தூர்மண(¡) குச்சு

This entry is part [part not set] of 28 in the series 20070315_Issue

கே ஆர் மணி


கிட்டதட்ட முடிந்தவிட்ட இரவு. அந்த அக்ரஹாரத்தின் ஒரு வீட்டில் நாங்கள் நடந்து கொண்டிருந்தோம்.
என்னை முழுவதுமாய் அடிக்கும் ஞாபக அலைகள். உள்ளுக்குள் ஈரமாவதை உணர்ந்தேன்.
“ஏய் ! இது அப்பா பொறந்த இடம்டா ” என் மனைவி ஐந்துவயது மகனுக்கு.
“ஹரே ! ஐசா.. ” [அப்படியா ] ” ஓட்டைப்பல்லும், கன்னக்குழியுமாய் என் மகன்.
என்னவித உணர்வு காட்டுவது என்று குழப்பமாய் தலையசைக்கும் நான்.
“அப்ப இவன் பொறக்கறச்சே நாலுநாள் வலி. கேட்டியா.. எனக்கான உயிர்கொண்டு போறது..
நட்சத்திரம் நல்லாயில்லனு.. திருவோணம் முதப்பாதம்னுட்டு.. ஆயாவ கூப்படவேயில்ல.. கேட்டியா..
மூணாம்பாதத்திலதான் கூப்பிடப்போனா.. எல்லாம் இந்த சமையக்குச்சுக்குள்ளதாண்டி.. அப்பென்ன..
ஆஸ்பத்திரியா..சீசரியனா.. வலிக்க வலிக்க பேத்தேம்டியம்மா.. ” அம்மா.. என் மனைவியிடம். என்
மனைவியோ கண்கள் மருள.. விழி விரித்து பவ்யமாய் கேட்டுக்கொண்டிருந்தாள்.

நான் மெல்ல தாழ்வாரம் நோக்கி என் மகன் கைபிடித்து நடந்தேன். அது அந்தக்கால அக்கிரகாரம்.
திண்ணை, குச்சில் ( பாவூழ்), ரேழி, சமையலறை, முத்தம், தாழ்வாரம், தூர்மணா குச்சு, அடிதோட்டம்,
முழுத்தோட்டம், கழிப்பறை என நீண்டு போகும் அகம். பலவருடம் கழித்து வந்து பார்த்ததில் ஏராளமாய்
மாறிப்போயிருந்தது. திண்ணை – வீட்டிற்குள்ளே இழுக்கப்பட்டிருந்தது. குச்சில் காணமல் போயிருந்தது.
ரேழியும், சமையலறையும் மாற்றப்பட்டிருந்தது. தாழ்வாரத்தின் ஊஞ்சலும், வெந்நீரடுப்பும் காணவில்லை.
தாழ்வாரம் தாண்டி பம்பேய்(மும்பாய்.. ?) கக்கூசு. [எல்லாவற்றிலும் பெயர்மாற்றம் வேண்டாமா என்ன.. ?]
எடுப்பு கக்கூசு காணமல்போய் காலமாகிவிட்டதாய் சொன்னது ஆறுதல். ஒரு தென்னைமரமும், வேப்பமரமும்
காணமல் போயிருந்தது. நெல்லுமாடி – டியூசன் செண்டரானதும், சாணிரோடு தார்ரோடானதும்
அப்பட்டமான மாற்றங்கள். வீடுதாண்டிய எருமைத்தொழுவமும் ஆத்தங்கரையும் இருட்டானதால்
பார்க்கமுடியவில்லை. இந்த மாற்றங்களில் எனக்கு அவ்வளவாய் அதிசியமில்லை. ஆனால் அதிரச் செய்த
அழகான மாற்றம் – தூர்மண(¡)குச்சு.. என்ன மாற்றம்.. அது இருந்த இடம் தெரியாது ஒடைக்கப்பட்டதுதான்.
பெர்லின் சுவர் இடிந்ததுபோல..எப்படி உடைந்தது. தூக்கமின்றி கழிந்தது அன்று என் இரவு.

சின்னவயசு ஞாபகம் அந்த குச்சில்பற்றி. அம்மா, சித்தி,மாமி மற்றும் பல பெண்களை அந்த
இருட்டறை கைதியாக்கியிருக்கிறது. தூக்கிவிடப்பட்ட தண்ணியும், ஒரமாய் வைக்கப்பட்ட சாதமும்,
தொடாத சில்வர்தட்டும், கிழிந்த துணியும், அழுகும் மண்ணெண்ணெய் விளக்குமாய் மூன்று இரவுகளை
அவர்கள் கடக்கவேண்டும், சிந்துபாத்தின் தொடர்கதை போல ஒவ்வொரு மாதமும். குளிக்காத தலையும்,
பொட்டுவைக்காத நெத்தியுமான துறவிமேக்கப்போல இவர்கள். நான் தீண்டப்படாதவர்களை என் நகரவாழ்க்கையில்
இளைய தலைமுறையில் பார்த்ததில்லை. ஆனால் இது வீட்டிற்குள்ளான அனுமதிக்கப்பட்ட, ஆசிர்வதிக்கப்பட்ட,
ஆசிர்வதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட, சில சமயம் தீண்டப்படாதவர்களே சந்தோசமாய்
அனுபவிக்கிற தீண்டாமை.

“டேய் !.. அங்கேபோய் ஆடிண்டு நிக்காதடா.. ” பாட்டி கொஞ்சல் கலந்த அதிகாரமாய் சொல்லுவாள்.
வேலைக்காரி ஈஸ்வரமும், சாண்டில்யன், கல்கி, விகடன், குமுதம் போன்றவைகளின் அனுமதி அதை
வாசகசாலையாக்கும். ஏதோ ஆராய்ச்சி மாணவிகள் போல, அடுத்தநாள் பல்கலைகழகத்தேர்வு போலவும்
விழுந்து விழுந்து படிப்பார்கள். பொன்னியின் செல்வன் இரண்டு நாளுக்குள் முடித்துவிட்டு ‘கடல்புறாவையும்’
இவர்கள் பாதிக்குமேல் படித்துவிடுவார்கள். லட்சுமி, சிவசங்கரி இரண்டாவது வாசிப்பிற்கு. புத்தகம்
அந்த தெருவின் ஒவ்வொரு வீட்டின் குச்சிலுக்கும் போகவேண்டும். விமர்சனங்கள், ஆய்வுரைகள் எல்லாம்
தோட்டத்தில் நின்றவறோ, கொல்லைப்புறவாசலில் குத்திட்டவாறோ நடக்கும். வந்தியத்தேவன்களின்
வதைப்படலம் தீட்டுக்குளியலோடு தீரும். கண்ணீர்மல்க சோழ, சேர, பாண்டிய அரசர்களுக்காக அந்த
மூன்று நாட்களிலும் அஞ்சலி( !) செய்வார்கள். அந்த தெருவின் எந்த குச்சில் எப்போது திறக்கும், மூடும்
என்ற கணக்கு திண்ணைப்பாட்டிகளின், ( பெரும்பாலும், மொட்டைப்பாட்டிகளின்) மீட்டிங்கில்
தினசரி அலசப்படும் – பாட்டிகளின் பார்லிமெண்ட் படு ஸார்ப்பானது.

