K. இரவி சிறீநிவாசின் கடாவுக்கு விடை

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

கரு. ஆறுமுகத்தமிழன்


நான் தமிழ்ப் பேராசிரியன் அல்லேன். தினமணியில் தமிழ்ப் பேராசிரியன் என்று குறிக்கவுமில்லை. பேராசிரியன் என்று குறித்திருந்தார்கள். அதையும்கூட அவர்கள் குறித்திருக்கவேண்டாம். அடையாளங்கள் இல்லாமல் வெறும் ஆறுமுகத்தமிழனாக எழுதினால் யார் இந்தக் கோவணாண்டி என்ற கேள்வி வந்துவிடுமோ என்று என்மேல் பேராசிரியக் குப்பாயத்தை அணிவித்துவிட்டார்கள். நான் வெறும் விரிவுரையாளன்தான். என் துறை மெய்யியல்.

படிப்பார்வலர்களுக்கு நூலை இனம் காட்டுவதற்காகத் தினமணியில் ஒதுக்கப்பட்டிருக்கிற சிறு இடத்தில் குமரிநிலத்தின் மெய்ம்மை பொய்ம்மைகளைப்பற்றிய திறனாய்வைச் செய்ய முடியாது. ‘ ‘கொற்றவை ‘ ‘ புதுக்காப்பியத்தின் பின்புலத்தைச் சுட்ட விரும்பியே அப்படித் தொடங்கினேன். பஃறுளியாறும் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொண்டதாக வழங்கப்படுகிற ஒரு தொல்கதையைப் புதிய நிலைகளில் வெளிச்சமிட்டுக் காட்ட விரும்புகிற புனைவெழுத்தாளனின் சிறகடிப்பை ஆய்வறிஞர்களின் முடிவுகளைக் கொண்டு சிறைப்படுத்தவோ சிறகொடிக்கவோ முடியாது. அது தேவையுமில்லை. புனைவின் உச்சங்களைத் தொடுவதில் அவன் பெறுகிற வெற்றி என்ன என்பதுதான் பேசப்படவேண்டியதேயன்றிக் கற்பனை என்று சொல்லப்படுகிற குமரிநிலத்தில் அவன் ஏன் கதையைத் தொடங்கினான் என்பதன்று. சில காரணங்கள்பற்றிப் பேசியவர்களெல்லாம் எல்லாம் அறிந்தவர்கள் என்றும் சில காரணங்கள்பற்றிப் பேசாதவர்களெல்லாம் ஏதும் அறியாதவர்கள் என்றும் பொருளில்லை. தமிழ்ப் பேராசிரியர்கள் கூமுட்டைகளும் இல்லை. மேலும் குமரிநிலக் கதைக்கு அறிவியல் ஆய்வுகளில் விடை தேடுவது ஒருபுறமிருக்க, தன் இருப்பை ஏற்க மறுத்த மாற்று மரபுக்கு எதிரான தமிழ்மரபின் கொந்தளிப்புகளிலும் விடை தேடவேண்டும் என்பதும் என் அடிமன விருப்பம். உலகம் எப்போதும் அறிவியல் ஆய்வுகளின் ஊடாக மட்டுமே இயங்குவதில்லை.

மாற்று மரபு என்று வைதிகப் பார்ப்பன மரபையே குறித்தேன்.

பெண் உடல்வழிப்பட்டுப் பிள்ளைப்பேறு அடையாதபோதும் தாய்மை என்ற உணர்வை அடையமுடியும். அன்பு ஏதேனும் ஓர் உறவின்வழியாகவே அடையாளம் காணப்படும். ஆண் தகப்பனைப்போலச் சிலரை நேசிப்பதும் பெண் தாயைப்போலச் சிலரை நேசிப்பதும் உள்ளதுதான். இதற்கு ஒருவர் உண்மையிலேயே தகப்பனாகியிருக்கவேண்டும் என்றோ தாயாகியிருக்கவேண்டும் என்றோ கட்டாயமில்லை. கண்ணகி தாய்மைப் ே பறை உடலால் அடையாதவள். இனி அவ்வாறு அடையவிரும்பாததன்பேரில் தன் முலை ஒன்றை அறுத்தும் எறிந்தவள். உடலால் அடையமுடியாததை அல்லது அடையவிரும்பாததை மனத்தால் அடைந்தவள். ஆகையால் தெய்வமாகி மேற்சென்றவள். தாய்மை என்பது அன்பின் வழிப்பட்டது. அது தனிமனிதர்களின் அழிவில் தான் அழியாமல் என்றும் வாழும். தாய்மை என்கிற சார்பற்ற அன்பைத் தேர மறுக்கும் பெண்கள் இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும். ‘ ‘கொற்றவை ‘ ‘ சார்பற்ற அன்பைத் தேரும் பெண்மையைப்பற்றியது.

