ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 5)

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

ஆசாரகீனன்


காலனியக் கடப்புக்குப் பிறகு அதன் மேல் தட்டு மனிதர்களின் வாழ்வு நிலை பற்றி முன்னர் சொன்ன கருத்து பல முன்னாள் காலனிகளுக்குப் பொருந்தும். இதை இந்தியாவிற்கு மட்டுமானதாகக் கருதத் தேவை இல்லை. இக் கருத்தை நான்தான் முதலில் முன்வைக்கிறேன் எனக் கருதவும் இடம் இல்லை.

அய்ஜஸ் அகமது போன்ற காலனியக் கடப்பியல் கருத்தாக்க வல்லுநர்கள் இதே கருத்தை முன் வைத்து ஒரு பத்தாண்டுக்கும் மேலாயிற்று. அவர் சல்மான் ருஷ்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் அனைவரையும் ஒரு பிடி பிடிக்கிறார் என்று நினைவு. அந்தப் புத்தகத்தின் பெயர் ‘In Theory ‘.

அதற்கு முன்பே ஃபிரான்ஸ் ஃபனோன் (Franz Fanon) போன்ற காலனிய எதிர்ப்பு சிந்தனையாளர் 70-களிலும், ஹோமி பாபா [கு1] போன்ற நவீனக் கடப்பு சிந்தனையாளர்கள் 90-களிலும் இதே கருத்தை முன் வைத்து இருக்கிறார்கள். பாபா, ஃபனோனிடம் இருந்து வாங்கிய ஒரு கருத்தை தன் மையக் கருத்தாக வளர்த்தார். காலனியத்தை எதிர்கொள்ளும் காலனி மக்கள் எப்படிக் காலனி ஆட்சியாளரின் நாகரிகத்தைப் போலி செய்து, அதே நேரம் முழுதுமாக அதை உள்வாங்காமல், அன்றாடம் அத்துடன் புரசிக் கொண்டும் உறவாடிக் கொண்டும் ஒரு தெளிவற்ற நிலையில் வாழ்ந்தபடி தமது மனிதத்தைப் பாதுகாக்கின்றனர் என்று காட்டுகிறார். அதாவது ஃபனோன் போன்ற முதல் தலைமுறை காலனிய எதிர்ப்புக் கருத்தாக்கக்காரர்கள் அன்றைய அவசரம், அவசியம் கருதி சுருக்கமாக உருவாக்கிய சிந்தனைகளை, சில பத்தாண்டுகள் கழித்து இப்போது புதுக் காலனியம் உலகெங்கும் சரக்கு நுகர்வு, இறக்குமதிப் பண்பாட்டு நுகர்வு ஆகிய மாய வலைகள் மூலம் முன்னாள் காலனியின் மக்களைத் தொடர்ந்து அடித்தளத்தில் பொருத்தி வருகிறது என்பதைக் கவனிக்கும் கருத்தாக்கக்காரர்கள், உளவியல் ரீதியாகவும், நடப்பு அரசியல் விமர்சனமாகவும், பல வகைத் தளங்களிலும் மேலும் விரிவாக்கி எழுதி வருகிறார்கள். இதில் ஹோமி பாபாவும் ஒருவர். போலி செய்தல் (Mimicry) என்பது முழுதும் அடிமை மனப்பாங்குள்ளது அல்ல. வெறும் தற்காப்பு உணர்வால் இயங்குவதும் அல்ல.

அதனுள் எரிச்சலும், உளைச்சலும், எதிர்ப்பும் கூட இயங்குகின்றன என்று இழை பிரித்து நோக்குகிறார். அப்படி இல்லாது இருந்தால்தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஆனால், இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு. காலனியை ஆள்வோர், காலனியாய் ஆளப்பட்டவர் என்று இரு கூறுகள் இருப்பதாகக் கருதுகிறோம். அவை எதிரும் புதிருமானவை என்றும் கருதுகிறோம். அப்படி அல்ல என்று சொல்பவர் பாபா. இரு கூறுகளுக்கிடையில் நிறைய பரிமாற்றங்கள் உண்டு. இப் பரிமாற்றங்கள் இரு சாராரையும் மாற்றுகின்றன. இரு கூறு மனோ நிலைகளை விட இரு எல்லைகளுக்கிடையே உள்ள ஒரு மசமசப்பான பகுதியில் மிகவும் உருப்படியான விஷயங்கள் கிட்டும். அங்குதான் கலப்புக் (hybridity) கருத்தாக்கங்களின் ஆட்சி நடக்கிறது. இங்கு எளிமையான எதிரெதிர் நிலைகள் அழிந்து, ஒன்றையொன்று ஊடுருவிக் கிட்டுகின்ற நிலைகள்தான் எதிர்காலத்துக்கான பாதையைச் சுட்டுகின்றன என்கிறார். ஒரு கட்டத்தில் போலி செய்பவர்களின் கருத்தாக்கங்கள் யாருடைய கருத்துகளைப் போலி செய்கின்றனவோ, அக் கூட்டத்தின் தர்க்கத்தையே கவிழ்ப்பதாகவோ அல்லது அதன் பொய்மைகளை வெளிப்படுத்துவதாகவோ அமையலாம். ஆனால் இதையும் விட கூடுதலாகத் தாக்கம் உள்ளது, ஆளும் கூட்டங்களின் அறம் பற்றிய சொல்லாடல்களைப் பற்றிக் கொண்டு, அவற்றை நியதியாகக் கடைபிடிக்கும்படி ஆள்வோரை வற்புறுத்துவதான முறை.

காந்தியின் வழி இதுதான். பாராளுமன்ற ஜனநாயகம், கிருஸ்தவம், மேலும் மேலைப் பண்பாட்டின் நீதி முறைகள் பற்றிய சொல்லாடல்களை அவர்கள் மேலேயே திருப்பி அவற்றைத் தர்க்க ரீதியாகப் பின்பற்றுமாறு வற்புறுத்தியதனால் மேலைக் காலனியத்தின் இனவெறி, சுரண்டல், ஆட்சி செய்வதில் அவர்களுக்கிருந்த பாரபட்சம் ஆகியவற்றையும், ஆள்வதில் அவர்கள் காட்டிய ஏராளமான நெறி பிறழ்தல்களையும் ஊழல்களையும் சுட்டிக் காட்டி, ஆளும் திறமை கூட அவர்களிடம் இல்லை என்றும் காந்தியால் எளிதாகவே நிறுவ முடிந்தது. ஆளப்படுவோரின் ஒப்புதல் இல்லாத நிலையில், வெறும் அமைதியான ஒத்துழையாமை கூட அரசைக் கவிழ்க்க முடியும் என்று இதனால் தான் அவரால் நிறுவ முடிந்தது. காந்திக்கு அரசியல் ரீதியாக மிகவும் உதவியவை பிரிட்டிஷாரின் ஜனநாயக அரசின் நம்பிக்கைகளே என்று சொல்வது ஓரளவு பொருந்தும். களநிலைகளான பொருளாதாரச் சிக்கல், உலகப் போரில் பிரிட்டிஷ் அரசுக்கு ஏற்பட்ட பெரும் சேதம், வணிகத்தில் மேலாட்சி செய்ய இயலாமல் அதன் உற்பத்தித் துறை நொறுக்கப்பட்டிருந்தது, மேலும் இந்தியாவில் இந்தியரால் ஆன ராணுவம் கலகம் செய்தால் என்ன நேரும் என்ற பயம் என்று பலவகை யதார்த்தங்களில் இருந்த உறுதியற்ற தன்மையும் பிரிட்டிஷ் அரசை இந்தியாவை விட்டு நீங்குமாறு முடிவெடுக்கச் செய்தன என்பதும் இன்னொரு உண்மையே.

இதே போல அமெரிக்காவில் கறுப்பர்களின் குடி உரிமைப் போராட்டம் அமெரிக்க அரசின், குறிப்பாக ஆளும் வெள்ளையரின் ஜனநாயகம், சுதந்திரம், உலக மக்களின் ஒற்றுமை, மனித நேயம் ஆகிய கருத்தாக்கங்களின் அடிப்படைகளை உறுதியாக வற்புறுத்தி அவை கறுப்பருக்கு எட்டாமல் இருப்பது ஏன் என்ற எளிய கேள்விக்கு விடை கோரி நடத்திய அமைதிப் போராட்டமாக அமைந்தது. இதற்கு அமெரிக்கா இன்னமும் சரியான விடையைத் தர முடியாமல் திணறுகிறது. படிப்படியாக, மிகவும் தயங்கித் தயங்கி, ஆனால் தவிர்க்க இயலாத விதத்தில் கறுப்பருக்குக் குடி உரிமைகளை மேலும் மேலும் விரிவாகத் தர முயலுகிறது. 50-களில் தொடங்கிய இப் போராட்டம் இன்று வரை தொடர்வதற்கு ஒரு காரணம், யதார்த்தத்தில் இன்னமும் இன வெறி ஏதாவது ஒரு தளத்தில் இயங்கிக் கறுப்பரைப் பின் தள்ள முயல்வதுதான். ஆனால், கறுப்பரின் சமூகத் தலைவர்கள் வெள்ளையரின் மதமான கிருஸ்தவத்தை அவர்களை விடத் தீவிரமாகப் பற்றிக் கொண்டு, வெள்ளையரை அவர்களுடைய பெரும்பான்மை மதமும், பண்பாட்டின் அடித்தளமுமாக கிருஸ்தவம் இருக்கையில், அவர்கள் ஏன் மனித நேயத்தைப் பொறுத்தவரை கூட கிருஸ்தவர்களாக இருக்கவில்லை என்று கேட்பது மிகவும் பலனுள்ள எதிர்ப்பு முறையாக இருந்து வருகிறது. இதன் பலனாக மேற்கின் பல நாடுகளில் கறுப்பர்கள் அவர்களது மூதாதையரை அடிமைகளாக ஆக்கத் துணை போன ஒரு மதத்தைத் தம்முடையதாக ஏற்றுக் கொண்டு, அதில் தமது யதார்த்தத்துக்கும், நீண்ட கால இன நினைவுகளில் இருந்தும் குடும்பப் பண்பாடுகள் மூலமும் கிட்டிய பழக்க வழக்கங்களை நுழைத்துத் தமது இசையையும், உடல் இயக்க முறைகளையும் நுழைத்து அதன் வெள்ளை இனத் தன்மையை தமது கிருஸ்தவத்தில் இருந்து நீக்கி ஒரு புது வகை கிருஸ்தவத்தைப் பரப்பி வருகிறார்கள். கறுப்பரின் கிருஸ்தவம் ஆரவாரமானது, குதூகலமானது மேலும் வண்ண மயமானது என்பதை வெள்ளையர்கள் அமெரிக்காவில் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். எஜமானர்களின் பண்பாடு இப்படித்தான் கவிழ்க்கப்பட்டு, ஆளப்பட்டவர்களின் தற்காப்புக்கு மிக உதவியான வாழ்க்கை முறையாக ஆயிற்று.

