்பது போல அவர்கள் ஓவ்வொருவரின் முகத்தையும் பார்த்து பார்த்து அழுதுக்கொண்டிருந்தாள். தங்கைக்கு அலங்காரமெல்லாம் முடிந்திருந்தது. பக்கத்தில் போய் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டாள். இருவர் கண்களிலும் வெவ்வேறு காரணங்களுக்காய் கண்ணீர்.

திருமண வீட்டில் அப்பாவின் நண்பர்கள் என்று ஒன்றிரண்டு வயதானவர்கள் மட்டும் தான் வந்திருந்தார்கள். அவர்கள் தோளில் தொங்கிக்கொண்டிருந்த துண்டு அவர்களின் இன்றைய நிலையை அப்படியே கறுப்பு வெள்ளையில் காட்டிக்கொண்டிருந்தது. எல்லோருமே அவளிடன் வந்து ‘அய்யா சுகமா இருக்காராம்மா, அய்யா கிட்டே நான் ரொம்ப கேட்டதா சொன்னேன்னு சொல்லும்மா’ என்று அவள் மாமனாரைப்பற்றி விசாரித்தார்கள்.

மணமக்களை வாழ்த்திப்பேசிய அனைவருன் மறக்காமல் அவர்கள் குடும்பத்தில் பெண் எடுத்து ஒரு மிகப்பெரிய சமுதாயப் புரட்சியை ஏற்படுத்திவிட்ட அவள் மாமனாரைப் பற்றியும் கணவன் டாக்டர் இளவரசு பற்றியும் புகழ்ந்து தள்ளினார்கள்.
அவர்களில் ஒருவர் கூட அவள் அப்பாவைப் பற்றியும் அவளை டாக்டருக்குப் படிக்க வைப்பதற்கு அவர் செய்த தியாகங்கள் பற்றியும் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

அவளைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம் என்னவோ அவளுக்கு கறபனையில் எட்டாத வாழ்க்கையையும் தகுதியையும் இளவரசு குடும்பத்தினர் தந்துவிட்டார்கள் என்றும் அதற்காகவே காலம் காலமாய் அவர்கள் அனைவரும் நன்றிக்கடன் பட்டவர்கள் மாதிரியும் இருந்தது அவர்கள் பேச்சும் செயலும். அதிலும் அவளைச் சிறு குழந்தை முதல் மடியில் எடுத்து வைத்து கதைகள் சொல்லி வளர்த்த மாடசாமி தாத்தா அவளைக் கண்டவுடன் எழுந்து நின்று வணக்கம் சொல்லியவுடன் அவளுக்கு அந்த இடத்தில் அதற்கு மேல் நிற்கமுடியவில்லை.

அவள் தம்பியும் தம்பி மனைவியும் அவளைச் சாப்பிடக் கூப்பிட்டார்கள். அவளுக்கும் அவள் கணவருக்கும் தனியாக ஒரு டேபிள் எடுத்துப் போட்டு இரண்டு பக்கமும் இரண்டு டேபுள் ப்·பேன் சுற்றிக்கொண்டிருக்க இலைப் போட்டிருந்தார்கள். இருவரும் இரண்டு பக்கமும் நின்று கொண்டு அவர்கள் இருவருக்கும் பரிமாறினார்கள். குழந்தை முகில் என்ன செய்கிறாள் என்று எட்டிப் பார்த்தாள். அழுகை எல்லாம் முடிந்து இப்போதுதான் கொஞ்சம் சிநேகத்துடன் அவள் தன் தம்பி பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

மேடையில் புதுப்பொண்ணும் மாப்பிள்ளையும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் உட்கார்ந்திருந்தார்கள். நல்ல வெயில். ஆஸ்பேஸ்டாஷ் கூரைகள் என்பதால் சூடு அதிகமாக இருந்தது. மாப்பிள்ளை கறுப்புதான். அவளுக்கு அம்மா வழியில் தூரத்து உறவு வேறு.புழுக்கத்தில் வியர்வையைத் துடைத்துக்கொண்டு இருக்கும்போது பையன் அதிகமாகவே கறுப்பாக இருக்கிறமாதிரி தெரிந்தது.

