அன்புள்ள ……… ஜெயலலிதா அவர்களுக்கு

This entry is part [part not set] of 29 in the series 20030112_Issue

ஞாநி


அன்புள்ள ……… ஜெயலலிதா அவர்களுக்கு

வணக்கம்.

மொட்டையாக மாண்புமிகு முதல்வர் என்று குறிப்பிடாமல் விளித்திருப்பதற்கு மன்னிக்கவும். இனி உங்களை மாண்புமிகு பிரதமர் என்று குறிப்பிட்டால்தான் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்குமோ என்ற சந்தேகத்தில்தான் ஒன்றுமே சொல்லாமல் விட்டுவிட்டேன். உங்களுக்குப் பிடித்தமானதைப் பூர்த்தி செய்து கொள்ளவும். கட்சிப் பொதுக்குழுவில் நீங்கள் இனி அனைத்திந்திய அரசியலில் தீவிரப் பங்கேற்று அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என்று சில ரத்தத்தின் ரத்தங்கள் பேசியதை நீங்கள் புன்முறுவலுடன் ரசித்துக்கேட்டதாகத்தெரிகிறது. உங்கள் மனசு என்னவென்று ( இன்னும் பல விஷயங்களில் தெரியாதது போல இதிலும்) தெரியவில்லை.

பிரதமர் கனவு இருந்தால் அது ஒன்றும் தப்பில்லை. மனிதர்களுக்குக் கனவுகள் முக்கியம். எனக்குக் கூட கனவுகள் உண்டு. தமிழ்நாட்டில் தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் மாற்றாக,பெரியாரைப் பின்பற்றுகிற ஒரு காங்கிரஸ் கட்சி உருவாகவேண்டும் என்று. ஆனால் நடைமுறையில் கோல்வால்கரைப் பரப்புகிற திராவிடக் கட்சிகள்தான் அதிகமாகிக் கொண்டு போகின்றன. அப்துல் கலாம் கனவு கண்டால் அது முழுக்க அணு ஆயுதங்களாக நிறைந்திருக்கிறது. கவிதை எழுதுகிறவர் கனவு காணும் இந்தியா 2020ல் கலை இலக்கியம் எதையும் காணோம்.

உங்கள் கனவில் பெரிய பெரிய நாற்காலிகளாக வரும் போலிருக்கிறது. இரட்டை நாற்காலியாக இல்லாமல் ஒற்றை நாற்காலியாக இருந்தால் மகிழ்ச்சிதான்.

தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் பிரதமர் ஆவது என்ற கனவு மிகப் பழையது. காமராஜர் பிரதமராகியிருக்க முடியும். ஆனால் அதை அவர் விரும்பாததால் வாய்க்கவில்லை. கலைஞர் கருணாநிதியும் மூப்பனாரும் ஒருவர் காலை இன்னொருவர் வாரிவிடுவதில் அக்கறையோடு இருந்ததால் இருவருக்கும் அந்த வாய்ப்பு அருகில் வந்தும் கிட்டாமல் போய் விட்டது.

இப்போது உங்கள் முறை. இப்படி ஒரு கனவை வளர்ப்பதில் உங்களை அண்டிப் பிழைக்கிற ரத்தத்தின் ரத்தங்கள் போட்டி போடுவார்கள். ஆனால் எப்படி பிரதமராவது என்று உங்களுக்கு வழி சொல்ல மாட்டார்கள். அதெல்லாம் அம்மாவுக்குத்தெரியும் என்று சொல்லித் தப்பித்துக் கொள்வார்கள்.

நீங்கள் பிரதமராவது எப்படி என்பதை இலவச ஆலோசனையாக நான் வழங்க விரும்புகிறேன். கேட்காமலே யோசனைகள் சொல்வது என் உடன்பிறந்த வியாதி.

இன்றைய நிலையில் டெல்லியில் உங்கள் செல்வாக்கு என்பது பி.ஜே.பியுடன்தான். அண்ட்டெனியோ மைய்னோ தலைவராக இருக்கும் வரை காங்கிரஸ் அருகில் கூட நீங்கள் போக முடியாது.

காங்கிரஸ் எதிர்ப்பு சக்திகளையெல்லாம் நீங்கள் தலைமை வகித்துத் திரட்ட முயற்சிக்கலாம். உங்கள் இதயதெய்வம் எம்ஜிஆர் 20 வருடங்களுக்கு முன்னால் விஜயவாடாவில் அப்படி ஒரு முயற்சி நடத்தித் தோற்றுப் போனார். ஆந்திரத்தின் சந்திரபாபு நாயுடு, கர்நாடகத்தின் தேவ கவுடா என்று நீங்கள் தெற்கே திரட்டினாலும் கேரளத்தில் கம்யூனிஸ்ட்டுகளை உங்கள் பக்கம் இழுப்பது சிரமம். வடக்கே மாயாவதியும் கிழக்கே மமதாவும் மேற்கே பால் தாக்கரேவும் உங்கள் பக்கம் வந்தாலும் போதாது.

காங்கிரஸ் எதிர்ப்பு அத்தனையையும் ஏற்கனவே பி.ஜே.பி திரட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு ஆதரவான டெல்லி சக்தியும் அதுதான். அத்வானி, ஜோஷி, மோடி,பிரமோத் மஹாஜன் எல்லாரையும் தாண்டி எப்படி அவர்கள் உங்களை பிரதமராக்க ஆதரவு கொடுப்பார்கள் ? அத்வானியை குடியரசுத்தலைவராக்கிவிட்டு நீங்கள் பிரதமராகலாம் என்று பார்த்தால், குறுக்கே நீங்களே வளர்த்துவிட்ட அப்துல் கலாம் அமர்ந்திருக்கிறாரே.

பி.ஜே.பியில் ஒருவரைப் பிரதமராக்க உதவினால், உங்களை தமிழக முதல்வராக தடையின்றி நீடிக்கச் செய்ய ரஜினி முதற்கொண்டு இல.கணேசன் வரை அத்தனை பேரின் ஆதரவும் உங்களுக்குக் கிட்டும். நீங்களே பிரதமராவதற்கு பி.ஜே.பி ஒரு போதும் உதவாது. அதன் உதவியும் இல்லாமல், காங்கிரசின் உதவியும் இல்லாமல் நீங்கள் டெல்லி அரசியலை எட்டிக் கூடப் பார்க்க முடியாது.

எனவே நீங்கள் பிரதமராவதற்கு இரண்டே வழிகள்தான் இருக்கின்றன.

முதல்வழி ராஜாஜி காலத்துக்குத் திரும்பத் தமிழ் நாட்டை அழைத்துப் போய்விடுவது. அவசரப்படாதீர்கள். குலக்கல்வித்திட்டத்தை மறுபடி கொண்டு வரச் சொல்லவில்லை. ராஜாஜி காலத்தில் சென்னை ராஜதானியின் முதலமைச்சருக்கு பிரதமர் என்று பெயர். ப்ரீமியர் என்று அழைத்தார்கள். இனி இப்போதைய தமிழ் நாட்டிலும் முதல்வரை, ப்ரீமியர் என்றுதான் அழைக்க வேண்டும் என்று லட்சுமி பிரனேஷை விட்டு ஒரு உத்தரவு போட்டால் போதும். உடனே ப்ரீமியர் ஆகிவிடலாம். இதற்கு அரசியல் சட்டத்திருத்தம் எதுவும் தேவையில்லை என்பதற்கு போதுமான ஆதாரங்களை ராம் ஜேத் மலானி முதல் குருமூர்த்தி வரை எடுத்துத் தரத் தயாராயிருப்பார்கள். கல்லூரி ப்ரின்சிபாலைக் கூட முதல்வர் என்று சொல்லுகிறார்கள்; எனவே சீஃப் மினிஸ்டரை ப்ரிமியர் என்று ஆக்கியது சரி என்று நிச்சயம் சோ கட்டுரை எழுதுவார். கவலை வேண்டாம்.

இரண்டாவது வழி இன்னும் சிறந்தது.

