அரவிந்தன் நீலகண்டன்
ஒரு சின்ன முன்கதைச்சுருக்கம்
எழுத்தாளர் ஜெயமோகனின் எனது இந்தியா கட்டுரைக்கு அ.மார்க்ஸ் தீராநதி பத்திரிகையில் ஒரு எதிர்வினை ஆற்றியிருந்தார். அக்கட்டுரையில் அவர் பல தரவுகளை முன்வைத்து ஜெயமோகனை மறுதலித்திருந்தார். அ.மார்க்ஸின் அந்த தரவுகள் அடிப்படையிலான கட்டுரைக்கு மறுப்பாக எழுதப்பட்டு தீராநதிக்கு அனுப்பப்பட்டு தீராநதியால் பிரசுரிக்கப்படாத கட்டுரையே இது. ஜெயமோகன் தமது நிலைப்பாட்டை தமது உள்ளுணர்வை சார்ந்தே வெளிப்படுத்தியிருந்தார். தமது நிலைப்பாடு நிச்சயமாக தரவுகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படுமாயினும் அவ்வாறு தரவுகளை தேடி பட்டியலிடுவது தமது இயல்புக்கு ஒவ்வாதது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் அ.மார்க்ஸ் ஆதாரபூர்வமாக தரவுகளின் அடிப்படையில் பேசும் மானுடநேயத்தவராகவும் ஜெயமோகனோ உணர்வு அடிப்படையில் ஆதாரமின்றி பேசுவது போலவும் ஒரு பிம்பத்தை தீராநதி உருவாக்கியுள்ளது. எனவேதான் அ.மார்க்ஸின் தரவுகளின் ஆதாரமின்மையையும் திரிப்புகளையும் எடுத்துக்காட்டும் இக்கட்டுரையை அது வெளியிடாதது அதன் ஒரு பக்க சாய்வினை வெளிக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது. இன்னொரு விதத்தில் சிற்றிதழ்களின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைக் குறித்த ஒரு ஆதாரமாகவும் இது அமைகிறது.
ஜெயமோகனின் ‘எனது இந்தியா’ கட்டுரைக்கு அ.மார்க்ஸ் ஒரு எதிர்வினை செய்திருக்கிறார். தன்னை தமிழ்நாட்டின் முன்னணி அறிவுஜீவியாகக் காட்டிக்கொள்வதில் முனைப்பு உள்ளவர் அவர். ஆனால் அவர் எழுதும் ‘சமுதாய சொரணை’ கொண்ட எழுத்துக்களின் பொதுவடிவமும் ஏறத்தாழ அவற்றின் உள்ளிருப்பும் ஏற்கனவே ஒரு ஆங்கில முற்போக்கு அறிவு ஜீவி கூறியதாகவோ அல்லது உலக அளவில் இயங்கும் இஸ்லாமிய அடிப்படைவாத பிரச்சார பிரசுரத்திலோ வந்திருப்பதாகவே இருப்பதுதான் பிரச்சனை. மனிதருக்கு ஒரு தனித்தன்மை கிடைக்காமல் வேறொருவருடைய குரலை ஒலிபெருக்கி எதிரொலிக்கும் கருவியாக மட்டுமே அ.மார்க்ஸ் குறுகிவிடுகிறார். இந்த முறை அவர் ஜெயமோகனுக்கு ஆற்றிய எதிர்வினை அ.மார்க்ஸின் பிரச்சார ஊதுகுழல் தன்மையின் மற்றொரு உச்சம் என்றே கூறவேண்டும். என்ன…சில உண்மைகள் அடிபட்டு போவதுடன் பாகிஸ்தானிய/தாலிபானிய அடிப்படைவாத இஸ்லாமின் பிரச்சார கட்டமைப்பு சென்னையின் முற்போக்கு அறிவுஜீவிகள் வரை நீண்டியருப்பதையும் அவரது கட்டுரை உறுதிப்படுத்துகிறது. இங்கே நாம் காணப்போவது அ.மார்க்ஸின் கட்டுரைகள் இருக்கும் திரிக்கப்பட்ட பாதி-உண்மைகள் மற்றும் முழுப்பொய்களைத்தான்.
1. “ஜியாஉல்ஹக்கின் காலத்தைத் தவிர வேறெப்போதும் பாகிஸ்தான் தன்னை ஒரு முஸ்லிம் அரசாகப் பிரகடனப் படுத்திக் கொண்டதில்லை.”
