நான் சொலவதும் இரண்டில் ஒன்றே!

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

மலர்மன்னன்



மோடியின் ஸடன் ரிமூவல் நிகழ்ந்தலொழிய நமக்கு கதிமோட்சம் இல்லை என்று கரன் தாப்பர் எழுதியமைக்கு எனது கண்டனத்தைப் பதிவுசெய்யப்போக, அது பல கோணங்களில் சிந்தனைகளைத் தோற்றுவித்திருப்பது உற்சாக மூட்டுகிறது.

திண்ணையின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு என்றே கொள்ளத் தக்க விதமாக கோபால் ராஜாராம் கரன் தாப்பருக்கு சந்தேகத்தின் பலனைக் கொடுத்துவிட்டு வஹ்ஹாபியின் கருத்திற்கும் வக்காலத்து நாமா தாக்கல் செய்திருக்கிறார். இதேபோல மோடி இல்லாத ஆண்டாகப் புத்தாண்டு அமைவதாக என்று அவுட்லுக்கில் வாசகர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த வினோத் மேத்தாவுக்கும் ஏதாவது காரணம் சொல்லிச் சந்தேகத்தின் பலனை அவருக்கும் கொடுத்திருக்கலாம். என்ன இருந்தாலும் இப்போது திண்ணை இணைய இதழ் ஆசிரியர் குழுவின் பேச்சாளர் என்கிற முறையில் ராஜாராம் உள்ளிட்ட, கரன் தாப்பர், வினோத் மேத்தா ஆகியோரையும் சேர்த்து நாங்கள் அனைவரும் ஒரு மரத்துப் பறவைகள், ஒரேவித வண்ண இறக்கைகள் உள்ள பட்சிகள்தாமே! ஆனால் ஹிந்துத்துவச் சார்பாக எழுதவும் பேசவும் முற்படுகிறவர்கள்தான் சந்தேகத்தின் பலன் எதையும் எதிர்பாராமல் நிர்தாட்சண்யமான கொடிய தண்டனைக்கு மட்டுமே காத்திருக்க வேண்டும் போலும்!

கரன் தாப்பர் மீது ராஜாராம் அனுதாபம் காட்டுவதில் எனக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை.
ஆனால் வஹ்ஹாபி விஷயமாக அவர் தெரிவித்துள்ள வாதங்களுக்கு இடையே காந்திஜிக்கு நேர்ந்த ஸடன் ரிமூவல் பற்றிக் குறிப்பிட்டு அதில் என்னைச் சம்பந்தப்படுத்தியிருப்பதால் இவையிரண்டையும்பற்றிக் கொஞ்சம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. காந்திஜியின் நினைவுதினம் கோட்ஸேயின் நினைவு தினமுமேயாதலால் அத்தகைய தினம் அமையும் சந்தர்ப்பத்தில் இயல்பாகவே அவர்களைப் பற்றிப் பேசுமாறு அமைவது ஒருவிதத்தில் பொருத்தம்தான்.

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியாக வேண்டும்.

மகாத்மா காந்தியின் ஸடன் ரிமூவலுக்கு நியாயம் கற்பித்து எழுதிய மலர் மன்னன்… என்று ராஜாராம் குறிப்பிடுகிறார்.

காந்திஜி என்கிற ஏற்கனவே மனதில் பதிந்துள்ள பீடரோகண பிம்பம், கோட்ஸே என்கிற பெயரின் விளைவாக மனதில் பதிந்துபோன வெறுப்பு ஆகிய இரண்டு தாக்கங்களுமே இல்லாமல் ஒரு சம நிலையில் விவரங்களை நோக்கும் மனநிலையை வாசகர்களுக்குத் தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே சம்பந்தப்பட்ட எனது கட்டுரையின் தலைப்பில் பழகிப் போன பெயர்களான காந்திஜி, கோட்ஸே ஆகிய இரண்டையும் பயன்படுத்தாமல் மோஹன்தாஸ், நாதுராம் என்கிற அவர்கள் இருவரின் பெயர்களால் விவரங்களைப் பதிவு செய்திருந்தேன். இப்படிச் செய்ததாலேயே தங்களால் எவ்வித முன்னுணர்வும் இன்றிப் படித்துத் தெளிவுபெற்றதாகக் கட்டுரையப் படித்துவிட்டுத் திண்ணையின் அறிவார்ந்த வாசககர்கள் பலர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.

அந்தக் கட்டுரையில் நாதுராம் தாம் எடுத்த முடிவுக்கு எடுத்துக் கூறி நீதிபதியையும் நீதிமன்றத்தில் கூடியிருந்தவர்களையும் சலனப் பட வைத்த, அவர் தரப்பு நியாயங்களை ஒரு கூரிய பார்வையாளனாக (ஆப்ஸர்வர்)ப் பதிவு செய்திருந்தேனே யன்றி, ராஜாராம் குறிப்பிட்டிருப்பது போல காந்திஜியின் ஸடன் ரிமூவலுக்கு நானாக நியாயம் ஏதும் கற்பிக்கவில்லை.

