அன்புடன் இதயம் – 13 – நிலம்

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

புகாரி


குங்குமம் குழைத்த சந்தனப் பந்தாய்
தோழியரோடு ராட்டினம் ஆடும்
மங்களப் பெண்ணே நிலமெனுந் தாயே
சக்கரம் இல்லாச் சொப்பனத் தேரே

கட்டி இழுக்கும் கயிறும் இல்லை
கடந்து செல்லும் சாலை இல்லை
கையை நீட்டி வழியைச் சொல்லும்
கடமைப் பணியில் எவரும் இல்லை

சொல்லடி அழகே பொறுமைக் கிளியே
போவது எங்கே பூமிப் பெண்ணே
ஆயிரமாயிரம் கோள்கள் இங்கே
ஆயினும் நீதான் கர்ப்பப் பையே

எத்தனை கோடி எத்துணைக் காலம்
எறும்பாய் புழுவாய் மனிதப் பிறப்பாய்
எல்லா உயிர்க்கும் அன்னை நீதான்
அண்டம் மீதில் அட்சயக் கருப்பை

கனவுகள் தொற்றி காற்றினில் ஏறலாம்
கற்பனை பிடித்து வானிலே ஆடலாம்
காலடி மட்டும் எங்கே வைப்பேன்
கருணைத் தாயே உன்னில் தானே

பேரிடி வந்து இடுப்பினில் இறங்க
பிள்ளைகள் ஈனும் மெல்லிய பெண்மை
மீண்டும் பிறக்கும் வல்லமை கொள்வது
மசக்கையில் உன்னை உண்பதால் தானே

காற்றின் சீற்றம் கடலை உசுப்பும்
புயலெனும் பேயும் உன்னை ஆட்டும்
கோப நெருப்பும் கொதித்துக் கிளம்பும்
உன்னுடல் கிழித்துப் புண்கள் சேர்க்கும்

வானம் கூட வம்பாய் உன்மேல்
காயம் ஆக்கும் கற்கள் வீசும்
தாயே நீயோ சகிப்பின் எல்லை
உயிர்கள் காக்கப் பொறுப்பாய் தொல்லை

உன்னில் இருந்தே உயிர்கள் பிறப்பு
உன்னைச் சேரவே ஒருநாள் இறப்பு
விண்ணில் ஏறும் மேகம் கூட
உன்னில் வாழ உனக்குள் குதிக்கும்

உன்னில் தோன்றி உன்னில் தவழ்ந்து
உன்னில் வாழ்ந்து உனக்குள் மாயும்
ஊனும் உயிரும் உன்றன் பிள்ளை
உயிர்கள் இன்றி ஒன்றும் இல்லை

*

அன்புடன் புகாரி
buhari2000@hotmail.com

Series Navigation

புகாரி

புகாரி