சிறுதெய்வம், பெருந்தெய்வம் என்ற வேறுபாடுகளுக்கு எது எல்லைக்கோடு ? சிறிய அளவில் செல்வாக்குப் பெற்றுச் சிறுதெய்வ நிலையில் இருந்தவை பெருஞ்செல்வாக்குப் பெறும்போது பெருந்தெய்வங்கள் ஆகின்றன. வளமை வழிபாட்டின் அடையாளமாக இருந்த சிவலிங்கம் ‘ ‘சிசுணதேவதை ‘ ‘ (குஞ்சாமணித் தேவதை) என்று எள்ளப்பட்ட காலமும் இருந்தது; பிறகு அதே ‘ ‘சிசுணதேவதை ‘ ‘ எள்ளப்பட்டவர்களாலேயே கழுவிக் கழுவித் தழுவிக்கொள்ளவும்பட்டது. தேவதை மகேசுவரனாயிற்று.

ஒரு குழுவின் நம்பிக்கை அந்தக் குழுவினால் வெற்றிகொள்ளப்பட்ட அல்லது அந்தக் குழுவை வெற்றிகொள்ள நினைக்கிற அல்லது அதனோடு நட்புறவு கொண்ட வேறொரு குழுவால் ஏற்கப்படும்போது, அந்த நம்பிக்கையின் எல்லை விரிவடைகிறது. இப்படி விரிவடையும்போது அந்த நம்பிக்கையை மெய்யாகக் காட்ட அளவைவழிப்பட்டுக் கரணியங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்தக் கரணியங்களை, அல்லது அவற்றை முன்வைத்த அளவையை வேற்று மரபுகள் கேள்விக்குள்ளாக்கும்போது உரையாடல் தொடங்குகிறது.

பகுத்தறிவாளர்கள் கேள்விக்குள்ளாக்குவது நம்பிக்கைகளை. உள்ளதா இல்லதா என்ற ஆராய்ச்சிக்கு கருதலை (அனுமானப் பிரமாணம்) அல்லது புனித நூல்களின் உரையை (சப்தப் பிரமாணம்) மட்டுமே வழியாகக்கொள்வதை.

ஒரு குழுவின் மூதாதையர் அந்தக் குழுவினருக்குக் கண்கூடு (பிரத்தியட்சம்). அவர்களுக்குக் கண்கூடாக இருந்த மூதாதையர் புதியவர்களுக்கு நம்பிக்கையாகிறார்கள். மூதன்னை ஒருத்தி தான் கலகலெனப் புலபுலெனப் பெற்ற தன் மக்களால் கொற்றவைத் தெய்வமாக்கப்படுகிறாள். அவ்வாறே முக்கண்ணன் சிவன் மூதாதையாக ஒரு காலம்வரை கண்கூடாக இருந்து பிறகு சிவனாகித் தெய்வமாகிறான்; அங்ஙனமே மாலனும் ஆறுமுகனும் ஆனைமுகனும் என்று ஒரு கருதுகோள் வைக்கிறார் செயமோகன். ஒரு குழுவினருக்கான இந்த மூதாதைச் சிறுதெய்வங்கள் வேறு சில குழுவினராலும் ஒப்புக்கொள்ளப்படும்போது அவை மெல்லப் பெருந்தெய்வ மரபின் பாதையில் தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றன. மூலம் கைமாறும்போது சிதைவுகளுக்கு உள்ளாகிறது. நினைவுகூர்தல் என்பது சடங்காகிச் சமயமாகும்போது, சமயத்துக்கு நியாயங்கள் கற்பிக்கப்படுகிற போது அது பகுத்தறிவின் எல்லைகளைத் தாண்டிவிடுகிறது. பகுத்தறிவாளர்களால் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது.