சொல்லப் போனால் காந்திஜி 1946 லிருந்தே அவருக்கிருந்த கேந்திர ஸ்தானத்திலிருந்து அவருடைய முதன்மைச் சீடர்களாலேயே ஸ்லோ ரிமூவலுக்கு ஆளாகத் தொடங்கிவிட்டிருந்தார். 1947 முதல் அவர் இருப்பதே அவர்களுக்கு ஒரு சுமையாகத் தோன்றவாரம்பித்துவிட்டது. பாபூ, இப்பொழுது நாம் நடத்துவது அரசியல் இயக்கம் அல்ல, சர்க்கார் என்று நேரு அவரிடம் பலமுறை சலித்துக்கொள்ள வேண்டி வந்திருந்தது! உண்மையைச் சொல்வதானல் காந்திஜியின் ஸடன் ரிமூவல் ஆச்சரியபடத்தக்க விதத்தில் எவரை நாம் எதிர்பார்க்க மாட்டோமோ அவர்களையெல்லம் நிம்மதிப் பெருமூச்சுவிடச் செய்திருக்கிறது!

காந்திஜியின் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு அருகில் ஜனவரி 20 அன்று குண்டு வெடித்தபோதே காந்திஜிக்குத் தெரியாமல் அவருடைய உள் வட்டத்தினருக்கு மட்டும் ரகசியத் தகவல் அளித்துவிட்டு காந்திஜிக்குப் பத்திரமான பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக முடியாதா? காந்திஜியைக் கொலை செய்யும் திட்டம் உருவாகியிருக்கிறது என்கிற விவரம் கசிந்தபிறகுங்கூட சரடைப் பற்றிக்கொண்டுபோய் திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களை வளைத்துப் போட்டிருக்க முடியாதா? அன்றைக்கு என்ன இன்றைய பயங்கரவாதிகளுக்கு உள்ளது போன்ற வசதிகளும் பக்க பலங்களும் இருந்தனவா? உருப்படியான ஒரு துப்பாக்கிக்குக் கூட கதியில்லாமல்தானே கிடந்தார்கள்? இருந்தும் காந்திஜியின் ஸடன் ரிமூவல் விஷயத்தில் ஏன் ஆட்சியாளர்கள் அலட்சியமாக இருந்தார்கள்? இதுபற்றியெல்லாம் தனிப் புத்தகங்களே வந்தாயிற்று.
காந்திஜியும் தமக்கு ஏற்பட்டுவிட்டிருந்த ஆளுமையையொட்டித் தமக்கு இயற்கை மரணம் ஏற்படாமல் ஒரு தியாகிக்குரிய வலுக்கட்டாயமான திடீர் மரணமாக, எவரும் எதிர்பாராத விதமாக உலக அரங்கிலிருந்து வன்முறையாகத் திடீரென அகற்றப்படுவதையே விரும்புவதாகத் தம் அணுக்கத் தொண்டர்களிடம் கூறத் தொடங்கியிருந்தார். 125 ஆண்டுகள் வாழ விரும்புவதாகவும் வாழப் போவதாகவும் முன்பெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன், இப்போது அந்த நாட்டம் இல்லை என்று அவர் சொல்லத் தொடங்கிவிட்டிருந்தார்.
கோபால் ராஜாராம் தமது கட்டுரையில் இன்னொரு விஷயமும் சொல்கிறார்.
காந்தி உயிர் பிழைத்திருந்தால் மலர்மன்னனைக் கூடவும் அதிக வலுவுடன் கோட்ஸே என்ற சகோதரரின் பக்க நியாயத்தை விளக்கியிருப்பார் என்று ராஜாராம் சொல்கிறார்.
இது ஆங்கிலத்தில் ஹைபாத்தெடிகல் என்று சொல்வார்களே அதுமாதிரியான அனுமானத்தின் அடிப்படையில் வைக்கப்படுகிற வாதம். சம்பந்தப்பட்டவர் அதே மாதிரியான சந்தர்ப்பங்களில் எப்படி நடந்துகொண்டார் என்பதை ஆராய்ந்து பார்த்து அதற்கேற்பத்தான் ஒருவாறு முடிவுக்கு வரவேண்டியிருக்கும்.

கோட்ஸே எடுத்த முடிவினால் பாதிக்கப்பட்டவர் காந்திஜி. எனவே தனிப்பட்ட முறையில் தாம் பாதிக்கப்படுவோம் அதாவது இயக்கத்தின் மீதும் மக்கள் மீதும் தமக்கு உள்ள ஆளுமை பாதிக்கப்படக் கூடும் என்கிற நிலைமைகள் உருவானபோது, அவ்வாறான நிலைமகளுக்குக் காரணமானவர்கள் தரப்பு நியாயத்தை விளக்கினாரா அல்லது நிர்தாட்சண்யமாகத் தமது இருப்பை நிலை நிறுத்திக் கொண்டாரா என்று பார்க்கலாமா?

முதலில் ஷஹீத் பகத் சிங் சமாசாரம். பகத் சிங்கிற்குத் தூக்கு தண்டனை எனத் தீர்ப்பாகியதும் தேசமே கொந்தளித்துப் போய் பகத் சிங் ஆதரவாகத் திரும்பிவிட்டது. அஹிம்சை என்ற பெயரால் தன்னைத் தானே துன்புறுத்திக்கொள்ளும் தமது பரிசோதனைப் போர் மீது மக்கள் நம்பிக்கை இழந்து பக்த் சிங் போன்றவர்களின் வழக்கமான ஆயுதம் தாங்கிய விடுதலைப் போர் முறையின் ஆதரவாளர்களகிவிடப் போகிறார்களே என்ற கவலையினால் பகத் சிங்கின் பக்கம் இருந்த நியாயத்தை விளக்குவதற்குப் பதிலாக அந்தப் பிரச்சினையை முற்றிலுமாகப் புறக்கணிக்கக்கூடச் செய்யாமல் திசை தவறிய தேசபக்தன் என்று பகத் சிங்கை விமர்சனமும் செய்தார், காந்திஜி. நீதிமன்றத் தீர்ப்பில் எப்படித் தலையிட முடியும் என வாதித்தார். ஆனால் அவரே அதற்கு முன் சிரத்தானந்த என்ற ஆரிய சமாஜத் துறவி முகமதியர் தாய் மதம் திரும்புவதற்கான சுத்திச் சடங்கு செய்துவருகிறார் என்பதற்காக அவரைப் படுகொலை செய்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட காசிம் என்கிற முகமதியனுக்கு மன்னிப்பு அளிக்க வேண்டுமென்று கோரத் தவறவில்லை!