காலனியாதிக்கம் முடிந்த பின் இரு பண்பாடுகளிடையே பரிமாற்றம் ஏதும் இராது. இரண்டும் அருகருகே இருந்து சுமுகமாக வாழ்வது நடக்காது. ஒன்று தான் எஞ்சும், ஆனால் எது ? என்று கேட்டார் ஃபனோன். நினைவிலிருந்தோ, கற்பனையாகவோ, துகளாகக் கிட்டும் சான்றுகளில் இருந்தோ ஒரு பண்டைப் பண்பாட்டை எடுத்துத் திரும்பக் கட்டி, அதைப் புதுப்பித்து உயிரூட்டி வளமும், வலிவும் மிக்க ஒரு வாழும் பண்பாடாக நிறுத்தச் செய்யப்படும் முயற்சிகள் பலிக்காது. காலனியம் அத்தகைய மீட்டெடுப்பு முயற்சிகளை முன்னமே தோற்கடித்து விட்டது. ஏனெனில், காலனியத்தின் கருத்தாக்கங்கள் ஆழமாகவே ஊடுருவி இருக்கும் என்று எழுதும் ஃபனோன், காலனியாதிக்கத்துப் பண்பாட்டில் இருந்து தப்ப இரு வழிகள் உண்டு என்று சொல்கிறார்.

ஒன்று – உலக மனித குலத்தோடு தாம் இணைவதாக அறிவித்து, அப்படியொரு அடையாளத்தைத் தம்மிடையே வளர்த்து, உலக மனித குல ஒற்றுமைக்குப் பாடுபடும் மக்களாக, முன்னணியாக வெளிவருவது. இதில் காலனி ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, உலகப் பண்பாடுகளில் பலவற்றிலும் உள்ள முக்கியமான ஆக்க பூர்வமான கருத்தாக்கங்களைத் தொகுத்து ஒரு கலப்புப் பண்பாட்டைக் கட்டுவது அவசியமாகும். இது சாத்தியம் என்று ஃபனோன் கருதினாலும், உடனடியாக நடக்கக் கூடியதாகக் கருதவில்லை. நெடு நாளைக்கு மேற்கொள்ள வேண்டிய ஒரு செயல் திட்டமாகக் கருதினார்.

இரண்டு – காலனி ஆட்சியாளரின் பண்பாட்டில் இருந்து உதவக் கூடியதை, பொருத்தமானதை எடுத்துத் தமது யதார்த்த வாழ்வின் அவசியங்களுக்கு ஏற்ப உருமாற்றி, காலனிய சக்தி ஒழிக்கப்பட்டு விட்டதால், காலனிப் பிரஜை காணாமல் போய்விட்டதால், அதன் கொடிய தன்மையை இழந்த நிலையில் உள்ளதாக அதைக் கருதிக் கையாண்டு தம்மை மேம்படுத்த வேண்டும் என்று கருதுகிறார். அதாவது காலனி ஆட்சியாளருக்கு நிகராகத் தம்மை நிறுவவும், உயர்த்தவும் கை வசம் உள்ள ஒரு பண்பாட்டையே பயன்படுத்தாலாம். அதைத் தமது குறிக்கோள்களுக்கு வளைக்குமளவு முன்னாள் காலனியப் பிரஜைகளுக்குப் படைப்புத் திறனும், எதிர்ப்புணர்வும் இருக்கும். அவற்றை மங்க விடாமல் காப்பது அவசியம் என்று ஃபனோன் கருதியதாகத் தெரிகிறது. மேலே சொன்ன இரு உதாரணங்களும் இந்த வகைக் கருத்தாக்கத்தின் வாழும் நிரூபணங்களாக இருப்பதாக நான் கருதுகிறேன். இவை இரண்டுமே ஃபனோனின் அபிமான முறையான புரட்சிப் போராட்டங்கள் அல்ல, வன்முறைப் போராட்டங்கள் அல்ல. ஆனால் தன்னளவில் அவை புரட்சிகள்தாம். பண்பாட்டுப் புரட்சிகள், ரத்தக் களறியான ராணுவ முறைப்படியான புரட்சிகள் இல்லை தான்.

இவை இந்திய, தமிழ் இடதுசாரிகளுக்கு ஏற்புடையதான உதாரணங்களாக இராது என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர்களிடம் மேலான எடுத்துக்காட்டுகள் உண்டா என்று பார்த்தால், எனக்குத் தெரிந்து இல்லை. வியத்நாம் போன்ற ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வென்ற போராட்டங்கள் கூட இன்று சந்தைப் பொருளாதாரத்துக்குத் தலை வணங்க வேண்டி இருக்கிறது. இறுதியில் வியத்நாம் ஒரு தேசியத்தின் வெற்றி, வன்முறைப் போராட்டத்தின் வெற்றியோ, வர்க்கப் போராட்டத்தின் வெற்றியோ அல்ல. இதே போல ஆப்பிரிக்காவில் இடதுசாரியினர் வன்முறை அல்லது ராணுவப் புரட்சி ஆகியவற்றால் பெற்ற அதிகாரம், அல்லது மார்க்சியரின் கையில் கொடுக்கப்பட்ட அதிகாரம் இறுதியில் மக்களை மேலும் பெரும் துன்பத்தில் ஆழ்த்தத்தான் செய்தது என்றுதான் காண முடிகிறது. இடதுசாரிகளுக்கு மிகவும் பிடித்தமாக இருந்த அல்ஜீரியப் புரட்சி இறுதியில் மக்களின் இஸ்லாமியப் பண்பாட்டின் முன் நிற்க முடியாமல் கடும் அடக்கு முறையைக் கையாண்டு, மக்களின் விடுதலைதான் தன் இலக்கு என்று தம்பட்டம் அடித்ததைத் தானே மறுதலித்து ராணுவ ஆட்சியாக நிற்கிறது. ஃபனோன் சொன்னதில் ஒரு பகுதி சரியே. காலனியப் பண்பாட்டில் இருந்து மீட்டெடுக்க ஒரு மரபு சார் பண்பாடு காத்திருக்கவில்லைதான். ஆனால் காலனியக் கருத்தாக்கங்களில் இருந்து பெற்ற சகிப்பற்ற தன்மையை மரபு பற்றிய ஏக்கங்களோடு சேர்த்துக் குலுக்கிக் கிட்டும் கருத்தாக்கங்கள், மேலைப் பார்வையை ஏற்று வலிந்து மார்க்சியத்தை இறக்குமதி செய்யும் இயக்கங்களை சுலபமாகவே ஓரம் கட்டி விடுகின்றன. உலகெங்கும் இஸ்லாமிய அடிப்படை வாதம் அல்லது அரசியல் இஸ்லாம் இடதுசாரியினரைத் துகளாக நொறுக்கி விடுவது எதனால் ? நகர மக்களின் இஸ்லாமா வென்றது ? இல்லை கிராமப்புற மக்களின் இஸ்லாமா ? ஃபனோன் என்ன காரணத்தாலோ கிராமப்புற மக்களின் வன்முறை இடதுசாரி வன்முறையாக உலக மனிதத்தை நோக்கியதாக இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டார். அது தவறு என்று அவர் சார்ந்து போராடிய அல்ஜீரிய இயக்கத்தின் தோல்வியே நிறுவி விட்டது. கிராமப்புற மக்கள் சேர்ந்து கொண்ட இயக்கங்களில் கூட மார்க்சின் அபிமானப் பகுதியான நகரமும், நகர மக்களும்தான் பொதுவுடைமைக் கருத்துக்கு அது தனது உறுதிமொழிகளில் எதையும் சாதிக்க இயலாது போன பின்பும் கூட ஆதரவாக இருக்கிறார்கள். கிராமங்கள் பெரும்பாலும் மார்க்சியத்தைப் பின்னே விட்டு முன்னேறி விடுகின்றன.