‘ஏண்டி, உம்மாட்டுப்பொண்ணுக்கு மூணாவது நானில்லையோ.. நாளைக்கு தலைக்கா.. ”
“என்னவோ வலிவலின்னு பிராணனை வாங்கறா.. விளக்கெண்ணெய் கொடுத்தும் ஒண்ணுமாகலை..
பத்தியச்சாப்பாடு வேணாமின்னு. நாக்கை தொங்கப்போட்டுண்டு அலையறா.. வலிக்கமா என்ன
பண்ணும்.. ”
“கொஞ்சும் சீரகத்தோடு மஞ்சப்பொடியப்போட்டு கஷாயம் கொடுடி.. கழுதைக்கு.. பாவம் பொம்மனாட்டி வலி..”
“என்ன பண்றது மாமி.. முன்னாடி வந்து நின்னுட்டா.. ஏகாதசியும் அதுவுமா.. இரண்டாந்தரம் குளிச்சிட்டேன்.. சிவபூசை பண்ணனுமோன்னோ..”
“அப்படி என்னதான் பேசுவாளோ.. இவன் தாழ்வராத்துல உக்காந்திண்டிருக்கான். அவ குச்சில.. என்னமோ
கதை பிடிச்சு பேசறதுகளாம். .. கண்றாவி.. அவன் வாயில்லாப் பூச்சியாச்சு.. ”
“தொடுப்பு. கிடுப்பு இல்லாம இருந்தா போதுண்டி.. எப்படியோ நாசமாப் போறதுகள்.. வாயில சனிடி
உனக்கு .. பிள்ளைய ரொம்ப பிறாண்டாதே..”
“குளிச்சா போதுமா.. என்ன.. அடுத்த இரண்டு நா அடுக்களை பக்கமே வரதேண்ணுட்டேன்.. மனுசா
உடம்பு..குழாயா என்ன.. மூடின ஒண்ணே நின்னுபோறதுக்கு..”
“பார்வததுக்கு மொத்தமா நின்னுருத்தா.. வந்து.. வந்து.. போயிண்டிருந்ததே.. என்ன ஆச்சு..”

அவர்களின் உலகம் 50,60,70 களின் உலகம். சானடரி நாப்கின்கள் மத்தியதர குடும்பத்தை தொடாத பழந்துணிகளின் காலம். 70களின் இறுதியில் காலம் மாறிப்போனது.. எந்தப்பாட்டியும் மொட்டைஅடித்துக் கொள்வதில்லை. 80,90 களில் இந்தப்பாட்டிகளின் ராஜ்ஜியம் அடங்கிப்போய் அடுத்ததலைமுறை அம்மாவானது. அக்கிரகாரங்கள் மாறிப்போயின. நகரங்களை நோக்கிய படையெடுப்பு, கிராமப்புரம் சார்ந்த வாழ்க்கைமாறல், மாற்றங்களை பார்த்து மருளாமல் முணுமுணுப்போடு ஏற்றுக்கொள்ளத்துவங்கியது. 70, 80களும், 90களிலும் ஏற்பட்ட பெண்கல்வி ஒரளவு வெளிச்சத்தை மத்தியதர வர்க்கத்தினரிடம் கொண்டுசேர்த்தது. அதோடு பெண்களின் வேலை அவசியமும், விழிப்புணர்வும், வெளியுலத்தொடர்பும் அவர்களின் சமையலறை மூளையை வெளிச்சமிட்டு காட்டியது.

யார் இந்த மாற்றத்திற்கு காரணம் ? ஊர்கூடி இழுத்ததேரா அது, காலத்தின் மாற்றமா, யார் சொன்னாலும் சொல்லாவிடினும் மானிடகுலம் காலம், காலமாய் பழையன கழிந்து, புதியன புகுத்தியிருக்கிறதா ? பாரதியையோ, பாரதிதாசனையோ, பெரியாரையோ காரணம் காட்டலாம். ஆனால் அவர்களெல்லாம் வெறும் தமிழ் நாட்டில் மட்டும்தானே சிந்தனை குளத்தில்
கல்லெறிந்தவர்கள். இன்றும் அந்த வீட்டில் மாதாந்திரவலியில்லாமல் இருக்காது. ஏன் உதிர்ந்தது அந்த குச்சில். இது வெறும் இடப்பிரச்சினை மட்டுமல்லவே. யோசிக்க, யோசிக்க என்னுள் சில சிந்தனை சுருள்கள். கடைசியாய் எனது தீர்ப்பு : கல்விக்கும், அறிவியலுக்கும், முக்கியமாய் நாம் இலகுவாய் மறந்துபோய்விட்ட சில நிறுவனங்களுக்கும். பெரிய மாற்றத்திற்கான காரணி எது ? சானடரி நாப்கின் .

1980களின் இறுதிகளில்தான் அந்த மாற்றம் விசுவரூபமாய் தலை எடுத்தது. அறிவியிலும், தொழில்நுட்பமும், வியாபாரமும்
(அரசியல் காரணம் வேண்டுவோர் முதலாளித்துவம் என்று படித்துக்கொள்ளலாம்..) அசாதரணமான மாற்றங்களை மெளனமாய் சாதித்துக்காட்ட ஆரம்பித்தன. நம் குடும்பங்களில் வெளிப்படையாக பேச பயப்படும் வெட்கப்படும் விசயங்களுக்கான பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது ? அறிமுகப்படுத்துவது.

1989-ல் P&G நிறுவனம் நாப்கின்களை நமது சந்தையில் அறிமுகப்படுத்திய போது எடுத்த பிராண்ட் நடவடிக்கைகள், அதற்கு செலவழித்த பொருள், அதற்கு பின்னான திட்டங்கள், அவற்றால் ஏற்பட்ட மாற்றங்கள் எந்த பெண்ணிய சிந்தானவாதிகளின் தாக்கத்தைவிட எந்தவிதத்திலும் குறைந்ததில்லை.

சந்தைப்பிரிவு : பெண்கள் உடல்நலம் மற்றும் சுகாதாரத்திற்கான பொருட்கள்
முந்தைய உபயோகம் : துணி, கயிறுகட்டிய துணிகள், பெல்டாலான துணிகள்
சந்தை சவால்கள் :
அ) பழைய பழக்கம். சின்ன மாற்றங்கள் மட்டுமல்ல..பெரியமாற்றம் தேவைபடும்.
பழைய மாற்றத்திலிருந்து வளரும் சின்ன கிளையில்ல. (Big mindshift. Change is not incremetnal..
it is distriptive.. )
ஆ) பழக்கம் உடைக்க, இது சுகாதார முறை என்று வெகுசன புரிதல்செய்ய – Mass education தேவை.

பொருள் அறிமுகம்: அம்மாவின் மூலமும் வெகுசில நேரங்களில் டாக்டர்கள் மூலமாகவும்
இந்திய பெண்களின் சந்தை அளவு : 50 மில்லியனுக்குமேல்
தேவைப்படுவர்களின் சந்தை : 30- 35% ( தோராயமாக.. 35 கோடி)
[வயதுக்கு வரும் வயது குறைந்துவருகிறது என்பதும், நடுத்தர இளைஞிகளின் தேவையும், பணம் சம்பாதிக்கும்
வாய்ப்பும் கூடும் வாய்ப்பு அதிகமாதல் பொருட்டு சந்தையின் அளவு கூடுவதற்கே வாய்ப்பு அதிகமென்கிறது
ஆய்வுகள்..பெரிய சந்தையின் ஒரு துளிமட்டுமே இப்போது உபயோகிக்கிறது. ]

சானடரி நாப்கின்களின் பங்குச்சந்தை : 600 கோடி..( $44 மில்லியன் டாலர்)
இந்தியாவில் வேகமாக வளரும் நுகர்பொருள் சந்தையில் முதலிடம் பிடிப்பது சானடரிநாப்கின்களின் சந்தை.
இப்போதைய பொருட்களின் விலை : 26- 60 ரூபாய் வரைக்கும் ( 10லிருந்து 8 நாப்கின்கள்)
ஒன்றின்விலை : ரூ 3 லிருந்து 10 ரூபாய் வரை.
ஒருமாதத்திற்கான உபயோகம் : 4 பேடிலிருந்து 8 பேடுவரைக்கும் ( சராசரியாக ஆறு பேடு)
பொருட்களின் அளவு (Nos.) : 58333334.( வாரத்திற்கு ஆறு பேடுகள் தோராயமாக)
சந்தையில் பங்கேற்கும் கம்பெனிகள் : P&G, Johnson & Johnson , Dabur and Gufic.

மார்க்கெட் பொருட்களின் விலை :
விஸ்பர் அல்ட்ரா : Rs. 60 ( 8 pads) , விஸ்பர்சாய்ஸ் : Rs. 26 ( 8 pads) ,
விஸ்பர் ஹெவிபுளோ : Rs. 65 ( 8 pads) [இந்திய சந்தையில் 2007ல் விலை]

ORG DATA (Market share %, Volume Share%)
J&J – (45.4% , 59%)
P&G – (42.7 % , 26%)
Kimberly Clark(Kotex brand) – 8.4% , 10%.