உயிர்ப் பலியான துறவி சிரத்தானந்தவின் நினைவாகக் கராச்சியில் ஒரு பூங்கா நிறுவப்பட்டது. பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்ததும் முதல் வேலையாக அந்தப் பூங்காவிற்கு சிரத்தானந்தவின் பெயர் நீக்கப்பட்டு, அவரைக் கொலைசெய்த காசிமின் பெயர் சூட்டப்பட்டது! இதுதான் அங்கெல்லாம் கடைப்பிடிக்கப்படும் மத நல்லிணக்க சம்பிரதாயம்!

பகத் சிங்கிற்கு மன்னிப்பு வழங்கி அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் மகாசபை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றும் முயற்சி நடைபெறுகிறது என்பதை அறிந்து, அது நிறைவேற்றப்படாவிட்டால் மக்களுக்குக் காங்கிரசின் மீது உள்ள மரியாதையே போய்விடும் என்பதும் தெரிந்திருந்தமையால் மாநாடு நடப்பதற்கு முன்பாகவே பகத் சிங் தூக்கிலிடப்பட்டு விடுவதற்கு வசதியாக மாநாட்டுத் தேதி தள்ளிவைக்கப்படச் செய்தார், காந்திஜி.

அடுத்து சுபாஷ் பாபு விவகாரம். காங்கிரஸ் மகாசபையே சுபாஷ் பக்கம் சாய்ந்துவிட்ட நிலையில், தமது விருப்பத்திற்கு முற்றிலும் மாறாக அகில இந்திய காங்கிரஸ் மகாசபை பொதுக் குழு உறுப்பினர்கள் காந்திஜியின் வேட்பாளரான பட்டாபி சீத்தாராமையாவைத் தோற்கடித்து, சுபாஷ் சந்திர போஸை காங்கிரஸ் தலைவரகத் தேர்ந்தெடுத்தபோது, சுபாஷ் தரப்பு நியாயத்தை காந்திஜி விளக்கவில்லை. மாறாக, தமது கொள்கை வழியிலிருந்து காங்கிரஸ் மாறிவிடுமே என்பதால் சுபாஷைச் செயல்படவிடாமல் செய்து, தாமாகவே காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகிப் பிறகு கட்சியிலிருந்தும் வெளியேறித் தனிக் கட்சி தொடங்கும் கட்டாயத்தை சுபாஷûக்கு ஏற்படுத்தினார்.

கடைசியில் 1948 ஜனவரி 20 க்கு வருவோம். அதாவது காந்திஜி கொலைப் படுவதற்குப் பத்து நாட்கள் முன்பு.

ஹிந்துக்களும் சீக்கியரும் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக முகமதியரைப் பழிவாங்கக் கூடாது, பாகிஸ்தான் பகுதியிலிருந்து சொத்து சுகமெல்லாம் பறிபோன நிலையில் அகதிகளாக தில்லியில் வந்து குவிந்த ஹிந்துக்களும் சீக்கியரும் வெட்ட வெளியில் குளிரில் விறைத்துச் செத்தாலும் சாகலாமே தவிரப் பாழடைந்து கிடக்கும் முகமதியர் கல்லறைகளிலும் வழிபாடு நடைபெறாத மசூதிகளிலும், முகமதியர் விட்டுச் சென்ற வீடுகளிலும் தஞ்சம் புகலாகாது என்றும், பாகிஸ்தான் ஹிந்துஸ்தானத்தை எதிர்ப்பதற்காக ஆயுதங்கள் வாங்கப் பயன்படுத்துவதாக இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் அதன் பங்கான அந்நியச் செலாவணியை எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் ஹிந்துஸ்தானம் கொடுத்துத்தானாக வேண்டும் என்றும் வலியுறுத்தி 1948 ஜனவரி 13 அன்று முறைப்படி முன்னேற்பாடாக எனிமா எல்லாம் எடுத்து வயிற்றைச் சுத்தம் செய்து கொண்ட பின் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார், காந்திஜி (நீண்ட நாட்கள் உண்ணாவிரதம் இருப்பதானால் பெருங் குடல் வெற்றிடமாக இருக்க வேண்டும். இல்லையேல் அதில் சேர்ந்துள்ள கழிவுப் பொருள் சிறு குடலுக்குத் திரும்ப எத்தனித்தல், இறுகிக் கட்டிதட்டிப் போதல் போன்ற உபாதைகள் ஏற்படும்). அவரது உடல்நிலை மோசமடைந்து விடவே, ஆர் எஸ் எஸ், ஹிந்து மகா சபை, அகாலிதளம் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைதி குலையக் காரணமாக இருக்க மாட்டோம் என வாக்களித்துக் கையொப்பமிட்டனர். ஹிந்துஸ்தானத்து அரசும் பாகிஸ்தானுக்கு அதன் பங்கிற்குரிய அந்நியச் செலாவணியை எவ்வித நிபந்தனையுமின்றி அளிக்க ஒப்புக்கொண்டது. அதன் பின் ஜனவரி 18 அன்று ஆறு நாள் உண்ணாவிரததிற்குப் பிறகு ஆரஞ்சு ரசம் பருகித் தமது உணவு கொள்ளும் அன்றாடக் கடனைத் தொடர்ந்தார், காந்திஜி.

