அன்புள்ள ஆசிரியருக்கு

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

ஸிந்துஜா


அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம். எனக்கு உங்களைக் கண்டால் பொறாமையாக இருக்கிறது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. நானும், கடந்த ஒரு வருஷமாக, உங்கள் தமிழ் மாத இலக்கிய இதழைப் படித்து வருகிறேன். எந்த ஒரு செயலையும், உடனுக்குடன் பரிசீலித்து முடிவு கட்டுவது என்பது என் வழக்கத்துக்கு விரோதமானது. ‘கிவ் தெம் எ லாங் ரோப்’ என்பது எனக்கு மிகவும் பிடித்த வாசகம். எதற்காக இதையெல்லாம் கதைக்கிறான் என்று உங்களுக்குத் தோன்றலாம். பொறுங்கள், விஷயத்துக்கு வருகிறேன்.

முதலில் உங்கள் மீது பொறாமையாக இருக்கிறது என்றேன். ஆச்சரியமாகவும் கூட. இலக்கியப் பத்திரிகை என்றால் அது வெகு ஜனத்துக்கு விரோதம் என்பதுதானே நமக்கு வந்துள்ள பயிற்சி? அப்படியானால் தரமுள்ள எழுத்தை மாத்திரம்தானே பிரித்து எடுத்து தேர்வு செய்ய வேண்டும், பிரசுரிக்க வேண்டும்? ஆனால் நான் பார்ப்பது எல்லாம் உங்கள் நண்பர்கள் (அதில் பாதிப் பேர் உங்கள் மாத இதழின் ஆசிரியர் குழு) ‘எழுதித் தள்ளும்’ எழுத்துக்களைத்தான். இவற்றை இலக்கியத் தரம் என்று சீரியஸ் ஆக நினைத்து நீங்கள் போடுவதை நினைத்துத்தான் ஆச்சரியமாக இருக்கிறது. ‘பெரிய பத்திரிகையாக’ உங்கள் பத்திரிகையை மாற்றும் உங்கள் தொலை நோக்குப் பார்வையை கண்டு பொறாமையாகவும் இருக்கிறது.

போனவாரம் அரியாங்குப்பம் ராஜாபாதரைப் பார்த்தேன்.உங்களின் சென்ற மாத இதழில் வெளியான அவரது ‘உணர்ச்சிகரமான’ கதையைப் பற்றிப் பேச்சு வந்தது.அந்தக் கதையின் நாயகன், தனது பால்ய கால நண்பனைப் பற்றியும், இருவரும் அரியாங்குப்பம் குப்பை மேடுகளில் புளியங்கொட்டைகளை பொறுக்கி பொழுதைக் கழித்தது மட்டுமல்லாமல், பொறுக்கிய கொட்டைகளை தினமும் எண்ணி, எண்ணி, கணக்கில் சிறந்த மாணவர்களாக விளங்கியது பற்றியும் சொல்வதைச் சிறப்பாக, உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தி எழுதப்பட்ட கதை. (இந்த, ‘சிறப்பாக’ ‘உணர்ச்சிகரமாக’ என்ற பிரயோகங்கள் எல்லாம் நீங்கள் கதை வெளியான பக்கங்களில் உபயோகித்தவை) பல வருஷங்கள் கழித்து அவர்கள் ஒருவரை ஒருவர் யாரென்று தெரிந்து கொள்ளாமலே ஒரு ஓட்டலில் சந்திக்கிறார்கள். காலம் இருவரையும் தோற்றத்தில் வெகுவாக மாற்றி விட்டிருந்த போதிலும், தனக்கு எதிராக உட்கார்ந்து சாப்பாடு வரவழைத்த மனிதர், சாப்பிடும் முன்பு ஒவ்வொரு பருக்கையையும் எண்ணிப் பார்த்து பிறகு வாயில் போட்டுக் கொள்வதைப் பார்த்து,கதாநாயகன் (மீண்டும்!) உணர்ச்சி வசப்பட்டு ” நீங்க..நீங்க…நீ சோமுதானே?” என்று அடையாளம் கண்டு பிடித்து நண்பனைக் கட்டிப் பிடித்துக் கொள்ளும் கதை.