பொதுவாக பாகிஸ்தானின் ‘மதச்சார்பற்றத்’ தன்மைக்கு ஆதாரமாக இவர்கள் காட்டுவது ஜின்னாவின் புகழ்பெற்ற சுதந்திரதின பேச்சைத்தான். இந்த பேச்சின் அடிப்படையில் ஜின்னாவை ஒரு மதச்சார்பற்ற ஆதர்சமாக காட்டி அங்குள்ள சிறுபான்மை இந்துக்களுக்கு அடிப்படை வாழ்வுரிமைகள் கிடைக்க வைக்க அத்வானி கூட முயன்றிருக்கிறார். ஆனால் அது பாகிஸ்தானில் அன்று முதல் இன்று வரை நிலவிடும் ஒரு யதார்த்தமல்ல. ஒரு சுதந்திர தின பேச்சு சட்ட பிரகடனமாகவும் ஆகாது. ஆனால் பாகிஸ்தானின் சட்டம் அதனை இஸ்லாமிய அரசாகப் பிரகடனம் செய்கிறதே அன்றி மதச்சார்பற்ற தேசமாக அல்ல. இது ஜியாவுல் ஹக்கின் காலத்தில் ஏற்பட்டதல்ல. மார்ச் 7 1949 இல் பாகிஸ்தானின் முதல் பிரதம மந்திரி லியாகத் அலி கான் பாகிஸ்தான் அரசு சபையில் கொண்டு வந்த தீர்மானத்தில் பாகிஸ்தானை ‘இஸ்லாமியக் குடியரசு’ என அறிவித்தார். தொடர்ந்து 1956 இல் பாகிஸ்தானின் முதல் அரசியல் நிர்ணய சட்டம் அந்நாட்டை இஸ்லாமிய நாடு என அறிவித்தது. 1962 இல் பாகிஸ்தானுக்கு இரண்டாவது முறையாக சட்டம் மாற்றி எழுதப்பட்ட போது ஜெனரல் அயூப்கான் ‘இஸ்லாமிய’ எனும் வார்த்தையை நீக்கிவிட்டார். இது பாகிஸ்தானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து சட்ட சீர்திருத்தம் மூலமாக பாகிஸ்தான் இஸ்லாமிய அரசாக அறிவிக்கப்பட்டது. இவையெல்லாம் ஜியா வுல் ஹக்கின் காலத்துக்கு மிக முன்னரே நடந்தவை. ஆனாலும் அ.மார்க்ஸ் -தமிழ்மக்களின் அறியாமை மீது அவர் வைத்துவிட்ட அளவு கடந்த நம்பிக்கையால் இருக்கலாம்- தைரியமாக எழுதுகிறார்: “ஜியாஉல்ஹக்கின் காலத்தைத் தவிர வேறெப்போதும் பாகிஸ்தான் தன்னை ஒரு முஸ்லிம் அரசாகப் பிரகடனப் படுத்திக் கொண்டதில்லை.”
2. “பாகிஸ்தான் தெருக்களில் பிச்சைக்காரர்களைப் பார்க்க முடியாது.”
அ.மார்க்ஸ் மற்றும் அவர் கூறுவதையெல்லாம் சத்தியங்களாக கருதுபவர்கள் யூடியூப்பில் சென்று பாகிஸ்தானிய தெருக்களில் பிச்சைக்காரர்களைக் கண்டு கொள்ளலாம். பாகிஸ்தானிய நகரங்களின் தெருக்களில் பிச்சைக்காரர்களை அ.மார்க்ஸின் எழுத்துக்களில் இருக்கும் உண்மையைப் போல தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. அபரிமிதமாகவே இருக்கிறார்கள். தற்போதைய பணவீக்கம் வேறு பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டதாக கூறுகிறது Gulf Times பத்திரிகை. இத்தனைக்கும் தனது தலைநகரத்தில் பிச்சை எடுப்பவர்களை சட்டபூர்வமாக கைது செய்து ஜெயிலில் அடைத்துவருகிறது பாகிஸ்தான். ஆனால் அதையும் தாண்டி பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது. மேலும் அ.மார்க்ஸ் கூறுகிறார்: “ஒப்பீட்டளவில் அகக்கட்டுமானங்கள், சாலை வசதிகள் முதலியன அங்கு அதிகம். இந்தியா பீற்றிக்கொள்ளும் `பொருளாதார வளர்ச்சிக்கும்’ கூட பாகிஸ்தானின் வளர்ச்சி குறைந்ததல்ல.” ஆனால் உண்மையான நிலை என்ன?
அரசாங்கத்துக்கே நேரடியாக கிடைக்கும் அதீதமான அமெரிக்க பண உதவி, இந்தியாவைக் காட்டிலும் பன்மைத்தன்மை , மேலும் இந்தியாவைக் காட்டிலும் குறைவான மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பு (எனவே நிர்வகிப்பது சுலபம்) என்றிருந்த போதிலும், வறுமை குறைப்பு வேகத்தில் பாகிஸ்தான் இந்தியாவைவிட மிகவும் பின்தங்கி நிற்கிறது என்பதே உண்மை. அது மட்டுமல்ல இடதுசாரி முற்போக்கு அறிவுஜீவிகள் பிரஸ்தாபிக்கும் மானுடவள மேம்பாட்டு குறியீட்டளவையை (Human Resource Development Index) எடுத்துக்கொண்டாலும் அதிலும் இந்தியா(0.619) பாகிஸ்தானைக்(0.551) காட்டிலும் முன்னணியிலேயே உள்ளது.