காந்திஜி வழக்கம் போல அல்லாது உண்ணாவிரதத்தால் இழந்த சக்தியைத் திரும்ப்பபெறும் பொருட்டு மருத்துவர்கள் சொற்படி வழக்கத்தைவிடவும் கூடுதலாக உணவு உட்கொள்ள ஆரம்பித்தபின், ஜனவரி 20 அன்று மாலை காந்திஜி தமது வழக்கமான பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்துகையில் அவரைக் கொலை செய்யும் முயற்சியாக, பிர்லா மாளிகையின் புல்வெளியில் ஒரு நாட்டு வெடி குண்டு வீசப்பட்டது. எவருக்கும் எவ்விதச் சேதமும் விளைவிக்காமல் அது வெடித்து அடங்கியது. குண்டு வெடித்ததைத் தொடர்ந்து பிடிபட்ட ஒருவர் தரப்பு நியாயத்தை காந்திஜி பின்வருமாறு விமர்சித்தார்:

குண்டு வெடித்த சப்தம் கேட்ட போது அது என்மீதான கொலை முயற்சி என நான் எண்ணவில்லை. அருகி லுள்ள மைதானத்தில் ராணுவத்தினர் துப்பாக்கி சுடும் பயிற்சி செய்வதாகத்தான் எண்ணிக்கொண்டேன். எனவே அது குறித்துப் பதற்றம் அடையவில்லை. எனவே நான் குண்டு வெடித்தபோதிலும் அமைதியாக இருந்ததாக என்னைப் பாராட்டுவது சரியல்ல. என்னைக் கொல்ல முயற்சி செய்தவர் மீது எவரும் வெறுப்படைய வேண்டாம். என்னைக் கொல்வதற்காக ஆண்டவன் தன்னை நியமித்திருப்பதாக அவர் எண்ணிக் கொண்டிருக்கிறார். அவருக்கும் அவரைக் கருவியாகப் பயன் படுத்திக் கொண்டு என்னைக் கொலை செய்யும் திட்டத்தை மேற்கொண்டிருப்பவர்களுக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான்: இம்மாதிரியான செயல்களால் எல்லாம் ஹிந்து சமயத்தைக் காப்பாறிவிட முடியாது (உண்மையில் காந்திஜியைக் கொலை செய்ய முனைந்தவர்களின் நோக்கம் காந்திஜி சொன்ன மாதிரி ஹிந்து மதத்தைக் காப்பாற்றுவதல்ல. காந்திஜி என்கிற ஒரு நபரைக் கொல்வதன் மூலம் அனாதி காலமாகப் பல்வேறு கடும் சோதனைகளுக்
கெல்லாம் ஈடுகொடுத்துக் கொடுத்து நீடித்துவரும் ஹிந்து சமயத்தைக் காக்க வேண்டும் என அவர்கள் கருதவில்லை. ஹிந்து சமூக நலனுக்கு காந்திஜியின் இருப்பு ஆபத்தாக உள்ளது என்றுதான் அவர்கள் கருதினார்கள்) .

இதுதான் குண்டு விழுந்த சம்பவத்தையொட்டி காந்திஜி தெரிவித்த கருத்து. குண்டு எறிந்தவரின் பக்க நியாயத்தை காந்திஜி விளக்குவதாக இருந்தால், பாகிஸ்தானாக அறிவிக்கப்பட்ட பகுதியில் ஹிந்துக்களும் சீக்கியரும் மிகக் கொடூரமான வன்முறைத் தாக்குதல்களுக்கும் வன்புணர்ச்சி, சிசுக் கொலை, கர்ப்பிணித் தாய்மார் வயிறு கிழிபட்ட கோரம் ஆகியவற்றால் மனம் கொதிப்படைந்து, என்னால்தான் இத்தனை கொடுமைகளையும் தாங்கள் அனுபவிக்க நேர்ந்தது என்கிற சீற்றத்தின் வெளிப்பாடாகத்தான் குண்டு வீசி என்னைக் கொலை செய்ய அவர் முயற்சி செய்திருக்கிறார்; ஆகவே அவரது உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர் மீது அனுதாபம் காட்டுவோம் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? மாறாக, சாத்வீகரான தம்மீது தாக்குதல் நடந்தமைக்காக எவரும் ஆத்திரம் கொள்ள வேண்டாம் என்று தம்மைத்தான் அவர் முன்னிலைப் படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

