அறக்கட்டளைகள்-விருதுகள்-நோபல் பரிசு

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


மெக் ஆர்தர் பெளண்டெஷ்ன, அதாவது ஜான் T. , மற்றும் காதரைன் D பெளண்டெஷ்ன இந்த் ஆண்டும் மெக் ஆர்தர் பெல்லோ(fellow) பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் கலைஞர்கள், மருத்துவர்கள்,பேராசிரியர்கள்,அறிவியலாளர்கள் மட்டுமல்ல ஒரு blacksmith (கொல்லர்) இடம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. ஒரு கொல்லரின் திறமை, படைப்பாற்றலை அங்கீகரித்து கெளரவிப்பது இந்தியாவில் நடக்குமா என்பது சந்தேகம். இது ஒரு தனியார் அறக்கட்டளை, இந்த விருது பெரும் கெளரவம் உள்ளது. இந்த அறக்கட்டளை மனித உரிமைகள்,ஊடகங்கள் உட்பட பல துறைகளில் பல மில்லியன் டாலர் அளவில் நிதி உதவி செய்கிறது. உயிரியனப் பன்வகைத்தன்மை, சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் பல சிறப்பான ஆய்வுகளை இது ஆதரித்துள்ளது. உதாரணமாக இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி குறித்த ஆய்வுகள். இந்த fellow விருது செந்தில் முல்லைனாதன் என்ற தமிழருக்கு வழங்கப்பட்டது. அவரது ஆய்வுகள் குறித்து Economic Times எழுதியிருந்த்து. ஆனால் நானறிந்த வரையில் தமிழில் இது பற்றி எதுவும் எழுதப்பட்டவில்லை. உளவியல், பொருளாதரம் குறித்த அவரது ஆய்வுகள் அவருக்கு இதைப் பெற்றுத் தந்தன. மெக் ஆர்தர் பெலோக்களுக்கு தலா ஐந்து லட்சம் டாலர்கள் எந்த நிபந்தனையுமின்றி ஐந்து ஆண்டுகளில் வழங்கப்படுகின்றன.

மெக் ஆர்தர் பெளண்டேஷன் அக்கறை காட்டும் இன்னொரு பிரச்சினை Reproductive rights, Maternal Mortality.இது குறித்து ஆய்வுகள் செய்ய இது தொடர்ந்த்து உதவுகிறது. அமெரிக்காவின் தேசிய பொது வானொலி உட்ப்ட பல அமைப்புகளுக்கு நிதி உதவி தரும் இவ்வமைப்பு சில சிறப்பு செயல்திட்டங்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட பொருள் குறித்து ஆராய உதவுகிறது.

இத்தகைய அறக்கட்டளைகள் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகளுக்கும் முன்னுரிமை தருகின்றன. அரசு சாரா பல அமைப்புகள் தொடர்ந்து செயல்பட உதவுகின்றன.குறிப்பிட்ட பிரச்சினைகளைப் பற்றிய மாற்றுக் கண்ணோட்டங்களை வெளிப்படுத்த உதவுகின்றன. உதாரணமாக தீவிரவாதம், தேச பாதுகாப்பு குறித்த மாற்று கண்ணோட்டங்களுக்கும், இஸ்லாமிய சமூகம்/நாடுகள் குறித்த ஆய்வுகளை செய்வதற்கும் இவை உதவுகின்றன. Social Science Research Council இணையத் தளத்தில் உள்ள கட்டுரைகள் உட்பட பலவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.மனித உரிமை அமைப்புகள் பல அமெரிக்க அரசின் நிலைப்பாடுகளை விமர்சிக்கின்றன, வழக்குகள் தொடர்கின்றன. இத்தகைய அமைப்புகள் பல அறக்கட்டளின் உதவி பெற்றாலும் சுதந்திரமாக செயல்படுபவை. நிதி உதவி என்பது இச்செயல்பாடுகளை கருத்தியல் ரீதியாகக் கட்டுப்படுத்துவதில்லை.இதன் காரணமாக வெகுஜன ஊடகங்களில் காண முடியாத கருத்துகள்,ஆய்வுகள் வெளியாவது சாத்தியமாகிறது. சிவில் சமூகம் துடிப்புடன் இயங்குவது இவற்றால் சாத்தியமாகிறது.

