அடையாளங்களை விட்டுச்செல்லுதல்

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

எஸ். ஷங்கரநாராயணன்>>>
அறிவிற் சிறந்த இந்த அவைக்குத் தலைவணங்குகிறேன். எழுத்தாளன் என்கிற அடையாளத்துடன் உங்கள்முன் நிற்க கெளரவப்படுகிறேன். எழுத்து என்று ருசி தட்டியபின் இதுமாதிரியல்லாது வேறு எப்படியும் என் வாழ்க்கை நிறைவுகொள்ளாது என்கிற பிரமை வந்திருக்கிறது. அது நல்ல விஷயமா, நல்ல விஷயம்தானா தெரியவில்லை.
சில நல்ல கதைகள் தந்திருக்கிற திருப்தி எனக்கு உண்டு.
எப்படி எழுத வந்தேன், என நினைக்க ஆச்சர்யம். எப்படியும் எழுத வந்திருப்பேன் என்றுதான் இப்போது தோன்றுகிறது. வாலிபப் பருவத்தில் சதா கலகலப்பாக நடமாட உற்சாகம் கொண்டவன். குழு மத்தியில் என் அடையாளம் பேணுவதில் கவனம் மிகுந்தவன். கிளர்ச்சியும் கனவும் மிக்க இளமைப் பருவம். எதையிட்டும் ஒரு தெனாவெட்டு, அ, என்ற அலட்சியம் ஒருவேளை எனக்கு இருந்திருக்கும் என்று தோணுகிறது. ஓர் அலட்சிய பாவத்துடனேயே, ஆனால் உள்கவனம் இருந்திருக்க வேணும், என்று இப்போது நினைக்கிறேன், நான் இந்தப் படைப்புத் தொழிலைக் கையில் எடுத்தேன். கல்லூரி மாணவனுக்கு வாழ்க்கை பற்றி எவ்வளவு தெரிந்திருக்கும்? எனக்கு அதில் பாதிகூட அறிவில் தட்டியிருக்குமா அறியேன். எனினும் தளரா ஊக்கம், என்னிடம் இருந்த ஒரு நடையம்சம், எதையும் சுவாரஸ்யமாய்ச் சொல்கிற முயற்சி… எழுத்து வாசிக்க சிக்கலற்று இருக்க வேண்டியது கட்டாயம் என்றுதான் இப்போதும் நம்புகிறேன்.
சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு பேட்டி. நான், சா. கந்தசாமி மற்றும் ஒரு மாதநாவல் புகழ் அம்மணி – பேர் வேணாம். எங்களது முதல் படைப்பு பற்றி நாங்கள் பேச, வாரம் ஒரு பேட்டி என ஒளிபரப்ப வேண்டும். எனது பேட்டி இவ்வாறு அமைகிறது –
என் முதல் படைப்பா? அதை நான் எழுதியதற்கு வெட்கப்படுகிறேன். அதை நான் மறக்கவே விரும்புகிறேன். அது அத்தனை சொல்லுந்தரமாய் இல்லை. இருந்திருந்தால் நான் தொடர்ந்து எழுத வந்திருக்கவே மாட்டேனோ என்னவோ? அது சிறப்பாக அமையாததில், ஆ இப்போது நான் உங்கள் முன் எழுத்தாளனாக நிற்கிறேன். ஒரு கட்டிமுடித்த கட்டடத்தில் எந்தச் செங்கல் முதலில் வைத்தது, என்கிறாப்போல திகைக்க வைக்கிற கேள்வியாய் இது இருக்கிறது. என் முதல்படைப்பே மோசம் என்றாகிறபோது, அதன் சிறப்பை எப்படிச் சொல்லச் சொல்லிக் கேட்கிறீர்கள்? அதன் ஞாபகத்தில்-உள்ள வரிகள் பற்றிக் கேட்கிறீர்கள். எனது சிறந்த முதல் படைப்பு – ஆம் நீங்கள் அதற்குக் காத்திருக்கத்தான் வேணும், என்னைப் போல!…
காலை விருந்தினர், என ஜெயா டி.வி.யில் ஒரு நேர்காணல்- படைப்பில் நிஜமும் கற்பனையும் எந்தெந்த விகிதத்தில் இருக்க வேண்டும், என்று கேட்கிறார் நிருபர்.