முகமதியர் எவ்வளவுதான் வன்முறைத் தாக்குதல் நடத்தினாலும் ஹிந்துக்களும் சீக்கியர்களும் மேலும் மேலும் பொறுத்துப் போக வேண்டுமேயன்றி, பதிலுக்குத் தாக்கக் கூடாது, ஏனெனில் முகமதியருக்கு அவர்களின் சமயத்தில் வன்முறை அனுமதிக்கப்
பட்டிருக்கிறது என்று தாம் உபதேசம் செய்வதால்தான் தம்மீது குண்டு வீசிக் கொல்ல முயற்சிக்கும் அளவுக்கு ஹிந்துக்கள், சீக்கியர் ஆகியோரிடையே பலருக்குச் சினம் தோன்றியுள்ளது என்று குண்டு வீசிய மதன்லால் பக்கம் இருந்த நியாயத்தை காந்திஜி பேசவில்லையே! கிலாஃபத் கிளர்ச்சியின்போது முகமதியர் ஹிந்துக்கள் மீது வன்முறைத் தாக்குதல் நிகழ்த்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்ததும், முகமதியருக்கு வன்முறையில் இறங்க அவர்களின் சமயம் இடமளிக்கிறது என்று முகமதியர் பக்க நியாயத்தை எடுத்திச் சொல்லி ஹிந்துக்களைச் சமாதானப் படுத்தியவர்தானே நமது பிரியத்திற்குரிய பாபுஜி!

போகட்டும், தம்மைச் சுட்ட நாதுராம் கோட்ஸே பக்க நியாயத்தை விளக்கிக் கூற காந்திஜி இல்லாமற்போனது நமக்குப் பேரிழப்புதான். ஆனால் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட கோட்ஸேயை விசாரித்துத் தூக்கு தண்டனை விதித்த நீதிபதி கோஸ்லா, கோட்ஸே பக்க நியாயத்தையொட்டித் தெரிவித்த கருத்து ஆவணப் படுத்தப்பட்டுள்ளதையாவது நினைவு
கூர்வோம்.

கோட்ஸே தமது தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லி வாக்குமூலம் அளித்ததை நீதிமன்றத்தில் கேட்க நேர்ந்தவர்கள் கண்ணீர் சிந்தினார்கள். தீர்ப்பளிக்கும் அதிகாரம் எனக்குப் பதிலாக அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்குமானால் கோட்ஸே குற்றவாளி அல்ல என்று தீர்ப்பாகியிருக்கும் என்று நீதிபதி கோஸ்லா தமது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

எனவே காந்திஜி கோட்ஸேயின் துப்பாக்கிக் குண்டிலிருந்து மீண்டு வந்திருந்தால் தமது ஆளுமைக்கு ஏற்ப ஒரு துன்பியலான முடிவு தமக்கு நிகழவில்லையே என வருந்தியிருப்பார். அல்லது என்னைச் சுடுவதன் மூலம் ஹிந்து மதத்தையோ
ஹிந்துக்களையோ காப்பாற்றி விட முடியாது; ஹிந்துக்கள் விஷயத்தில் நான் கடைப்பிடிக்கும் போக்கு நான் போன பின்னாலும் தொடரத்தான் செய்யும் என்று கோட்ஸேக்குப் புரிய வைத்திருப்பார். இந்த இரண்டில் ஒன்றுதான் நடந்திருக்கும்.

இனி, வஹ்ஹாபியின் சார்பில் ராஜாராம் எடுத்துவைக்கிற நியாயத்திற்குப் போகலாம்:

பள்ளர், பறையர், பார்ப்பனர் என்கிற விளிச் சொற்கள் குறிப்பிட்ட வகுப்பினரை இழுவுபடுத்திச் சுட்டுவதற்கே பயன்படுகிற நிலைமை தோன்றிவிட்டிருக்கிறது. ஆக, அவற்றை இழிவான பெயர்களாகவே சம்பந்தப்பட்ட பிரிவினரில் பலர் கருதுகிறார்கள். எனவே அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காக வேறு பெயர்களைப் பயன் படுத்த முற்படுகிறோம். ஆனால் சுய மரியாதை உள்ள புதிய தலைமுறையினர் பலர் வேண்டுமென்றே தம் பெயருக்குப் பின்னால் தமது சாதியைக் குறிக்கும் பெயரைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இது தமது சாதிப் பற்றைத் தெரிவிப்பதற்காக அல்ல. ஆமாம், நான் அந்தச் சாதிதான் அதற்கு என்ன இப்போது என்று கேட்கும் சுய மரியாøதான் அது. ராஜ் கவுதமன் கூடத் தமது அருமையான சுய சரிதை நாவலில் தான் இன்ன சாதியினன் என்பதைச் சுட்டும் பொருட்டு, இன்ன தெருவிலிருந்து வருவதாக எகத்தாளமாகத் தம்மை அறிமுகம் செய்துகொள்வார், உடன் வரும் தமது கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த பெரிய சாதிக்காரரிடம்! கிறிஸ்தவராக மதம் மாறினாலும் தீண்டத்தகாதவர் என்கிற அடையாளம் போவதில்லை என்கிற நிலைமையையும் அதன் மூலம் பதிவு செய்திருப்பார். அவரது அந்தச் சுயமரியாதைப் பிரகடனத்திற்குத் தலை வணங்குகின்றேன்.