3. அ.மார்க்ஸ் மிக சாதுரியமாக இந்தியாவை சிறுமைப்படுத்தும் வாக்கியங்களின் நடுவில் பாகிஸ்தானில் பெண்களின் அரசியல் ஒதுக்கீடு குறித்து பேசுகிறார்: “ஒப்பீட்டளவில் அகக்கட்டுமானங்கள், சாலை வசதிகள் முதலியன அங்கு அதிகம். இந்தியா பீற்றிக்கொள்ளும் `பொருளாதார வளர்ச்சிக்கும்’ கூட பாகிஸ்தானின் வளர்ச்சி குறைந்ததல்ல. பாகிஸ்தானில் பல மட்டங்களில் பெண்களுக்கு அரசியல் ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், சிறுபான்மை மதத்தவருக்கு அவர்கள் வேண்டாமென்று சொன்ன வரை இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்ததும் ஜெயமோகனுக்குத் தெரியுமா?” பாகிஸ்தானில் பல மட்டங்களில் பெண்களுக்கு அரசியல் ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகக் கூறுகிறார் அ.மார்க்ஸ். ஆனால் உண்மை என்னவென்றால் மிக மோசமான ஆண்-பெண் சமத்துவக்குறைவு (Gender Gap) கொண்ட நாடுகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் கருதப்படுகின்றன என்ற போதிலும் இந்தியாவின் நிலை (113) பாகிஸ்தானைக்(127) காட்டிலும் முன்னேறியதாகவே உள்ளது. இந்தியாவில் ஆண்-பெண் சமத்துவ நிலை ஒப்பீட்டளவில் இந்தியா போன்ற பொருளாதாரப் பிரச்சனைகள் இல்லாத எண்ணெய் வளம் கொண்ட இஸ்லாமிய நாடுகளான, ஈரானையும்(116) சவூதி அரேபியாவைக்(128) காட்டிலும் சிறப்பானதாகவே உள்ளது. பெண்கள் கல்வியை எடுத்துக்கொண்டாலும் பாகிஸ்தான்(122) இந்தியாவைக்(117) காட்டிலும் பின்தங்கியே உள்ளது. அடுத்ததாக அ.மார்க்ஸ் குறிப்பிட்டுக்கூறக்கூடிய பெண்களுக்கான அரசியல் ஒதுக்கீடு என்பதில் இந்தியா உலகின் வளர்ந்த நாடுகளுக்கு அருகில் உள்ளது. அரசியலில் பெண்களின் பங்களிப்பு எனும் தரப்படுத்தலில் உலகநாடுகளில் இந்தியா 25 ஆவது இடத்தில் (அமெரிக்கா 21 ஆவது இடத்தில்) உள்ளது. பாகிஸ்தான் 50 ஆவது இடத்தில் உள்ளது. புள்ளியியல் தரவுகள் என்பவை நெகிழ்ச்சித்தன்மையுடன் பிரச்சாரத்துக்கு இடம் கொடுப்பவை என்பது உண்மையே. இந்த அறிக்கைக்குள்ளும் அ.மார்க்ஸ் மூழ்கி பாகிஸ்தானுக்கு ஆதரவான ஓரிரு புள்ளிவிவரங்களை முத்தெடுத்துவிடக்கூடிய சாமர்த்தியமும் உடையவர்தான். ஆனால் பொதுவாக இந்திய நேசம் இல்லாத மேற்கத்திய அறிவுலகங்களிலிருந்து வெளிவருபவை இந்த அறிக்கைகள் என்பதையும் இதில் காட்டப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் சமூகப் பொது போக்கினை பிரதிபலிப்பவையே அன்றி உள்-பகுப்புகளிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டவை இல்லை என்பதையும் கவனித்தில் கொள்ளவேண்டும்.
4. அடுத்ததாக பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு அவர்களே வேண்டாமென சொல்லுவது வரை இரட்டை வாக்குரிமை இருந்ததாக அ.மார்க்ஸ் கூறுவது வக்கிர நகைச்சுவையே அன்றி வேறல்ல. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் -குறிப்பாக இந்துக்கள் மீதான வன்முறை- அதன் தொடக்க காலங்களிலிருந்தே பாகிஸ்தானிய ஆட்சி அதிகாரத்திலிருப்பவர்களின் ஆதரவுடன் அரங்கேற ஆரம்பித்துவிட்டன. ஜோகேந்திர நாத் மண்டல் எனும் தலித் தலைவர் பாகிஸ்தானின் அரசில் மந்திரியாக்கப்பட்டார். ஆனால் விரைவில் – வெகு விரைவில் அவர் பாகிஸ்தானிய அரசின் பித்தலாட்டத்தை – குறிப்பாக தாழ்த்தப்பட்ட இந்துக்கள் மீது அவிழ்த்து விடப்பட்ட கொடுமைகளை விரிவாக விவரித்து அவர் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதத்துக்கு அடைக்கலம் தேடிவர நேர்ந்தது. அவர் எழுதிய ராஜினாமா கடிதம் இன்றைக்கும் அ.