அம்மி
வைகைச் செல்வி

வேகமாய்த் திரும்புகையில்
இன்றும் காலில் இடறிற்று
கருங்கல் அம்மி.
‘அரைக்கவும் ஆட்டவும்
என்னென்னவோ இருக்க
எடத்தை அடைச்சிட்டு
ஏன்தான் இருக்குதோ ? ‘
இப்படி-
அன்றாடம் மாமியார்
கண்டனம் தெரிவித்தும்
ஆசை அம்மியை
அறுத்தெறிய மனசில்லை.
அம்மா வீட்டில் இது
சும்மாவா இருந்தது ?
வெள்ளைத் தேங்காயும்
கறுப்பு மிளகும் ….
பச்சை மிளகாயும்
சிவப்பு வற்றலுமாய் ….
தாள லயத்தோடு
அம்மா அரைக்கையிலே
ஆத்துக்கு அக்கரையில்
அழகருக்கும் வாயூறும்.
இன்றோ-
அவசர உலகத்தில்
அடுக்கு மாடிக் குடியிருப்பில்
பதுங்கிக் கிடப்பதற்கு
முற்றமோ ?… புதுக்கடையோ ?
ஒதுங்கிக் கிடப்பதற்கு
திண்ணையோ இல்லாமல்
கவனிக்க ஆளின்றிக்
காய்ந்திருக்கும் வெறுங்கல்லாய்
வயோதிகம் போல் அம்மியும்.
ஆயினும் ஓர்நாள்-
மழைநாள் இரவில்
மின்சாரம் தடைபட்டுச்
சிம்னி கதகதப்பில்
ராச்சோறு சுவைப்பதற்காய்
பருப்புத் துவையலதைக்
கை வலிக்க அரைக்கையிலே
வீடெல்லாம் மணந்தது
அம்மாவின் வாசனையில்….!
vaigai_anne@yahoo.com