அட்டவணைப் பிரிவினர் பலர் தங்களை வேறு பெயர்களால் அழைக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்குக் காரணம் அவர்கள் தமது பழைய சாதிப் பெயர்கள் இழிவான தொனியில் குறிப்பிடப்பட்டன என்பதை இன்னமும் மறக்கவில்லை என்பதுதான். ஆனால் டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட பலர் இந்தப் போலி மரியாதைக்கு மயங்காமல் தமது பூர்வ குடிப் பெயராலேயே கர்வத்துடன் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டார்கள். மஹார் என்கிற பெயரைத்தான் அவர்கள் வேண்டுமென்றே பயன்படுத்தி வந்தார்கள். இவ்வாறு
அவர்கள் தங்களை வெளிப்படையாக அடையாளங்காட்டிக் கொண்டது சாதி வெறியினாலோ சாதி அபிமானத்தினாலோ அல்ல. சமூகத்தில் காலங் காலமாகப் புறக்õணித்து வைத்திருந்தீர்களே அந்தப் பிரிவினர்தான் நாங்கள்; கட்டறுத்துக்கொண்டு வெளியே வந்திருக்கிறோம். இப்போது என்ன சொல்கிறீர்கள் என்று ஆக்ரோஷத்துடன் விடுகிற அறைகூவல்தான் அது. அவர்களின் இந்தச் சுயமரியாதைக்கு மீண்டும் மீண்டும் தலை வணங்குகின்றேன்.

அட்டவணைச் சாதியினர் பலர் தமது பூர்வ சாதிப்பெயர் தங்களை இழிவான தொனியில் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது என்பதால்தான் புதிய பெயர்களால் தாம் அழைக்கப்பட வேண்டும் என்று கருதுகிறார்கள். இதுவே முகமதியர் விஷயத்திலும் பொருந்தும் என்றால் அவர்களின் இறைத் தூதரை அவர்களே இழிவாகக் கருதுவது போலாகிவிடாதா? அப்படி நினைப்பதே மகா பாவம், அபசாரம் அல்லவா?

எனவே பறையர், பள்ளர், பார்ப்பனர் என்பது போலவே முகமதியம், முகமதியர் என்கிற விளிச் சொற்களும் இழிவான அர்த்தத்தைக் குறிப்பவை என்று அன்பர் வஹ்ஹாபி கருதுகிறாரா? அவை சொல்லத் தகாத வார்த்தைகள் என்பதுதான் அவரது அபிப்பிராயமா?
தங்கள் சமயமானது தாம் வரித்துக்கொண்டுள்ள இறைத் தூதரின் வருகைக்கு முன்பிருந்தே இருந்து வந்ததென்கிற புதிய செய்தியையும் தெரிவித்து, அதன் காரணமாகத் தம் சமயத்தைத் தமது இறைத் தூதர் பெயரால் அழைப்பது தகாது என்று அன்பர் வஹ்ஹாபி சொல்கிறார். அப்படியானால் யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரையும் முஸ்லிம்கள் என்றும் அவர்களின் சமயங்களையும் இஸ்லாம் என்றும்தான் அழைக்கவேண்டியிருக்கும். யூதர்கள், கிறிஸ்தவர்கள், முகமதியர்கள் ஆகிய அனைவரும் ஒன்று; அல்லது அவர்கள் வேறு, இவர்கள் வேறு. இரண்டில் ஒன்றுதான் இருக்க முடியும்.

ஆபிரகாமிய மதங்களைப் பிரித்துக் காட்ட வேண்டும் என்பதற்காகவே கிறிஸ்தவர், முகமதியர் என்ற பெயர்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஓன்று முகமதியம், முகமதியர் என்கிற சொல்லாடல்கள் இழிவானவையா அல்லது அந்தப் பெயர்கள் அவர்களின் இறைத் தூதரைச் சுட்டும் கவுரவமான உணர்வுகளா? இவ்விரண்டில் ஏதாவது ஒன்றுதான் சரியாக இருக்க முடியும்.

முகமதியம், கிறிஸ்தவம், ஆகிய இரண்டு பிரிவுகளுக்குமே மூலமான யூதேய மதத்தையே தமது மதமாக அடையாளப் படுத்தி, ஆதாம் ஏவாள் காலத்திலிருந்தே தமது சமயம் இருந்து வருவதால் தமது மதத்தைத் தாம் ஏற்றுள்ள இறைத் தூதர் பெயாரால் அழைப்பது பொருந்தாது என்று வஹ்ஹாபி கருதுகிறார். அப்படியென்றாõல் யூதேய மதத்தின் கோட்பாடுகளும் சடங்காசாரங்கள், கட்டளைகள் முதலானவையும் அதன் ஆதி கிரந்தங்களான தனாக்கிலும் தால்முத்திலும் சொல்லப்பட்டுவிட்டன. அவற்றைத்தான் யூதர்கள் தமது சமயத்தின் புனிதச் சம்பிரதாயங்களாக ஏற்றுள்ளனர். வஹ்ஹாபி சொல்வதுபோல அவரது சமயம் யூதேயந்தானென்றால், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஹீப்ரு மொழியிலிருந்து அரபிக்குத் தாவி, 1400 ஆண்டுகளுக்கு முன் அது மீண்டும் தோற்றுவிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமானால் திருத்தியமைக்கப்பட்ட அதன் ஒரு பிரிவாகவே அது தொடருவதுதான் பொருத்தமாக இருக்கும். கிறிஸ்தவர்களைப் போல அவர்களும் பழைய ஏற்பாட்டைப் பாராயணம் செய்து தமக்கென ஒரு புதிய ஏற்பாட்டைப் பிற்சேர்க்கையாகக் கொள்ளலாம்.