விளம்பரபடுத்தலில் விளைவுகள்பற்றி, திட்டங்கள்பற்றி, விளம்பரக்கம்பெனியின் வலைதளத்திலிருந்து :
” The marketing of Whisper is a classic case of Brand building .The initial ads were striking ones featuring mother talking about educating the daughter about using sanitary napkins.The communication was very sensitively planned since this product is something that we Indians seldom discuss in public. The campaigns was successful in erasing the stigma attached with these kind of products. Napkins were positioned as a modern hygiene way of protecting your lifestyle even on ” those days” the ads said.. ”

சில சிந்தனைகள் :
இத்தகைய பொருட்கள் பெண்கள் சுகாதாரத்தையும், உடல் நலத்தையும் பேணுகின்றன என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் அவை வெறும் நகரமக்களின் பயன்படாகவே அமைந்துவிடுகிறது. இன்னும் இவை கிராமப்புறங்களை எட்டிவிடவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இந்திய கிராமங்களுக்காக ஏன் இந்திய அரசு மருத்துவமனைகளில்
இலவசமாகவோ அல்லது குறைந்தவிலையிலோ இந்த பொருட்கள் வழங்ககூடாது. இரண்டு ரூபாய்க்கு அரிசி
கிடைக்கும்போது ஒரு ரூபாய்க்கு ஐந்து நாப்கின்கள் கிடைக்க வழிசெய்யலாம். இது வெறும் விலை சார்ந்தத்து மட்டுமல்ல. இந்தியபெண்களின் சுகாதரம் சார்ந்தது கூட. இந்த அறிவை பரப்ப, இந்திய கிராமப்புற மருத்துவமனைகளும், அரசுசார தொண்டுநிறுவனங்களும் ஈடுபடுத்தப்படவேண்டும். எய்ட்ஸ் அறிவை பரப்ப ஸ்பான்சர் வழங்குவதைபோல சில தனியார்
நிறுவனங்களும் இதற்கு கை கொடுக்கலாம். இந்திய நிறுவனங்கள் டாடாவோ, கோத்ரேஜ்ஜோ இந்திய கிராமங்களுக்கான நாப்கின்களை மலிவுவிலையில் அறிமுகப்படுத்தலாம். ரிலையன்சின் 500ரூபாய் மொபைல் போல. ஒரு ரூபாயில் இந்தியவெல்லாம் பேசமுடிகிற போது 35 கோடி மக்களுக்கான சந்தையை உண்மையில் லாபகரமாக்கமுடியும். குறைந்தவிலை காட்டன் நிறைந்த ரீயூசபிள்(மறுஉபயோகம்) நாப்கின்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் விலையும் குறைந்து உபயோகப்பவரின் சந்தை விரிவடையலாம்.

இதென்ன பேச்சு, நாப்கின் மாற்றத்தால் பெண்ணியம் புலர்ந்துவிடுமா என்ன ? புரட்சியாளராகவோ, திண்ணைப்பாட்டிகளாகவோ புலம்பாதீர்கள். எண்ணாதீர்கள். மாதந்திரவலி, கர்ப்பம், குழந்தை, பெண்ணிண ஓரினச்சேர்க்கை, ஓரின கல்யாணம்,
திருமணம் என்ற பந்தத்தை கேள்விக்குள்ளாக்கல், வெறுமனே சேர்ந்து வாழ்தல், பகிங்கிர உறவுப்பகிர்தல், ஆண்-பெண் பந்தத்தை வேறோரு அடைப்புக்குள் கொண்டுசெல்லுதல், பெண்ணுக்குதேவையான உரிமைகளை எல்லாதரத்திலும் பெறுதல், தேவையானால் ஆண் உலகத்தை ஒதுக்குதல் – இப்படி எல்லாவிசயங்களும் பெண்ணிய விடுதலை தலைப்பின் கீழ் பேசப்படும்.
யாருக்கு தெரியும், இவற்றில் சில விசயங்கள் புதியசந்தைகளை, புதிய சேவைகளை உருவாக்கலாம். (New market, New service..)

நான் சொல்லவருவது இதுதான்: பெண் சமுதாயத்தில் எந்த தத்துவக்கொம்பர்களாலும், எழுத்தாளர்களாலும் ஏற்படுத்தமுடியாத (வெறும் சொல்ஜம்பம்) மாற்றத்தை அறிவியிலும், வியாபாரமும், ( முதலாளித்துவம் என்று படித்துக்கொள்ளலாம்..) சர்வசாதரணமாய், மெளனமாய் சாதித்துக்காட்டிருக்கிறது. இருட்டறையில் உள்ளதடா உலகம் என்று கவிதைபாடாமல், சரிசமமாய் ஆகிவிட்டோமென கும்மியடிக்கமால், ஏன் அடிமையானாள் என்று தாடி சொரியாமல் – நாப்கின்களும்,
விஸ்பரும், லீவரும், டெஸ்ட்டியூப் பேபேபிகளும், டாட்டாட் கேஎஸ்களும் சாதித்துக்கொண்டிருக்கும்.

இந்தக்கருத்தை பகிர்ந்துகொண்ட போது எனக்குகிடைத்த சில எதிர்வினைகள் :

[“பூர்ஷ்வ சிந்தனையாளன் நீ, இந்த கம்பெனிகளெல்லாம் பணத்தின்பின்னால் ஓடும் குள்ள நரிகள், அவைகளுக்கு
மானுட சேவையைவிட வருடாந்திர லாபம்தான் முக்கியம்..” என் தீவிர இடதுசாரி நண்பர் ]

[“சமுதாய சிந்தனைமாற்றம்தான்.. பெண்களை வேலைக்கும் மற்றபிற இடங்களுக்கும் நகர நிர்பந்தித்தது. பெண்
கல்வி, பெண் வேலைவாய்ப்பு, பெண் உடல்சுகாதாரம் போன்ற தத்துவ,சமூக மாற்றங்களினால் ஏற்பட்ட தேவையைத்தான்
இந்த வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டன. நாளைக்கு ஓரினச்சேர்க்கை உடம்பிற்கு நல்லது என்று
அறிவியல் உலகமும், அதில் தப்பில்லை என்று வாட்டிகனும் எடுத்துக்கொள்ளும்போது, இதே நிறுவனங்கள் அதையும்
சந்தைப்படுத்தி புதிய பொருட்களை உற்பத்திசெய்து நம் தலையில் கட்டிவிடும்…. ஆகவே சமுதாயதேவைகளை
மாற்றங்களை முதலில் கொண்டுவருவது புரட்சியாளர்களும், எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும்தான்..
பின்னர் அது ஏற்படுத்திக்கொடுக்கிற சந்தையிலிருந்து பணம் பண்ணுவதே இந்த நிறுவனங்களின் வேலை..”
எனது இன்னொரு நண்பர் ..]

[“சில பொருட்களும், சேவைகளும் உண்மையில் பெண்களுக்கு நன்மைதான் செய்கின்றன. ஆனாலும், இந்த மாற்றங்கள்
மெதுவானவை. ஆண் ஆதிக்கபன்றிகளோடு போராட இந்த வேகம் போதுமானதாக இருக்காது. பெண்களுக்கு வித்தியசமாய்
விலங்கு பூட்ட ஆண்களுக்கு நன்றாகவே தெரியும். உன் சந்தை சிந்தனை புத்தகப்படுத்தலுக்கு நன்றாகயிருக்கலாம்”
பெண் சிந்தனையாளர், எழுத்தாளர்..]

