பெருஞ்சுவருக்குப் பின்னே (சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்) – முன்னுரை

This entry is part of 37 in the series 20070208_Issue

ஜெயந்தி சங்கர்சில வார்த்தைகள்

எழுத்தாளனுக்கு மொழி காதில் விழுந்து கொண்டே இருக்க வேண்டியுள்ளது என்றும் அப்படிக் காதில் விழுந்து கொண்டே இருக்கக் கூடிய கலாசாரத்தின் ஒரு முக்கிய கூறான அந்த மொழி மட்டுமே சிறந்த படைப்புகள் உருவாகத் துணை புரியும் என்றும் மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி எப்போதும் கூறி வந்ததாக சமீபத்தில் சிங்கப்பூர் வந்திருந்த போது நண்பர் எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னார்.

பல்லினச் சமூகமாக சிங்கப்பூரில் சீனர்கள் பெரும் பான்மையினர். ஆகவே, வெளியிடங்களுக்குப் போகும் போது ஆங்கிலத்தை விட சீனமே அதிகம் காதில் வந்து விழும்.

முதலில் எல்லாம் ஒரே மாதிரியாக ஒலித்தன. அது மாண்டரினா இல்லை சீன வட்டார வழக்கா என்று மெதுவாக இனம் காணத் தெரிந்தது. பிறகு, பளிச்சென்று ‘மாண்டரின்’ மட்டும் அடையாளம் தெரிந்தது. அதன் பிறகு தான் வட்டார வழக்குகளுக்குள் ஹொக்கேயினா, டியோச்சியோவா அல்லது காண்டனீஸா என்று ஓரளவிற்குத் தெரிந்தாற் போலிருந்தது. முதல் இரண்டும் தான் இங்கு அதிக புழக்கத்தில் இருக்கின்றன. காண்டனீஸ் இங்கு மிகக் குறைவு. ஆனால், சட்டென்று அடையாளம் காண முடிந்த போது என்னைப் பார்த்து எனக்கே வியப்பு.

எப்போதாவது தொலைக் காட்சியில் சீன நிகழ்ச்சிகள் பார்க்க நேர்ந்தால், கீழே ஓடும் ஆங்கில வரிகளைப் படிக்காமலே என்னால் சிரிக்க முடிவதை ஒரு கட்டத்தில் அவதானித்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன். மொழி தன்னுடன் தன் கலாசாரத்தினையும் கையோடு கூட்டிக் கொண்டு தான் வந்திருந்தது. சீனர்களின் கலாசாரத்தின் மீது எனக்குக் பல்வேறு கேள்விகளும் ஆர்வங்களும் எழுந்தன. சீனக் கலாசாரத்தைக் குறித்து சில கட்டுரைகளை எழுதினேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பே சீனப் பெண்களைப் பற்றி எழுத ஆசைப் பட்டு ஆய்வுகள் செய்யத் துவங்கியிருந்தேன். இருப்பினும், வேறு சில வேலைகள் வந்ததில் அதைத் தொடராமல் அப்படியே வைத்திருந்தேன்.
சமீபத்தில் மீண்டும் அதே வேலையை எடுத்து முழு வேகத்துடன் இறங்கினேன். வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் பல வாரங்களுக்கு இது ஒன்றையே செய்து கொண்டிருந்தேன். தேசிய நூலகத்தின் குறிப்பெடுக்கும் பிரிவில் வாரா வாரம் சில மணி நேரங்கள் செலவழித்து எடுத்த குறிப்புகளைக் கொண்டு பல மணி நேரங்கள் கணினியில் எழுதினேன். இது தவிர, இணையமும் கைகொடுத்தது.

சில வருடங்களுக்கு முன்பு சீனாவிலிருந்து வந்து இங்கு வசிக்கும் தோழி ஸேராவிடமும் அவர்களின் தோழிகளிடமும் எழுதியதை அவ்வந்த வாரமே கலந்து பேசி சரி பார்த்துக் கொண்டேன். ஒரு சில விவரங்களில் அவர்களுக்கே சந்தேகம் வந்தது. அப்போது அவர்கள் குறித்துக் கொண்டு போய் தெரிந்தவர்களிடம் கேட்டு அறிந்து, தொலைபேசியில் எனக்குச் சொன்னார்கள். வேறு ஒரு மொழியில் தங்களின் கலாசாரம் எழுதப் படுவதை அறிந்த அந்தத் தோழிகளில் ஏற்பட்ட மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் பெருமையையும் எளிதில் எடுத்துரைக்க முடியாது.
சீனப் பெண்களைக் கூர்ந்து நோக்கும் போதெல்லாம் சொற்கள், பாவங்கள் மற்றும் மெய்ப்பாடுகளின் மூலம் அவர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு விதத் தீவிரத் தன்மையுடனான போர்க் குணத்தை வெளிப்படுத்தும் சில தருணங்களை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்ததுண்டு. மிகவும் சுவாரஸியம் நிறைந்த நுட்பமான கணங்கள் அவை. காலங்காலமாய் அடிமைப் பட்டு வந்த சீனப் பெண்ணுக்குள் அதற்கிணையாகப் படிந்துள்ள அக்குணத்தில் பொதிந்திருக்கக் கூடிய அளவிலா ஆற்றலையும் நம்மால் எளிதில் அலட்சியப் படுத்தி விட முடியாது என்றே ஒவ்வொரு முறையும் தோன்றும்.

உலகின் ஒவ்வொரு பகுதியைப் பற்றி அறியும் போதும் என்னை வியக்க வைப்பது என்னவென்றால், சொல்லி வைத்துக் கொண்ட மாதிரியே சமூகம் பெண்ணை இரண்டாம் வகுப்பு/நிலைக் குடிமகனாகவே பார்த்திருக்கிறது; இன்றும் பார்க்கிறது. வளர்ந்த நாடுகளைத் தன்னுள் அடக்கிய நவீன ஐரோப்பாவும் இதற்கு விதி விலக்கல்ல.