மார்க்ஸ் போன்றவர்களின் பிரச்சாரங்களில் மயங்குபவர்களுக்கு சரியான எச்சரிக்கையை அளிப்பதாக அமைகிறது. 1971 – பங்களாதேஷ் போரின் போது பாகிஸ்தானிய இராணுவம் அன்று பாகிஸ்தானின் ஒரு பாகமாக இருந்த கிழக்கு பாகிஸ்தானில் இந்துக்களைத் தேடியெடுத்து கொன்று குவித்தது. இந்தியாவில் மதக்கலவரங்கள் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதற்காக பாகிஸ்தானிய இராணுவம் அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் மத அடிப்படையில் நடத்திய இனப்படுகொலையை இந்திய ஊடகங்கள் மொழி/இன அடிப்படையில் நடத்தப்பட்டதாக மட்டுமே சித்தரித்தன. பாகிஸ்தானிய இராணுவத்தின் 1971 போரின் போது ஏற்பட்ட தோல்வியை ஆராய ஏற்படுத்தப்பட்ட ஹமூதூர் குழுவின் அறிக்கை அன்றைய பாகிஸ்தான் இராணுவ தளபதி நியாஸி ‘இந்துக்களை கொல்ல எழுத்து மூலமாகவே உத்தரவு அளித்ததை ஆவணப்படுத்தியுளது. லெப்.கர்னல் அஸீஸ் அகமது கான் ‘எத்தனை இந்துக்களை கொன்று முடித்திருக்கிறாய்?’ என நியாஸி தம்மிடம் கேட்டதை இராணுவ விசாரணை கமிஷனில் சாட்சியம் அளித்திருக்கிறார். இத்தகைய ஒரு மனநிலை நிலவிய இராணுவத்தின் ஆட்சி நடைபெற்ற தேசத்தைதான் அ.மார்க்ஸ் ‘ஜியாஉல்ஹக்கின் காலத்தைத் தவிர வேறெப்போதும்’ இஸ்லாமிய வெறியுடன் விளங்காத தேசமாக, சிறுபான்மையினர் அவர்களே வேண்டாமெனக் கூறும்வரை அவர்களுக்கு இரட்டை வாக்குரிமை அளித்த தேசமாக சித்தரிக்கிறார்.
5. இந்த ‘இரட்டை வாக்குரிமை’ விவகாரத்தின் உண்மை என்ன? உண்மையில் இது இரட்டை வாக்குரிமை அல்ல மாறாக ஒதுக்கப்பட்ட தேர்தல் முறையாகும். இதன் படி பாகிஸ்தானிய சிறுபான்மையினர் தேசம் முழுவதுமாக பிரிக்கப்பட்ட 10 சிறுபான்மை உறுப்பினர்களை மட்டுமே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். வேறெங்கும் சிறுபான்மையினர் போட்டியிட முடியாது. இந்த பத்து உறுப்பினர்களுக்கு மட்டுமே அவர்கள் வாக்களிக்க முடியும். ஏதோ சிறுபான்மையினருக்கு அதீத உரிமை அளித்து சிறுபான்மையினரே அந்த சலுகை பொறுக்க முடியாமல் வேண்டாம் என சொல்லும் அளவுக்கு அந்த உரிமை இருந்தது போல ஒரு பிம்பத்தை அ.மார்க்ஸ் உருவாக்குகிறாரே அது குறித்த உண்மையை பிபிஸி செய்தி விளக்குகிறது: “பாகிஸ்தானிலுள்ள சிறுபான்மையினர் தங்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுவதாக குறை கூறியுள்ளனர். சிறுபான்மையினர் தங்கள் சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிற இந்த சர்ச்சைக்குரிய தேர்தல் முறை 1980களில் கடுமைவாத இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கைகளின் பேரில் உருவாக்கப்பட்டது.” இதில் கொடுமை என்னவென்றால் அஹ்மதியாக்களுக்கு தங்களை இஸ்லாமியர் என அழைத்துக்கொள்ளும் உரிமையைக் கூட கொடுக்க பாகிஸ்தான் சட்டரீதியாக மறுத்துவருவதுதான்.