இப்படியாக வினை,எதிர்வினை என்று போய்க்கொண்டேயிக்கலாம். இதிலிருந்து நீங்களாகவே சில சிந்தனைகிளைகளை
கிளப்பிக்கொள்ளுங்கள். சிந்தானவாதிகள் வெறும் சிந்தனைமுத்துக்களை உதிர்த்துவிட்டு போய்விடுவார்கள். அதை மக்களிடையே வசதிப்படுத்த, நிலைநிறுத்த, சிந்தாந்தங்களிருந்து செயல்தளத்திற்கு கொண்டு செல்பவை சந்தைப்படுத்தப்பட்ட செயல்களோ, பொருள்களோ, சேவைகளோதான் என்பது என் கருத்து. எனக்கென்னவோ விஷ்பர், ஜான்சன் அண்ட் ஜான்சன், லீவரின் சானடரி நாப்கின்கள் பெண் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் தத்துவக்கொம்பர்களாலும், எழுத்தாளர்களாலும் ஏற்படுத்திய மாற்றங்களைவிட குறைந்ததில்லை. இப்படித்தான் அறிவியிலும், வியாபாரமும் ( முதலாளித்துவம் என்று படித்துக்கொள்ளலாம்..) அசகாய மாற்றங்களை மெளனமாய் சாதித்துக்காட்டிருக்கிறது.
எனது தீர்ப்பு : கல்விக்கும், அறிவியலுக்கும், முக்கியமாய் நாம் இலகுவாய் மறந்துபோய்விட்ட சில நிறுவனங்களுக்கும்.
சானடரி நாப்கின் ஒரு பெரியமாற்றத்தை, இலகுவை அடுத்த தலைமுறைக்கு எடுத்துசென்றிருக்கிறது. நிறுவனங்களின்
லாபத்தோடு பெண்ணிய சமுதாயமும் பெருத்தலாபம் பெற்றிருக்கிறது.
விளைவு : உடைந்தது தூர்மண(¡)குச்சில்.

மறுபடியும், தூர்மணா குச்சிலுக்கு திரும்பிகிறேன். அந்த பழைய வீட்டைப்பார்த்துவிட்டு நிறைய பேச்சுக்களோடு
ஹோட்டல் அடைந்தோம். அந்த இரவு முடிந்தது. இரண்டு நாளில் தெய்வ வழிபாடுகள், சுற்றம் காணல்,
குடும்ப உரசல்கள், குலாவல்கள் எல்லாம் முடிந்தது. குலதெய்வ வழிபாடெல்லாம் முடிந்து திரும்பும் நாள்.

“எல்லாம் நல்லபடியாய் கழிஞ்சது அம்மா… நல்லவேளை ஸ்வாமி காரியமெல்லாம் முடிஞ்சதக்கப்பறம்.. நான் இன்னிக்குதான் ஆயிட்டேன்..” மனைவி என் அம்மாவிடம் ஹோட்டல் ரூமில் முணுமுணுத்துக்கொண்டிருந்தாள். மெதுவாய் எழுந்து
நகர்ந்துபோனேன். என்னை அறியாமல் தள்ளி படுத்துக்கொண்டேன். காரணமில்லாமல் பக்கத்து ரூமிலிருந்த சுற்றங்களோடு பேசிக்கொண்டுருந்தேன். எப்படி தொடமுடியும்.. என்னதான் விஸ்பரிருந்தாலும்.. படக்கென புரிந்தது. தூர்மண குச்சில் உடையவில்லை. இன்னும் என்னோடுதான் ஒட்டிக்கொண்டுருக்கிறதோ ? கொஞ்சநேரத்திற்கு பிறகு உள்ளேபோனபோது
பாவம், அவள் வலிமுகத்தோடு தூங்கிக்கொண்டிருந்தாள். எந்த சாமிக்காகவோ வலி தாங்கி பாவம், கொஞ்சம் கைதடவி
நன்றி சொல்லிருக்கலாமோ.. நினைத்தேன். எண்ணம் என்னிலிருந்து உடனடியாக எந்த குற்ற உணர்வுமின்றி கலைந்தது.
என் முகம், கை கால்களை காரணமில்லாமல் அலம்பிக்கொண்டேன். அழுக்கானது மனது..வலித்ததும் கூட.

இதை வலியோடு என் கன்னத்தில் அறைந்து உணர்த்தியது அம்பையின் சிறகுகள் முறியும்
தொகுப்பிலுள்ள ஸஞ்சாரி என்கிற கதை.

கதைத்தொகுப்பு : சிறகுகள் முறியும் (அம்பை)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் Rs.80/-
Email : kalachuvadu@vsnl.com
கதை : ஸஞ்சாரி
கதாநாயகன் : ரங்கா..
கதாநாயகி : ருக்மா

சில சிதறல்களை புத்தகத்திலிருந்து :

அவன் ஒரு நல்ல பிராமணப்பையன்.
மீன் வறுவல் மணத்திலும், பூணூலை எரித்துவிட்ட வீரத்திலும், ஸிகரெட் புகையிலும் தன் பிராமணத்தனம்
மடிந்து தான் தன் வகுப்பிலிருந்து விடுதலை அடைந்துவிட்டதாக அவன் எண்ணினான்.
அப்படியும் அவன் ஒரு பிராமணப் பையனே.

இதை அவன் அடிக்கடி நிரூபித்தான்.
அவனுக்கு சில சுணக்கங்கள் ஏற்படுவதுண்டு.
“இன்னிக்கு புத்த விஹார் போலாமா ?”
“வேண்டாமே.. ரங்கா.. வயத்து வலி..”
” ‘அந்த’ வலியா ?
“ம்”

தன்னை அறியாமல் அவன் ஒரடி விலகிவிடுவான். பிறகு அவளுடன் பிணையும் விரல்களில் ஒரு கூச்சம்
இருப்பதாக அவளுக்குத தோன்றும். அவன் வீட்டுக்குப்போய்க் குளிப்பானோ? தன்னைச் சுத்தப்படுத்திக்
கொள்வானோ ? அதெல்லாம் செய்யாவிட்டாலும் அந்த மூன்று நாட்களும் மர விரல்களால் தன்னைத்
தொடுவானோ ? சபிக்கப்பட்டவளைப் போல் பார்ப்பானோ ?

“என்ன யோசனை ? ”
“ம்.. ஒண்ணுமில்லையே.. ”
நீ ஒரு பிராமணன். வைதீக வேஷங்களை துறந்துவிட்டாலும் நீ ஒரு பிராமணன். என்னை இப்போது
என் உடைகள் இல்லாமல் உன்னால் பார்க்க முடியுமோ ? என் வயிறை, இதமாக தடவ முடியுமோ ?
தடவிப்பின் ஏதோ ஒரு உணர்வில் நீ கையை அலம்பிக்கொள்வாயோ ?

“பேசாமலே வரயே ? ”
“என்ன பேசறது ”
“நீ ஒரு பிராமணன் ”
“என்ன உளர்றே ..”
“நிஜம்தான். பிராமணணோட அத்தனை அலங்காரங்களையும் ஒதறிட்டு நீ அம்மணமா நின்னாலும்
அது பொடரிலே ஏறி உக்காந்துண்டு உன்னை வெரட்டும்..!”
“கெடையவே கிடையாது. பிராமணனுக்கு ஸெக்ஸ்ங்கிறது ஒரு பாவம். நான் ஒரு புரட்சிகரமானவன்.
எனக்கு ஸெக்ஸ்ங்கிறது ஒரு அழகான, வாழ்க்கையோட ஒரு அம்சம்.. ”
சிரிப்பு.
“ஏன் சிரிக்கிறே ?”
“ஆடம்லேந்து இன்னிவரை எல்லாரும்தான் ஸெக்சை அனுபவிச்சுண்டு வரா. இதுலே என்ன புரட்சி
இருக்கு ? பார்க்கப்போனா ஸெக்ஸ் வேண்டாங்கறது வேணா ஒரு புரட்சி..”
“அப்படியில்லே. இவ்வளவு சுகந்திரமா, வெளிப்படையா..”
“எங்க வீட்டு நாய் டைகர்மாதிரி..”
……
… ‘அலைகள் மோதும் மணலில் உடலின் மற்றும் மனத்தின் அழகுகள் எல்லாம் பீரிட உன்னால்
ஒருத்தியைப் புணர முடியுமா? .. எதிரே வரும் பெண்ணை ஒரு உடலாய் மதிக்காமல் பார்க்க
முடியுமோ ? அப்படி பார்த்தாலும் அதை ரஸனையோடு செய்யமுடியுமோ ? அடேய் பிராமணா..
நீ என்ன புரட்சியைச் செய்ய போகிறாய் ?..

அவன் யோசித்தான். ….” நான் பெண் என்று நினைக்கும் அம்சங்களை உடையவளாய் இருந்தால்
எவ்வளவு நன்றாகயிருக்கும்.. ”

……..

யமுனை மந்தகதியில் ஓடும் அந்த இடத்தின் அமைதி அவளுக்குத் தேவை.