கள நிலைகளைக் கருதாது அனைத்து நிலங்களிலும், மக்கள் நடுவேயும் மார்க்சியம் வேலை செய்யும் எனக் கருதுவதே இன்னொரு வகையான காலனிய மனப்பாங்குதான். மத்திய தள அறிவு ஜீவிகளின் கருத்தாக்கக் காலனியம். தமது தோல்விக்குக் காரணம் – ஏகாதிபத்திய சக்திகள் தம்மை ஒடுக்கியதும், தம்மைக் கவிழ்க்கச் சதி செய்ததும்தான். அதனால் தான் புரட்சிகள் தோற்றன என்று வாதிடுவர். ஏகாதிபத்தியம் வேறு என்ன செய்யும் ? தன்னை நொறுக்கத் திட்டமிட்டு, அதுவே தனது எதிர்கால இலக்கு என்று அறிவிக்கும் ‘புரட்சி ‘ அரசுகளை வளர்த்தெடுக்கவா செய்யும் ? பல அராபிய (இஸ்லாமிய) நாடுகளிலும் சோசலிச இயக்கங்கள் தோற்றுத்தான் போயின. அரசின் வன்முறை அல்லது அடக்கு முறையை நம்பியே இன்று சோசலிசக் கருத்தாக்கங்கள் அதிகாரத்தில் உள்ளன. ஆக ஃபனோனின் கருத்தாக்கங்களில் பல சரியான தர்க்கம் உள்ளவை. சில காலத்தால் எளிதே மீறப்பட்டு விட்ட தர்க்கம் கொண்டவை என்று தெரிகிறது.

ஃபனோனின் கருத்துகளை கருத்தளவில் கட்டவிழ்த்து, இழை பிரித்துப் பார்த்து அதில் எவை ஏன் சரியான கருத்துகள், எவை குறை உள்ளவை என்று நோக்கும் ஹோமி பாபாவின் கருத்துகளில் நிறைய சிக்கல்கள் உண்டு. இக் கட்டுரையில் அவற்றை விளக்கப் போவதில்லை. ஒரு சிறு துண்டு மட்டும் கீழே.

‘காலனிய அதிகாரத்தின் ஆரவாரமான தலைமையோ அல்லது மண்ணின் மக்களுடைய மரபுகள் அரவம் இல்லாது ஒடுக்கப்படுவதோ ‘காலனிய ‘ சக்தியின் விளைவாகக் காணப்படாமல், ஒரு கலப்புப் பொருள் உற்பத்தி ஆகிறது எனப் பார்க்கப்பட்டால் அப்போது பரிமாண ரீதியாக ஒரு முக்கியமான மாறுதல் நடக்கும். அதிகாரம் பற்றிய மரபு சார் விளக்கங்களில் மூலத்திலேயே உள்ள தெளிவின்மையே அதிகாரக் கவிழ்ப்புக்கு வழி செய்கிறது. எந்தச் சொல்லாடல் நிலைகள் மேலாட்சிக்கு வகை செய்கின்றனவோ அவற்றை சாக்காகக் கொண்டு தலையிட முடிவெடுப்பதில் உள்ள குழப்பத்தை இந்த வகை அதிகாரக் கவிழ்ப்பு முயற்சி பயன்படுத்திக் கொள்ளும். ‘ (ஹோமி பாபா – பண்பாட்டின் இடம் – ‘The location of culture ‘) [கு2]

ஃபனோனோ முதல் தலைமுறை ஆள்வோரை புதுக் காலனியத்துக்கு அடி வருடிகளாக வருணிக்கிறார். ஆனால், அதே நேரம் காலனிய ஆட்சியாளருக்கும் உள்நாட்டு வகைக்கும் உள்ள குறிப்பிட்ட மாறுபாடுகளை அவர் காணத் தவறுவதில்லை. ஃபனோன், இத்தகைய ஆள்வோரில் காலனிய சக்திகளைத் தொடர்ந்து எதிர்ப்பவர்களை ஆதரிக்கிறார். அதுவும் மார்க்சிய வழி எதிர்ப்பாளரை. எதிர்ப்பில் எது சரியான பலனைத் தருகிறது என்று பார்த்தால் ஃபனோன் தனது கருத்தாக்கக் கண்ணாடியால் மறைக்கப்பட்ட பார்வையின் வழியே பாதி உண்மையை மட்டுமே காண்கிறார் எனலாம்.[கு3]

மேலே எழுதப்பட்டது ஃபனோன் பற்றிய கறாரான முடிவா என்றால் இல்லை என்று ஒப்புக் கொள்ள வேண்டும். பாபாவின் புத்தகங்களால் மறு துலக்கம் பெற்ற ஃபனோன் மீதான ஆய்வுகள் இப்போது ஃபனோனியம் என்றே அழைக்கப்படுகின்றன. அந்த அளவுக்கு ஃபனோனை கருத்தாக்க உலகில் முக்கியமான சிந்தனையாளராக உயர்த்த பாபா உதவியிருக்கிறார் என்று ஃபனோனைப் பின்பற்றிச் செயலில் இறங்குபவர்கள் கருதுகிறார்கள். பாபா உயர் கருத்துலகுக்கும் (Theory) செயல்பாட்டில் உள்ளவருக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து ஃபனோனைப் புரிந்து கொள்ள உதவுகிறார் என்று பலரும் ஒப்புகிறார்கள். ஆனால் ஃபனோனை மார்க்சியரின் தனிச் சொத்து என்றோ அல்லது மார்க்சியப் புரிதல் ஒன்றுதான் ஃபனோனின் உலகைச் சரிவரப் புரிந்து கொள்ள உதவும் என்று நினைக்கும் சிந்தனையாளரோ பாபா ஃபனோனை வலிவிழக்கச் செய்து, கருத்தாக்க உலகின் மூளை விளையாட்டுகளில் பயன்படும் ஒரு கருவியாக ஆக்கி விட்டார் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