நீங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நிஜமாகவே அனைத்திந்திய அமைப்பாக மாற்றுவதற்காக என்று சொல்லிக் கொண்டு, பி.ஜே.பியுடன் இணைத்து விடலாம். கட்சியில் யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள். பச்சைக் கலருக்கு பதில் எல்லாவற்றையும் காவிக் கலராக மாற்றுவது தவிர வேறு பெரிய வேலை எதுவும் கிடையாது. கொள்கைப் பிரச்சினைகள் எதுவும் நிச்சயமாக இல்லை. பி.ஜே.பி கொளகைகளை அதை விட ஏற்கனவே நீங்கள் தான் சிறப்பாக நிறைவேற்றி வருகிரீர்கள் என்று ராம கோபாலன் எந்த மசூதியில் நின்றும் சத்தியம் செய்வார்.

நீங்களே பி.ஜே.பியில் சேர்ந்துவிட்டால், அப்புறம் பிரதமராவதற்கு உள்ள தடைகள் எல்லாம் தகர்ந்து போய்விடும். காங்கிரசுக்கு பெண் பிரதமர் இருந்திருக்கிறார்- இந்திரா. அடுத்து இன்னொரு பெண்- பிரதமராவதற்கு மைய்னோவும் பிரியங்காவும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பி.ஜே.பியில் பெண்- பிரதமர் வேட்பாளராக நிறுத்தக் கூட ஆள் கிடையாது.சுஷ்மா ஸ்வராஜ் எல்லாம் உங்கள் முன்னால் ஜுஜூபி. ஒரு வளர்மதி லெவலுக்குக் கூட வரமாட்டார்கள். கல்யாணமாகாத ஆம்பளைங்க பார்ட்டி அது. மோடியை ஓரங்கட்டவும் இதுவே சரியான உத்தி.

நீங்கள்தான் பி.ஜே.பியின் பிரதமர் வேட்பாளர் என்றால் லாலு பிரசாத் கூட பி.ஜே.பியை ஆதரிப்பார். மாயாவதியையும் மம்தாவையும் துணைப் பிரதமர்களாக்குகிறேன் என்று நீங்கள் அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தால் போதும். காங்கிரஸ் எதிர்ப்புதான் தன் ஒரே அரசியல் என்ற நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கும் வேறு வழியில்லாமல் நீங்கள் இருக்கும் பி.ஜே.பியைத்தான் ஆதரிக்க வேண்டி வரும்.

இரண்டு வழிகளில் மிகச் சிறந்தது இரண்டாவது வழிதான். ஏனென்றால் அதில் ஒரு கல்லில் உங்களுக்கு இரண்டு, இல்லையில்லை மூன்று மாங்காய்கள். ஒன்று உங்களுக்கு பிரதமர் பதவி. இரண்டாவது உங்கள் உடன்பிறவா சகோதரிக்குத் தமிழக முதல்வர் வாய்ப்பு. ( தயவுசெய்து மறுபடியும் ஓ.பன்னீர்செல்வத்தை உட்காரவைக்காதீர்கள். ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டரெல்லாம் மூட வேண்டி வருமளவுக்கு ‘போர் ‘ அவர்.)

மூன்றாவது மாங்காய். உங்கள் நிரந்தர எதிரி கருணாநிதியை விஞ்சிய சாதனை செய்யும் வாய்ப்பு. அவரால் அதிக பட்சம் தமிழகத்தில் தான் முதல்வராகவும் டெல்லியில் மருமகனை அமைச்சராகவும்தான் ஆக்க முடிந்தது. நீங்கள் இங்கே முதல்வரும் நானே, அங்கே பிரதமரும் நானே என்று ஒரு படி மேலே போய்விடலாம்.

உடனடியாக ஆஸ்தான ஜோசியர்களை எல்லாம் வரவழைத்து நல்ல நேரம் பார்த்து அ.தி.மு.கவை பி.ஜே.பியுடன் இணைத்துவிடுங்கள்.

என் இந்த சூப்பர் யோசனைக்கு எனக்கு எந்த ஃபீஸும் தரவேண்டாம். ஆட்டோ அனுப்பிவைக்காமல் இருந்தால் போதும். இன்னும் நிறைய பேருக்கு யோசனை சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.

அன்புடன்

ஞாநி

***

dheemtharikida@hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி