அ.முத்துலிங்கம் பரம்பரை -6

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

சிவஸ்ரீ


வந்திருந்த மின்மடல்களில் இருந்த யூகங்களை வைத்தே அனுப்பியவர்கள் எல்லாரும் ஆண்கள் என்பதையும் ‘மகளிர் மட்டும் ‘ பேருந்தில் பயணம் செய்த அனுபவமே இல்லாதவர்கள் என்பதையும் கண்டுபிடித்து விட்டேன். பெண்களுக்குப் இப்பவெல்லாம் பதில் சொல்வது பிடிக்காமல் போய்விட்டது. கேள்வி கேட்கத்தான் பிடிக்கிறது. நாங்கள் பதில் சொல்ல வேணுமென்றால் கேட்பவர் ‘மிஸ். யுனிவர்ஸ் ‘ஸின் நடுவராகவோ அல்லது குறைந்தபட்சம் ‘மிஸ். மாட்டுத்தாவணி ‘ யின் நடுவராகவாவது இருந்தாக வேண்டும். (மாட்டுத்தாவணி என்ற ஊர், கடந்து செல்லும் போதெல்லாம் என்னை ஆழ்ந்த சிந்தனைவயப்படுத்திய ஊர், ‘மாட்டுக்கு எதற்கு ? ‘ என்று)

‘மகளிர் மட்டும் பேருந்து என்பதே ஆதிக்க-அடிமைத்துவ அநாகரிகம். நான் சென்ற வேறெந்த நாட்டிலும், அரபு நாடுகளில் கூட, குடும்பப் பேருந்துகள் உள்ளன, ஆனால் மகளிர் பேருந்துகள், மகளிர் இருக்கைகள் கிடையாது, மகளிர் கழிவறைகள் தான் உண்டு ‘ என்று எழுதியிருந்தார் ஹாங்காங்கிலிருந்து ஒரு நண்பர். அவரின் மடலில் இருந்த வார்த்தைகள் இவ்வளவே என்பதாலும், இவற்றில் நட்பு பாராட்டும் ஒரு சொல்லும் கிடையாததாலும் நண்பர் என்று நான் குறிப்பது மிகைப்படுத்தலாகவும் இருக்கலாம்.

கையில் தூக்கிப் பிடித்த தீப்பந்தத்துக்கு மாறாய் அணைத்துப் பிடித்த ரெக்கார்ட் நோட்டும் கைப்பையும் வைத்திருந்தாலும், ஒரு சுதந்திர தேவி சிலை போல நாங்கள் நிற்பது அந்தப் பேருந்தை அன்றி வேறெங்குமல்ல என்பதைக் கண்டிருக்காததினாலேயே அந்த நண்பர் அப்படி அடிமை, ஆதிக்கம் என்றெல்லாம் எழுதி விட்டார்.

அப்ப நாங்கள் குத்தியிருந்த பேட்ஜைப் போல முத்துலிங்கத்தின் ‘துரி ‘க்கும் இருந்ததாம் :

//{

துரியை வாங்கும் போது எங்களுக்கு அதனுடைய பெடிகிறி கார்டையும் தந்திருந்தார்கள். பெடிகிறி கார்டு என்பது அந்த நாயுடைய பூர்வாங்கத்தைக் கூறும் அட்டை. அது ஒரு ஓஸ்ட்ரேலியன் செப்பர்ட். அதனுடைய மூதாதையர் ஸ்பெயினில் இருந்து ஓஸ்ரேலியா போய் அங்கேயிருந்து நூறு வருடங்களுக்கு முன்பாக அமெரிக்காவுக்கு வந்தவை. பிறக்கும் போதே ஒட்டிய வாலுடன் பிறக்கும் இந்த நாய்கள் ஓஸ்ட்ரேலியாவில் ஆட்டு மந்தைகளைச் சீராக வைத்திருப்பதற்கு ஒரு காலத்தில் பயன்படுத்தப் பட்டவை.

மேய்ச்சலில் இருக்கும் போது இது மந்தையைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடுகளின் கால்களை மெல்லக் கடித்து அவற்றை ஒழுங்கு படுத்தும். அந்தப் பழக்கத்தை இது இன்னும் முற்றிலும் மறக்கவில்லை. நாலைந்து பேரோடு இதைக் கூட்டிக் கொண்டு ரோட்டிலே போனால் இது ஆட்களைச் சுற்றிச் சுற்றி வந்து குதிக்காலை மெல்லக் கடித்து ஒழுங்கு பண்ணப் பார்க்கும். இன்னொரு பரம்பரை விசேஷமும் இதற்கு உண்டு. ஆட்டு மந்தையின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்குப் போக வேண்டுமென்றால் இது சுற்றி வந்து போகாது. ஒரு ஆட்டின் மேலேறி அப்படியே ஒவ்வொரு ஆடாகப் பாய்ந்து பாய்ந்து அந்தக் கரை போய்ச் சேர்ந்து விடும். இந்தப் பழக்கம் இன்னமும் இதன் ரத்தத்தில் ஊறி இருக்கிறது. ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்குப் போவதற்கு இன்று கூட இது தன் குலாசாரப் படி எதிர்ப்பட்டதெல்லாவற்றையும் ஏறிப் பாய்ந்து பாய்ந்து தான் போய்ச் சேரும்.