என்னை மிகவும் கவர்ந்தவற்றுள் ஒன்று பெண் மொழி நுஷ¤. சீனப் பெண்கள் தங்களின் கெடுபிடிகளும் பழமையும் நிறைந்த சமூக மற்றும் குடும்பச் சூழலிலும் எப்படி ஒரு சங்கேத மொழியினை உருவாக்கிப் பயன் படுத்தியுள்ளார்கள் என்று அறியும் போது மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. சீன ஆண்களுக்கே தெரியாத, புரியாத படிக்க முடியாத மொழி நுஷ¤. பழஞ் சீனச் சமூகத்திலிருந்தும் நவீன உலகிலிருந்தும் சாதனைப் பெண்களைப் பற்றி அறியும் போது சீனப் பெண்களுக்குள் இருக்கக் கூடிய வலிமையையும் ஆளுமையும் வியக்காமலிருக்க முடியவில்லை.

‘பாதங்களைக் கட்டும்’ வழக்கம் நான் ஏற்கனவே அறிந்த ஒன்று தான். ஆனால், அதனைப் பற்றி எழுதவென்று முழுவதையும் அறிந்த போது ஒரு வாரத்திற்கு மேல் வேறு எதிலுமே என் கவனம் செல்ல மறுத்தது. ஆகஸ்டு இதழுக்கென்று நான் அனுப்பியதும் படித்த நண்பர் கவிஞர் மனுஷ்ய புத்திரனும் அதையே சொன்ன போது தான் என் மனக்கலக்கம் அசாதாரணமானது ஒன்றுமில்லை என்று புரிந்து கொண்டேன். அதே அளவிலான கலக்கத்துடன் இதழைப் படித்த பலர் மின்மடல் மற்றும் தொலைபேசியின் மூலம் கருத்துரைத்தார்கள். எழுதவும் படிக்கவுமே இப்படியிருக்கிறதே, பார்க்கவும் அனுபவிக்கவும் என்றால்? நினைத்தாலே என்னவோ செய்கிறது.

இந்நூலுக்கான பணியைத் துவங்கியதுமே சீனப் பெண்களைக் குறித்து நான் அது வரை அறிந்திருந்தது மிகமிகக் குறைவு என்று புரிந்து போனது. வரலாறைத் தொடாமல் பழஞ்சீனப் பெண்ணையோ, நடப்பு விவகாரங்களைத் தொடாமல் நவீன சீனப் பெண்ணையோ பேச முடியாதிருந்தது. வரலாறுக்குள்ளும் அரசியலுக்குள்ளும் அதிகமும் புகுந்து விடாமல் தேவைக்கேற்ற அளவு மட்டும் சொல்லி சீனப் பெண்ணைச் சுற்றி எழுதுவது என்பது எழுத எழுதத் தான் மிகப் பெரிய சவாலாக என் முன் வளர்ந்தது.

இப்போதெல்லாம் ஒவ்வொரு சீனப் பெண்ணைப் பார்க்கும் போதும் அவர்களின் கலாசாரப் பழமையும் அது மரபு வழி அவளிலும் அவளின் பாட்டி, முப்பாட்டிகளிலும் ஏற்படுத்தியிருக்கக் கூடிய பாதிப்பு களையும் நினைக்காமல் இருக்க முடிவதில்லை.

இத்தகைய முற்றிலும் வித்தியாசமான நூலை எழுதும் போது அதற்கு வேண்டிய அலைச்சலும் உடலுழைப்பும் உடலளவில் ஒரு வித ஆயாசத்தைக் கொணர்ந்தாலும் எந்த அளவிற்கு ஆத்ம திருப்தியைக் கொடுக்கும் என்பதை இப்புத்தகத்தை எழுதி முடிக்கும் போது உணர்ந்து கொண்டேன்.

சீனப் பெண்களைக் குறித்து அனைத்தையும் சொல்லும் ஒரே நூலாக எழுதும் ஆர்வத்தின் விளைவே இந்நூல். இருப்பினும், இந்நூலில் எழுதாமல் விடப் பட்ட சீனப் பெண்கள் குறித்த வேறு சில விஷயங்களும் நிச்சயம் இருக்கலாம்.

நூலுக்குத் தேவையான வாசிப்பிற்கும் குறிப்புகளுக்கும் உதவிய சிங்கப்பூர் தேசிய நூலகக் கிளைகள், அதிகப் படி ஆய்வுக்கு உதவிய இணையம் மற்றும் சீனப் பெண்களின் பிரச்சனைகளை சீனப் பெண்களிடமே கேட்டு உறுதி செய்து கொள்வதற்கும், எழுதியவற்றைச் சரி பார்ப்பதற்கும் உதவிய சீனத் தோழி திருமதி. ஸேரா வோங்க் மற்றும் அவரின் நட்பு வட்டம் ஆகியோருக்கும் இந்நூலினை வடிவமைத்த உயிர்மை பதிப்பகத்திற்கும் நான் கடமைப் பட்டுள்ளேன். அவர்களுக்கு அன்பான நன்றிகள்.

அன்புடன்,
ஜெயந்தி சங்கர்,பெருஞ்சுவருக்குப் பின்னே
(சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்)

— ஜெயந்தி சங்கர்

பக்கங்கள் – 198
விலை – 120 (இந்திய) ரூபாய்
உயிர்மை பதிப்பகம்
முகவரி : 11 / 29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை – 600 018
இந்தியா

sankari01sg@yahoo.com

Series Navigation