“ராஜா, இது இங்கிலீஷ் , இந்தியில எல்லாம் சினிமாவா வந்திடுச்சே!” என்று நான் கேட்டேன்.

ராஜாபாதர் ஒரு நமுட்டு சிரிப்புடன் “தமிள்ள வரலேல” என்றார்.

“இல்லியே, தமிழ்ழகூட வந்திருச்சு போல இருக்கே” என்று நான் சொன்னேன்.

நடந்து கொண்டிருந்த ராஜா நின்று விட்டார். “எப்ப?”

“ஒரு நாப்பது வருஷம் இருக்கும்” என்றேன்.

ராஜாவின் முகத்தில் மறுபடியும் சிரிப்பு தோன்றிற்று.” அதானே, ஒரு தல முறை டயம் ஆயிடுச்சே. இப்பம் இருக்கற இளைய தலைமுறைக்கு இது புது கதைதானே”

அவருடைய லாஜிக் என்னை அயர வைத்தது. நீங்களும் என்ன பண்ணுவீர்கள்? அயர்ந்துதான் இந்த இலக்கியச் செல்வத்தைத் தமிழ் இளைய சமுதாயத்துக்குத் தந்திருக்க வேண்டும் நீங்கள்.

கதைகள் இப்படி என்றால் கட்டுரைகள் இன்னும் ஒரு படி மேலே. உங்களுக்கு என்று ஒரு ஐயா ரைட்டர் கிடைத்திருக்கிறார். இப்போது என் போன்ற வாசகர்களுக்கு அவருடைய ஒரிஜினல் பெயரே மறந்து விட்டது. எல்லாருக்கும் அவர் ஐயாதான். இது அவராகவே தன்னைக் கூப்பிட்டுக் கொண்ட பெயர் இல்லை என்று நான் நம்ப விரும்புகிறேன். உங்களுடைய பொங்கல் சிறப்பு மலரில் அவர் ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார். தமிழ் நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்காக சாத்வீக முறையில் போராட்டம் நடத்தி வரும் ஒரு மாமனிதரைப் பற்றி எழுதி இருக்கிறார். கட்டாயமாக ஓவ்வொரு தமிழ்க் குழந்தையும் பள்ளி சென்று படித்தே ஆக வேண்டும், இதற்காக அரசு எல்லா விதமான வசதிகளையும் செய்து தர வேண்டும் என்கிற போராட்டம் இது. போராட்டம் நடத்தும் அறுபது வயது முதிர்ந்த சுதந்திரம் என்ற பெயருள்ள அந்த முதியவருக்கு இப் போராட்டத்தால் எந்த விதமான சுய நலனும், பயனும் இல்லை. ஆனால் ஐயா இந்த மனிதரையும், அவரது போராட்டத்தையும் தாக்கி எழுதி இருக்கிறார். ஐயா எழுப்பியிருக்கும் எதிர்ப்புக் குரல்தான் என்ன?

‘இந்தப் போராட்டத்தை சுதந்திரம் ஏன் அவருக்கு ஐந்து வயது ஆகும் போதே நடத்தவில்லை?’
‘ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்ட போது இம்மாதிரி யோசிக்காத போது , நாமே நம்மை ஆளும்போது எதற்காக இப்படி யோசிக்க வேண்டும்?’
‘ஆடோ ஷங்கர் சென்னையில் ஆட்டம் போட்ட போது சுதந்திரம் ஏன்தமிழ் நாட்டுத் தெருவில் போராட்டம் நடத்தவில்லை?’
‘தமிழ் நாட்டுத் தெருவில் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பிச்சைக் காரர்கள், உண்ண உணவின்றி, உடுக்க உடை இன்றி தவித்துக் கொண்டிருக்கும் போது, அதைக் கொஞ்சமும் கண்டுக்காமல், ஐந்து வயசுக் குழந்தைகளுக்கு போராட்டம் நடத்துவது என்ன நியாயம்?’
‘காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சைபர்கள் போட்டு ஒரு நம்பர் எழுதினாலும், அதற்குள் அடங்காத ஒரு தொகையை எடுத்து வெற்றி வாகை சூடிய ஒரு தமிழனைப் பாராட்டாது இம்மாதிரி போராட்டங்களில் ஈடுபடும் ஒரு வயதான ஆசாமியை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.’
‘கடைசியாக,கீழவெண்மணியில் ஹரிஜனங்கள் எரிக்கப் பட்ட போது, இந்திரா காந்தியின் மரணத்துக்குப் பிறகு தில்லியில் சீக்கியர்கள் சாகடிக்கப்பட்டபோது ,இந்திய பார்லிமென்ட் தாக்கப் பட்ட போது, அமெரிக்காவில் அல்கொய்டா உலக வர்த்தக கட்டிடங்களை அழித்து நிர்மூலமாக்கிய போது, மும்பையில் தீவிரவாதிகளால் மக்கள் கொல்லப்பட்ட போது, இந்த சுதந்திரம் எங்கே போனார்? ஏன் அவர் இந்த அநீதிகளை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை?’
ஐயாவின் இந்த ஆழ்ந்த, சிந்தனையைத் தூண்டும் உரத்த குரலை, மிகவும் வரவேற்று, உங்கள் பத்திரிகையில் மொத்தம் ஐந்து கடிதங்களைப் பார்த்தேன். அந்த ஐந்து பேரும் உங்கள் சந்தாதார்கள் என்று உங்கள் உதவி ஆசிரியர் காளமேகம் ஒரு நாள் என்னிடம் சொன்னார்.

உங்கள் பத்திரிகையில் வரும் கவிதைகளைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. எவ்வளவு கவிதைகள்! , எவ்வளவு கிவிதைகள்! ஒவ்வோரு இதழிலும், வரும் கவிதைகளில் பாதி, நீங்களும் உங்கள் மனைவியும் எழுதியவைதான். உங்கள் ஒன்பது வயது மகனும், ஏழு வயது மகளும் இன்னும் சில மாதங்களில் கவிதை எழுத ஆரம்பித்து விடுவார்கள் என்று காளமேகம் (உங்கள் உதவி ஆசிரியர்) கவலையுடன் சொன்னார். அவைகளும் உங்கள் இதழில் பிரசுரமானால் உங்கள் குடும்பம் இலக்கியக் குடும்பம் என்ற பெயரை அடைந்து விடும். அதனால் உங்கள் மாத இதழையும் குடும்பப் பத்திரிகை என்று மகிழ்ச்சியுடன் நீங்கள் அழைக்கலாம்.

கவிதைகளைப் பற்றிப் பேசும் போது நீங்கள் பெண் கவிகளுக்கு கொடுக்கும் இடத்தைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. அவர்கள் தங்களுடைய ,அதாவது பெண்களுடைய உடல் பற்றிய மயக்கம் இன்றி எழுதுவது, நீங்கள் கொடுக்கும் தைரியத்தினால்தான். பெண் கவியாளிகள் (போராளிகள் மாதிரி. இந்த புதிய வார்த்தையை நான் கண்டு பிடித்திருக்கிறேன்) உடல் உறுப்புக்களைப் பற்றி இருபத்தி நான்கு மணி நேரமும் சிந்தித்து வைத்திருப்பவர்கள் போல அவ்வளவு அன்யோன்யத்துடனும், சுதந்திரத்துடனும், உரிமையுடனும் எழுதுகிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். ஆண் கவிகள் இவ்வளவு வருஷங்களாக எழுதியும் இத்தகைய தேர்ச்சியைத் தம் கவிதைகளில் காண்பிக்கவில்லை. இதைப் பற்றி நீங்கள் ஒரு பட்டிமன்றம் நடத்தி ஐந்தாறு இதழ்களை நிரப்பலாம். பதினாறாம் நூற்றாண்டில் மிசிகாலோ மோபொலோ என்ற அண்டார்டிகா கவிஞர் குரங்குகள், பன்றிகள் , எருமைகள் அவரிடம் தெரிவித்த தங்கள் உடல் உறுப்புக்களைப் பற்றிய விவரங்களின் மேல் அவர் எழுதிய கவிதைகள்தாம் இன்றைய இயக்கத்திற்கு காரணம் என்று சமீபத்தில் தில்லியில் ஒரு கருத்தரங்கத்தில் தெரிவிக்கப் பட்டது இது உங்கள் கவனத்தை ஏற்கனவே வந்து அடைந்திருக்கலாம்.