கிறிஸ்தவ சமயத்தில் புராட்டஸ்டன்டு பிரிவினர் தோன்றினாலும் அவர்களும் விவிலியத்தின் பழைய, புதிய ஏற்பாடுகளை அப்படியே ஏற்றுக் கொண்டுவிடவில்லையா? அன்பர் வஹ்ஹாபியும் தாம் முன்னிறுத்தும் வாதத்திற்கு ஏற்பத் தமது சமயத்தினர் தங்களின் ஆதிசமயத்தின் புனித நூல்களையும், பிற்சேர்க்கைகளையும் இறுதியாகத் தாம் ஏற்றுள்ள இறைத் தூதர் வழியாக இறங்கியவற்றையும் சேர்த்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படித்தான் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்களா? தங்களின் வழிபாட்டில் விவிலியத்தின் பழைய ஏற்பட்டு வசனங்களையும் சொல்கிறார்களா? அதில் சொல்லப்பட்டுள்ள நபிமார்களையும் அங்கீகரிக்கிறோம் என்று சொன்னால் மட்டும் போதுமா?

அப்படியில்லாதபோது, பிற்காலத்தில் தங்களின் மூல மதத்திலிருந்து பிரிந்த தமது சமயத்தை வித்தியாசபடுத்திக்காட்டுவதற்கு, அவ்வாறான பிரிவுக்குக் காரணமான, தாம் ஏற்றுக் கொண்டுள்ள இறைத் தூதரின் பெயராலேயே தமது சமயமும் தாமும் அழைக்கப்படுவதில் வஹ்ஹாபிக்கு ஆட்சேபம் இருக்கக் காரணம் இல்லை. அதே போலப் பிற்காலத்தில் அவ்வப்போதைய காலகட்டத்திற்கேற்பப் புதிய மாற்றங்களை வேறு எவரும் அதில் செய்வதையும் பகுத்தறிவுக்கு ஒப்ப அனுமதிக்கலாம். ஆனால் அஹமதியா என்கிற பெயரில் உருவான புதிய பிரிவை வஹ்ஹாபி சார்ந்துள்ள சமயத்தார் அனுமதிப்ப
தில்லை. சமயம் வாய்க்கிறபோதெல்லாம் அஹமதிய முகமதியரை அழித்தொழிக்க அவர்கள் தவறுவதுமில்லை.

அதாவது தங்கள் மூல மதக் கோட்பாடுகளை மாற்றியமைக்கவோ அவற்றுக்குப் புதிய வியாக்கியானங்கள் அளிக்கவோ தங்களின் இறைத் தூதருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று வஹ்ஹாபி சார்ந்துள்ள்ள சமயத்தார் சொல்கிறார்கள். அவ்வளவு முக்கியத்துவம் உள்ளவராகத் தாம் கருதும் தங்கள் இறைத் தூதரின் பெயரால் வஹ்ஹாபி கடைப்பிடிக்கும் சமயத்தையும் அவரது சமயத்தவரையும் குறிப்பிடுவதில் என்ன தவறு இருக்க முடியும்? அவற்றை வஹ்ஹாபியும் அவரது சமயத்தாரும் இழிவாகக் கருதுவதாக அறிவித்தாலன்றி அந்த விளிச் சொற்களைப் பயன்படுத்துவதில் ஆட்சேபணைக்கு அவசியம் என்ன? நிஜமாகவே எனக்குப் புரியவில்லை.

அடுத்து அன்பர் வஹ்ஹாபி என்ன சொல்ல வருகிறார் என்று பார்ப்போம்:
எனது அனுபவத்தின் அடிப்படையில் வட மாநிலங்களில் பொதுவாக முகமதியம், முகமதியர் என்கிற பிரயோகங்கள் ஒரு பிரச்சினையாக்கப் படுவதில்லை என்று நான் சொன்னேன் என்பதற்காக முஸல்மான் என்கிற சொல்லைப் பயன்படுத்திய குஜராத்தியரான காந்திஜி வடநாட்டவர் என்பதை வஹ்ஹாபி எனக்கு ஞாபகமூட்டுகிறார். ஆனால் காந்திஜி மட்டுந்தானா வட நாட்டவர்? எத்தனையோ வட நாட்டுத் தலைவர்களும் சமூக சேவகர்களும் முகமதியர் என்கிற சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏன் காந்திஜியேகூட ஒரு சில இடங்களில் மிகவும் இயல்பாகப் பயன்படுத்தியிருக்கிறார். அவ்வாறு பயன்படுத்துவதில் தவறு ஏதும் இல்லை என்பதைத்தான் இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்து மொஹமடன் லா (முகமதியர் குடிமைச் சட்டம்) என்பது இன்னமும் நீதி மன்ற வளாகங்களில் வழக்கில் இருந்து வருகிறது. இதனை அந்த மதம் சார்ந்த வழக்குரைஞர்கள் ஆட்சேபிப்பதில்லை!

காந்திஜியும் சில சமயம் முகமதியர் என்ற சொல்லைப் பயன்படுதியிருக்கிறார் என்று சொன்னதும் எங்கே ஆதாரம் என்று யாராவது வந்துவிடக்கூடும். இப்படித்தான் ஒருமுறை காந்திஜி ஒரு முகமதியன் இயல்பாகவே அடாவடிப் பேர்வழியாகவும் ஹிந்து கேழையாகவும் இருக்கிறார்கள் என்று சொல்லியிருப்பதை எழுதப் போக, முகமதியர் மீது நேசம் மிக்க காந்திஜி எங்கே அப்படிச் சொல்லியிருக்கிறார் என்பதை நான் இப்போதே நிரூபிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார்கள். நானும் வேலை மெனக்கெட்டு காந்திஜி அவ்வாறு எழுதிய பகுதியைத் தேடியெடுத்துக் கொடுத்தேன். அதற்குச் சம்பிரதாயமாக ஒரு நன்றியோ, அடடா, தெரியாமல் சவால் விட்டுவிட்டோம், அதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம் என்கிற வருத்தம் தெரிவித்தலோ இல்லை; ஒன்றுமே நடக்காத மாதிரி சரி அடுத்த படியாக என்று வேறு பேச்சைத் தொடங்கிவிட்டார்கள்!