நான் – அதெப்படிச் சொல்ல முடியும்? சிருஷ்டி ரகசியம் அது. ரசவாதம் போன்ற அந்தப் பொற்கணம் தற்செயல்போல ஆனால் முழுபிரக்ஞையுடன் நிகழ்கிறது. அதுவே படைப்பாளனின் ஞானமுத்திரை. ஒரு வீர்யம்மிக்க படைப்பில் நிஜத்தையும் கற்பனையையும் பிரித்துப் பார்க்க முயல்வது என்பது, ஜன்னல் வழியே வரிக்குதிரைகளைப் பார்ப்பது போல.
அதே நிருபருக்கு மற்றொரு பதில் –
ஒரு நல்ல படைப்பு, மின்கசியும் நீரொழுகும் வீடு போல இருக்க வேண்டும். அதை எங்கு தொட்டாலும் ஷாக் அடிக்க வேண்டும்.
படுதலம் சுகுமாரன் என்கிற எழுத்தாளரின் ஒரு நூல் – கொக்கு, சிறுகதைத் தொகுதி – வெளியீடு. மனுசர் பிளட்கான்சரில் அவதிப்பட்டு, நல்ல விஷயம், இப்போது உடல் தேறிவருகிறாப் போலிருக்கிறது. மேடையில் பெரிய எழுத்தாளர் கூட்டம், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, திருப்பூர் கிருஷ்ணன், நக்கீரன் கோபால், இதயம் பேசுகிறது ஆசிரியர் முருகன், முதல் பிரதி பெற்றுக் கொண்டவர் எம்.எல்.ஏ. சைதை துரைசாமி. நட்சத்திரக் கூட்டம். என் கதைகள்பால் பிரியங் கொண்டவர் படுதலம் சுகுமாரன். நானும் பேசப் போயிருந்தேன்.
”எல்லாரும் வெள்ளிக்கரண்டிக் காரர்கள். கார், தேர் மற்றும் பெரும் வாகனங்கள் சுமந்து வந்து சேர்ந்திருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் சுகுமாரன் என்னையும் பேச அழைத்திருக்கிறார். அந்த அன்புக்கு நன்றி. நான் சைக்கிள்காரன். என்றாலும், இந்த ராஜபாட்டையில் யானைகளும், தேர்களும் வந்தாலும், ஒரு டிரா·பிக் சிக்னலில், நான் இவர்களை சட்டென முந்திச் சென்று நின்றுவிடுவேன்!” (பிறகு கொக்கு தொகுதி பற்றியும் பேசினேன், என்று வையுங்கள்!)
கலைமகள் லலிதா ஜுவல்லரி சிறப்புச் சிறுகதை – ஜா தீ – பரிசளிப்பு விழா. மாதம் ஒரு கதை வீதம், 12 சிறந்த எழுத்தாளர்கள் மேடையில் – சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, தேவிபாலா, ஆண்டாள் பிரியதர்ஷினி, ராஜேஷ்குமார், பி.சி.கணேசன்… மற்றும் பலர். கலைமகளின் ‘கண்ணன்’ இதழில் குழந்தைக்கதைகள் எழுதியிருப்பதாக சுபா சந்தோஷித்தார். சுஜாதா கலைமகளின் மேல் தன் மரியாதையையும் கி.வா.ஜ. பற்றியும் நெகிழ்ந்தார். என் முறை வந்தபோது, ஒரு நிகழ்ச்சியை நான் சொல்லியாக வேண்டியிருந்தது.
நான் கதை எழுத வந்தது, என் வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை. படிக்கிற காலத்தில் எழுதவாவது, என்கிற சராசரி பயம் என் குடும்பத்தில், குறிப்பாக அம்மாவுக்கு உண்டு. நான் மடுபெருத்த காட்டெருமை, எங்காவது உரசியாவது என் தினவைத் தணித்துக் கொள்ளாமல் முடியாது என்று அலைகிறவன். நான் எழுத்தாளன் ஆகிவிட்டேன். வந்தபோது இந்தத் தமிழ்ப் பத்திரிகை உலகம் என்னை இருகரம் நீட்டி வரவேற்றதை, இருகரங் கூப்பி வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆக, நான் பிரபலமான எழுத்தாளன், கல்லூரி படிக்கையிலேயே ஒரே வாரம் பதிமூன்று கதைகள் எனக்கு பத்திரிகைகளில் போட்டிபோட்டுக்கொண்டு வெளிவரும். ஒரே வருடம் எட்டு ஒன்பது தீபாவளி மலர்களில் எழுதுவேன். மதுரையில் இருந்து, எழுதியனுப்பிய ஒரே வாரத்தில் அச்சில் பார்ப்பேன் கதைகளை. அப்போதெல்லாம் தபால்கள் ஒரேநாளில் சென்னை வந்தடைந்துவிடும். அதையும் சொல்ல வேணும்.