}//

பேராசிரியர்கள் ஒப்பிப்பதை நெட்டுருப் போட்டுக் கக்கவும், அவர்கள் கொடுக்கும் ‘ட்ரெயினிங் ‘கை செவ்வனே செய்யவும் கல்லூரி கனகச்சிதமாகக் கற்றுத் தந்ததால், அப்ப கற்ற பேருந்துப் பயணமும் துரிக்கு மாதிரியே ரத்தத்தில் ஊறிப் போய்விட்ட பழக்கமாகி ஓடுகிறது இப்பவும். பேருந்து நகர்ந்தவுடன், கூடவே ஓடித் தொற்றி ஏற முயற்சித்தால், இங்குள்ள பேருந்துகளோ துவாதசியன்று சொர்க்கவாசல் போல தம் கதவுகளை டும் டும் என்று மூடிக் கொள்கின்றன. ‘உனக்கு சம்மன் தான் ‘ என்று ஓட்டுநர் ஆள்காட்டி விரலை வேறு ஆட்டி, உருட்டி முழித்து விட்டுப் போகிறார்.

அங்கெல்லாம் அப்படியல்ல. கதவுகளே இல்லாமல் பிறந்தவை அவை. இந்த பொதுப்பேருந்துக்கும் மகளிர் பேருந்துக்கும் உள்ள வித்தியாசம் இது தான். பொதுப் பேருந்து எவ்வளவு புளிமூட்டையாக வந்தாலும் பெண்களை எப்பாடுபட்டாவது உள்ளே எக்கி விட்டு ஆண்கள் அவர்களைத் தாங்கிக் கொண்டு படிகளிலும் ஜன்னல்களில் கரம், சிரம் புறம் நீட்டிக் கொண்டு சுதந்திரமாகத் தொங்கிக் கொண்டு வருவார்கள். ஆனால் மகளிர் பேருந்தில் படிகளில் தொங்கும் வல்லமை பெற்ற ஆண்கள் ஏறாததால், நாங்களே கடைசிப் படிவிளிம்பில் ஒற்றைக் கட்டைவிரலை ஊன்றி, பேருந்தில் நீட்டிக் கொண்டிருக்கும் எதாவதொரு ஆணியை எதாவதொரு சுண்டு விரலால் கொக்கியிட்டு பேலன்ஸ் செய்து, பேருந்து கொண்டையூசி வளைவுகளில் பக்கவாட்டில் படுத்தெழும்போது மட்டும், பிடிப்பதற்கு மற்ற விரல்களையும் துணைக்கு வளைத்துக் கொண்டு, மற்ற நேரம் குண்டு குழிகளில் குதித்துப் போகும் பேருந்தில் ஜான்சி ராணி போல சவாரி செய்வோம் ‘டொக் டொக் டொக் ‘கை மட்டும் நாக்கால் செய்து கொண்டு.

ஊரெல்லாம் ஊர்வலம் வந்து வெகுதூரம் கடந்து எங்கள் நிறுத்தத்துக்கு வருவதால், பிரச்சனையின்றி எப்படியும் எனக்கு கடைசிப் படிவிளிம்பு கிடைத்து விடும். முன்னால் ஏறியவர்கள் தான் பாவம், உட்கார்ந்து வரவேண்டும். உள்ளே நிற்பவர்களுக்குத் தான் மேலே பிடிக்கக் கம்பிகள் தேவை. மகளிர் பேருந்தில் வரும் எந்த நடத்துனருக்கும் பிடிப்பதற்குக் கம்பியே தேவைப் படுவதில்லை. சடன் பிரேக்கிடும் போது கம்பியைப் பிடிக்க முடியாமல் கையில் டிக்கெட் வைத்திருப்பதால் தான், தெரியாமல் நம் மேல் விழுந்து விடுவார், பல சமயம் உட்கார்ந்திருக்கும் பெண் மடியில் தவறி உட்கார்ந்து விடுவார்.

ஓட்டுநரும் எங்களுக்குப் பயிற்சி தருவதற்காகப் பேருந்தை நிறுத்தாமல், வேகத்தடையில் லேசாய் கியர் மாற்றுவார். அப்ப நாங்கள் கூடவே ஓடி, ஒரு காலால் எவ்வியேறும் போதே, இன்னொரு காலைச் சட்டெனத் தரையை விட்டுப் பிரித்து விட வேண்டும். இல்லாவிட்டால் தலைகுப்புற விழுந்து சக்கரத்தில் தான் பயணிக்க வேண்டும். பின்பு ஒரு காலூன்ற வேறொருவரின் கால் இல்லாமல், படியே கிடைத்து விடும் நல்ல நாட்களில், மற்ற காலை ஊஞ்சலாட்டிக் கொண்டு போகலாம். அப்படிப் போகும் போது நசுங்காமல், கிளிப்பச்சை வயல்கள், பால் பாலாய்க் கொக்குகள், ஐயனாரின் ஆளுயர அரிவாள்கள், அடக்க முடியாமல் முன்னால் போன மாடு பெய்து வைத்ததில் பெட்ரோல் சிந்தி, காலுக்கடியில் வானவில் விரிக்கும் தார்ச்சாலையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே சுதந்திர தேவிகளாகவே கற்பனை செய்து கொள்ளும் சுதந்திரத்தைத் தந்தது கதவுகள் இல்லாத அந்தப் பேருந்து. இறங்க வேண்டிய இடத்தில் குதிப்பதும் அப்படியே.

வம்சவிருத்தியில் முன்னுரையில் முத்துலிங்கம் அப்படிக் குதிப்பதைப் பற்றி இப்படிச் சொல்கிறார் :

//(

ஓடும் ரயிலில் இருந்து குதிக்கும் ஒருவன் இறங்கிய பின்னும் ரயிலுடன் சிறிது தூரம் ஓடுகிறான் அல்லவா! அது போல, ஒரு நல்ல சிறுகதையைப் படிக்கும் வாசகனுடைய சிந்தனையானது கதை முடிந்த பின்னும் சிறிது தூரம் ஓட வேண்டும். சிறுகதையின் முழுமை அவன் சிந்தனை ஓட்டத்தில் தான் நிறைவேற வேண்டும். ஒரு உண்மையான சிறுகதை அது முடிந்த பிற்பாடு தான் தொடங்குகிறது.

}//

ஆனால் அவரின் ரயில் வண்டியிலிருந்து குதிக்கனுமென்றால் மட்டும் நான் எடுத்துக் கொண்ட பயிற்சிகள் எல்லாம் சாபம் வாங்கிய கர்ணனுக்குப் போர்க்களத்தில் போல் கைவரவே மாட்டாது போலிருக்கு. குதிக்க வேண்டுமென்றால் முதலில் ஏற வேண்டுமே. ஏறு முன் கூடவே ஓடும் அழகே இவ்வளவு தூரம் இழுத்து வந்து விட்டது. ஏறியதும், கடைசிப் படிவிளிம்பில் பேருந்து காட்டிய காட்சிகள் போல பிரபஞ்ச ஒளியையும் கால வெளியையும் கண்முன் விரித்துக் காட்டிக் கொண்டும், பலவித உணர்வுகளை ஊட்டிக் கொண்டும் நம்மைச் சுமந்து செல்லும் இக்கதைகளில் ஏறிய பின், குதிப்பதெங்ஙனம் ?

முத்துலிங்கம் இன்னும் நிறைய தூரங்களிலும் நேரங்களிலும் பாதைகளிலும் ஓட்டக் கூடியவர் என்பதால் ஏறுபவர்களைக் குதிக்கச் செய்யாத வற்றாத சாசுவதமான பயணானுபவம் அவரால் நமக்குக் கிடைத்துக் கொண்டே தான் இருக்கப் போகிறது. மொத்தமான புது வண்டியில் ஏறிக்கொள்ள, உங்களில் இடக்கு மடக்காத நல்ல நண்பர் யாரும் இருக்கமாட்டார்களா என்ற என் கேள்விக்கு நேரடி மின்னஞ்சல் பதில் தந்திருந்தார் நண்பர் கேசி. சிதம்பரம் நியூ மெக்ஸிகோவிலிருந்து.

dilip

என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொண்டால் ‘முத்துலிங்கம் கதைகள் ‘ கிடைக்குமென்றும் வேறு எந்தப் புத்தகங்களும் மிக நியாயமான விலையில் கிடைக்குமென்றும் நன்றி மடல் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். அனுப்பச் சொல்லும் போது ‘ஏர்மெயிலில் ‘ என்றால் விரைவில் வருமாம், கடல்வழி / தரைவழி வருவதென்றால், ஐந்தாறு மாதங்கள் எடுக்கிறது அமெரிக்காவில், செப்டம்பர் பதினொன்றுக்குப் பிறகு என்ற கூடுதல் தகவலுக்கு அமெரிக்க நண்பர்கள் நன்றி தெரிவித்தால் அது அவருக்குரியதே.

இவர் பேருந்து பற்றிய என் கேள்விக்கு எதுவும் சொல்லா விட்டாலும், இந்தக் கட்டுரையின் உயிர் போன்ற ஒன்றைக் கண்டுபிடித்து விட்டார்…

தொடரும்… (அடுத்த வாரம்)

– சிவஸ்ரீ (sreeeiii@poetic.com)

Series Navigation

சிவஸ்ரீ

சிவஸ்ரீ