உங்கள் மாத இதழின் நேர்காணல்களைப் பற்றிச் சொல்லாமல் விடுவது சாத்தியமில்லை. உங்கள் பத்திரிகையில் பேட்டி காண்பவர், மொத்த தமிழ் எழுத்து அரசர்களையும், அரசிகளையும், தன் குடும்பத்து உறவினர் போலப் பார்த்து பேட்டி காண்பது, தமிழுக்கே புதுசு. இதன் விளைவாக, இலக்கியத் தம்பி, இலக்கிய சித்தப்பா, இலக்கிய பெரியப்பா, இலக்கிய மாமா, இலக்கிய சின்னண்ணன் , இலக்கிய அத்தை , இலக்கிய அண்ணி, இலக்கிய மச்சினி, இலக்கிய சின்ன வீடு என்று ஒரே உறவினர் பட்டாளம் போங்கள். அப்புறம் உங்களுடைய இடது சாரி பிரமுகர்களின் பேட்டிகளிலும், மிக நுட்பமான சொல்லாடல்களும், கருத்தோவியங்களும் நிரம்பி வழிகின்றான. ஆழ்ந்த சிந்தனையை எதிரொலிக்கும் சமீபத்திய பேட்டியில் ஒரு இடம்:

கேள்வி : ஸார், நீங்கள் இடதுசாரிக் கண்களால் பார்த்து, இடதுசாரிக் காதுகளால் கேட்டு, இடதுசாரி மூக்கால் மூச்சு விட்டு, இடதுசாரி வாயால் பேசி, இடதுசாரி கையால் எழுதி, இடதுசாரி கால்களால், நடந்து, ஓடி வாழ்ந்து காட்டியிருக்கிறீர்கள். உங்களை எல்லோரும் இலக்கிய …. (மேற்சொன்ன உறவுகளில் ஒன்றைப் போட்டுக் கொள்ளவும்) என்று பெருமிதத்துடன் அழைக்கிறார்கள். தமிழ் சினிமாவைப் பற்றி உங்கள் கருத்து என்ன.?

பதில்: உங்களுக்கே தெரியும், இலக்கியத்தில் எனக்கு எப்போதும் மண்வாசனையில் நாட்டம் என்று. சினிமாவிலும் எனக்கு அதே நெறி முறைதான். கிராமத்து சினிமாவில் எப்போதும் மண்வாசனை இருந்து கொண்டே இருக்கிறது. கோவணம் கட்டிக்கிட்டு ஒருத்தர் நடிச்சா அதுல எவ்வளவு மண் வாசனை தெரியுது! ”

ஆகா, என்ன ஒரு தீவிர நோக்கு. என்னை மாதிரி பாமரனுக்கு அந்த சினிமாவில் கோவணம்தான் தெரிந்தது. இதே ரீதியில், சிகப்பு இண்டிகா காரில் ரதன் டாடா வந்து இறங்கினால், அவரை தோழர் என்று கட்டிப் பிடிக்கும் சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளன என்று இந்த நேர்காணல் மூலம் தெரிந்து கொண்டேன்.

கடைசியாக உங்கள் இதழில் வரும் புத்தக விமர்சனங்கள் பற்றி சொல்ல விட்டால் அது முறை அல்ல. சாதாரணமாக நம் ஊரில் ‘விமர்சனம் என்றால் விமர்சனம்தான்’ என்று கூறும் ஆளைப், போட்டுப் பார்த்து விடுவார்கள். இதை நானே கண் கூடாகப் பார்த்திருக்கிறேன். நீங்கள் பெரிய ஆட்களை (அதாவது நீங்கள் பெரிய ஆட்கள் என்று நினைப்பவர்களை)விட்டு புத்தகத்தை விமரிசனம் செய்யச் சொல்கிறீர்கள். இது ஒன்றும் தப்பான விஷயமில்லை. ஆனால் அந்த விமரிசனம் எப்படி இருக்கிறது.? ஆண்டிப்பட்டியிலிருந்து கவிதை எழுதி, பிரம்மப் பிரயத்தனம் செய்து அதைப் புத்தகமாகக் கொண்டு வருகிறான். அக் கவிதைகளில் உங்கள் விமர்சகர், சிக்மண்ட் பிராய்டை, கார்ல் ஜங்கை,ஆல்பிரெட் அட்லரை தேடுகிறார். அதற்கு அப்புறம், கீட்சைக் கூப்பிடுகிறார். எமிலி டிக்கின்சன் நாலு பாராவை அடைத்துக் கொள்கிறாள்.அப்புறம் லோகல் கவிஞர், கலைஞர்கள் வேறு இந்த விமரிசகரிடமிருந்து மாலை போட்டுக் கொள்ள வேண்டும். இந்த ரகளையில், கவிதை எழுதிய கவியை யாரும் ஞாபகம் வைத்துக் கொள்கிற மாதிரி தெரியவில்லை. விமார்சனத்தைப் படித்த களைப்பில் நமக்கு விமரிசகரிடம் கேட்கத் தோன்றும் கேள்வி: ‘ஆயிற்று, இவ்வளவு பெரிய மகா ஜனங்களும் சொன்னது இருக்கட்டும் , உன்னோட விமரிசனம் என்ன ஐயா? அல்லது அம்மா?’

உங்கள் பத்திரிகை மேலும் நன்றாக வர வேண்டும் என்று ஆதங்கப் படுபவர்களில் நானும் ஒருவன். அதனால் வெளிப்படையாக இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். இக் கடிதத்தை உங்களால் உங்கள் பத்திரிகையில் பிரசுரிக்க முடியாது என்பதை நான் அறிவேன்.

அன்புடன்

ஜே.கே. சத்திய மூர்த்தி
.
கடிதத்தைப் படித்து முடித்த ஆசிரியர் , அதைக் கையில் வைத்துக் கொண்டு ஒரு நிமிஷம் யோசித்தார். ‘நல்லாத்தான் எளுதறான். ஆனா என்ன, ஒரே வெசவு. இந்த திறமைய ஒரு கதையோ, நாவலோ எளுத உபயோகிச்சான்னா, எவ்வளவு நல்லா இருக்கும்!” என்று நொந்து கொண்டார். “சத்தியமூர்த்திக்கும் இப்ப அறுபது அறுபத்தஞ்சு வயசு இருக்காது?” என்று தன்னையே கேட்டுக் கொண்டார்.

பிறகு அவருக்கு அருகாமையில் இருக்கும் பீரோவைத் திறந்து அங்கிருந்த இரண்டு கோப்புக்களை கையில் எடுத்தார். மஞ்சள் வண்ணத்திலிருந்த கோப்பில் ‘காலஞ் சென்றவர்கள்’ என்று தலைப்பிட்டிருந்தது. பிரித்துப் பார்த்தார். சமீபத்தில் காலமான எழுத்தாளர்களைப் பற்றிய பத்திரிகை துண்டுகள், புகைப்படங்கள் ஆகியவை அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. மற்றொரு கோப்பு சிவப்பு வண்ணத்தில் ‘முது பெரும் படைப்பாளிகள்’ என்று தலைப்பைத் தாங்கி இருந்தது. ஆசிரியர் அதைப் பிரித்துப் பார்த்தார். இன்னும் உயிரோடு இருக்கின்ற வயதான எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்களுடனும், புகைப்படங்களுடனும் அந்தக் கோப்பு நிறைய தாள்களை அடக்கிக் கொண்டிருந்தது. கையில் இருந்த கடிதத்தை மீண்டும் ஒரு முறை ஆசிரியர் பார்த்தார். ‘வேணுங்கிற சமயத்தில எடிட் பண்ணி போட்டுக்கலாம். சுவாரஸ்யமா இருக்கறபடி பாத்துக்கணும், அவ்வளவுதான்.’ என்று தனக்குள் பேசியபடி அந்தக் கடிதத்தை சிவப்புக் கோப்புக்குள் போட்டு
இரண்டி கோப்புக்களையும் பீரோவினுள் வைத்தார்.

Series Navigation