நைஜல் கிப்சன் என்பவரின் விமர்சன வரிகள் இதோ: ‘பாபாவால் மறு-நினைவுபடுத்தப் பட்ட ஃபனோன், என் கருத்தில், சிதைக்கப்பட்ட ஃபனோன்தான், அச் சிதைவு ஒரு வேளை வேண்டிப் பெறாத விளைவாக இருக்கலாம் என்ற போதிலும். லகானில் வேரூன்றி ஹேகலுக்கு எதிராக நிறுத்தப்பட்ட ஃபனோன், நவீனக் கடப்பு வாதத்தினால் உடைக்கப்பட்டு மார்க்சியத்துக்கு எதிராக நிறுத்தப்பட்ட ஃபனோன், தன்னைத் தானே குறுக்கிக் கொள்ளும் ஒரு புரட்சியைப் பேசி, என்றென்றைக்குமான புரட்சிக்கு எதிராக நிற்கும் ஃபனோன்…. …

ஃபனோனின் சவாலான – ‘ஒவ்வொரு தலைமுறையும் …தன் கடமை என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அதற்குத் துரோகம் செய்வதாக மாறும். ‘ – என்பது அறிவு ஜீவிகளின் தன்னிலை குறித்த தலை கிறுகிறுக்க வைக்கும் மனக்கிலேசமாக மாற்றப்பட்டு விட்டது. …. …. அதிகபட்சம், விமர்சனப் ஃபனோனியம், வெறும் சித்தாந்த விமர்சனமாக நின்று போயிற்று. கருத்துகளின் சக்தியை மிக முக்கியமாகப் பார்த்த ஃபனோனின் கருத்து, ஆளும் சித்தாந்தத்தின் வலிமை குறித்த ஆய்வால் இடம் பெயர்க்கப்பட்டு விட்டது. ஃபனோன் ஏற்கனவே விமர்சன ஃபனோனியத்தின் ஆய்வு முறை பற்றிச் சொல்லி இருக்கிறார்: …ஒரு அறிவு ஜீவி மக்களோடு தன்னை இணைக்க விரும்புகிறார். ஆனால் அவரால் மக்களின் வெளி ஆடைகளைத்தான் எட்டிப் பிடிக்க முடிகிறது. இந்த வெளி ஆடைகளோ மறைக்கப்பட்ட வாழ்வின் வெறும் பிரதிபலிப்புகளே. நிரந்தரமாக இயக்கத்தில் இருப்பதும், ஏராளமாகப் படைத்துத் தள்ளுவதுமான ஒரு வாழ்வு அது. ‘ [கு4]

ஆக, இது வரை எழுதிய எல்லாவற்றையும் போலவே ஃபனோன், பாபா பற்றிய மேற்சொன்ன கருத்துகளும் என்னுடைய தற்காலிகப் புரிதல்களே. இன்னமும் சிந்தித்தால் என் கருத்தும் நைஜல் கிப்சனின் கருத்தை ஒட்டி அமைய வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், பல்கலைக் கழக வளாகத்துள் இருந்து யதார்த்த உலகைப் புரிந்து கொள்ளச் செய்யப்படும் முயற்சிகள் ஓரளவுக்குதான் உதவும் என்பது என் கருத்து. யதார்த்த வாழ்வு, ஃபனோனும் பாபாவும் ஒப்புக் கொள்வது போல எப்போதும் வடிக்கப்பட்ட முன்மாதிரிகளைத் தாண்டி வழிந்து கொண்டிருக்கிறது. மாதிரிகளைப் படைப்பவர்கள் எப்போதும் பின்னேதான் தங்கிக் கிடக்கிறார்கள்.

(தொடரும்)

[கு1] இவர் அணு விஞ்ஞானி ஹோமி பாபா அல்லர். சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் கலைத் துறைப் பேராசிரியர். ஃபூகோ போன்றவர்களின் பாதிப்பு கொண்டவர். காலனியக் கடப்புத் துறை நிபுணர். பார்க்க:

http://www.bard.edu/hrp/events2000/bhabhaH.htm

[கு2] பாபாவின் ஆங்கில மூலம் இதோ:

‘If the effect of colonial power is seen to be the production of hybridization

rather than the noisy command of colonialist authority or the silent repression

of native traditions, then an important change of perspective occurs. The

ambivalence at the source of traditional discourses on authority enables a form

of subversion, founded on the undecidability that turns the discursive

conditions of dominance into the grounds of intervention. ‘

[கு3] ஃபனோன் பற்றிய ஒரு சிறு வாழ்க்கை வரலாறு, அவரது புத்தகங்கள், அவரது மிகவும் துலக்கமான, ஆனால் துக்ககரமாக முடிந்த வாழ்வைப் பற்றிய சிறு குறிப்பை வலையில் காண http://www.emory.edu/ENGLISH/Bahri/Fanon.html. இது ஒரு மிக எளிய குறிப்பு.

ஃபனோன் பற்றித் தமிழ் வாசகர்களுக்கு, திண்ணை வாசகருக்கு முன்பே தெரிந்திருக்கும். மருத்துவரான ஃபனோன், அவர் வாழ்ந்த காலத்தில், காலனியம் சரிய ஆரம்பித்த 45-60 களில், ஃபிரெஞ்சு காலனியாதிக்கத்தை அதன் முழு குரூர முகத்தோடு சந்தித்துத் தன் ஃபிரெஞ்சுக் குடியுரிமையை வெறுக்க ஆரம்பித்தார். ஃபிரெஞ்சுக் காலனியத்தை உளவியல் ரீதியாக விமர்சித்து நூல்கள் எழுதியவர். பிறகு ஃபிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்த அல்ஜீரிய விடுதலை இயக்கத்தின் ஆதரவாளராக மாறித் தன் ஃபிரெஞ்சுக் குடியுரிமையை விடுத்தார். இறுதியில் ஆப்பிரிக்க மேல் தட்டு மனிதர், மேலும் நகரத்துப் பாட்டாளிகள் ஆகிய காலனியின் இதரக் குடிமக்கள் மீதும் கூட நம்பிக்கை இழந்து போனார். அவர் ஆப்பிரிக்கக் கிராமத்து மக்களின் புரட்சிதான் ஆப்பிரிக்க மக்களுக்கு காலனி ஆதிக்கத்திலிருந்தும், மூன்றாம் உலகத் தன்மையிலிருந்தும் விடுதலை கொடுக்கும் என்று கருதி இருந்தார். அன்றைய வரலாற்றுப் போக்கில் அவர் எடுத்த முடிவுகள் எல்லாமே மிக நம்பிக்கை தரும் வகையான வாழ்வு நிலைபாடுகள். புற்று நோயால் இளம் வயதில் இறந்து போன இவர் தமது குறுகிய கால வாழ்வில் உலகக் கருத்துலகில் சாதித்ததை வைத்துப் பார்த்தால் இவர் ஒரு பெருநாயகரின் இலக்கணங்கள் பொருந்திய மனிதர் என்பதெல்லாம் உண்மைதான்.

ஆனால் யதார்த்தமோ, வரலாறோ பெருநாயகர்களின் இலக்கணங்களாலோ, அவர்களின் பெரு விருப்பாலோ செலுத்தப்படுவதல்ல. மார்க்சுக்கு ஒரு லெனின், மார்க்ஸ்+லெனின் ஆகிய இருவருக்கும் ஒரு மாஒ, மாஒவுக்கு ஒரு டெங், டெங்கிற்குப் பல பெரும் ஆளுமை ஏதும் இல்லாத, தொழில் நுட்பப் பயிற்சியும், உட்கட்சி அரசியலும் மட்டும் தெரிந்த மத்திய வர்க்கத்து அதிகாரிகளால் ஆன ஆளும் கூட்டம் என்று வரலாற்றைச் செலுத்த விரும்பிய நாயகர்களுக்கு அடுக்கடுக்காக எத்தனை எதிர் போக்குகள் மேலெழுந்தன, அதுவும் அப் பெரு நாயகர்களைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லிக் கொண்டே பாதையை முழுதுமாக மாற்றின என்று பார்த்தாலே ஃபூகோ சொல்வது போல வரலாறு தவறுகளாலும், இடைவெளிகளாலும், தொடர்பற்ற நிகழ்வுகளாலும் எல்லாம் நகர்கிறது என்பது உறுதியாகிறது. தொடர் கதையைத் தேடியே பழகிய நமக்கு தொடர்ச்சியை மட்டும் கவனிக்கத் தோன்றுகிறதே தவிர, தொடர்பறுந்த நிலைகளில் வரலாறு எப்படி இயங்கியது எனப் பார்க்கப் பொறுமை இருப்பதில்லை.