காந்திஜி பேசியனவும் எழுதியவையும் வண்டி வண்டியாக உள்ளன. அவற்றையெல்லாம் புரட்டிப் பார்த்து அவர் எங்கே முகமதியர் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று எடுத்துக் காட்ட எனக்கு அவகாசமும் இல்லை, உடம்பில் தெம்பும் இல்லை. ஆகவே ஆர்வம் உள்ளவர்கள் தாமாகவே தேடிப்பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்.
வஹ்ஹாபி ஹிந்தி என்கிற பதப்பிரயோகம் பற்றியும் எனக்குக் கற்பிக்க முற்பட்டுள்ளார்.
ஹிந்தி என்ற சொல் ஒரு நிலப் பரப்பையும் அதன் குடிமக்களையும் மட்டுமே குறிப்பதல்ல. ஒரு தொன்மையான கலாசாரத்தையும் மரபையும்கூடக் குறிப்பதாகும். பாஸ்போர்ட் சடங்கையும் மீறி நுட்பமான அர்த்தம் அதற்கு உண்டு. அந்தப் பிரக்ஞை இந்த பூமியில் பிறந்த பல கலைஞர்கள், கவிஞர்கள், அறிவாளிகளுக்கு உண்டு. எங்கள் மூதாதையர் முன்பு எப்போதோ, என்ன காரணத்தாலோ வேற்று மண்ணிலிருந்து வந்த மாற்று சமயத்தைத் தழுவிவிட்டார்களென்பதற்காகவே எங்கள் கலாசாரம், மரபு, தத்துவ விசாரம் ஆகியவற்றின் மீது எங்களுக்கு உள்ள உரிமையை இழந்துவிடமாட்டோம் என்று அவர்கள் பகிரங்கமாக அறிவித்தார்கள். ஷெனாய் விற்பன்னர் பிஸ்மில்லாகான் தொடங்கி, நவ்ஷத் ஸாப், தலத் மொஹ்மத் ஸாப் போன்ற இசைக் கலைஞர்களும், இஸ்மத் சுக்தாய் போன்ற பெண்ணிய எழுத்தாளர்களும், முற் கால இக்பால், சாஹிர் லூதியான்வி போன்ற கவிஞர்களும், குணங்குடி மஸ்தான் என்கிற தத்துவ விசார சித்த புருஷனும், அப்துல் கலாம் என்கிற அறிவாளியும் தாம் சார்ந்த சமயம் வேறாயினும் தொன்மையான ஹிந்து கலாசாரமும் மரபும் தமக்குச் சொந்தமானவையே என உணர்ந்தனர். பாகிஸ்தானில் உள்ள சிந்தனையாளர்கள் பலர் மத்தியிலும் இப் புரிந்துணர்வு வேரூன்றி வருகிறது. நம்முடைய சரித்திரம் முகமது கோரியிலிருந்து ஆரம்பிப்பதல்ல என்று அவர்கள் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். ஹிந்தி என்கிற சொல் வெறும் குடிமைக் குறிப்பு மட்டுந்தான் என்று வஹ்ஹாபியும் அவரைப் போன்றவர்களும் சாதித்து அந்த விளிச் சொல் சுட்டும் வேறு பல தனிச் சிறப்புகளைத் திரஸ்கரிப்பார்களேயானால் இழப்பு ஹிந்திக்கு அல்ல என்பதைத் தவிரச் சொல்வதற்கு என்னிடம் வேறு ஏதுமில்லை.

இதே மாதிரி நான் முகமதிய பயங்கரவாதம் என்று ஒரு சமயத்தைக் குறிப்பிட்டு எழுதுவதும் வஹ்ஹாபி உள்ளிட்ட சிலரால் ஆட்சேபிக்கப் படுகிறது. இதிலும் இரண்டில் ஒன்று தெரிந்தாக வேண்டும். தங்களது பயங்கரவாதச் செயல்கள் எல்லாம் தமது சமயத்திற்காகவே செய்யப்படுவதாக அறிவித்து, தாம் செய்வது தங்களின் சமயக் கடமையான ஜிஹாதேயன்றி வேறல்ல என்று பெருமையுடன் பிரகடனம் செய்து பயங்கரவாதச் செயல்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம், தங்கள் சமயத்திற்கு அவப் பெயர் தேடித் தருபவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் கொல்வோருக்குச் சன்மானம் என்றும் ஒரு ஃபத்வா தக்க நபர்களிடமிருந்து அதிகாரப் பூர்வமாக வரவேண்டும். செய்வார்களா? கூடவே தங்கள் சமுதாயத்திற்குள் ஒளிந்திருக்கும் பயங்கரவாதிகளை அடையாளம் காட்ட வேண்டும்; தவறினால் தலை கொய்யப்படும் என்றும் ஒரு ஃபத்வா வரவேண்டும். வருமா?

நிர்பந்தம் காரணமஒரு பக்கம் பயங்கர வாதத்தை எதிர்த்துக்கொண்டும் மறு பக்கம் அதனை ஊக்குவித்துக் கொண்டும் இருக்கிற தேசங்கள் இரண்டில் ஒன்றை முடிவு செய்ய வேண்டும். செய்யுமா?


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்