மணமக்களை வீட்டுக்கு அழைத்துவந்து பால்பழம் கொடுத்துவிட்டுதான் நீ கிளம்பவேண்டும் என்று அவள் அம்மாவும் தம்பி குடும்பத்தினரும் பலமுறை அழைத்தார்கள். ‘வாயேன்க்கா.. ப்ளீஸ் ‘ என்று கண்களால் கெஞ்சிக் கொண்டிருந்தாள் மணப்பெண்.
இளவரசு முகத்தில் பரவியிருக்கும் எரிச்சலையும் கோபத்தையும் கண்டு கொள்ளாமல் சரி என்று சொல்லி அவர்கள் அனைவருடனும் சேர்ந்து அவளும் அவள் பிறந்த வீட்டுக்கு கிளம்பினாள்.

வீட்டு முன்னால் சின்னதாக ஒரு பந்தல். அவ்வளவுதான். அவர்களுக்கு முன்பே வீட்டுக்குப் போயிருந்த அவள் அம்மா
ஆரத்திக்கு எல்லாம் தயாராக எடுத்து வைத்திருந்தாள். மாப்பிள்ளையின் பாதம் கழுவ ஒரு சொம்பில் தண்ணீர், மஞ்சளும்
குங்குமமும் கலந்த செந்நிற வண்ணமான தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த வெற்றிலை மேல் கற்பூரம், ஒரு தட்டில் சந்தணம்,
குங்குமம்.., ஒரு சிரட்டையில் பருத்திக்கொட்டை, காய்ந்த மிளகாய்வற்றல், வேப்பிலை போட்டு வைத்திருந்தாள். மணமக்களுக்கு வாழைப்பழத்தைப் பிசைந்து அதை இரண்டு க்ளாஸில் ஊற்றி வைத்திருக்கும் பாலுடன் கலந்து பால்-பழம்..

இப்படி எல்லாம் முடிந்து கிளம்ப தயாரானாள். கிளம்புவதற்கு முன்பு வீட்டின் முன் அறையில் சுவத்தில் பிரேம் போட்டு மாட்டி வைக்கப்பட்டிருந்த அவள் புகைப்படத்தை.. ஜனாதிபதியின் கையால் அவள் தங்கப்பதக்கம் வாங்கிய புகைப்படத்தையும் அலமாரியில் தூசிப்படர்ந்து துடைக்கப்படாமல் கறுப்படைந்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அவள் வாங்கிய பல்வேறு பரிசுக் கோப்பைகளையும் கண் நிறைய பார்த்துக்கொண்டாள்.

அவர்கள் இருவரும் வந்து இவ்வளவு நேரமிருந்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. அவள் பக்கத்தில் நின்று எல்லோரும் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். கார்க் கதவு வரை தம்பி, தம்பி மனைவி, அம்மா, மற்றும் ஊர்க்காரர்கள் அனைவரும் வந்து வழி அனுப்பி வைத்தார்கள். காரில் குழந்தை முகிலுடன் ஏறும் தன் அக்காவைப் பொறாமையுடன் மணக்கோலத்தில் இருந்த அவள் தங்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை காருக்குள் ஏ.சி. காற்றில் கலந்து குளிர்ந்து போகும் ஏக்கப் பெருமூச்சுகளின் தகனம்.
———————————————————————–

Series Navigation

அறிமுகம்

This entry is part [part not set] of 25 in the series 20020902_Issue

நீல பத்மநாபன்


இன்னும் பத்துநிமிஷத்தில் அங்கே வந்துடறேன் ‘ நீயும் கிளம்பு ஒண்ணாகவே போய் பாத்துவிடுவோம். கொஞ்சம் சீரியஸ்உண்ணுதான் டாக்டர் சொன்னார்.

உத்தமன் போனை வைத்துவிட்டான்.. இவன் மனம் அடித்துக் கொண்டது.

பாவம் சங்கரன்….

அவனுக்கு இப்படி வந்திருக்கக் கூடாது.

காரியாலயத்தை விட்டு ஒருமணி நேரம் முன்னாடி வெளியில் போக அனுமதிக்காக கடிதம் எழுதிக் கொண்டிருக்கையில், மீண்டும் மீண்டும் உள்ளே மின்வெட்டும் அந்த முகம்.

நிர்மலமான முகம் என்றெல்லாம் வர்ணிக்கமுடியாது. காந்த கவர்ச்சி இருப்பதாகவும் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அந்தக் கண்களுக்குள் உள்ளடங்கி நிற்கும் ஒரு தயனீய பாவம்… நீயாவது இரங்கமாட்டாயா என்று கேட்காமல் கேட்கும் நோவை மென்று தின்னும் மோனப்பார்வை. எந்தக் கோணத்தில் அந்த முகத்தையும், அவன் இந்நாள் வரையுள்ள வாழ்க்கையையும் பார்த்தாலும் அவனை துஷ்டன் என்று யாருக்காவது சொல்ல முடியுமா ?