ஒரு சிறுபடகில் இருவர் ஏறிப்போனார்கள் – காதலர்கள். அக்கரைக்குப்போய் அமர்வார்கள்; பேசுவார்கள் ;
திட்டம் போடுவார்கள் ; தங்கள் வாழ்க்கைகளை இவர்கள் வரையறுத்து வைத்து விடுவார்கள் ; ஒரு
நல்ல ஏற்பாட்டை செய்துகொள்வார்கள்.

அவள் செய்யக்கூடியவை.
சமையல்
அன்புசெலுத்தல்
அம்மாவாதல்
அவனையே காதலித்தல்
அவனையே அடுத்த பிறப்பிலும் அடைய வேண்டிக்கொள்ளல்
அப்படி இல்லையென்றால் எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளல் – அல்லது
இன்னொருவன் ; கிடைத்தால்.
அவன் செய்வான் என்று எதிர்பார்ப்பவை.
சம்பாதித்தல்
குலத்தை நசிக்காமல் வளர்த்தல்
அன்பு செலுத்துதல்
எப்போதெல்லால் அவள் உரியவள் என்று
எண்ணுகிறானோ
அப்போது அவள் பிடாரியாகப் போனால் இவன்
சகித்துக்கொள்ளல் – அல்லது
மற்றொருத்தி.

எழுதாத இந்த சட்டங்களோடு இவர்கள் ஏற்பாடு செய்துகொள்வார்கள். ஒருவேளை இந்த
மண்ணோடு வாசனை மீறியவர்களானால், அவன் ராமன் தான் ; அவள் சீதைதான். மாறி அமைந்துவிட்டால்
இவர்களை ரட்சிக்கவே சில மத விற்பன்னர்கள் உண்டு. ஒரு சிக்கலும் சிக்கலாக நின்றுவிடாத மண் இது.
சப்பைக் கட்டுகட்டி, அதை தெய்வீகமாக்க சில யாக சாலைகள் நடத்தும் வியாபாரிகள் உண்டு.
….
ரங்கா.. உனக்கு அறிவு ஜீவியான ஆனால் ஒர் எல்லைக்குட்பட்ட, சுகந்திரமான ஆனால் உனக்கு
கட்டுப்பட்ட மனைவி வாய்ப்பாள். நீ சந்தோசமாகவே இருப்பாய். ஏனென்றால் நீ ஒரு நல்ல
பிராமணப்பையன் மட்டுமே.
….

அம்பையின் ருக்மா என்னை அறைகிறாள். ஒவ்வொரு மாதமும் துரத்துகிறாள். என் அழுக்கை காட்டி இளிக்கிறாள்.
எனக்கும் மாதாமாதம் வலிக்கிறது. என் ரங்கா குணம் மெல்ல மாறலாம் – கொஞ்சம் கஸ்டம்தான். என் மூளைக்கு தேவை, ஒரு சானடரி நாப்கின். யோசித்து பாருங்கள் நம் மனைவிகளுக்குள்ளும் ருக்மாவின் சாயலும் படிமானமும் கொஞ்சமாவதிருக்கத்தான் செய்யும், நமக்குத்தெரியாமலே.

இதுபோலவே பரப்பாகபேசப்பட்ட சிறகுகள் முறியும் கதையும்.

கதை : சிறகுகள் முறியும்
கதாநாயகன்: பாஸ்கரன்
கதாநாயகி : சாயா

சிறகுகள் முறியும் – ஒரு சாதாரண நடுத்தர பிராமண குடும்பபெண்ணின் கனவுகள் திருமணம் என்கிற
நிறுவனத்தால் எப்படி சிதைக்கப்படுகிறது என்பதைப்பற்றித்தான். இது சாதாரணக்கதைதான். எது இதை அசாதரணமாக்கிறது ? கதை முடிவுதான். நாம் எதிர்பார்த்ததுபோல் தற்கொலையோ, வாழ்க்கை தியாகமோயில்லை. அடுத்த கர்ப்பம்
கூட அவளைபொறுத்தவரையில் கடன்சுமையாகத்தான் தெரிகிறது. தாயின் சமையலறை வீணை தந்தி அறுந்துகிடப்பதைப்போல.. தனது வாழ்க்கையின் அழகியலும், நுணுக்கமான அலட்சியங்களும், கனவும்
நசுக்கப்பட்டு தாரைவார்க்கப்பட்டதான துர்பாக்கியம் அவளுக்கு. . அவளின் அதீத கனவா, ஆண்களின்
மலட்டுதனமான புரியாதன்மையா, இந்த இரு உலகங்கள் எப்போதுமே ஒரு தீவுதானோ..அந்த உலகத்தை
அப்படியே அவள் ஏற்றுக்கொள்கிறாள். அவ்வப்போது அவளது கனவுலகத்தில் ஆணுக்கெதிராக சட்டம்
போட்டுக்கொள்கிறாள். இன்னமும் இப்படியான பெண்கள் ஒன்றும் அதிசியமில்லை. நம் மனைவியோ,
சகோதரியோ, அயல்வீட்டிலோ தாராளமாய் இந்தமுகங்களை சந்திக்கலாம், வித்தியசமான விழியிருந்தால்.

“இன்னிக்கு சக்கரை பொங்கல் எப்படி ”
” நல்லாத்தானிருந்தது. ஆனாலும் நெய் ஜாஸ்தி.. பாத்து செலவு பண்ணு..”

“நான் பண்ற சமையல் பிடிச்சிருக்குதானா.. ”
“நீ நன்னாத்தான் சமைக்கிற.. ஆனா சாமன அதிகமா வீணடிச்சிர்ற.. ஆனாலும் ஹோட்டல்ல சாப்பிடறதைவிட
லாபம்தானே.. ”

‘அவன் காசை செலவழித்த குரூரமான மகிழ்ச்சி அந்த எண்ணத்தை அடித்துவிடும்.'[தீபாவளிப்பட்டுப்புடவை]
அடுத்த பிரசவம் : [ “இது வேற அதிகப்படி செலவா ? ” ]

அவள் தன் மனதுக்குள்ளே சட்டம் இயற்றிக்கொள்கிறாள். .

1) ரோமம் இல்லாத வழவழத்த மார்பு உள்ள ஆண்கள் மணக்க கூடாது என்றொரு சட்டம்.
……
3) ஆவலுடன் மனைவியின் கண்கள் ஒரு பொருளின்மீது படியும் போது பர்சை கெட்டியாக மூடிக் கொள்ளும் கணவனின் பர்ஸ் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றொரு சட்டம்.

இப்படியாக சட்டம் போட்டுக்கொண்டு கனவுலகில் வாழும் அவளின் சிறகுகள் முறிகின்றன. அவைகளை சாதரணமாய்
ஏற்றுக்கொண்டு வாழ்க்கைபோய்க்கொண்டிருக்கிறது. திருமணத்திற்குபிறகான வாழ்க்கையை நம் மனைவி உண்மையில்
வாழ்கிறாளா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளப்படவேண்டிய வினாவை அநாயாசமாகத்தூக்கிபோடுகிறது இந்தக்கதை.
ஹ¥ம்.. எத்தனைபேர் என்ன எழுதினாலும் எனக்குள்ளேயிருக்கிற ரங்காவும், பாஸ்கரனும் மெல்ல மெல்லத்தான் போவார்கள்
போலிருக்கிறது.

அம்பை – அறிமுகம் தேவையில்லாத நாடறிந்த தீவிர (!) பெண்ணிய எழுத்தாளர். டாக்டர் சி.எஸ்.லஷ்மி என்பது இவரின் பெயர். டாக்டர் பட்டம் அமெரிக்கன் ஸ்டடீஷில் .SPARROW ( Sound & Picture Archives for Research on Women) அமைப்பின் நிறுவன இயக்குநர். சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான் என்ற சிறுகதைகளின் வெளியிட்டுள்ளார். Singer and the Song, Mirrors and Gestures என்ற ஆங்கில நூல்களை எழுதியுள்ளார். 1960களில் புறப்பட்ட பெண் எழுத்தாளர்களில் மிகக் குறைவாகவே எழுதி, தற்போது அதிகமாக பேசப்படுபவர். விளக்கு அமைப்பின் பரிசு காலம் தாழ்த்திவந்தாலும் சரியான அங்கீகாரம்.

