சின்னக்கருப்பன்
எல்லோரும் அமெரிக்காவை இன்று ஆச்சரியமாகப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உலகத்துக்கே ஜனநாயகம், சுதந்திரம், பொதுமக்கள் தேர்ந்தெடுக்கும் அரசியல் தலைவர்கள் ஆளும் நாடு என்று பிரகடனம் பண்ணிக்கொண்டிருந்த அமெரிக்காவில் இன்று தேர்தல் முறைகேடுகள் என்றும் திருட்டுத்தனம் என்றும் ஜனநாயகக்கட்சியும், குடியரசுக்கட்சியும் மாறி மாறி திட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
என்ன நடந்தது என்று பார்ப்பதற்கு முன் நாம் அமெரிக்க தேர்தல் முறை பற்றி விளக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் அந்த மாநில மக்கள் தொகையை பொறுத்து ஓட்டுகள் கொடுக்கப்படுகின்றன. அதாவது கலிபோர்னியாவில் அதிகம் மக்கள் தொகை இருப்பதால் அதற்கு 54 வாக்குகள். டென்னஸி மாநிலத்துக்கு 11 வாக்குகள். ஒவ்வொரு மாநிலத்திலும் முதலாவதாக வந்தவருக்கு அந்த மாநில வாக்குகள் அனைத்தும் கொடுக்கப்படும். (ஒரு சில மாநிலங்கள் தவிர. அந்த சில மாநிலங்களில் விகிதாசார ஓட்டுக்கு ஏற்ப வாக்குகள் வழங்கப்படும்)
அமெரிக்காவில் பொதுமக்கள் கொடுத்த மொத்த வாக்குகள் எண்ணிக்கையில் அல் கோர் முன்னிலையில் இருக்கிறார். 49 சதவீத வாக்குகள் அவருக்கு. ஜார்ஜ் புஷ் 48 சதவீத வாக்குகள் பெற்றிருக்கிறார். ஆனால் மாநிலங்கள் கொடுத்த அவர்களுக்கான வாக்குகள் எண்ணிக்கையில் அல் கோர் 267 வாக்குகள் பெற்றிருக்கிறார். ஜார்ஜ் புஷ் 245 வாக்குகள் பெற்றிருக்கிறார். இப்போது இன்னும் எண்ணிக்கை முடியாமல் ஃப்ளோரிடா மாநிலம் இருக்கிறது. அந்த மாநிலத்து வாக்குகள் எண்ணிக்கை 25. இந்த வாக்குகள் யாருக்கு போகிறதோ அவர்தான் ஜனாதிபதி.
முடிவு வருவதற்கு முன்னரே சி.என்.என் போன்ற செய்தி நிறுவனங்கள் ஜார்ஜ் புஷ் ஃப்ளோரிடா மாநிலத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்து விட்டன. சுமார் 1800 வாக்குகள் வித்தியாசத்தில் ஃப்ளோரிடா ஜார்ஜ் புஷ்க்குச் சென்றதால், அந்த மாநில சட்டத்தின் படி தானாகவே மறு எண்ணிக்கை நடத்த வேண்டிய கட்டாயம். (.01 சதவீதத்துக்கும் குறைவாக வாக்கு வித்தியாசம் இருந்தால் மறு எண்ணிக்கை என்று ஒரு சட்டம்).
பெரும்பாலான ஜனநாயகங்களில் (இந்தியா உட்பட) தோற்றவர் வெற்றி பெற்றவரை கூப்பிட்டு வாழ்த்தி விடைபெறுவது வழக்கம். இந்தியாவில் ஒவ்வொரு தேர்தலின் முடிவிலும் இதுவே நடக்கிறது. ஜெயலலிதா வெற்றி பெற்றதும் கருணாநிதி அவரை வாழ்த்திவிட்டு முதலமைச்சர் பதவியை முன்பு ராஜிநாமா செய்தார். (ஜெயலலிதா அவ்வாறு கருணாநிதியை வாழ்த்தவில்லை என்பது வேறு கதை)
அமெரிக்காவிலும், செய்தி அறிவிக்கப்பட்டவுடன் அல் கோர், ஜார்ஜ் புஷ்ஷை அழைத்து வாழ்த்தினார். ஒரு மணிநேரத்தில் அனைத்து செய்தி நிறுவனங்களும் மறு எண்ணிக்கையை அறிவித்ததும், அல் கோர் ஜார்ஜ் புஷ்ஷை மீண்டும் அழைத்து வாழ்த்தியதை வாபஸ் பெறுவதாக சொன்னது ஜார்ஜ் புஷ் கோபத்துக்கு ஆளாகிவிட்டது.
இதற்கு நடுவில் பால்ம் பீச் மாவட்டத்தில் தேர்தல் வாக்குச்சீட்டில் குளறுபடி இருப்பதை அமெரிக்க செய்தி நிறுவனங்களும் ஜனநாயக கட்சியைச் சார்ந்தவர்களும் அறிவித்தார்கள். பொதுவாக அமெரிக்க அரசியலில் செல்லாத வாக்குகள் மிகவும் குறைவு. ஆனால் இந்த குளறுபடியால் அந்த மாவட்டத்தில் மட்டும் சுமார் 19000 வாக்குகள் செல்லாததாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது அல் கோருக்கு போட்ட ஓட்டுகள் பாட் புகானனுக்கு போட்ட ஓட்டாக மாறிவிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஜனநாயக கட்சியினர் இவ்வாறு சந்தேகப்படுவதற்கு ஏதுவாக அமைந்த விஷயம், ஃப்ளோரிடா மாநிலத்தின் கவர்னராக இருப்பவர் ஜார்ஜ் புஷ்ஷின் இளைய தம்பியான ஜெப் புஷ். இவர் சிக்கல்கள் வெளிவந்ததும், தேர்தல் கமிஷனிலிருந்து விலகுவதாக தெரிவித்து விட்டார். இருந்தும் பல முறைகேடுகள் வெளிவந்திருக்கின்றன. வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவத்தினர் ஓட்டு போட அனுப்பப்பட்ட ஓட்டுகள் இரண்டு இரண்டாக அனுப்பப்பட்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. (பொதுவாக ராணுவத்தினர் குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்கள்)
முறைகேடுகள் ஏதும் நடக்காமல் இருந்திருந்தால், மறு எண்ணிக்கையில் ஓட்டு அதே எண்ணிக்கையாகத்தான் இருந்திருக்க வேண்டும். மறு எண்ணிக்கை முடிந்து பார்த்தால் ஜார்ஜ் புஷ், அல்கோரை விட 360 வாக்குகள் வித்தியாசமாக குறைந்து விட்டது. இதுவரை நடந்தது கம்ப்யூட்டர் எண்ணிக்கை. இப்போது கை எண்ணிக்கை (இந்தியாவில் நடப்பது போல) வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இது போன்ற விஷயங்களால் அமெரிக்காவில் ஜனநாயகம் இல்லை என்று ஒருபோதும் பேசவேண்டிய அவசியமில்லை. இது போன்ற விஷயங்களே, அமெரிக்காவில் ஜனநாயகம் உயிரோடு இருப்பதன் அறிகுறிகள். துப்பாக்கி மூலம் ஆட்சியை நிர்ணயிக்காமல் கோர்ட் ஓட்டு மூலம் ஆட்சியை நிர்ணயிக்கும் எந்த நாடும் வளமையான ஜனநாயக நாடுதான்.
இந்தியாவில் தேர்தல் முறைகேடுகள் நடக்கின்றன. அதனால் நாம் இந்தியா ஜனநாயக அரசு அல்ல என்று சொல்லிவிடுவதில்லை. இது போன்ற விஷயங்கள் மக்களின் சுதந்திரமும், மக்களின் எண்ணமும் எப்போதும் விழிப்புடன் காப்பாற்றப்பட வேண்டும் என்பதனை மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்துகின்றன.
- எண்கள்
- ஞானோதயம்
- நதிக்கரையில்
- இந்த வாரம் இப்படி
- எய்ட்ஸ் நோயைக்கட்டுப்படுத்த விபச்சாரத்தை சட்டப்படியான ஒரு தொழிலாக மாற்றுங்கள்!
- நினைவுகள்
- அமெரிக்க அரசியலில் குளறுபடியா ?
- அம்மா நீ குளிர் பருவமல்லவே
- விக்ரமாதித்யனின் குற்றாலக்கவிதை
- திருப்பரங்குன்றத்து நீலாம்பல மலர்கள் போல உன் கண்கள்
- இழுபறியாய் ஆன இழுக்கு
- பெங்குவின் தமிழ் பேசுகிறது – ஒரு பெங்குவின் தமிழ் பேசக் கற்றுக்கொள்கிறது – 9