ஆனால்…

இப்பொ கொஞ்ச நாட்களாக ஏன் இந்த விச் ஹன்டிங்… ? சாதா நாயை வெறிநாயாக்கி விரட்டுவதுபோல்…

தன் வேலைத் தொந்தரவுகள், உள்ளூர் வெளியூர் பயணங்களின் இடையில் வாசிக்க நேரம் கிடைப்பதே ரொம்ப அரிது. அப்படியிருந்தும் இந்த சங்கரன் எழுத்துக்கள் மீது என்னவோ தெரியாத ஒரு மயக்கம். படித்தவை மிகச் சொற்பமே.. ஆனால் அவன் பெயரில் வெளியாகிறவை எல்லாவற்றையும் உடனுக்குடன் வாங்கி வைத்துவிடுவதுண்டு.. சாவகாசம் கிடைக்கும்போது புத்தகம் கையில் இல்லாமல் இருந்துவிடக்கூடாதல்லவா…

உத்தமன் கேலி செய்தான் — ஏண்டா மாணிக்கம் உனக்கேன் இந்த அசட்டுத்தனம்… ‘ அந்த சங்கரனை எனக்கு பேர்ஸனலா தெரியும். வெறும் சென்டிமெண்டல் டைப்… சொந்த வாழ்க்கையில் நடந்ததையெல்லாம் ரொமாண்டிக்கா எழுதறான். இதைப் போய் தலையில் தூக்கி வச்சுகிட்டு…

அவனிடம் தர்க்கிப்பதில்லை. ஒன்றை பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதற்கு காரணங்கள் சொல்லி நிரூபித்தே தீரவேண்டும் என்பது நியதியா ? உத்தமனுக்கு பிடிக்காமல் போனதற்கு அவன் வெறுப்பிற்கு ஆயிரம் காரணங்கள் சொல்ல இருக்கலாம், தனக்கு பிடிக்கக் காரணம் இதுவென்று சுட்டிக்காட்ட ஒன்றுகூட இல்லாதிருக்கலாம். ஆனால்.. பாவி மனசுக்கு பிடிச்சுப்போய் விட்டதே..

உத்தமன் சிநேகிதன் என்பதால், அவனுக்கு பிடிக்காது – தனக்குப் பிடிச்சதெல்லாம் அவனுக்காக விட்டுக் கொடுத்துவிடுவதா ?

டேய் நீ மக்களாட்சி மன்றங்கள் அமுலுக்கு வந்து விட்ட இந்த யுகத்தில் பிறந்திருக்க கூடாதுடா…. ‘ ஏதாவது பழைய புராணகாலத்திலோ மன்னர் காலத்திலோ வசதியா பிறந்திருக்கலாம். அந்தக் காலங்களிலும் நெற்றிக்கண் திறக்கிறவங்க இருந்திருக்காங்களே.. மறந்துட்டியா ? சரி..சரி… அதெல்லாம் இருக்கட்டும், எவ்வளவு நாளா உங்கிட்டெ சொல்லிக்கிட்டிருக்கேன் என்னிக்கு சங்கரன் கிட்டெ என்னைக் கூட்டிக்கிட்டுப் போய் அறிமுகம் செஞ்சுவைக்கப் போறே ? அவர்தான் உன் பிரண்டாச்சே…

சரி இனியும் நீடிச்சுக்கிட்டுப் போகவேணாம். இந்த ஞாயிற்றுக்கிழமை காலம்பர பத்துமணிக்கு என் ரூமுக்கு அவனை வரச் சொல்லியிருக்கேன். நீயும் தவறாமல் வந்துவிடு. ஏதாவது மாற்றம் இருந்தால் போனில் தெரிவிப்பேன், சரிதானே…

சரி ‘ ரொம்ப ரொம்ப நன்றி…

அந்த ஞாயிற்றுக்கிழமை…

காலை பத்துமணிக்கு அவன் அறையின் முன் சென்றபோது…

வரவேற்றது அடைத்திருந்த கதவில் தொங்கிய பூட்டு.

அடுத்த அறைகளில் தங்கியிருந்தவர்களிடம் விசாரித்துப் பார்த்தபோது யாருக்கும் தெரியாது.

எங்கே போயிருப்பான் ?