சிறகுகள் முறியும் தொகுப்பில் இவரது முன்னுரை என்னை வெகுவாய் கவர்கிறது. எனக்கு ரொம்பவே பிடித்த கதை
சூரியன் ( 52/100 ) மற்ற கதைகள் உடம்பு, சக்கரநாற்காலி, ஸஞ்சாரி. இந்த கதைகளைவிட இந்த தொகுப்பின் முன்னுரை அம்பையின் ஒரு பானைசோற்றுக்கு பதமான சில சோறுகள்.

“மறுபதிப்புக்கான காரணம் கதைகள் ஒன்று இறவா இலக்கியமாக இருக்கவேண்டும் அல்லது உடனடியாகக கதைகளின் மேல் கவனம் செலுத்துவதற்கு படைப்பளியாவது இறந்திருக்கவேண்டும். இந்த இரண்டு காரணங்களும் இந்த தொகுதியைப் பொறுத்தவரை செல்லாது. இதிலுள்ள கதைகள் “இறவா இலக்கியம்” எனும் தகுதியைப் பெற்றவை அல்ல. 1967ல் தொடங்கி 1976-ல் முடியும் வாழ்க்கை
பயணத் தடத்தினூடே விளைந்த பதிவுகள் இவை எனலாம். … ஒரு பெண் வாழ்க்கையைச் சந்தித்த தருணங்களின் சிதறல்கள் இக்கதைகள் …”

அதிகமாக பேசப்பட்டு எதிர்பார்ப்பினால் படிக்கப்பட்டதாலோ என்னவோ கதைகள் என்னை அதியசமாய் உலுக்கவில்லை.
எல்லா பெண்ணிய எழுத்தாளர்களிடமும், எழுத்துகளிடமும் காணப்படும் உணர்ச்சி குவியல் இவரிடம் குறைவு என்றாலும், இவரது இடதுசாரி பிண்ணணி இவரை இருப்பதையெல்லாம் தகர்த்து, உடைத்து புதிய புரட்சி காணச்செய்கிறது. இந்த உடைப்பில் எந்த சித்தாந்தங்களையும் அவர் விட்டுவைப்பதில்லை. எழுத்தாளராய் எந்தசாரி சிந்தனைகளையும் விமர்சனத்துக்குள்ளாக்கத் தயங்குவதில்லை. எழுத்தாளன் எந்த சித்தாந்ததிற்கும் தலையணை உறை தைத்துக்கொடுக்கவேண்டிய அவசியமற்றவன். அவன் வளர்ந்த பாசறையே ஆனாலும் எழுத்தளானாக அவனது சிறகுகள் எந்த கூட்டிலும் தங்குவதில்லை. [சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், நாஞ்சில்நாடன், ஜெயமோகன் ….சில உதாரணங்கள் )

ஆண் எழுத்தாளர்களின் எழுத்தையும், பார்வையும் நார், நாராய் கிழித்து தோரணம் கட்டும் வேகமும், பெண்களை பற்றி
நீங்கள் என்ன எழுதிக்கிழித்துவிடமுடியும் என்று சொல்லாமல் சொல்வதுபோல் காணப்படும் நோக்கும் அம்பையின்
எழுத்துகளில் உணரமுடியும். உதாரணம் இவரின் மரப்பசு விமர்சனம்(திண்ணையில் தேடி படித்துக்கொள்ளலாம்). அம்பையின்
மரப்பசு விமர்சனத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. கதையாசிரியனை ஏன் அப்படி எழுதவில்லை என்று கேட்பது
சரியான விமர்சனவினையாய் படவில்லை. இதைவிரிவாய் வேறு தளத்தில் விவாதிக்கலாம்.

என்னவாயினும் அம்பையின் எழுத்துகள் கிட்டத்தட்ட நான் பிறப்பதற்கு முன்னே எழுதப்பட்டவை. இத்தனை வருடங்கள்
தாண்டியும் இன்னும் அந்தக் கதைகளின் உண்மை என்னுள் தைத்தபோதுதான் மாற்றங்களின் வேகம் என்னை கவலைக்குள்ளாக்கியது. சமுதாய மாற்றம் அவ்வளவு ஏன் தனிமனித மாற்றம் கூட அவ்வளவு எளிதானதல்ல. என் நம்பிக்கை, சமயம், குடும்பம், கலாச்சாரம் இவைகள் பூவிலங்குகளாக நம் கண்ணுக்குதெரியாமலே நம்மை பூட்டியிருப்பது புரிவதில்லை.
அவர் இல்லையென்று சொன்னாலும் அவை இறவாக்கதைகளுக்கு பக்கம்செல்லும் வல்லமைபடைத்தவையோ ?

முன்னுரையிலிருந்து :
“இவற்றை எழுதிய படைப்பாளியும் இப்போது இல்லை. இக்கதைகளை இறக்கிவைத்துவிட்டு வேறுவேறு கதைகளை,
வெவ்வெறு சமயத்தில் தூக்கியபடி வேறு பயணங்களை மேற்கொள்ளும் முயற்சியில் அவள். ”

சிலருக்கு எழுத்து ஒரு அழகியல் பொழுதுபோக்கு. சில எழுத்தாளருக்கு தன் அறிவுஜீவித்தனத்தின் வெளிப்பாடு, தனது மேதாவிலாசத்தின் விலாசம். சிலருக்கு மட்டுமே எழுத்து வாழ்க்கைக்கு வெகுஅருகிலிருந்து ஏன் வாழ்க்கைக்குள்ளிருந்து வரும். வளரும். அவர்கள் அந்த எழுத்தை எழுதிவிட்டு, வாழ்ந்துவிட்டு அடுத்த வாழ்க்கை, அடுத்த எழுத்து என்று புதியசிறகுகளோடு பறந்துகொண்டேயிருப்பார்கள். அம்பையின் எழுத்தும், வாழ்க்கையும் இதற்குதானோ என்று எண்ணுமளவுக்கு அவரின் செயலும், விளைவும். அவரது தற்போதைய பயணம்தான் SPARROW.

SPARROWவின் டாகுமெண்டரி படங்களை பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது. அவரின் ஆளுமைத்திறனும் வீச்சும், பரிணாமமும் இன்னொரு வானத்தில். அவை என்னிடம் ஏற்படுத்திய தாக்கம் ஏராளம். அவைகள் ஒவ்வொரு எழுத்தாளரும், தமிழக வாசகர்களும் பார்க்கவேண்டிய செல்லுலாய்டு தொகுப்புகள். அவைகளின் வீச்சும், அதிர்வும் அவரின் எந்த சிறுகதை தொகுப்பைவிடவும் பலமாயிருக்கும் என்பது என் கருத்து. ஏன் திண்ணையிலே upload செய்தால்தான் என்ன ?

மறுபடியும் நாம் தொடங்கியகேள்விக்கே வருவோம். இந்த கதை, எழுத்து எல்லாம் எதற்கு ? பெண்ணியவிடுதலைக்கு தானே. எழுத்தை மட்டுமெ கொண்டு பூமியை புரட்டக்கூடிய நெம்புகோல் எழுத்துக்களை கொண்டு பெண்ணியவிடுதலையை சாதித்து விடமுடியுமா ? இந்த கதை என்னிடம் ஏற்படுத்திய பாதிப்புகள் என்னை சுயவிமர்சனம் செய்துகொள்ள தூண்டுவதைவி ட வேறென்ன செய்யமுடியும் ? எழுத்தைவிட அறிவியலும், தொழில்நுட்பமும், நிறுவனங்களும், செயலும் பெண்ணியவிடுதலையை கொடுக்குமா ? இத்தனை சிந்தானாவாதிகள் வந்தபின்னும் ஏன் மாற்றங்கள் ரொம்பவே மெதுவாய் ஏற்படுகின்றன ? மாற்றங்கள் ஏற்பட ஒவ்வொரு தலைமுறைக்கும் காத்துக்கிடக்கவேண்டுமா ? இந்தவேகத்தில் போனால் மைல்களை எப்படித்தொடுவது ?

