அம்மாவின் துர் கதை

This entry is part [part not set] of 28 in the series 20090409_Issue

பா.அ.சிவம்


கதை ஒன்று :

குளித்த பின்னர்
கல்யாண சேலையணிந்த பின்னர்
பெரிதாய் ஒரு பொட்டு
வளையெலென
அலங்காரம் கொஞ்சம்
செய்து கொண்ட பின்னர்
ஏனென்று தெரிந்து கொள்ள
விரும்பா
சடங்களுக்குப் பின்னர்
இறுதியாய்
ஒருமுறை
பார்த்துக் கொண்ட பின்னர்…

அம்மாவின் பெட்டி மூடப்பட்டது…

கதை இரண்டு :

பேய் பிடித்த
ஒருநாள் பற்றிதான்….

அம்மாவின் சாமி
சாப்பிட்டுக்கொண்டிருந்தார்
துணிகளைத் துவைத்து
ஏசிக்கொண்டே
உலர வைத்துக் கொண்டிருந்தார்
அம்மா…

எரிச்சலின் கதகதப்பில்
உலர்ந்து விடுகின்றன
ஈரத்துணிகள் மறுகணமே…

திடீரென பிடித்த
மழையாய்
வாக்குவாதம் முற்றி
பெருத்த அமைதியின்
மையப் புள்ளியில்
வந்து நின்றது
இரு கால்களையும்
இழந்து…

வண்ணமிழந்து
சூன்ய இருள் சூழ்ந்து
மெதுவாக நகர்ந்தன
கவிச்சிமிக்க படிமங்கள்…

உடைந்த மண்டையிலும்
பீறிட்ட ரத்த திட்டிலும்
உறைந்த மூச்சிலும்
அம்மாவின் உயிர் தவிப்பு
துடித்துக்கொண்டிருந்தது…

கதை மூன்று :

கணம் ஒவ்வொன்றையும்…
பொருள் ஒவ்வொன்றையும்…
செயல் ஒவ்வொன்றையும்…
சார்ந்த ஒவ்வொன்றையும்…
பேயாய் உருமாறிய
அம்மாவுடைய சாமியின்
பாவநிழல்கள்
சதா துரத்திக் கொண்டிருக்கின்றன

சொல்லி மாயாதினி…

Series Navigation