சற்று நேரத்தில் அங்கே வந்து பூட்டைப் பார்த்து ஏமாந்து நிற்கிறவர்.. ?

இவர்தான் சங்கரனா ?

கேட்டபோது..

ஆமா ‘ நீங்க யாரு தெரியல்லயே…

நான் மாணிக்கம்.. புட் கார்ப்பரேஷனில் வேலை பார்க்கிறேன்… நான் உங்களுடைய ஒரு வாசகன். உத்தமன் என்னைப் பற்றி சொல்லியிருப்பாரே.

இல்லையே.. அவன் பத்திரிக்கையில் ஏதோ ஒரு புது அம்சம் தொடங்கப் போவது பற்றி என்கிட்டெ டிஸ்கஸ் பண்ணணும் பத்து மணிக்கு ரூமுக்கு வரமுடியுமாண்ணு கேட்டிருந்தான். அதுதான் வந்தேன்.. உங்களையும் வரச் சொல்லியிருந்தானா ?

இதற்கு முன் புகைப்படத்தில் மட்டும் பார்த்திருக்கும் அந்த முகத்தை, கண்களை நேரில் பார்க்கையில் உள்ளே நிறையும் மகிழ்ச்சி.. அவன் படைப்பில், தான் படித்த சொற்பம் சிலவற்றிலிருந்து தான் அடைந்த இனிய அனுபவத்தை விளக்க வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருந்தபோது..

அவர் விடைபெற்றார்.

அவர் போனபின் மனதில் உறுத்தல்கள்…சே….

உத்தமன் போனால் போகட்டும், உங்களைச் சந்திக்கத்தான் நான் வந்ததே … வாங்க.. ஒரு டா சாப்பிட்டவாறு கொஞ்சம் பேசிவிட்டுப் போகலாம் என்று கூப்பிட்டிருக்கலாம்.. புகழெனும் மகுடியோசையில் மயங்கி ஆடாதவர்கள் உண்டா ? ஆனால் மகுடி வாசிக்க தனக்கு தெரியவேணுமே…

அதன் பின், இந்த மூன்றுமாச காலமாய் உத்தமனிடமிருந்து எந்த தகவலும் இல்லை… நானும் அவனை தொடர்புகொள்ளவில்லை…

இந்த வாரம், அவன் ஆசிரியர் குழுவில் வேலை பார்க்கும் பிரபல பத்திரிகையில் சங்கரனின் புதிய நூலைப் பற்றி ஒரு காரமான விமர்சனம் வெளியாகியிருந்தது.

புத்தகத்தை வெளியான அன்றே வாங்கிவிட்டிருந்தும் இன்னும் படித்துப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை… புரட்டிப் பார்த்ததில் சிற்பக் கலையைப் பகைப் புலனாய்க் கொண்ட நாவல் என்று மட்டும் தெரிந்துகொள்ள முடிந்தது.

‘இந்நாவல் சிற்பக்கலை சம்பந்தப்பட்டது என்பதால் மட்டும் உயர்ந்துவிடாது. புனிதமான கங்கையில் எச்சமிட்டுவிட்டு பறந்து சென்ற காக்கையின் சம்பந்தமே சங்கரனுக்கு இந்நாவலுடன் உண்டு ‘ என்று முடித்திருந்த உத்தமனின் விமர்சன கட்டுரையை வாசித்தபோது தன் நெஞ்சில் நிறைந்த, அன்று கண்ட சங்கரனின் முகபாவம்…

சென்ற சில நாட்களாகப் பித்துப் பிடித்தவன் போலிருந்த சங்கரன் இன்று அவன் வேலை பார்த்த ஆபீஸ் மாடியிலிருந்து கீழே குதித்துவிட்ட செய்தி, சற்று முன் உத்தமன் தானே போனில் சொன்னான்… ‘

வெளியில் உத்தமனின் கார் ஹார்ன் ஒலி கேட்டது… பெர்மிஷனுக்கான கடிதத்தை ஆபீசரிடம் கொடுத்துவிட்டு வெளியில் இறங்கும்போது, அன்று சங்கரனைப் பார்த்த நாள் அவன் படைப்பின் மீது தனக்கிருக்கும் அபிமானத்தை வெளியிடாமல் இருந்துவிட்டது இவன் மனதை குடைந்து கொண்டிருந்தது.

Series Navigation

author

நீல பத்மநாபன்

நீல பத்மநாபன்

Similar Posts