6. அடுத்ததாக காஷ்மீர் பிரச்சனைக் குறித்து அவர் சொல்லும் விஷயங்களுக்கு வரலாம். 1947 முதலே இந்தியா காஷ்மீர் மக்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டதாகக் கூறுகிறார் அ.மார்க்ஸ். ஆனால் நடுநிலை பாகிஸ்தானிய அறிஞர்களே காஷ்மீர் மீது ஆக்கிரமிப்பு நடத்திய தவறு பாகிஸ்தானுடையதுதான் என கூறிவிடுவார்கள். உதாரணமாக 1948 இல் நடந்த ஆக்கிரமிப்பினைக் குறித்து பாகிஸ்தானிய பத்திரிகை வெளியிட்ட கட்டுரை கூறுகிறது: “ஒரு வனவாசி லஷ்கார் 1947 இல் காஷ்மீருக்குள் நுழைந்து தன்னை நிலை நாட்டியது. இது சுதந்திர பிரகடனம் செய்யலாமா என யோசித்துக் கொண்டிருந்த ராஜாவுக்கு இந்தியாவுடன் இணைந்திட ஒரு வாய்ப்பினை அளித்தது. நாம் செய்த முதல் தவறு (லஷ்கார் மூலமாக) ராஜாவை அச்சுறுத்தியதுதான். லஷ்கார் உண்மையில் கொள்ளையடிப்பதிலும் பாலியல் வன்முறையிலும் இறங்கிய ஒரு சூறையாடும் பட்டாளமாகவே இருந்தது. இவர்கள் தங்களை ஜிக¡திகள் எனக் கூறிக்கொண்டனர். காஷ்மீரல்லாத பிரதேசமான கில்கித்தில் நின்றிருந்த ராணுவத்தில் ஒரு பகுதி கலகம் செய்து கொண்டு பாகிஸ்தானிய இராணுவத்துடன் இணைந்து கொண்டது.” இந்திய ராணுவம் காஷ்மீரில் இறங்கிய தினத்தில்தான் லஷ்கார் பயங்கரவாதிகளால் புனித ஜோசப் கான்வெண்ட் முழுமையாக சூறையாடப்பட்டு அங்கிருந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். மேலும் அ.மார்க்ஸ் கூறுகிறார்: “காஷ்மீரில் தீவிரவாதம் தலையெடுத்திருந்த கடந்த 18 ஆண்டுகளில் எஞ்சிய அப்பாவிப் பண்டிட்கள் மீது பயங்கரவாதம் ஏவப்பட்டதில்லை என்பதையும் நினைவிற்கொள்ளுங்கள். உளவு சொன்னார்கள், காட்டிக் கொடுத்தார்கள் என்கிற ரீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தனிநபர்கள் கொல்லப்பட்டிருக்கலாம்.” இங்கு நாம் காண்பது அ.மார்க்ஸின் பொய் பிரச்சாரத்தின் மற்றொரு உச்சம். கடந்த 18 ஆண்டுகளில் அங்கொகான்றும் இங்கொன்றுமாக அல்ல தொடர்ந்து திட்டமிட்ட விதத்தில் ஜம்மு காஷ்மிரில் இந்துக்கள் மீது கூட்டுப்படுகொலைகளும் பயங்கரவாதப் படுகொலைகளுமாக ஜிகாதிகளால் நடத்தப்பட்டு வருகின்றன. அவரது அப்பட்டமான பொய் பிரச்சாரத் தை வெளிப்படுத்த மனக்கசப்பை உருவாக்கக் கூடிய ஒரு பட்டியலை தரும் கட்டாயத்தை அ.மார்க்ஸ் இங்கே உருவாக்குகிறார். ஒரு சில உதாரணங்கள்: மார்ச் 22 1997 பட்காம் மாவட்டத்தில் எட்டு இந்துக்கள் கொலை செய்யப்பட்டனர்; ஜனவரி 25-26 (1998) வந்தமா கிராமத்தில் 26 இந்துக்கள் கொலை செய்யப்பட்டார்கள்;
ஏப்ரல் 21 1998 இல் ப்ராண்கோட் (உத்தாம்பூர் மாவட்டம்) எனும் இடத்தில் 26 இந்துக்கள் கொலை செய்யப்பட்டனர்.
மார்ச் 30, 2002 – 7 இந்துக்கள் ரகுநாதர் கோவிலில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். மார்ச் 23 2003 இல் நதிமார்க் கிராமத்தில் 24 இந்துக்கள் கொலை செய்யப்பட்டனர். ஆகஸ்ட் 15 2005: ஜம்முவில் இரண்டு இந்துக் குடும்பங்கள் சுட்டுக்கொலை இதில் படுகாயப்படுத்தப்பட்டவர்களில் இரண்டு வயதிலிருந்து 14 வயதுக்குள்ளான நான்கு குழந்தைகளும் அடங்குவர் என்கிறது அதே தேதியிட்ட பாகிஸ்தான் டைம்ஸ். 2006 இல் பார்த்தோமென்றால் : ஏப்ரல் 30: 19 இந்துக்கள் டோடா மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டனர் மே 1: 13 இந்துக்கள் வசந்த்புரில் (உதம்பூர் மாவட்டம்) கொல்லப்படனர் மே 23: 7 இந்து சுற்றுலா பிரயாணிகள் ஸ்ரீநகரில் கொல்லப்படனர்; மே 25: 3 இந்து சுற்றுலா பிரயாணிகள் ஸ்ரீ நகரில் கொல்லப்படனர்; மே 31: 21 இந்து சுற்றுலா பிரயாணிகள் ஸ்ரீநகரில் கொல்லப்படனர்; ஜுன் 12: 1 அமர்நாத் புனித யாத்ரீகர் கொலை ; கிரானேட் குண்டு மூலம் 31 பேர் படுகாயம் ஜூன் 12: 8 இந்து தொழிலாளர்கள் கொலை, 5 பேர் படுகாயம் அனந்தநாக் மாவட்டத்தில். இந்த படுகொலைகள் நடக்கும் விதத்தை காணும் போது இவற்றின் பின்னால் இருக்கும் மத அடிப்படைவாத வெறியை (அ.மார்க்ஸ் சித்தரிப்பது போன்ற ஒரு தேசிய விடுதலை போர¡ட்டமல்ல அங்கு நடப்பது மாறாக ஒரு அடிப்படைவாத வெறி இயக்கமே என்பதை) நம்மால் எளிதாகக் கணிக்கமுடியும். இது காஷ்மீரில் நடைபெற்ற ஒரு இந்து படுகொலை குறித்த பிபிஸி செய்தியிலிருந்து: கடைசியாக நடைபெற்ற படுகொலையில் தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகளால் நிறுத்தப்பட்ட லாரிகளிலிருந்து, ஐந்து இந்து லாரி டிரைவர்கள் மற்ற மத டிரைவர்களிலிருந்து பிரிக்கப்பட்டு நிற்க வைக்கப்பட்டார்கள். பின்னர் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை நான்கு காஷ்மிரி இந்துக்கள் ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்தில் கொல்லப்பட்டார்கள். ஆக, இதுதான் அப்பாவிகள் மீது பயங்கரவாதம் ஏவிவிடப்படாததன் இலக்கணம்.
இங்கு மற்றொரு விஷயத்தையும் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும். காஷ்மீரியத் காஷ்மீரியத் என கூறுகிறார்களே அந்த உண்மையான காஷ்மீர பண்பாடு (அதற்கும் பாரத பண்பாட்டுக்கும் எந்த ஒரு அடிப்படையான வேறுபாடும் இல்லை) இன்றைக்கு மிகக் கொடூரமான விதத்தில் அராபிய/வகாபிய இஸ்லாமியத்தால் அழிக்கப்படுகிறது. இன்று எல்லை தாண்டிய சக்திகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பயங்கரவாத அமைப்புகள் முதலில் கொன்றழித்தது காஷ்மீரின் பாரம்பரிய இஸ்லாமிய அறிஞர்களைத்தான். உதாரணமாக 1994 இல் ஜிகாதிகளால் கொல்லப்பட்ட காஷ்மீர இஸ்லாமிய அறிஞர் காஸி நிசார் அகமது, பாரதத்துக்கு எதிரான தங்கள் ஆயுதமேந்திய போராட்டத்தை ஜிகாத் என அங்கீகரிக்கும் படி வலியுறுத்தப்பட்டு அதனை ஏற்க மறுத்தமையால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இவ்வாறு 15க்கும் மேற்பட்ட காஷ்மீரின் பாரம்பரிய இஸ்லாமிய அறிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஷேக் முகமது உஸ்மான் எனும் இந்திய இராணுவ அதிகாரிக்கு ஜின்னா தனிப்பட்ட முறையில் பாகிஸ்தானுக்கு வந்து பாகிஸ்தானிய இராணுவத்தின் தலைமைப் பொறுப்பேற்க அழைப்பு விடுத்தார். ஆனால் பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்ட உஸ்மான், 1947 இல் பாகிஸ்தான் காஷ்மீர் மீது நிகழ்த்திய தாக்குதலின் போது காஷ்மீரை பாரதத்துக்காக காத்து பாகிஸ்தானிய குண்டுக்கு பலியானர். இன்று இந்தியாவிலிருக்கும் காஷ்மீர் என்பது இத்தகைய பாரதிய இஸ்லாமியர்களின் தியாகங்களாலும் பாரதத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. உண்மையில் காஷ்மீரில் நடக்கும் போரின் மற்றொரு தளத்தில் தூய-அராபியவாத இஸ்லாமானது பிராந்திய பரிணாமங்கள் கொண்ட இஸ்லாமை கொடூரமான முறையில் அழித்துக்கொண்டிருக்கிறது. அமர்நாத் கிளர்ச்சியின் போது கூட, நிலத்தை சில காலம் யாத்திரீகர்களுக்கு வாடகைக்கு விடுவதை எதிர்க்காத கணிசமான காஷ்மீர இஸ்லாமியர்களின் குரல் ஒலிக்க இடமேயில்லாமல் முடக்கப்பட்டது. குஜ்ஜார் முஸ்லீம்கள் இந்திய தேசியக்கொடியுடன் பெரும் அளவில் ஜம்மு கிளர்ச்சியில் பங்கேற்பதை யூட்யூப் வீடியோக்களில் எளிதாகக் காண முடியும். ஆனால் அ.மார்க்ஸ¤க்கோ அருந்ததி ராய்க்கோ அவர்கள் பார்க்கும் சரித்திரத்தில் இத்தகைய பக்கங்களுக்கு இடமேயில்லை. அ.மார்க்ஸ் போன்றவர்கள் எல்லைத்தாண்டி இந்தியாவில் பயங்கரவாதத்தை வளர்க்கும் சக்திகளுக்கு ஆதரவாக பேசுவது ஏதோ தங்களை சிறுபான்மை சமுதாயத்தின் ஏகபோக பாதுகாவலனாக சித்தரிக்கும் என நினைத்து பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் இந்த தேசத்தின் சிறுபான்மையினரின் தேசபக்தி கொண்ட தியாகங்களை சிறுமைப்படுத்தி விடுகிறார்கள்.