இத்தகைய அமைப்புகள் மீது விமர்சனங்கள் உள்ளன. ஒரு வழக்கமான விமர்சனம் இவை ஏகாதிபத்தியத்தின் கரங்கள், புரட்சிகர சிந்தனைகள் தோன்றா வண்ணம் மழுங்கடிக்கவே இவை உதவுகின்றன. பல ஆண்டுகள் முன்பு நான் படித்த ஒரு நூலில் சில அறக்கட்டளைகள் ஆப்பிரிக்க அமெரிக்கர் குறித்த கல்விக் கொள்கைகளில் ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தை ஆதரித்து அதையே முக்கியபடுத்தியதன் மூலம் பிற கண்ணோட்டங்கள் போதுமான முக்கியத்துவம் பெறுவதை தடுத்தன என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.

பசுமைப் புரட்சி, அது தொடர்பான ஆய்வுகளை சில அறக்கட்டளைகள் பெருமளவில் ஆதரித்த்தால் அவை விமர்சிக்கப்பட்டன. ஆனால் இத்தகைய அறக்கட்டளைகளின் ஆதரவு இல்லாமல் ஒரு சில துறைகளில் பல ஆய்வுகள் சாத்தியமாயிருக்குமா என்பது சந்தேகம். உதாரணமாக பெண்ணியம் குறித்த ஆய்வுகள். போர்ட் பெளண்டேஷன் உதவியால நூற்றுக்கணக்கானோர் அயல் நாடுகளில் உயர் கல்வி பெறுவது சாத்தியமாகியுள்ளது. இவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள், ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.இன்றைய நவீன உயிரியலின் ஆரம்ப கட்டத்தில் பல முக்கியமான ஆய்வுகளை ஒரு அறக்கட்டளை கொடுத்த உதவியே சாத்தியமாக்கியது என்றால் வியப்பாக இருக்கும். ஆம் மாலிகூயுலர் பயாலஜி என்ற துறையின் உருவாக்கத்தில் ராக்கபெல்லர் அறக்கட்டளை ஆற்றிய பங்கு முக்கியமானது.இன்றைய மரபணு உயிரியலின் தோற்றத்திற்கு இந்த ஆய்வுகள் வழிவகுத்தன.

இன்று மருத்துவத்துறையில் முக்கியமான ஆய்வுகளை குறிப்பாக தடுப்பூசி தயாரிப்பில் பில் கேட்ஸ் நிறுவிய அறக்கட்டளை பெரும் பங்காற்றி வருகிறது. கேட்ஸ் காட்டும் தனிப்பட்ட அக்கறையும் இதற்கு ஒரு காரணம். மிகக் குறுகிய காலத்தில் இவ்வறக்கட்டளை சிலவற்றை சாத்தியமாக்கியுள்ளது.மூன்றேயாண்டுகளில் அத்தியவசியமான தடுப்பூசிகளை 30 மில்லியன் குழந்தைகள் பெற உதவியுள்ளது. உலகின் மிகப்பெரிய அறக்கட்டளை இது-பண மதிப்பில்- 25 பில்லியன் டாலர் வைப்புத் தொகை. சமீபத்தில் நேச்சர்(NATURE) கேட்ஸின் பணிகளைப் பாராட்டி எழுதியுள்ளது. எனக்கு பில் கேட்ஸ், மைக்ரோ சாப்ட் மீது விமர்சனங்கள் உண்டு.அதே சமயம் மருத்துவத்துறையில் கேட்ஸ் காட்டும் அக்கறையும், இவ்வறக்கட்டளையின் பணிகளும் பாரட்டுக்குறியவை.

நோபல் பரிசு பெறக்கூடிய அதாவது பெறும் வாய்ப்புள்ள இந்தியர்கள் பட்டியலை ரீடிப் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. சில மாதங்கள் முன்பு அவுட் லுக் இது போல் ஒரு பட்டியலை வெளியிட்டது. இரண்டிற்கும் பெரும் வேறுபாடு- காரணம் தெரிவு செய்ய பயன்படுத்தப்ப்ட்ட முறைகள் வேறு. ISI என்ற அறிவியல் ஆய்வுகள் குறித்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஒரு பட்டியலின் அடிப்படையில் ரீடிப் தன் பட்டியலைத் வெளியிட்டது. ஒருவரின் கட்டுரை எத்தனை முறை பிறர் கட்டுரைகளில் சான்றாக/மேற்கோளாக காட்டப்படுகிறது (CITATION INDEX) என்ற அடிப்படையில் ISI ஒரு பட்டியலை வெளியிட்டது.அதில் குறிப்பிடத்தக்க விதத்தில் இந்திய அறிவியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், பொருளியல்/நிதி நிபுணர்கள் இடம் பெற்றுள்ள்னர்.இது மகிழ்ச்சி தரும் செய்திதான்.

ஆனால் இந்த அடிப்படையில் நோபல் பரிசு பெறும் வாய்ப்பு குறித்து முன் கூட்டியே கூறுவது கடினம். ஏனெனில் நோபல் பரிசு தரப்படும் அடிப்படை வேறு. அதற்கு அத்துறைகளில் அதிமுக்கியமான பங்களிப்பு இருக்க வேண்டும், அல்லது அப்பங்களிப்பு நடைமுறையில் பெரிய அளவில் பயன்பாட்டினை சாத்தியமாகியிருக்க வேண்டும் அல்லது அதற்கு உதவும் தொழில் நுட்பத்திற்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.

CITATION INDEX ஐ வைத்து அத்தகைய முடிவுகளுக்கு வருவது கடினம்.அதே சமயம் இப்பட்டியலில் உள்ளவர்கள் நோபல் பரிசு பெற வாய்ப்பில்லை என்றும் கூற முடியாது.ஏனெனில் அவர்களது ஆய்வுகள் முக்கியமானவையே, அவை எங்கு இட்டுச் செல்லும் என்பதே கேள்வி.

ரீடிப் பட்டியலில் ரகுராம் ராஜன் என்பவர் இடம் பெறுகிறார். சர்வ தேச நிதியத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் இவர்.பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு இவர் பெறுவாரா என்பதே கேள்வி. ராஜன் நிதித்துறையில் பெரும் விற்பன்னர், ஆனால் பொருளாதாரத்துறையில் இவர் பங்களிப்பு என்ன என்பதைப் பொருத்தே இவர் பரிசு பெறுவாரா என்பதைப் பற்றி கூற முடியும்.ஜகதீஷ் பகவதி, பார்த்தா டாஸ்குப்தா போன்ற நிபுணர்கள் பொருளாதரத்துறைக்கான பரிசு பெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.இத்துறையில் நோபல் பரிசு பெற்ற ஒரே இந்தியர் அமெர்த்தியா சென்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ரீடிப் பட்டியலில் உள்ள இந்தியர்கள், MIT வெளியிட்ட நூறு நிபுணர்கள் பட்டியலில் உள்ள பத்து இந்தியர்கள்- பெரும்பான்மையோர் வயதில் இளையவர்கள். நாற்பது வயதினைக் கூட நெருங்காதோர் பலர். இது போல் குறைந்தது நூறு அல்லது இருநூறு குறிப்பிடத்த இந்தியர்கள் பட்டியலை, இந்தியா தவிர பிற நாடுகளில் உள்ளவர்கள், தயாரிக்க முடியும். எனவே எதிர்காலத்தில் இந்தியர் ஒருவர் நோபல் பரிசு பெறும் வாய்ப்பு அதிகம் என்று கூறலாம். நோபல் பரிசு வயதில் இளையவர்களுக்கு கூட , நாற்பதுகளில் உள்ளவர்களுக்கு கூட வழங்கப்படுவதால் ஒரு இளம் இந்திய விஞ்ஞானி நோபல் பரிசு பெற அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன.

(இக்கட்டுரையில் இந்தியர் என்பது பிற நாடுகளில் குடியேறிய இந்திய வம்சாவழியினரையும் குறிக்கிறது)

ravisrinivas@rediffmail.com

Series Navigation