ஃபனோனுடைய ஒரு கருத்தாக்கம் கவனிக்கத் தக்கது. காலனியாதிக்கம் கடந்த பின் முன்னாள் காலனிவாசிகளுக்கு காலனி ஆட்சியாளரின் பண்பாடு, மொழி, வரலாறு, தத்துவம் இத்தியாதிகளில் இருந்து விலகித் தம்முடையதான ஒரு வரலாற்று இழையை காலனி ஆட்சிக்கு முற்காலத்தில் இருந்து மீட்டெடுத்து உயிர்ப்பித்து, புதுப்பித்து களங்கம் இல்லாத ஒரு வாழ்வை மறு படைப்பு செய்வது என்பது இயலாது என்று கறாராக முடிவு கட்டுகிறார் ஃபனோன். என் கருத்து இதிலிருந்து அதிகம் விலகியது அல்ல. மீட்டெடுத்து முலாம் பூசி கடந்த காலத்தை வாழ்வது சாத்தியம் அல்ல என்பது மட்டுமல்ல அத்தகைய சிந்தனையே முட்டாள்தனமான கற்பனை. ஒரு பெரும் அணு யுத்தத்தில் அனைத்து நாகரிகமும் அழிந்து எஞ்சிய சில மக்கள் மனித குலத்தின் பயணத்தைத் தொடர முயல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், அப்போது கூட ஓரளவாவது 20-ஆவது நூற்றாண்டிற்கு அருகில் இருந்துதான் துவங்க முயல்வார்கள். திரும்ப உருளைச் சக்கரம் என்றால் என்ன என்று தெரியாத, நெருப்புடைய உபயோகம் புரியாத மக்களாக ஆகிப் போவோம் என்று நான் கருதவில்லை. நாளை காலை திடாரென்று உலகில் உள்ள அனைத்து பெட்ரோலியம், எரிவாயு போன்ற எரிபொருள்கள் எல்லாம் எரிய மறுக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். அப்போது வேண்டுமானால் நாம் மாட்டு வண்டிகளுக்கும், குதிரைகளுக்கும் திரும்ப நேரிடலாம்.

எனக்கும் ஃபனோனுக்கும் ஒரு மாறுபாடு உண்டு. ஃபனோன் கடந்த காலத்துக்குச் செல்வது விரயமான முயற்சி என்று கருதுகிறார். நான் கடந்த காலம் அத்தனையையும் குப்பையில் வீசத் தயாரில்லை. மீட்டெடுத்து அக்காலத்தை மறுபடி வாழ வேண்டும் என்று சொல்லும் பித்துக்குளித்தனத்தை நான் ஆதரிக்கவோ அல்லது இங்கு முன் மொழியவோ இல்லை. ஆனால் மேலை நாகரிகத்தின் மிகச் சிறந்த மதிப்பீடுகளை மட்டுமே கூட எடுத்துக் கொண்டு அவற்றின் வழியே என் வாழ்வையோ அல்லது பெருவாரியான இந்திய மக்களின் வாழ்வையோ அல்லது முன்னாள் காலனி மக்களின் வாழ்வையோ நடத்துவது சாத்தியமும் இல்லை, ஆரோக்கியமானதும் இல்லை என்று கருதுகிறேன். ஃபூகோவும் ஃபனோனும் ஓரிடத்தில் ஒப்புகிறார்கள். மீட்சி என்பது கடந்த காலத்தில் இருந்ததைத் திரும்ப வாழ்வதில் இல்லை என்று இருவருமே கருதுகிறார்கள். அதில் நானும் ஒப்புகிறேன். ஆனால் நம்பிக்கை வைப்பதில் ஃபனோன் காலனிய சிந்தனையைத் தாண்டி வர ஒரு வழியாக அதையே நீட்டித் தம்முடையதாக ஆக்கிக் கொண்டு காலனியாளருக்கு எதிராகத் திருப்பி

வைத்து காலனிய மனப்பாங்கு, மதிப்பீடுகள் ஆகியவற்றைப் புறம் தள்ளி விட்டு, ஓர் உலகப் பார்வை, உலக மனித குலத்துடன் இணையும் வழியை வார்த்தெடுக்க வேண்டும் என்று கருதுகிறார்.

[கு4] நைஜல் கிப்சனின் ஆங்கில மூல வரிகள் இதோ:

‘ One perhaps unintended consequence of Homi Bhabha ‘s re-membering Fanon is, in my mind, a dismemberment that results in a Fanon rooted in Lacan against Hegel; in a post-modernist fragmentation against Marxism; in a self-limiting revolution against ‘revolution in permanence. ‘ Rather than ‘grasping the dialectic in ‘rapid transience ‘: as it is forming in the process of historical becoming itself, ‘ as Bhabha puts it, such an unchained dialectic of historical becoming is finally elided by the Critical Fanonists as the psychoanalytic becomes the master narrative. The challenge of Fanon — that ‘each generation must . . . discover its mission, or betray it ‘ (1968, 206) — becomes a giddy angst about the subject position of the intellectual. ‘Fanon ‘ has no resonance, no echo, and no affect. In the end, cultural analyses, however nuanced, take place against

Fanon ‘s announced political project of Black Skin and The Wretched. At best Critical Fanonism becomes ideological critique. The power of ideas that Fanon found so terribly important is quite simply replaced by analysis of the power of ruling ideology. Critical Fanonism ‘s methodology is already intimated by Fanon:

The culture that the intellectual leans towards is often no more than a stock of particularisms. . . . He wishes to attach himself to the people; but instead he only catches hold of their outer garments. And these outer garments are merely the reflection of a hidden life, teeming and perpetually in motion. (Fanon 1968, 223-24; my emphasis) ‘ சில வரிகள் மொழி பெயர்ப்பில் விடப்பட்டுள்ளன.

aacharakeen@yahoo.com

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 2)

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 3)

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4)

அறிந்தே அம்மணமாக இருக்கவில்லை

Series Navigation