“வேறு வழியேயில்லை. உடை.. தகர்தெறி.. ஆணைதாக்கு.. இது ஒரு குரூசுப்போர்.. வலியின்றி சுகந்திரமில்லை..தீவிரவாதம்தான் வழி. மயில்கள் இறகுகள் உரிப்பதில்லை. எந்த கோழி சிக்கன் ஆக சம்மதிக்கும்.. ” என்கிறது ஒரு சிந்தனைக்கூடம் ( School of thought)

“இதற்கெல்லாம் கடவுள்,மத, சமய சிந்தனைகள்தான் காரணம்.. சாமி, வேதம்,பூதம், கடவுள். அவைகளை தூக்கி எறி..
தானகாவே விடுதலை பிறக்கும்” என்கிறது மற்றொரு சிந்தனைக்கூடம்.

அதற்குமுன், பெண்விடுதலை என்பதை வரையறுத்துவிடுவோம். அதிகம் விவாதிக்காமல், பாரதியை துணைக்கு அழைத்து
‘ஆணுக்கு பெண் சரிநிகர் சமனமாய், ஆணுக்கு பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்.. ‘ என சில மைல்கற்களை
வரையறுத்துக்கொள்வோம். அப்படியானால் பெண்விடுதலை அடைவது எப்படி ? நாம் சுகந்திரம் அடைந்தது எப்படி ?

இலக்கணம், எழுத்திலிருந்து நமது முறிந்த சிறகுகளை கழுவிவிட்டு, கொஞ்சம் மேலாண்மை கண்ணாடிபோட்டுக்கொண்டு
இந்த பிரச்சனையை அணுகினால் என்ன ? இது என்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு.. கொஞ்சம் போட்டுத்தான் பார்ப்போமே.. மேலாண்மைக்கும், பெண்ணியவிடுதலைக்கும் என்ன சம்பந்தம். ? பார்க்கலாம்..நாம் கையில் எடுத்துக்கொள்ளப்போவது Mr. Moore, எழுதிய Crossing Chasam என்கிற மேலாண்மை தத்துவம். இவர் எப்படி சில தொழில்நுட்பங்கள் அதிவேகமாய் வெகுசன மக்களை சென்றடைந்து மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஆராயும்போது இந்த தத்துவத்தை ( மாடல், framework என்பது சாலப்பொருந்தும்) அறிமுகப்படுத்தினார். அதைக்கொண்டு நம் நாட்டின் விடுதலை, சுகந்திர வரலாற்றின் வளர்ச்சி எப்படியிருந்தது என்பதையும் பெண்ணியவிடுதலைக்கு என்ன தேவை என்பதையும் அறிய முற்படலாம், சில யூகங்களோடும், குழப்பங்களோடும்.

பெண்ணிய விடுதலையும் – மேனேஜ்மெண்ட் தீர்வும் ( பார்வையும்)

பெண்ணிய விடுதலை – இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிற விசயமாகிவிட்டது. நம் கண் முன்னே நம் கண்ணுக்கு
தெரியாத விசித்திர மாற்றம் பெண்பற்றிய மாற்றமாகத்தான் இருக்கிறது. ஒன்றுபட்ட குரலாக ஒலிக்க ஆரம்பித்த எனக்கு தெரிந்த ஒரே விசயம் பெண்ணியமாகத்தான் படுகிறது. சுகந்திரம், தனிநாடு, சாதி நிற வேற்றுமைகள் ஒவ்வொரு தேசத்திற்கும் வேறுபட்டது. அதன் அளவுகள், பரிமாணங்கள், குணங்கள் எல்லாம் இடத்திற்கு இடம் தேசத்திற்கு தேசம் மாறிக்கொண்டேயிருப்பது ஒரு பொதுவான அளவுகோல் நிர்ணயிப்பதிற்கு தடங்கலாய் [குழப்பமாய் ?] அமைகிறது.

உலக முழுமைக்கான பெண் விடுதலை என்று ஒன்று உண்டா ? ஐரோப்பிய தேசத்து பெண்ணிற்கும், காலெஞ்சு பெண்ணிற்கும், அரேபிய பாலைவனப்பெண்ணிற்கும் தேவையான விடுதலை ஒன்றா ? எனது மனைவிக்கும், குமாரமங்கலம் பிர்லாவின் மனைவிக்கும் தேவையான பெண்ணிய விடுதலை என்பது ஒன்றா ? இது அகம் சார்ந்ததா ? புறம் சார்ந்ததா ? மதம் சார்ந்ததா ? ஆங்கிலேய – இந்திய விடுதலை, திராவிட – ஆரிய பிரிவினை, வளர்ந்த நாடு – வளரும் நாடு, தொழிலாளி – முதலாளி இப்படிப்பட்ட போராட்டங்களின் போதைய தெளிவு போராட்ட கோடுகள் இதில் தெளிவாய் இல்லை. இப்போது முழுவதுமாக இல்லை என்று சொல்வதே சரியாகயிருக்கும்.

Crossing the Chasam – என்ற வார்த்தை மேலாண்மை படித்தவர்களுக்கும், தொழில் நுட்ப துறையில் வேலைபார்ப்பவர்களுக்கும் கொஞ்சம் பரிச்சயமான வார்த்தையாயிருக்கும். மற்றவர்களுக்காக சுருக்கமாக :எந்த புது கொள்கையும்/பொருளும்/ தொழில்நுட்பமும்/ தத்துவமும் சந்தைபடுத்தப்படும்போது அதனை நுகர்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைதலாகவேயிருக்கும். இவர்களை முதல்நுகர்வர்கள் ( Early adoptors ) என்று அழைக்கலாம். அதற்கு பின் முதற்பெரும்பான்மை( Early majority), கடைபெரும்பான்மை (Late majority), கடையரிலும் கடையர்கள் (Laggards) Laggards – உலகமே அதை சுவீகரித்தபின் வேறு வழியில்லாமல் அதை வாங்கவோ/நுகரவோ ஆரம்பிப்பார்கள். ஒவ்வொரு கட்டத்தை தாண்டும்போது ஒரு சின்ன இடைவெளி ஏற்படலாம். அதை வெற்றிகரமாய் தாண்டியவுடன்
அந்த கொள்கையும்/பொருளும்/தொழில்நுட்பமும்/தத்துவமும் அடுத்த கட்டத்திற்கு போகும். பின் பெருத்தசந்தையை தானதாக்கிக் கொள்ளும். அப்போது அது வெற்றிக்கனியை தட்டிவிட்டதாய் முரசுகொட்டலாம்.

PICTURE

உதாரணமாய், நமது அலைபேசி தொழில்நுட்பம் ஆரம்பிக்கப்பட்டு இருபது ஆண்டுகளுக்கு பின் தான் அது உலகம் முழுவதும்
அரவணைத்துகொள்ளப்பட்ட தொழில்நுட்பமானது. அது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதை உபயோகித்தவர்கள் வெறும் 2% மட்டுமே இருக்ககூடும் என்கிறார் crossing chasam – தத்துவத்தை அறிமுகப்படுத்திய, ஆராச்சி செய்த மோர் என்கிற தொழில்நுட்ப ஆய்வாளர். இதன் தத்துவம் மேற்கண்ட படத்தை பார்த்தாலே புரிந்துவிடும். முதற்நுகர்வோர் தாண்டி ஒரு பொருளோ/ சேவையோ அதிக மக்களுக்கு சென்றடைய அடுத்த கட்டமான முதற்பெரும்பான்மைக்கு போகவேண்டும். ஆனால் அதற்கிடையில் அந்த பொருளோ/ சேவையோ ஒரு சூழலுக்குள் சிக்கி அடுத்தகட்டத்தை தாண்டுகிறது. இதை ‘டெர்ணாட்டோ’ சுழல் என்கிறார். அந்த சூழலை தாண்டி வர பொருளோ/ சேவையோ பகீரதப்பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. என்னெல்லாம் செய்ய வேண்டுமென்பது நமது பொருள்/சேவையை மற்றும் சந்தையை பொருத்தது. இவ்வாறு ஒவ்வொரு கட்டமும் தாண்ட அது தனக்குள் புதிய பலன்கள்/ பலங்களை உருவாக்கிகொள்ள நேருகிறது. ஒவ்வொரு கட்டத்தாண்டலிலும் தன்னை புதுப்பித்துக்கொள்ளும் பொருளோ/ சேவையோ /
தத்துவமோ முழுமையான சுற்றில் வெற்றிபெற்ற பொருளாய் பரிணமிக்கிறது.

இண்டெலின் சிலிகான் சிப், மைக்ரோசாப்டின் ஒஸ் (os), ஒப்பன் சோர்ஸின் வளர்ச்சி, அண்ணா ஆட்சிக்கு வந்தது, மத்தியில்
பிஜேபி ஆட்சிக்கு வந்தது, திருமாவளவன் வளர்ச்சியும், வளரவேண்டிய பாதையும், கம்யூனிசம் திரும்புமா, இந்துத்துவம் எப்படி
உலக சந்தையின் நுகர்பொருளாகும், இந்திய இலக்கியம் எப்படி உலக இலக்கியத்தில் உன்னதமடையும், இந்திய பிபிஒ எப்படி உலகசந்தையை கட்டிப்போடும் [ இப்போது அடிப்பெதெல்லாம் வெறும் 5% ஜல்லிதான்.. அதற்கே இந்த ஆட்டம் ] –

இப்படி எல்லா வெற்றி பெற்ற/ பெற விழைகிற தத்துவங்களுக்கும்/மனிதர்களுக்கும்/பொருட்களுக்கும் பொருத்திபார்த்து மகிழலாம்/வருத்தப்படலாம்/ஞானமடையலாம் (!) இதை பொருட்களுக்கு மட்டுமின்றி நான் எல்லா தத்துவங்களுக்கும் பொருத்திபார்த்திருக்கிறேன். எல்லா தத்துவங்களும், போரட்டமும் எதற்காக.. ? அவைகள் மண்ணும், மனிதமும் மாண்புறத்தானே.. சுருங்கக்கூறின் அவைகளோ, அவைகளின் விளைவுகளோ மனிதனுக்கான நுகர்பொருள்கள்தானே.. All are products for human consumption..நாம் விவாதிக்கும் பெண்ணியவிடுதலைக்கும் கூட. [ கவனம் : crossing chasam – ஒரு framework தான். அது ஜோசியம் கட்டமல்ல.. அதில் அடங்காத பொருளோ/ சேவையோ விதிவிலக்காயிருக்கலாம். ]

ஒரு சாம்பிளிக்காக ( இந்திய சுகந்திர போரட்டத்தை இந்த மாடலோடு பொருத்திபார்ப்போம் )முதற் சுகந்திரபோரட்டம் ஆரம்பித்தவுடன் அதில் கலந்துகொண்டவர்கள் வெறும் 2% சின்னதொகையாகயிருக்கலாம் (முதற்நுகர்வர்) . முதல் சுகந்திர போரட்டம் ஒரு சின்ன அடையாளமே. பின்னர் அது எப்படி அங்கிடை பொந்தில் வைத்த தீயாய் வளர்ந்து காட்டை வெந்து தணித்தது. முதல்நுகர்வர்கள் தாண்டி முதற்பெரும்பான்மை( Early majority) கூட்டமும் அதைவைத்து கடைப்பெரும்பான்மை( late majority)நுகர்வர்களும்தான் அந்தப்போரட்டத்தை வெற்றிகொண்டதாய் மாற்றுகிறார்கள். முதல் சுகந்திரபோரட்டமும் அதைத்தாண்டி காங்கிரசின் பேரியக்க ஆரம்பமும், காந்தி என்ற மனிதனின் கைத்தடி எப்படி இந்தியமுழுக்க சுகந்தர தீயை பரப்பியது என்பதயையும் நினைவு கூர்ந்தால் அதனை நம் frameworkடு பொருத்திபார்க்கமுடியும். நம் சுகந்திர போரட்டம் எப்போது முதற்நுகர்வோரை தாண்டி வந்தது. அந்த சுழல் எது ? என்னை பொறுத்தவரையில் அதிக வெற்றிபெற முடியாத திலகரின் தீவிரப்பாதை, கம்யூனிச சிந்தாங்களின்
அதிக பாதிப்பின்மை. இந்த சுழலை தாண்டியபின் காந்தி என்ற பிராண்டோடு இந்திய தத்துவ மனதுகள் எல்லாம் ஒருமைப்படுத்தி பார்க்க தொடங்கின. அவரால் இந்தியாவின் எல்லா அந்தராத்மாக்களை தொடமுடிந்தது. ராமராஜ்யம், நூல் இயந்திரம் இவைகளால் அவரால் முதற்பெரும்பான்மை மற்றும் கடைபெரும்பான்மை மக்களை அடையமுடிந்தது.

இந்த பெண்ணிய தலைப்புக்கு, ஏன் தொழில்நுட்ப தியரில்லாம் ? தேவைப்படுகிறது. ஒரு பிரச்சினையை வேறு கோணத்தில் பார்க்க உதவுகிறது. பெண்ணிய விடுதலைக்கு என்னைப்பொருத்தவரையில் எல்லா தத்துவங்களுமே தோத்துபோய்விட்டதாகத்தான் தோன்றுகிறது [இதுவரைக்கும் ஜெயிக்கவில்லை என்று ஆறுதலுக்காக சொல்லிக்கொள்ளலாம் ]. எதையும் உடைக்க சொல்லும் கம்யூனிசம், மாறத்தயங்கும்/மெதுவாகவே மாறும் இந்துத்துவம், மற்ற கொள்கைகளோடு இதுவும் ஒன்றாக சொல்லிபோய்விட்ட சில ரீஜனல் சித்தாந்தவாதிகள். இவைகளெல்லாம் பெண்ணிய சித்தாதங்களை பெரும்சந்தைக்கு (massmarket) எடுத்துசெல்ல தடையாக அமைந்துவிடுகின்றன. இப்படி யோசிப்போம்.

குறிக்கோள்: பெண்ணிய முழுதுக்குமான மன/உடல் விடுதலை/சுகந்திரம். சவால் : முதற்நுகவர் தாண்டி, முதற்பெரும்பான்மை( Early majority) மற்றும் கடைப்பெரும்பான்மை( Early majority) கடையரில் கடையர்கள் : சாமியார் மடங்கள், பர்தா பாதுகாவலர்கள், வாடிகன் வேதாந்திகள், ஆண் அழுக்கர்கள் தற்போதய சவால் : முதற்பெரும்பான்மை சந்தைகளுக்கு சுழல் தாண்டி எடுத்துகொண்டுபோதல்.
நேர அவகாசம் : ???? ஹ¤ஹ¥.. நேற்றைக்குமுடிக்கவேண்டிய ஒன்று.

நுகர்பொருள் : பெண்ணிய சிந்தனைகள்/எல்லாதளங்களிலும் விடுதலை
நுகர்சந்தை : உலகம் முழுவதும்
நுகர்வோர்கள் : பெண்கள்
வாங்கும் திறனின் தடைகள் / பாதிப்புகள் (influence in buying) : ஆண்கள், மாறமறுக்கும் மதங்கள்
இப்போது அடைந்திருக்கும் அளவு : (current market share ) : 2%க்கும் குறைவு.

சந்தை பாதிக்கும் காரணிகள் :
1. சந்தைக்கு சந்தை வேறுபடுகிறது.
2. உலகம் முழுதுக்குமான ஒரு பொருள் ஆனால் ஒவ்வொரு சந்தைக்கும் அது உள்ளூர் சந்தைக்கேற்ப மாற்றப்படவேண்டும்.
[Global product for local market ]

பலம் : எண்ணிக்கையில் அதிகம். குறிக்கோள் எட்டப்பட்டால் உலக முழுமைக்கான உன்னதம் ஏற்படலாம்.
பலவீனம் : பெரியபட்டியல்.
உடனடித்தேவை : முதற்நுகர்வர்களிடம் அடைபட்டு, சுழலில் சிக்கிக்கொண்டிருக்கிறது. முதற்பெரும்பான்மை மக்களிடம்
அது எடுத்துசெல்லப்படவேண்டும். யார் தோற்றுபோவார்கள் ? எந்த சித்தாந்தம், எவற்றின் கலவை, எங்கிருந்து வரப்போகிறது
எந்த சித்தாந்தம் இந்த பெண்ணியவிடுதலை போரை (!) அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும்.

வேண்டும் ஒரு காந்தியார்( காந்தியாள் ?)
கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருமா?


mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி