அன்புள்ள தோழிக்கு….

This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue

ஆ. மணவழகன்


ஐந்து பைசா பத்து பைசா
அடுக்குப் பானையில் மறைத்துச் சேர்த்ததை
ஆசை ஆசையால் நீ சொன்ன
அந்த நாள் ஞாபகம் … சுகமா ?

ஓடிப்பிடிச்சி விளையாட
ஒரு கல் செய்த சதி
‘அழகுக்காக பொக்கையான ‘
அந்த ‘முன்பல் ‘ சுகமா ?

கால்தடுக்கி விழுந்ததாக
கதை கதையாய் நீ சொன்னாய்
‘நெஞ்சை அள்ளும் நெற்றித் தழும்பு
நேற்று கூட கனவில் ‘அது சுகமா ‘ ?

நீ சொல்லி நான் அறிந்த அனைத்தும் சுகமா ?
நீ சொல்லாமல் நானறிந்த,
‘கடற்கரை ‘ காற்றும்! ‘கனடா ‘ நண்பரும்!
காதருகே ‘டா ‘ போட்டு – உன்
காதலைப் பெற்ற அன்பரும்
அழகே சுகமா ?

எதை எதையோ கிறுக்கி
கவிதை என்று நான் நீட்ட,
காதலாய் படித்து கருத்தைச் சொன்ன நினைவு
கடுகளவு இருந்தாலும் அதுவும் சுகமா ?

சமைத்தது முதல் நீ சமைந்தது வரை
சரம் சரமாய் சொல்வாயே… ? ? ? ?
என் ‘விழி தேடும் நேரமும் ‘
உன் ‘வழி மாறும் நேரமும் ‘
உள்ளூர சுகமா ?

ஏதோ சொல்லவந்தேன், இம்ம்,

மெய்மையை மறந்து, பொய்மையில் உழன்று,
நடந்ததை மறந்து, நடப்பதை மறைத்து நாடகமாடும்
உன் உலகம் வேறு!

இதயத்தில் நட்புகொண்டால்
இறக்கும் வரை நினைத்திருக்கும்
என் உலகம் வேறு!

ஆதலால்…. அன்பே…

வழிமாறிய உன் பாதை
என் விழிக்குத் தெரியவேண்டாம்…!
இனிமையான உன் நினைவு – என்
இதயத்தில் மாறவேண்டாம்…!

மறுபிறப்பு என்பதனை மனதளவில் ஏற்பதில்லை!
மறுத்தும் திணிக்கப்பட்டால்…
மனிதராக வேண்டாமென்ிறு
மன்றாடி கேட்டுக்கொள்வோம்!

அலைகடலாய்… அழகு சிலையாய்…
மழை முகிலாய்… மார்கழி பனியாய்…
இளந்தென்றலாய்… இனிக்கும் சுவையாய்…
வெளிளி நிலவாய்… வெயிலிற்கு நிழலாய்…

ஏதாவதொன்றாய் பிறப்போம்
எவ்வளோ பேசவேண்டும்
என்னுள்ளும் ஆசையுண்டு
எல்லாமும் பேசித்தீர்ப்போம்…!

அதுவரையில் ….
எங்கேயோ போகிறேன்…
என்றாவது உன் முகம் காண்பேன் என்ற நம்பிக்கையில்…!

a_manavazhahan@hotmail.com

Series Navigation

ஆ. மணவழகன்

ஆ. மணவழகன்