என் அம்மா என்னை எழுத்தாளன் என ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஆகிவிட்டது.
அம்மா சொன்னாள் – பத்திரிகை என்றால் தமிழின் தரமான ஒரே இதழ், கலைமகள். அதில் நீ எழுதினால்தான் நீ எழுத்தாளன்.
நான் அம்மாவிடம் சொன்னேன் – நீ சொல்வதை நான் மறுக்கப் போவதில்லை அம்மா. ஆனால் நான் கலைமகளில் எழுதப் போவதில்லை! – உன் மகனை எழுத்தாளன் என அங்கீகரித்து, அவர்களே என்னிடம் ஒருநாள் கதை கேட்கப் போகிறார்கள், அன்றே என் முதல் கதை கலைமகளில் வெளிவரும், என்று சொன்னேன். இதோ சிறப்புச் சிறுகதை வாய்ப்பு, கலைமகளில் இருந்து வந்து, எல்லாரும் ஜா தீ கதையை உச்சிமுகர்கிறார்கள். இந்தப் பாராட்டும், இந்த தங்க டாலரும் என் அம்மாவுக்கே சமர்ப்பணம்!
அதேபோல கல்லூரியில் ஒரு படித்த வாசகக் கூட்டம், என்னை கணையாழியில் எழுதவேண்டும், என்று அழுத்திச் சொன்னார்கள். நான் எழுதிய ‘ம ற தி’ சிறுகதை, கணையாழியில் என் முதல் சிறுகதை, உடனே சிறந்த மாதச்சிறுகதை என இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது. மிகக் குறைவாகவே நான் கணையாழியில் எழுதினாலும் என்னை நிறையப் பேர் கணையாழி எழுத்தாளன் என்றே சொல்கிறார்கள். சிலாள் விஜய், விக்ரம் என்று பின்னணியில் வைத்து, கூடநின்று ·போட்டோ எடுத்துக் கொள்வான். அதுபோல ஆகிவிட்டது.
கணையாழி என் கைக்குப்பெரிய மோதிரம். பிரிய மோதிரம்.
கணையாழி என்னை மிகவும் கெளரவப் படுத்தியதை மறுக்க முடியாது. விஷ்ணுபுரம், ஜெயமோகனின் நாவலுக்கு முதல் எதிர்விமர்சனம் நான் எழுதியதை அது பிரசுரித்தது. தலைப்பு ‘ஜெயமோகன்களின் விஷ்ணுபுரம்.’ அதை வெளியிட பல முற்போக்கு, தலித்போக்கு, மதப்போக்கு இதழ்கள் எல்லாம் முன்வந்தபோதும், அது வெளிவரும் இதழ்சார்ந்து அதற்கு ஒரு பக்கச்சார்பு வந்துவிடக் கூடாது, என்பதில் நான் கவனங் கொள்ள வேண்டியிருந்தது. அவ்வகையில் நான் கணையாழியைத் தேர்ந்தெடுத்தேன்.
கணையாழிக்கு நன்றி சொல்ல இன்னொரு விஷயமும் உண்டு. கணையாழி சின்ன அளவில் உருமாற்றம் பெற்றபோது முதல் இதழில் நான் ”வெ ள் ளை க் கா க் கை க ள்” எழுதினேன். சர்ரியலிசக் கதை. அதைக் கணையாழி வெளியிட்டபோது, காலத்தை வென்று நிற்கும் இக்கதை, என மேற்குறிப்பிட்டு வெளியிட்டதை எப்படி மறக்க முடியும்? விட்டல்ராவ் தொகுத்த வேறொரு சிறுகதைத் திரட்டிலும் அது பங்களிப்பு கண்டது நல்ல விஷயம்.
எழுத்தாளனுக்கு இந்த அங்கீகாரம்லாம் வேணுமா தெரியவில்லை. இதில்லாட்டி அவன் சோர்ந்து விடுவானோ என்னமோ? ஆனால் எனக்கு நிறைய நிறையக் கிடைத்தது என்றுதான் நினைக்கிறேன். அல்லது தோல்விகளைக் கண்டுகொள்ளாத மனப்பாங்கு, அது இருக்கலாம் என்னிடம்.
எந்தப் பெருவெற்றிக்கும் தகுதியாய்த் தயாராய் நிற்றல், என் வேலை இதுவே, என்று இயங்கிக் கொண்டிருக்கவே நான் விரும்புகிறேன்.
ஒரு பத்திரிகை கதை கேட்டால் உடனே நான் எழுச்சியுறுகிறேன். அந்த இதழுக்காக என நான் யோசிக்கிறதேயில்லை. எல்லா இதழ்களும் சம அந்தஸ்துள்ளவையே, அது சிற்றிதழா, பேரிதழா என்பது என் நினைவுக்கு வராது. அதேசமயம், சிற்றிதழ்த் தரத்தில் வணிக இதழ்கள் என் கதைகளுக்கு இடம் அளித்து வந்ததை நான் மகிழ்ச்சியோடு குறிப்பிடுவேன். எல்லாருக்கும் இது வாய்க்கும் என்று சொல்ல முடியாது. அந்தப் படைப்பில் என் தனி முத்திரை கட்டாயம் இருக்கும். தமிழக அரசு பரிசு பெறும்போது கூட, என் கதைத் தொகுதியின் தலைப்பில், ‘உயிரைச் சேமித்து வைக்கிறேன்’, கலைஞர் உட்பட எல்லாரும் புன்னகைத்தார்கள். பாரத ஸ்டேட் வங்கியில் இருமுறை பரிசுகள் – முதல் தொகுதி ‘·பெப்ருவரி – 30’ , இரண்டாவது ‘வசீகரப் பொய்கள்.’ சிறு மை உதறலிலும் என் அடையாளம் பேண வேண்டும் எனக்கு.
என் முதல் வாசகர்கடிதம், முதல் நகைச்சுவைத் துணுக்கு, முதல் சிறுகதை, முதல் குறுநாவல், முதல் நாவல்…. எல்லாமே சிரமமே இல்லாமல் பிரசுரங் கண்டன.
என் முதல் நாவல், நான் பி.எஸ்ஸி. படித்த அதே பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.க்குப் பாடமாகியிருந்தது. இதற்கு முன் நியூட்டனுக்குதான் அது நிகழ்ந்ததாகச் சொல்வார்கள். இளங்கலை வாசிக்கையில் அவர் ‘Calculus’ கண்டுபிடித்தார். உடனே அது பல்கலைக்கழகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவரே போய்ப் பாடம் நடத்தினாராம்!
எழுத்தில் என் பங்களிப்பை ஆகவே நான் நியாயப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு பின்னாளில் ஏற்பட்டது. ஒரே வாரம் பதிமூன்று கதைகள் – எல்லாம் திடுக் திருப்பம். சுவாரஸ்ய முடிச்சுகள். அ என அசர வைக்கிற கதைகள். உன்னை ஒன்றை எதிர்பார்க்க வைத்துவிட்டு, ஏமாந்தியா என்று கைகொட்டுகிற கதைகள். ஒரு ஆண்முன்னால் நிர்வாணமாய்க் குளிக்கும் பெண். கடைசிவரி, அவனுக்குக் கண் தெரியாது!…
எல்லாம் தாண்டி நான், நல்ல வாசகனாக என்னை முன்னிறுத்திக் கொண்டு, எழுதுவதை சற்று நிறுத்திவிட்டு, நந்தனார், சற்றே விலகியிரும் பிள்ளாய், என்று நந்தியிடம் சொன்னாரே அதேபோல, நந்தி மறைப்பது நன்றன்று, என நான் ஒதுங்கி, கொஞ்ச காலம் வெறும் ஆங்கில இலக்கிய வாசிப்பில், வாசிப்பில் மட்டும் கவனஞ் செலுத்தினேன். பிறகு எனது ரெண்டாம் பிரவேசம் நிகழ்ந்தது. கி.மு., கி.பி. போல என் எழுத்தில் இரண்டு பகுதிகள் உண்டு!
அட தமிழ்ல வாசிக்க எதுவுங் கிடையாதா, என்று கேட்கிறீர்கள் இல்லையா?
அப்ப வெல்கம்காலனி அண்ணாநகரில் ·பிளாட்டில் இருந்தேன். திடுதிப்பென்று வந்து சேர்ந்தார் இளங்கோ, என்கிற கோணங்கி. ”சப்ப சப்பையா எழுதி நம்மளைக் காயடிச்சிட்¡னுகளே மாப்ள?” என்று ஆழ்ந்த பெருமூச்சு விட்டார் கோணங்கி.
அது உண்மைதான். நம்ம தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு விவரத் தெளிவுங் கிடையாது. அந்தக் காலத்தில் பத்திரிகை என்றால் விகடன், குமுதம், சுதேசமித்திரன், கல்கி, கலைமகள் என்று நாலைந்து. எதிலும் விவர அழுத்தத்துடன் கதைகள் வந்ததாகப் பார்க்க முடியாது. ஒரு மேனியா போல, விபச்சாரியை வைத்து, நீங்க யோக்கியமா என்று கேட்கிற கதைகள். சும்மா ஒரு முதிர்கன்னி சோரம் போகிறாள் என்று கதை. அவளும் உயர்ஜாதிக்காரியாய் இருப்பாள். என்ன தப்பு என்று சாவதானமாகக் கூந்தலைப் பின்தள்ளிக் கொண்டே கேட்கிறாப் போல. எழுச்சிப் படைப்புகள். பாத்திரப் படைப்பை விடுங்கள்… வாழ்க்கை அதில் துளியும் ஒட்டவில்லை.
ஓர் ஆங்கிலப் படைப்பைப் பார்த்தால் – பருவ காலங்களை அப்படியொரு ஈடுபாட்டோடு வர்ணிப்பான். பாத்திரம் எந்தச் சூழலில் வாழ்கிறதோ அதன் பின்புலத்தைத் துல்லியப் படுத்த முயல்வான். மிக எளிமையான தன்வயம் சார்ந்த பாத்திரங்களையே நம்ம எழுத்தாளர்கள் எனக்குத் தந்தார்கள். லா.ச.ரா.வின் அத்தனை கதையிலும், அத்தனை பாத்திரமும், அது பொறந்த குழந்தை என்றாலும், இனி பொறக்கப் போறதா இருந்தாலும், ஆம்பிளையா இருந்தாலும், பொம்பளையா இருந்தாலும் அது யார்? அவரேதான்! தன்முகம் காட்டாத ஒரு ஜானகிராமனை, புதுமைப்பித்தனை, ஜெயகாந்தனைக் காட்ட முடியுமா? இந்த சுயபிரக்ஞை தாண்டி, வண்ணதாசனும், பூமணியும், நாஞ்சில் நாடனும் இயங்க ஆரம்பித்தார்கள். அதில் அசோகமித்திரன், சா. கந்தசாமி வகை தனி. அவர்கள் பாத்திரங்களை ஓர் அறிவுஉருவங்களாகச் சித்தரிப்பதை அறவே தவிர்த்தார்கள் என்பது ஆச்சர்யம். காலநெருக்குதல்கள், மனப்போக்குகள் அவர்கள் செயல்பாடுகளைத் தீர்மானித்து, வெகுசன அடையாளங்களை ஆகப் பெரிய அளவில் அவர்கள் தருவித்தார்கள். என்னால் ஆகாது அப்படி. நான் அறிவெனும் கொள்ளிக்கட்டையால் அவ்வப்போது சொறிந்து கொள்வேன். குபீரென்று கதை நடுவே ஒரு கவிதைப் பாய்ச்சல், குட்டிக்கதை சொல்லுதல் என தடம் சற்று விலகுவேன் என்று தோணுகிறது.
விவர உக்கிரத்துடன் கதைசொல்லும் சித்தர் ராஜநாராயணன். கதையை குட்டிக் கதைகளுடன் கட்டியிழுத்து நகர்த்திப் போகிற சமர்த்து அவரிடம் நான் கற்றுக் கொள்ள விரும்பினேன். தமிழ் குட்டிக் கதைகளுக்குப் பிரசித்தம். நிர்மலமான வானில் நட்சத்திரங்கள், என ஒரு சிறுகதை. பிற்பாடு பாலு மகேந்திரா அதைக் குறும்படமாகவும் எடுத்தார். ‘அப்பா’ என கதைநேரத்தில் அது சன் டி.வி.யில் இடம் பெற்றது. கலப்புத் திருமணக் கதை. உள்ளே வரும் வேறுசாதிப் பெண்ணை அப்பா நிறுத்தி அவனிடம் ”இவ என்ன சாதிப்பா?” என்று கேட்பார். இந்தக் கட்டம் ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஒரு குட்டிக்கதையை எடுத்தாண்ட இடம். அவரது குட்டிக் கதை இதுதான் –
அந்தப் பொண்ணு எந்த சாதிடா?
நீங்களே சொல்லுங்க.
தெர்லடா, நீ சொல்லு!
பாத்தா தெரியலைல்ல, விட்ருங்களேம்ப்பா. சாதி எதுக்கு?
ராமகிருஷ்ண பரமஹம்சரின் மற்றொரு கதை – சபை உற்சாகத்துக்காக.
குருவே ஞானம் பெற பெற என்ன செய்ய வேண்டும்?
தினசரி கொஞ்சம் ஸ்லோகம் சொல்லி, கொஞ்சம் திராட்சைப் பழம் சாப்பிடு.
எத்தனை திராட்சைப் பழம் சாப்பிடணும் ஸ்வாமி?
எத்தனை ஸ்லோகம் சொல்லணும் என்று கேட்டிருந்தா உனக்கு ஞானம் வந்திருக்கும். திராட்சைப் பழம் பத்திக் கேட்டா, இந்த ஜென்மத்துல உனக்கு ஞானம் வராது.
சரி, விஷயம் என்னவென்றால், தமிழ் எழுத்தில் அந்த விவர ஆளுமை, authenticity, அந்தக் காலத்தில் சுபாவமாகவே இல்லை. நான் எழுதுகையில் எந்தப் புது விஷயம் சொன்னாலும், மரபின் ஒரு நீட்சிபோலவே சொல்ல முயல்வேன். ஞானக்கூத்தன் கற்றுத் தந்த பாடம் அது. மயிலுக்கு வான்கோழி, அறிஞர்களுக்கு எந்நாளும் பண்டிட்ஜிக்கள், என்பார் ஞானக்கூத்தன்.

சிவன்கோவில் கவியரங்கம்
கீழே
அறுபத்திருவர். – இது என் சிந்தனை.

சிலைகள்
அறியுமோ
கற்பூர வாசனை? – என இன்னொரு கவிதை.

மரபைத் தொட்டு, முன்னதைச் சார்ந்த ஒரு அபத்தத்தை ஒரு சீண்டலுடன் சொல்வது நீலமணிக்கு வருகிறது. தட்டுங்கள் திறக்கப்படும் என்றீர்கள், ஏன் கதவைச் சாத்தினீர்கள்? – ஏ காளி, ஏன் நாக்கை நீட்டுகிறாய், நான் என்ன டாக்டரா? – இதுவும் ஒரு நீலமணி கவிதை. காளமேகத்தில் இருந்து தனியே இப்படி ஒரு கோஷ்டி கிளம்பி வந்துகொண்டுதான் இருக்கிறது.
தற்போதெல்லாம் விவரச் செறிவு கதையிலக்கியத்தில் முக்கியம் என்ற காலம் வந்துவிட்டது. நான் முன்பு சொன்னேனே, நல்ல கதை, மின்கசிகிற பழைய வீடு, எங்கு தொட்டாலும் ஷாக் அடிக்க வேண்டும், என்று? அந்த நிலைமையை மாற்றி ஒட்டுமொத்த சீரான வாழ்க்கைத் தடத்தைப் பந்தல் போட்டாப்போல கதைகள் எழுத வந்திருக்கிறார்கள். மையப்புள்ளி நோக்கித் தீவிரப்பட்டு கதையோரங்கள் குவிகிற அழுத்தம் தேவையில்லை என்று கருதுகிறார்கள்…
தவிர வாழ்க்கை அப்படியே முழு அந்தரடி பல்டியாக மாறிக் கொண்டிருக்கிற காலம். சாப்பாடே மாறியிருக்கிறது. பெப்சி கலாச்சாரம் என்கிறார்கள். மனிதன் வேகமாக உலகமனிதனாக உருப்பெருகி வருகிறான். யூரோ என்று பொது நாணயம் வந்திருக்கிறது. கலாச்சாரங்கள் கலந்துகட்டுகின்றன. இந்நிலையில் வேர்களற்ற ஒரு இலக்கிய வடிவமே கூட சாத்தியப்படக் கூடும்தான். ஹைகூ என்கிறார்கள். தனி வடிவமாகவே அது இருக்கிறது. வெறும் முரண் அம்சம் மிக்க பழமொழிக் கூறுகள் அதில் உள்ளன, என்று எதற்கெடுத்தாலும் நாம அன்னிக்கே செஞ்சிட்டோம், என வீறாப்பு வேணாம் என்று படுகிறது.
வரிகளில் வரிகளைத் தாண்டி வாழ்க்கைப் பதிவுகள், சிந்தனைப் பதிவுகள் அல்ல, வாழ்க்கைப்பதிவுகள், ஹைகூவில் சாத்தியப் படுகிறது.

வீழ்ந்த மலர்
கிளைக்குத் திரும்புகிறது
பட்டாம்பூச்சி – என்கிற ஜப்பானியக் கவிதையோ,

சருகைக்கொண்டு
கூடுகட்டுகிறது காக்கை
காலம் தலைகுனிந்தது – என்கிற அப்துல் ரகுமானையோ எந்த முன் கவிஞனோடும் ஒப்பிட முடியாது அல்லவா? ஒருவேளை முன்கவிதையை பின்கவிதையின் முன்மாதிரி என்று வேணுமானால் சொல்லலாமா? அதுதான் விஷயம், புதிய செய்திகளுடன் மானுடம் பயணப்படக் கூடும் என்றுதான் தோணுகிறது.
எல்லாமே பாணிகள்தாம். அதனதன் சிறப்புகள் அவற்றுக்கு உண்டு, அல்லவா? அத்தோடு கதை உத்தியை, அந்தக் கருவேதானே தேர்ந்தெடுக்க முடியும்?
இப்போது ஒரு நவீனத்தன்மைக்காக என்று வம்படியாய் மாய-யதார்த்தவாதம் என்று பார்த்தார்கள். பின்நவீனத்துவம் என்று பார்த்தார்கள். அதிகார வர்க்கத்தைச் சாடுகிற முயற்சியில் யதார்த்த வாதம் படுத்துவிட்டது,.. ஆகவே உலகத்தை எழுப்பி உட்கார வைக்க வேண்டும், புது உத்திகள் தேவை, என்றார்கள். நான் அதை நம்பவில்லை. யதார்த்தத்தை மீறி எதையும் சொல்லிவிட முடியாது என்பது என் கட்சி.
திண்ணை 19 10 2007 இதழில் குற்றாலம் இலக்கியப் பட்டறை குறித்து ஜெயமோகன் ஒரு கட்டுரை தந்திருக்கிறார். அதில் அவரே தற்போது மாய-யதார்த்தவாதம், பின் நவீ¢னத்துவம் வீர்யம்இழந்துவிட்டதை, கடைவிரித்தோம் கொள்வாரில்லை, என ஆவணப்படுத்தியிருக்கிறார்.
அது வீழ்ந்ததற்கு, சரியான ஆட்களால் அது எடுத்துச் செல்லப்படாதது முக்கியக் காரணம். இன்றைய இளம் படைப்பாளர்களுக்குத் தம்காலத்துக்கு முந்தைய இலக்கியத்தின் மீது மரியாதை இல்லை. பெரியாரியக் கொள்கையில் பிடிப்பு கொண்டவர்கள், பக்தி இலக்கியம் கிட்ட வரமாட்டார்கள். திருவள்ளுவர் விட்டால் ஒரே ஹைஜம்பில் பாரதியார் வந்து விடுகிறார்கள். முன்-ஏர்த் தடத்தை, முன்னோர் தடத்தை அறிந்து கடந்து செல்லுதல் பற்றி யாரும் அக்கறைப் படவில்லை. திடுதிப்பென்று மாய-யதார்த்தவாதம், பின் நவீனத்துவம், இருத்தலியல், எதிர்கலாச்சாரம்…. ஒரே நேரத்தில் வாசகக் குழந்தையைப் பிடித்து தின்னு தின்னு என்று வாயில் அடைத்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. ஒரே நேரத்தில் காலராவுக்கும் கேன்சருக்கும் மருந்து கொடுக்கிற ஆவேசம். ஒரு கோஷ்டி செய்ததை இன்னொரு கோஷ்டி செய்யாது, புறக்கணிக்கும், நிராகரிக்கும். அடிதடி ரகளை மிகுந்த கூட்டங்கள். குடித்துவிட்டு மேடையேறிப் பிரதாபங்கள் கதைப்பது. தனித் தனியே சிறுபத்திரிகைகள், ஆட்களைத் திட்ட என்றே ஆரம்பிப்பது.
இப்போது அவை மலிவான உத்திகளாகக் கருதப்பட்டு எப்படியோ கட்டுக்குள் வந்து விட்டாப் போலத்தான் இருக்கிறது. அது இருக்கட்டும் – அரசியல் சார்ந்த கலகக் குரல் கொடுக்கலாம் என்றால் யதார்த்த வாதத்தை விட வலிமையான ஆயுதம் பூமியில் இல்லை. எதோ நாமும் எழுதினோம் என்று புண்ணைச் சொறிந்துகொள்ளும் சுகம் மாத்திரமே நவீன உத்திகளில் முடியும் என நான் நம்புகிறேன். ஆகவேதான் தலித்துகளின் குரல், ஒரு காலத்தின்கட்டாயமாக எழுந்து விரவி பரவி இந்தப் புதிய உத்தி முகாம்களை குண்டுவீசித் தகர்த்து விட்டது.
அடுத்த கட்டத்தை நோக்கிய தேக்க நிலையில் தலித்திய யதார்த்த உலகம் நிற்கிறது என்று நினைக்கிறேன். பிரச்னை பொதுவாக யார் கண்ணில் வேண்டுமானாலும் படலாம், அதில் யார்மூலம் வேணுமானாலும் வீர்யம் மிக்க படைப்புகள் எழலாம் என்ற காலம் திரும்ப அடையாளம் பெறும். காத்திருக்கலாம்.
அந்த மாய-யதார்த்தவாதம், மிகைக்கற்பனை, பின்நவீனத்துவ எழுத்துகளின் முக்கிய பலவீனம், செக்ஸ் மற்றும் வன்முறை, இந்த இரண்டு அலகுகளைத் தாண்டி அதனால் இயங்கவொண்ணாமல் போனது என்று எனக்கு ஒரு அபிப்ராயம் உண்டு. அதாவது நம்மாளுகள் அவ்வளவில் கதையை முடித்துக் கொண்டார்களோ என்னமோ? சாதாரண உடையில் பரத நாட்டியம் ஆட முடியாது. மேடையில் எடுபடாது, என்பதுபோல இந்த நவீன உத்திகளுக்கு ஆரம்பச் சிக்கலே இருக்கிறது. யதார்த்தத் தளம் பரந்து பட்டது, மிகப்பெரும் எல்லைகள் கொண்டது.
மார்க்சிய அழகியல் என்று புதிய கோட்பாடு வந்தபின் யதார்த்தம் செழுமைப்பட்டிருக்கிறது. அரங்கத்தில் துப்பாக்கி மாட்டியிருந்தால் காட்சி முடியுமுன் அது வெடிக்க வேண்டும், இல்லாட்டி துப்பாக்கி வைக்காதே, என்கிறார் அன்டன் செகாவ். நான் இதன் ஒரு பாதியை ஒத்துக் கொள்கிறேன். அந்தக் காட்சிப் பொருட்களைப் படிமங்களாகப் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு உண்டு. சினிமாவில் இந்த உத்தியை வெளுத்து வாங்குகிறார்கள் – பண்ணையாரின் ஆசைநாயகி என்றால் தொங்கவிட்ட கூண்டுக்கிளியைச் சுற்றி விட்டுக்கொண்டே அவள் வசனம் பேசுவாள்.
யதார்த்தத்தை உக்கிரப்படுத்துகிறது மார்க்சிய அழகியல். காரணங்களற்று எந்த யதார்த்தச் சித்தரிப்பும் கதையில் வேணாம் என்கிறது அது.
பாத்திரங்கள் சார்ந்த மொழியில் வாழ்வின் சிறு துண்டாக அமைவுபெறும் இன்றைய சிறுகதைகளுக்கும் இது விதிவிலக்கல்லதானே?
குற்றாலம் பதிவுகள் பட்டறையில், தற்கால இளைஞர்கள் வண்ணதாசன் பாணிக்குத் திரும்பலாமா என்று யோசிப்பதாகத் தெரிவித்திருந்தார் ஜெயமோகன். அப்டில்லாம் தீர்மானம் பண்ணி காலத்தை வளைச்சிக் கழுத்தைப் பிடிக்க முடியுமா? அப்டிக்கூட நம்பறாங்களா என்ன?
ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஒரு ஜோக்கடித்தார். ஒரு தவளை துள்ளிக் குதித்தபடி போய்க்கொண்டிருக்கும்போது ரயில்பூச்சி (மரவட்டை) ஒன்றைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு நின்றது. ”என்ன?” என்று கேட்டது மரவட்டை. ”நாலுகால் எனக்கு. பின் காலை மாத்திரம் ஊனித் தவ்வுகிறேன். வேலை முடிஞ்சிருது. நீ இத்தனை காலை எப்படி மாத்தி மாத்தி அசைச்சிப் போறே?” என்று கேட்டபடி போய்விட்டது தவளை. அதுபோனதும் மரவட்டை மிகந்த குழப்பத்துக்குள்ளாகி விட்டது. எந்தக் காலை முதலில் நகர்த்துவது என்றே அதற்குத் தெரியவில்லை!

>>>
சயான் தமிழ்ச் சங்க உரை
28 10 2007 மாலை நிகழ்ச்சி
storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்