7. அமர்நாத் யாத்திரை குறித்து அ.மார்க்ஸ் கூறிய விவரணங்களுக்குள் இந்த தருணத்தில் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் அவர் கூறியுள்ள “இந்த ஆண்டு இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கூட நான்கு லட்சம் யாத்ரிகர்கள் வந்துபோயுள்ளனர். அவர்களில் ஒருவருக்கும் கூட ஒரு சிறு தீங்கும் விளைவிக்கவில்லை.” என்கிறார். ஆனால் ஜூலை 2008 இல் பல்தால் எனும் இடத்தில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ எனும் கோஷத்துடன் அமர்நாத் யாத்திரீகர்கள் தாக்கப்பட்டனர். அமர்நாத் யாத்திரிகர்கள் செல்லும் பாதையில் குண்டுகள் வீசி தாக்கி சரமாரியாக சுட்டனர் இதனைத் தொடர்ந்து யாத்திரைக்கான பாதை அடைக்கப்பட்டது. மற்றொரு தாக்குதலில் 14 அமர்நாத் யாத்திரீகர்கள் பெண்கள் உட்பட ஈவிரக்கமின்றி ஒரு கும்பலால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.1989 முதலே அமர்நாத் யாத்திரீகர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தவாறே உள்ளன. 2007 இல் இரண்டு முறை கிரானேட் குண்டுகளுடன் இஸ்லாமிய பயங்கரவாதிகள் அமர்நாத் யாத்திரீகர்களை தாக்கினர். 2006 இல் அமர்நாத் யாத்திரீகர்கள் வரும் பேருந்து குண்டு வீசி தாக்கப்பட்டது. இப்படி யாத்ரிகர்கள் மீது நடத்தப்பட்ட பல தாக்குதல் சம்பவங்களை பட்டியலிடமுடியும். ஆனால் அ.மார்க்ஸின் வார்த்தைகளில் உள்ள உண்மையின் தன்மை இப்போது நன்றாக தெரிந்திருக்கும் என்பதால் இந்த கசப்பான சம்பவங்களின் பட்டியலை இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம்.
* ஏன் அ.மார்க்ஸ் இத்தகைய பொய்களை கூறி தேசவிரோத சக்திகளை காப்பாற்ற முன்வரவேண்டும்?
* ஏன் பாகிஸ்தானில் நிலவிய ஒரு பகிரங்கமான மத அடிப்படையிலான பாரபட்சத்தை ஏதோ நல்ல விஷயமாக பிரச்சாரம் செய்யவேண்டும்?
* ஏன் பாகிஸ்தானிய மற்றும் இதர இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் பிரச்சாரங்களை மீள்சுழற்சி செய்ய வேண்டும்?
நிச்சயமாக இது மத நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கும் விஷயமல்ல. உண்மையில் இந்திய சிறுபான்மையினருக்கு செய்யப்படக்கூடிய மிகப் பெரிய துரோகமாகும் இது. உண்மையில் அ.மார்க்ஸ் போன்றவர்கள் செய்வது உள்நாட்டு போர்களையும்ம் பிரிவினை சோகங்களையும் நோக்கி வழிநடத்தி செல்லும் சக்திகளின் மீது மக்களின் கவனம் செல்லாமலிருக்க ஜனநாயகத்தை பாசிசமாகவும் பாசிச அடிப்படைவாதத்தை முற்போக்குவாதமாகவும் காட்டும் அறிவுஜீவி செப்படி வித்தையின் மூலம், அழிவு சக்திகளுக்கு நேரமும் அங்கீகாரமும் வாங்கிக்கொடுப்பது மட்டுமே. இன்றைக்கு காஷ்மீரிலோ பிராந்திய பண்பாட்டு முகங்கள் அழிக்கப்பட்டு தூய அராபிய மேன்மைவாத இஸ்லாமிய முறையிலான ஒரு தலைமுறையே உருவாகி வருகிறது அதே நேரத்தில் பிரிவினைவாத ஜேகேஎல்எ·ப் கொடிகள் தமிழ்நாட்டின் அடிப்படைவாத அமைப்புகளால் தூக்கிப்பிடிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டுக்கென்றே ஒரு செழுமையான தனித்துவமுடைய சூ·பி-வேதாந்த ஞான மரபு உண்டு. குணங்குடி மஸ்தான் சாகிபு முதல் கீழக்கரை அத்வைத கானம் ஊடாக மதுரை பரஞ்சோதி முனிவர் வரை நீளும் அம்மரபு இன்று சவூதி ஊக்குவிப்புடன் நடத்தப்படும் வகாபியிச ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றிப் பாதுக்காக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. அ.மார்க்ஸ் போன்றவர்கள் நிஜமாகவே மானுடத்தையும் சமுதாயங்களிடையே பாலத்தையும் உருவாக்க விரும்புகிறார்களெனில் அவர் அழைக்கப்படும் இஸ்லாமிய மேடைகளில் தமிழ்நாட்டின் சூ·பி மரபு குறித்தும் அதனை மீட்க வேண்டிய அவசியம் குறித்தும் அவர்கள் மிகக் குறைந்த டெஸிபெல்களிலாவது பேச முயற்சிக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு உண்மையான மத நல்லிணக்கத்துக்காக உண்மையிலேயே உழைக்கும் ஒரு எழுத்தாளரை வசை பாடுவது அ.மார்க்ஸ¤க்கு ஏற்புடையதாக இருக்கலாம். மானுடநேயத்துக்கோ சமுதாய நல்லிணக்கத்துக்கோ அல்ல.
இங்கு அளிக்கப்பட்ட தரவுகளுக்கான ஆதாரங்கள்:
* ஜியா உல் ஹக்கின் காலத்துக்கு முன்னரே பாகிஸ்தான் இஸ்லாமிய தேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது குறித்த தரவுகள்: இஷ்தியாக் அகமது, Pakistan’s Human Rights Obligations,
* டெய்லி டைம்ஸ் பாகிஸ்தான், நவம்பர் 30 2003
* Human development Reports UNDP: 2005
* Saadia Zahidi, Laura D. Tyson, Richard Hausmann: The Global Gender Gap Report 2008
* ஜோகேந்திர நாத் மண்டலின் முழுக்கடிதமும் இணையத்தில் கிடைக்கிறது: பார்க்க http://en.wikisource.org/wiki/Resignation_letter_of_Jogendra_Nath_Mandal
* 1971 இல் பாகிஸ்தான் இராணுவம் வங்க இந்துக்களை மதரீதியாக குறிவைத்துக் கொன்றதை ஒத்துக்கொள்ளும் (ஆனால் கண்டிக்காத) இந்த பாகிஸ்தானிய இராணுவ விசாரணை ஆவணம் ஆகஸ்ட் 21 2000 தேதியிட்ட ‘இந்தியா டுடே’ இதழ் மூலம் வெளிவந்தது.
* பாகிஸ்தானிய சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் முறை குறித்த பிபிஸி செய்தி : 15 ஆகஸ்ட் 2000
* பார்க்க: எம்.பி.பந்த்ரா, Truth, realism and Kashmir, Dawn (பாகிஸ்தான்) மே 8, 2003: இக்கட்டுரை ஆசிரியர் காஷ்மீரில் நடக்கும் ‘கிளர்ச்சிகள்’ எப்படி பாகிஸ்தானிய தூண்டுதலின் பெயரில் நடக்கிறதென ஒப்புதல் வாக்குமூலமே அளிக்கிறார்.
* இந்து லாரி ஓட்டுநர்கள் காஷ்மிரில் கொல்லப்பட்டது குறித்து பிபிஸி செய்தி: 29 ஜனவரி 2000
* காஷ்மிர் இஸ்லாமிய அறிஞரின் இந்த படுகொலையை யூசூப் போடன்ஸ்கி தமது ‘Pakistan, Kashmir and the Trans-asian axis’ எனும் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
* அட்மிரல் அருண் பிரகாஷ், Crocodile Tears for Kashmir, எம்.ஜே.அக்பரின் Covert 14 நவம்பர் 2008
* 2008 இல் அமர்நாத் யாத்திரிகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: ட்ரிப்யூன் பத்திரிகை (இமாச்சல் பதிப்பு, ஜூலை 2008): The Daily Excelsior (2 ஜூலை 2008)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பால்வீதி மையத்தில் பூதக் கருந்துளை (கட்டுரை 50 பாகம் -1)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -19 << அருகில் நீ இல்லாமை !>>
- தாகூரின் கீதங்கள் – 64 வந்தனம் உனக்கு அதிபனே !
- பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்
- ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – புத்தக அறிமுகம்
- அ.மார்க்ஸின் சுவனத்தின் ஆதாரப்பிழைகள்
- நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் – புத்தக அறிமுகம்
- உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்
- உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் கருத்தரங்கம்
- ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 2
- ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 3
- ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 1
- கஜினி Vs கஜினி
- எஸ்ஸார்சி எழுதிவரும் “வேதவனம்”
- தமிழர் திருநாள் (தாயகக் கவிதைகள்) வெளியீட்டு நிகழ்வு
- கவிதை நூல் “கருவறைப் பூக்கள்” 26-01-09 ல் வெளியீடு
- தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக்கு ‘மக்கள் விருது 2008’
- அழகியலும் எதிர் அழகியலும்
- கொற்றவை படைத்த ஜெயமோகன்
- பயணக் கட்டுரைகள் ” திசைகளின் தரிசனம் “
- சென்னை புத்தகக் கண்காட்சி 2009-ல் எனிஇந்தியன்.காம்
- ஈழத்து இலக்கியம் வாழ்வும் வலியும்
- நினைவு மலர்களின் தொகுப்பு வரிசையில்…நின்று நிலைக்கும் நினைவுத் தொகுப்பு
- பெருந்துயரின் பேரலை
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865)காட்சி -2 பாகம் -7
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்திமூன்று
- தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ. சிவலிங்கனார்
- சூரியன் வருவான்
- விதி விலக்கான சில ஆச்சரிய நிகழ்வுகள்
- கோபம்—————இது ஆணுக்கு மட்டும் சொந்தமானதா?
- நினைவில் எம்.ஜி.ஆர்
- தேசபக்தி பற்றி தீராநதியில் அ மார்க்ஸ் எழுதிய கட்டுரை
- யமுனா ராஜேந்திரன் உயிர்மையில் புரிந்த அவதூறுக்கு பதில்
- பொங்கல் வாழ்த்துகள்
- பொம்மை நேசம்
- கொடுமையிது! அறக்கொலையே
- கவிதைகள்
- பிறப்பு…
- வேத வனம் விருட்சம் 19
- ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே
- சூரிய ராகம்
- உயிர்ப்பிக்கும் ஏசுநாதர்