விடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

மதியழகன் சுப்பையா


எவற்றின் சேர்க்கையால் புள்ளிகள் தோன்றும் என்று நமக்குச் சொல்லித் தரப் படவில்லை. ஆனால் புள்ளிகள் சேர்ந்து கோடுகள் உருவாகிறது என படிப்பிக்கப் பட்டுள்ளோம். கோடுகளின் வகைகள் பல. புள்ளியில் துவங்கி நீள்கின்றது ஒன்று, இருபக்கமும் எல்லையின்றி பாய்கிறது மற்றொன்று. இணைந்து போகும் கோடுகள் பொறாமை உண்டாக்கும். அவை என்றும் பிரிவதில்லை என்பதும் பிரிந்து விட்டால் அவைகள் தங்கள் அடையாளம் இழந்து விடும் என்பதும் தனிச் சிறப்பு. மனிதர்கள் மட்டுமல்ல கோடுகளும் வெட்டிக் கொள்கின்றன. முக்கோணம் , நாற்கரம் என கோடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பக்கங்கள் கொண்ட வடிவங்கள் தோன்றுகிறது.

கோடுகள் கொண்டு உருவங்கள், ஓவியங்கள் செய்யப் படுகிறது. நெற்றியின் கோடுகள் முதிர்ச்சியையும் அனுபவத்தையும் குறிக்கிறது. கோடுகள் மூலம் நாடுகளின் எல்லைகள் பிரிக்கப் படுகிறது. கோடு தாண்டினால் கொடுமைகளையும் அவலங்களையும் சந்திக்கும்படியாகி விடும். தண்டிக்கவும் படுகிறோம். ஒவ்வொரு கோட்டிற்கு அப்பாலும் தனித்தனி நாகரீகமும் பல்வேறு வழக்கமும் பழக்கப் பட்டிருக்கிறது. இன்று நம்மைச் சுற்றி நிஜமாயும் கற்பனையாயும் பல் கோடுகள் உள்ளது. நிஜக் கோடுகளை மட்டுமல்ல கற்பனை கோடுகளையும் நாம் தாண்ட முனைகிறோம். முடிவதில்லைதான்.

கோடுகளைத் தாண்டுவதால் நன்மையும் உள்ளது தீமையும் உள்ளது. அது தாண்டுதலின் அவசியத்தைப் பொறுத்தது, உறவு நிலையில் பல வார்த்தைகள் கூட கோடுகளாய் நிற்கிறது. இந்தக் கோடுகளை தாண்ட நினைத்தாலும் முடிவதில்லை. இவ்வாறான கோடுகளை தாண்டியவர்கள் புரட்சியாளர்கள் என்று போற்றப் பட்டுள்ளனர், பலர் பைய்த்தியங்களாக முத்திரைக் குத்தப் பட்டுள்ளனர்.

இரண்டு வார்த்தைகளை இணைத்து புதிய வார்த்தையாக்கி விடுகிறது ஒரு சிறிய குட்டிக் கோட்டுக் குறியீடு. இது உலக மொழி அனைத்திற்கும் பொது. மனிதன் பயன் படுத்த வேண்டிய அவசியமான குறியீடும் இதுதான்.

எழுத்துகளின் மூலம் கோடுகள் தான். ‘கோடு போடுதல் ‘ என்ற சொற்றொடர் திட்டமிடுதல் என்ற பொருளைத் தருகிறது. ராட்சச விண்கலங்கள் உட்பட அனைத்தும் பயணிப்பது அவைகளுக்கு விதிக்கப் பட்ட கோடுகளில் தான். கோடுகள் இல்லையெனில் பாதைகள் இல்லை. கோடுகள் இல்லையெனில் மொழிகள் இல்லை, கோடுகள் இல்லையெனில் உறவுகள் இல்லை, உயர்வுகள் ஏன் உலகமே இல்லை எனலாம். நிச்சயிக்கப் பட்ட ஓர் முட்டை வடிவ கோட்டில் பயணிக்கிறது உலகம். நம் பயணமும் கோடுகள் பற்றித்தான். நமது பயணக் கோடுகள் நம்மால் மட்டுமல்ல நம்மைச் சுற்றி உள்ளவர்களாலும் போடப் படுகிறது. உலக உருண்டை மட்டுமல்ல எந்த கோளும் கோடு தாண்டினால் அழிவுதான் முடிவு. நம்மைச் சுற்றியிருக்கும் கோடுகளைத் தாண்டினாலும் இதே விழைவு தான். அடிக்கோடிட்ட சொற்கள் கவனிக்கப் படுகிறது. கோட்டோவியங்கள் குழப்புபவை மட்டுமல்ல அழ்ந்த அர்த்தம் பொதிந்தவையும் கூட.

சுவர்கள் கூட தடித்த கோடுகள் தான். அந்தரங்கங்களை விழுங்கி அடர்த்தியாகிப் போகிறது கோடுகள். கோடுகள் வரைந்து கூட்டும் கணக்கை புள்ளியியல் என்று முரண்படுத்தி அழைக்கிறோம். விளையாட்டுகளில் கோடுகளைத் தாண்டுதலும் தொடுதலும் ஆக்கச் செயல் அல்லது அபராதம்.

கோடு போட்டு பாதுகாக்கிறது ஆண்மை அதைத் தாண்டி அவதிப் படுகிறது பெண்மை என்பது ஒரு இதிகாசத்தின் கூற்று. கோடுகளின் கட்டுப் பாட்டில் இருந்து இயங்குகிறது எல்லாம்.

ஆனாலும் கோடுகள் தாண்டப் பட வேண்டும்.

( தேடுவோம்)

madhiyalagan@rediffmail.com

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா