அரசாங்க ரெளடிகள்

This entry is part [part not set] of 25 in the series 20020106_Issue

கண்ணன்


(kalachuvadu@vsnl.com)

எங்கள் ஊரான நாகர்கோவில் தமிழகத்தின் அழகிய ஊர்களில் ஒன்று. புழுதி பறக்காத பிரதேசம். மிதமான தட்பவெப்ப நிலை. காடுகளையும் நீர்த்தேக்கங்களையும் மலைகளையும் ‘வளர்ச்சி ‘யின் கொடுக்குகள் இன்னும் முற்றாக அழித்தொழிக்கவில்லை. தொழிற்மயமாகாத பகுதி என்பதால் சூழலின் மாசு வாகனங்களின் புகையோடு மட்டுப்பட்டிருக்கிறது. ‘வளர்ச்சி ‘ எங்களைத் தீண்டாமலிருக்க அரசியல் காரணங்கள் உண்டு. குமரி தமிழகத்தோடு இணைந்தாலும் தமிழகத்தின் அரசியல், பண்பாட்டு அலைகள் எங்களை முழுமையாகத் தழுவுவதில்லை. வடக்குப் பாதையில் 30 கி.மீ. தொலைவிலிருக்கும் வள்ளியூருக்கு அப்பால் உள்ள பிரதேசத்தை ‘பாண்டி ‘ என்று கருதும் தலைமுறை இன்னும் மீதமிருக்கிறது. குமரியின் தனித்த அரசியல் போக்கால் எரிச்சலடைந்த கலைஞர் ஒருமுறை ‘நெல்லை எங்கள் எல்லை, குமரி வெறும் தொல்லை ‘ ‘ என்று பேசினார். ஆனால் நெல்லை போன்ற ‘அனந்த சயன ‘ ஊர்களைப் போல் அல்லாமல் மிகவும் சுறுசுறுப்பான ஊர் நாகர்கோவில். பரபரப்பான கடைத் தெருவும் சந்தையும் உண்டு. நெல்லையில் கடைக்குச் சென்று பொருள் வாங்கும்போது அங்கு நிலவும் பேரமைதியைக் குலைத்து கடைக்காரரைத் துன்புறுத்தும் குற்ற உணர்வு ஏற்படுகிறது என்பார் என் நண்பர்.

இந்தியாவில் இடத்திற்கு இடம் பண்பாடு, மொழி வேறுபட்டாலும் அரசியல் கலாச்சாரத்தில் வேறுபாடு இருந்தாலும் அரசாங்க அராஜகம் எங்கும் படர்ந்திருக்கிறது. குமரியும் விதிவிலக்கல்ல.

இப்போது உருவாகியிருக்கும் தமிழ் தாயின் ஆட்சி பொறுப்பேற்றதும் முதலில் அதிகாரிகளின் பந்தாட்டம் நடைபெற்றது. எங்கள் மாவட்டத்துக்கு ‘கோல் போடப்பட்ட ‘ அதிகாரிகள் கூடி நகரைச் சீரமைக்கும் திட்டம் ஒன்றை அவசரமாகத் தீட்டினார்கள். இதன்படி பல அரசுத் துறைகள் இணைந்து எங்கள் நகரின் கடைத்தெருக்களில் புல்டோசர் தாக்குதல் நடத்தின. சிறு பிளாட்பாரம் கடைகள் தூக்கி எறியப்பட்டன. தமிழ் அன்னையின் ஆட்சிக்கே உரிய, அராஜகத்தில் ஜனநாயகத்தைப் பேணும் பண்புடன் பெரும் நிறுவனங்களும் தாக்கப்பட்டன. யாருக்கும் ஒரு மணி நேர எச்சரிக்கைகோ அவகாசமோகூட அளிக்கப்படவில்லை. புல்டோசர் தரைமேடைகளை உடைத்தது, ஒளிவிளக்குகளைப் பிடுங்கியது, பெயர் பலகைகளை நொறுக்கியது. ஒரே வாரத்தில் இச்சிறு நகரம் அலங்கோலமாக்கப்பட்டது.

*

என் நண்பர் ஒரு குட்டி பூர்ஷ்வா. முன்னேறி வரும் கூலிப்படையின் தாக்குதலில் இருந்து தன்னுடைய விற்பனை மையத்தை அரசு விதிகளுக்கு உட்பட்டு பாதுகாத்துக் கொள்ள அவர் விரும்பினார். அவருடன் இப்பணியில் நானும் இணைந்து கொண்டேன்.

நண்பரின் கடை வாடகைக்கு எடுக்கப்பட்டது. உரிமையாளர் ஊரில் இல்லை. சுமார் எண்பது வருடங்களுக்கு முன்னர் எழுப்பப்பட்ட, சிமெண்ட் வாடையே இல்லாத கட்டிடம். பூகம்பத்தையோ புல்டோசரையோ நினைவில் இருத்தி கட்டப்பட்டதல்ல என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்துவிடும். கட்டிடத்தின் திட்ட வரைவில் அரசு எல்லை மீறப்பட்டுள்ளதா என்பதை அனுமானிக்க முடியவில்லை.

நாங்கள் இருவரும் கூடி ஆமோதித்து முதலில் தாக்குதலைப் பார்வையிடுவது என்று தீர்மானித்தோம். அப்போது தாக்குதல் அலெக்சந்திரா பிரஸ் தெருவில் நடப்பதாக அறிந்து அங்கு சென்றோம். அலெக்சாண்டரே படையெடுத்து தாக்கியதுபோல இருந்தது அது. புல்டோசர் கிழக்கும் மேற்குமாக நகர்ந்து எட்டியதைப் பிடுங்கி வீசியபடி இருந்தது. நீண்டநேரம் அவதானித்த பின்னரும் உத்தரவிடுவது யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த கொரில்லாத் தாக்குதலின் அடுத்தக் கட்டத்தை அனுமானிக்கவே முடியவில்லை. திடாரென்று ஒரு குறுக்குச் சந்தில் புகுந்து சூறையாடியது புல்டோசர்.

அழிவு ஏற்படுத்தும் பெரும் களிப்புடன் மக்கள் வெள்ளம் இந்தத் தமாஷை ரசித்துக் கொண்டிருந்தது.

நாங்கள் நகர்மன்றம் சென்று உரிய அதிகாரிகளை சந்திக்க முயன்றோம். தேசிய நெடுஞ்சாலை அலுவலகம் சென்றோம். கட்டிடத்தில் செய்ய வேண்டிய திருத்தங்களைத் தெரிவித்தால் நாங்களே செய்துவிடுவதாக வாக்களித்தோம். யாரும் கண்டு கொள்ளவில்லை.

இந்தியாவில் தலித் அல்லாதவர்கள் தலித்தாக உணர சிறந்த வழி அரசாங்க அலுவலங்களுக்குப் போவது தான்.

அன்று மாலை 6 மணி இருக்கும். நாள் பூராவும் இடித்துவிட்டு தூசியும் வியர்வையுமாக சோர்ந்துபோய் புல்டோசர் நகர்மன்றம் திரும்பிக் கொண்டிருந்தது. யானையைச் சுற்றிப் போவதுபோல பின்னால் ஒரு சிறுகூட்டம். பின்னர் இடிபாடுகளை அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றது முனிசிப்பல் லாரி. ஊர்வலத்தில் கடைசியாக சென்று கொண்டிருந்த அதிகாரிகளில் பரிச்சயமான ஒருவரை அழைத்து நண்பரின் கட்டிடத்தை பார்வையிடும்படிக் கேட்டுக் கொண்டேன்.

அதிகாரி ‘நோட்டம் ‘ விட்டார். ‘எங்களுக்கு பார்த்தவுடனேயே தெரிந்துவிடும். கட்டிடம் அரை அடி சர்க்கார் பூமியில் இருக்கிறது ‘ என்றார். ‘இடிப்பார்களா ? ‘ என்று கேட்டார் நண்பர். ‘சொல்ல முடியாது. அவஅவன் ஒவ்வொண்ணா சொல்லுதான், உங்க யோகம் ‘ என்றார். ‘என்ன செய்யலாம் ? ‘ என்று கேட்டேன். மீண்டும் ‘நோட்டம். ‘ ‘போர்ட களத்திருங்க. லைட்ட எடுத்திருங்க. முன் திண்ணையை லேசா இடிச்சு வையுங்க. நடைபாதையை கொஞ்சம் ஒடச்சிப் போட்டிருங்க ‘ ‘ என்றார். ‘எதுக்கு ரிஸ்க், என்னா ‘ என்றுவிட்டுப் போனார்.

நாங்கள் சுறுசுறுப்பாகச் சுழன்றோம். இரண்டே மணி நேரத்தில் வேலையாட்களை வைத்து அவர் ஆலோசனைகளை நிறைவேற்றி கடையை மூளியாக்கினோம். திருஷ்டிப் பரிகாரம்போல அது காட்சியளித்தது. மறுநாள் புல்டோசர் எங்கள் பகுதிக்கு காலையில் வந்தது. அக்கம்பக்கத்துக் கடைகளை கொஞ்சம் மேய்ந்துவிட்டு நண்பரின் கடையை முறைத்தபடியே தாண்டிச் சென்றுவிட்டது.

இது பணக்காரர்களின், வியாபாரிகளின் அமைப்பாம்; இடதுசாரிகள் சொல்கிறார்கள்.

அரசியல் ரெளடிகள், அரசாங்க ரெளடிகள், திரைப்படத்துறை கேடிகளையும் தவிர இந்த அமைப்பு யாரையும் பாதுகாப்பதாக எனக்குத் தெரியவில்லை.

*

இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அரசு தரப்பில் பல நியாயங்கள் முன் வைக்கப்படுகின்றன. அரசாங்க இடத்தை மீட்பது, ஓடைகளைச் சீரமைப்பது, நடைபாதையைச் செப்பனிடுவது என பல. இவையெல்லாம் நியாயமான தோற்றம் தரும் காரணங்கள்தான். இருப்பினும் இவை முழுமையான காரணங்கள் அல்ல.

நீண்ட இடைவேளைக்குப் பின்னர் அமெரிக்க நண்பர் பார்னி பேட்சை – தமிழ் மேடைப்பேச்சை ஆராயும் பொருட்டு பல வருடங்கள் மதுரையில் வாழ்ந்தவர் இவர் – சென்னையில் தமிழ் இனி 2000 அரங்கிற்கு அவரும் சில மாணவர்களும் பார்வையாளராக வந்திருந்தபோது சந்தித்தேன். ஒரு இரவு அமர்ந்து பாடுபேசிக் கொண்டிருந்தபோது சென்னையில் நடைபாதைகள் அழிக்கப்பட்டு வருவதைக் கவனப்படுத்தினார். அவர் கூறிய செய்தி திடுக்கிட வைத்தது. கண்முன்னே படிப்படியாக நடக்கும் ‘வளர்ச்சி ‘ப் பணிகள் நம் கவனத்தை ஈர்ப்பதில்லை. பின்னர் கவனித்தபோது சென்னையில் மேம்பாலங்கள் கட்டப்படும் பல இடங்களில் நடைபாதைகளே இல்லை. மேம்பாலங்களின் மீது நடந்து மற்றும் சைக்கிளில் செல்வது குற்றம். பெட்ரோல்/டாசல் வாகனங்களில் தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் உருவாகியுள்ளது.

பாதைகள் பாதசாரிகளுக்காக உருவாக்கப்படுபவை. பின்னர் இந்தப் பாதைகளில் ஒரு இடையீடாக வாகனங்கள் நுழைகின்றன. பின்னர் வாகனங்கள் முதல் மரியாதையைப் பெறுகின்றன. பாதசாரிகள் ஓரங்கட்டப்பட்டு பின்னர் எரிச்சலும் வசையுமாக சகித்துக் கொள்ளப்படுகிறார்கள். இப்போது பாதசாரிகளை ஒழித்துக்கட்டிவிடும் பாதைகள் உருவாகி வருகின்றன.

சுதந்திர இந்தியா காந்தியின் பொருளாதாரப் பார்வைக்கு முற்றிலும் விரோதமாக பெரும் ‘வளர்ச்சி ‘த் திட்டங்களை அமுல்படுத்தத் துவங்கியபோது பழங்குடிகள் முதல் தாக்குதலுக்கு உள்ளானார்கள். அவர்களுடைய வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். சுயமரியாதையுடன் வாழ்ந்த இனங்கள் கூலிகளாகவும், பிச்சையெடுப்பவர்களாகவும் மாற்றப்பட்டார்கள். இவை ‘வளர்ச்சி ‘யின் யாக குண்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தர்மங்களாகவும் பெரும் ஆக்கங்களைப் படைக்க அடைய வேண்டி ஏற்படும் சிறு இழப்புகளாகவும் கருதப்பட்டன. இன்று பெரும் வேகம் கொண்டிருக்கும் ‘வளர்ச்சித் ‘ திட்டங்களின் முன்னால் மக்கள், மலைகள், கடைத்தெருக்கள், நடைபாதைகள், ஆடுகள், வயல்கள், காடுகள் எல்லாமே இடையூறுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. ‘வளர்ச்சி ‘ இன்று அரசின் இருப்பை நிர்ணயம் செய்கிறது. வளர்ச்சிக்காக யாரையும் எதையும் பலி கொடுக்க அரசு தயங்குவதில்லை.

எங்கள் ஊரிலும் இந்தியாவெங்கும் நடைபெற்று வரும் இந்த அரசாங்க அழித்தொழிப்புகள் மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக அல்ல; மாறாக ‘வளர்ச்சி ‘யின் பெரும் போக்குவரத்திற்கு வழி செய்யவும் தன் இருப்பையும் சக்தியையும் நினைவுபடுத்த அரசு தரப்பில் நிகழ்த்தப்பட்ட ஒரு அராஜக நடவடிக்கை மட்டுமே. இது ஏற்படுத்தும் பீதி அதிகாரிகளுக்கு முக்கியமானது. முன் நிர்ணயிக்க முடியாத காரணங்களுக்காக நிர்ணயிக்க முடியாத நேரத்தில் நிர்ணயிக்க முடியாத விதத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் பெரும் மனக்குலைவை ஏற்படுத்தி குடிமகனை ஒரு துரும்பாக உணர வைக்கின்றன. இதை அரசு செயல்படுத்தும்போது ‘உறுதியான நடவடிக்கை ‘, ‘இரும்புக் கரம் ‘, ‘சட்டம் ஒழுங்கு ‘ போன்ற வார்த்தைகள் அலங்கரிக்கின்றன. பிற குழுக்கள் செயல்படுத்தும்போது இது பயங்கரவாதமாகிறது.

இந்திய ஆளும் வர்க்கம் வளர்ச்சித் திட்டங்களில் காட்டும் பேரார்வத்திற்கு முக்கிய காரணம் ஊழல். ஊழல் வளர்ச்சியோடு ஒட்டிப் பிறந்த குழந்தை. அல்லது இவை ரெட்டைத் தலை பாம்பு. இந்தியாவில் தேர்தல் நிகழும் முறைக்கு எந்தத் தொடர்பும் இல்லாத தேர்தல் செலவை நிர்ணயிக்கும் சட்டங்களால் ஊழல் என்பது ஒரு முறைகேடாக அல்லாமல் அரசியலுக்கு அடிப்படையாக வேர் கொண்டுள்ளது. ஆக இந்தியப் பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஆணிவேர் ஊழலில் – வளர்ச்சித் திட்டங்களில் – உள்ளது. ஊழலில் இப்போது நியாயமான ஊழல் அநியாயமான ஊழல் போன்ற தார்மீகப் பிரிவினைகளும், கண்ணியமான ஊழல் அலப்பறையான ஊழல் போன்ற தர வேறுபாடுகளும் உருவாகியுள்ளன.

ஆளும் கட்சிக்கும் அதிகார வர்க்கத்திற்கும் நிதி சேர்க்க அரசு, வளர்ச்சிப் பணிகளில் அரசாங்க ரெளடிகளை ஏவுகிறது. தனியார் நிறுவனங்கள் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடும்போது – குறிப்பாக பெரும் நகரங்களில் மாபெரும் குடியிருப்புகளை நிர்மாணிக்கும் திட்டங்களில் – தனியார் ரெளடிகளை கை அமர்த்துகின்றன. மஃபியா உருவாக்கத்தின் பிரதான காரணிகளில் ஒன்று இத்தகைய பெரும் திட்டங்களுக்காக ஒண்டிக் குடித்தனங்களைக் காலி செய்வது. வளர்ச்சியின் நோக்கில் தனியார் ரெளடிகளும் அரசாங்க ரெளடிகளும் கைகோர்ப்பது இயல்பானது. ஆக, இந்தியாவில் எப்போதும் பேசப்படும் அரசியல்வாதி – அரசு அதிகாரி – குற்றவாளி இணைப்புக்கு அடிப்படையே வளர்ச்சித் திட்டங்கள் தான்.

வளர்ச்சித் திட்டங்களின் வரையறைகளையும் வளர்ச்சியின் பேரால் நடத்தப்படும் அழித்தொழிப்புகளையும் மாற்றுப் பார்வை கொண்ட அறிவு ஜீவிகள் பல ஆண்டுகளாக அம்பலப்படுத்தி வருகின்றனர். வளர்ச்சித் திட்டங்களின் அசலான விளைவுகளைப் பற்றி பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றின் பதிவுகள் கட்டுரைகளாகவும் நூல்களாகவும் வெளிவந்துள்ளன.

‘இந்திய பேரழிவுகள் அறிக்கை ‘ இந்தியாவின் பேரழிவுகள் எப்போதும் குறைத்து மதிப்பிடப்படுவதாக குறிப்பிட்டுவிட்டு அணைகளால் இடம் பெயர்ந்துள்ளவர் களின் எண்ணிக்கை மொத்தம் 164 லட்சம் என்று வரையறுத்துள்ளது. 1951லிருந்து 1990 வரை வளர்ச்சித் திட்டங்களால் இந்தியாவில் இடம் பெயர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை 213 லட்சம் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 7 ஆதிவாசிகளில் ஒருவர் இடம்பெயர்ந்தவர். (Shiv Visvanathan, EPW, Sep 29 – Oct.5 2001). (இடம் பெயர்தல் என்பதை வசிப்பிடத்திலிருந்து கட்டாயமாக அகற்றப்படுதல் என்று புரிந்துகொள்ள வேண்டும்)

இந்தப் பணியில் மூன்றாம் உலக அறிஞர்களின் – குறிப்பாக இந்திய அறிஞர்களின் – பங்களிப்பு பிரதானமானது. அஷிஸ் நந்தி, சி.வி. சேஷாத்திரி, வந்தனா சிவா, கிளாட் அல்வாரீஸ், ஷிவ் விஸ்வநாதன், சஹஸ்ரபுத்தே, ஏ.கே.என்.ரெட்டி, ஜெயந்தோ பந்தோ பாத்தியா போன்றோர் தொடர்ந்து எழுதி வருகின்றனர். அருந்ததி ராய் சமீபகாலமாக தன் பங்களிப்பை வழங்கி வருகிறார்.

தமிழில் எஸ். என். நாகராஜன், ரவி ஸ்ரீனிவாஸ் போன்றோர் நிகழில் பல கட்டுரைகளை எழுதியுள்ளனர். அருந்ததி ராயின் நர்மதா அணைப் பிரச்சனை பற்றிய கட்டுரை சிறு நூலாக சோக்கோ டிரஸ்ட் வெளியிட்டுள்ளது. புறப்பாடு இதழில் சில கட்டுரைகள் வந்ததாக அறிகிறேன். கல்பாக்கத்திலிருந்து சில வெளியீடுகள் வந்துள்ளதாகவும் அறிகிறேன்.

வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய நவீனப் பார்வை தமிழ் வாசகனுக்கு அறியத் தரும் கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகள் தமிழில் இன்னும் பல வெளிவருவது மிக அவசியம்.

*

திமுக அரசு அதன் முந்திய ஆட்சியின் போது பல வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தியும் ஆட்சி இழந்திருப்பதற்கு ‘வளர்ச்சி ‘ என்பது பல சமயங்களில் ஒரு மக்கள் விரோத நடவடிக்கை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். மாற்று ஏற்பாடுகள் இன்றி குப்பங்களை அழிப்பது பிளாட்பாரம் கடைகளை நீக்குவது போன்ற பல ‘வளர்ச்சித் ‘ திட்டங்கள் இங்கு செயல்படுத்தப்பட்டன. திமுக அரசின் ‘சிங்காரச் சென்னை ‘ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மேம்பாலங்களால் விரட்டி அடிக்கப்பட்ட ஜீவன்களின் நிலை பற்றிய ஒரு சமூகப் பணியாளரின் அனுபவத்தை, ஆழ்ந்த துக்கத்தைக் கேட்கும் வாய்ப்பு ஒரு முறை கிட்டியது. பீதியூட்டிய கதை அது.

*

பி. கு.

புல்டோசர் தாக்குதல் முடிந்து சுமார் ஆறுமாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை நடைபாதை அமைத்தல், சாலையை விரிவுப்படுத்தல், சாக்கடைகளை செப்பனிடுதல் போன்ற எந்தப் பணியும் நடக்கவில்லை, சில இடங்களில் வியாபாரிகள் ஒன்றுகூடி தங்கள் செலவில் சீரமைப்பு செய்து வருகின்றனர். பல இடங்களில் நடப்பதற்கு சர்க்கஸ் பயிற்சி பெற்றிருப்பது அவசியம். நடைபாதைகளின் தற்போதைய நிலை எலும்பு முறிவு சிகிச்சை மையங்களின் – எங்களூரில் இவற்றை தேசிய நெடுஞ்சாலை கொள்ளையகங்கள் என்றும் அழைக்கிறார்கள் – வருமானத்தை கணிசமாக அதிகரித்துள்ளது.

Series Navigation

கண்ணன்

கண்ணன்