அனிச்சமடி சிறு இதயம்

This entry is part [part not set] of 31 in the series 20020330_Issue

ஆ மணவழகன்


உன்
நினைவுப் பாதையில்
நித்திரையைத் தொலைத்து விட்டு
வந்த நான்..

உன்
சுட்டுவிரல் சுண்டிய
கண்ணீர்த் துளியில் தான்
இன்னும் தத்தளித்துக்
கொண்டிருக்கிறேன்;

எல்லோரும் என்னை
நாத்திகன் என்கிறார்கள்,
அவர்களுக்கெங்கே தெரியப் போகிறது,

என்
இதயக் கோயிலில்
நீ
பூசிக்கப் படுகிறாய் என்பது;

நினைவு தப்பினால்,
நின்று யோசிக்கலாம்,
கனவு தப்பினால்,
காத்திருக்கவா முடியும்;

என் நினைவுகூட
உன்னுள்
செல்லரித்துதான் போயிருக்குமோ ?

குருதி அணுக்களை மொத்தமாய்
குத்தகைக்கு எடுத்தவளே,
குருவி கூடு போலத்தான் காதலாமே!

பார்த்துப் பார்த்துக்
கட்டியதை,
பட்டென்று
கலைத்துவிட்டாயே;

உன்னால்
காதலுக்கு
கவுரவக் குறைச்சல்
வருமோ என்றுதான்
உனக்கும்
சேர்த்தே நான்
காதலித்துக் கொண்டிருக்கிறேன்!
இன்னும்…

Series Navigation