மாற்று மரபுகள் என்று நான் மறைத்துச் சொன்ன வைதிகப் பார்ப்பன மரபின் தெய்வ நம்பிக்கைகள் மேல்-கீழ் என்ற வகுப்புகளில் நம்பிக்கை கொண்டிருக்கின்றன. வானத்திலிருக்கும் கடவுளர்க்கு மண்ணிலிருந்து தீத்தூதன் வழியாக வேள்விகளில் உணவூட்டுகின்றன. தமிழ் மரபில் உணவு படைக்கப்படுகிறது; படைக்கப்பட்ட உணவு பிறகு மிச்சில் என்ற பெயரில், விண்ணவர்களுக்கல்ல, மண்ணவர்களுக்கே உணவாகிற து. படைத்தல் என்பதே மூத்தோரோடு தொடர்புடைய சொல்லாகவே தமிழ்நாட்டில் அடையாளம் காணப்படுகிறது. மாற்று மரபோ தெய்வத் தோற்றம்பற்றித் தெளிவில்லாததால் தனக்கு எட்டாத உயரத்தில் அது இருப்பதாகக் கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கிறது. தெய்வ நம்பிக்கைபற்றிய தமிழ்மரபின் நியாயப்பாடுகள் பொருத்தமானவை என்ற அடிப்படையை செயமோகன் தன்னுடைய புதினத்தில் குறிப்புணர்த்தியிருப்பது திறனாய்வில் விதந்தோதப்பட்டது.

ஆகவே குழப்பம் யாருக்கு என்று K. இரவி சிறீநிவாசு குழம்பத் தேவையில்லை. குழப்பம் எனக்கும் இல்லை; செயமோகனுக்கும் இல்லை.

ஒரு சமூகத்தை நடத்துவதற்கான விதிமுறைகளை K. இரவி சிறீநிவாசு சொல்லுகிற அறிவியலும் சமூக அறிவியல்களும்தான் வரையறுக்கவேண்டும் என்றால் அது சமூகமாக இருக்காது; இயந்திரமாகவே இருக்கும். மேலும் சமூகம் முந்தியா அல்லது அறிவியலும் சமூக அறிவியலும் முந்தியா என்ற கேள்விகளெல்லாம் வரும். ஏங்கெல்சின் கொள்கைக்கான ஒப்புதலோ மறுதலிப்போ அல்லவே கவனத்துக்குரியவை! அன்ப ின் வழியது தாய்மை என்ற நிலை தமிழ்ச் சமூகத்தில் போற்றுதலுக்குரிய இடத்தைப் பெற்றிருக்கிறதா இல்லையா என்பது கவனத்துக்குரியது. தொடர்கிற இதன் பின்புலம் என்னவாக இருக்கலாம் என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு அதைத் தன் புனைவாற்றலில் விரிக்கும் செயமோகனைப் பாராட்டுவதும் என் நோக்கம். அது K. இரவி சிறீநிவாசுக்கு விருப்பமாயிருக்கிறதா இல்லையா என்பது வேறு.

எல்லாமே மறுதலிக்கப்படும் வாய்ப்புகளைப் பெற்றவைதாம். எது குப்பை எது குப்பையில்லை என்பனவெல்லாம் சார்புப் பார்வைகளுக்கு உட்பட்டவை. இரவி சிறீநிவாசுகளின் பார்வைகளே ஒப்ப முடிந்த முடிபுகள் என்று கொள்வதற்கில்லை. ஆனால் ஒன்று: தமிழ்நாடு பலர் விரும்புவதுபோலக் குப்பைத் தொட்டியாகிவிடக்கூடாது என்பதுதான் என் விருப்பமும்.

—-

arumugatamilan@yahoo.com

Series Navigation

கரு. ஆறுமுகத்தமிழன்

கரு. ஆறுமுகத்தமிழன்