ஜெய் ராம்! திரைப்படம் – ஃபாசிசத்தின் இன்னொரு வடிவம்

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

அருளடியான்


ஜெய் ராம் – திரைப்படத்தில் பம்பாய் படத்தைப் போலவே, இந்து இளைஞன் ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலிக்கிறாள். எனக்குத் தெரிந்து முஸ்லிம் இளைஞன் இந்துப் பெண்ணைக் காதலிப்பதாய் தமிழ் படத்தில் பார்த்ததில்லை. முஸ்லிம் பெண்கள் அழகாய் இருப்பார்கள். ஆனால் முஸ்லிம் ஆண்கள் முரடர்கள். அவர்களது முக்கியத் தொழில் ஆடு வெட்டுவது. இப்படித் தான் இருக்கும் தமிழ் சினிமாவின் முஸ்லிம் கதாபாத்திரங்கள். இயக்குநர் தேஜாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். இதில் ஆடு வெட்டும் தொழிலில் இருந்து பேக்கரி கடைக்கு பதவி உயர்வு செய்து இருக்கிறார். ஆனால் என்ன அவர் ஒரு குஸ்தி மாஸ்டர். இந்து இளைஞனுக்கு குஸ்தி சொல்லிக் கொடுப்பதால் அவர் ஒரு தேச பக்தன் தகுதியையும் பெறுகிறார். தமிழ் படங்களில் நம் ஜனாதிபதி அப்துல் கலாம், கவிக்கோ அப்துல் ரகுமான், தமிழறிஞர் மணவை முஸ்தஃபா, அரசியலில் இருக்கும் பெண்கள் வக்பு போர்டு தலைவர் பதர் சயீத், முஸ்லிம் லீக் மகளிர் அணித் தலைவி ஃபாத்திமா முஸஃபர் போன்ற முஸ்லிம்களைப் பிரதிபலிக்கும் பாத்திரங்கள் ஒரு போதும் வராது. இப்படத்தில் ஒரு முஸ்லிம் கல்லூரி காட்டப் படுகிறது. அது பொறுக்கி மடம் என சித்தரிக்கப் படுகிறது. தமிழ் நாட்டில், சென்னையில் இயங்கும் புதுக்கல்லூரி, முஸ்லிம்களால் நடத்தப்படுவது. இக்கல்லூரி சன் டிவியின் கருத்துக் கணிப்பில் வணிகவியல்-வியாபர நிர்வாகம் ஆகிய படிப்புகளில் சிறப்பான இடம் பெற்றது. பல தனியார் பொறியியல் கல்லூரிகள் அடிப்படை வசதிகளை மாணவர்களுக்கு செய்து தராமல் ஏமாற்றி வரும் போது, சென்னை கிரஸண்ட் பொறியியல் கல்லூரி கட்டுமான வசதிகள், கருவி வசதிகளில் முன்னணியில் இருப்பதை பல கல்வியாளர்களும் பாராட்டியுள்ளனர். இதுவும் முஸ்லிம்களின் நிர்வாகத்தில் உள்ள கல்லூரி தான். கதா நாயகனின் அம்மா உலகம் சுற்றும் ஒரு தொழிலதிபர். பாகிஸ்தானில் தான் ஒரு தொழில் தொடங்கப் போவதாக தன் மகனிடம் டெலிஃபோனில் சொல்கிறாள். மகன் கொதித்துப் போகிறான். அத்வானி, தொகாடியா ஆகியோர் இக்காட்சியைப் பார்த்தால் மனம் குளிர்ந்து போவார்கள். ஆர் எஸ் எஸ் காரர்கள் தானே மத்திய அரசு திரைப் பட விருது வழங்கும் குழுவில் இருக்கிறார்கள். எனவே, இப்படம் விருதுப் பட்டியலில் நிச்சயம் இருக்கும். ரஜினி கூட தேஜாவை வைத்து படம் எடுக்கலாம் என நினைத்தாராம். சன் டிவி பாணியில் இப்படத்தை சுருக்கமாக விமர்சித்தால் ‘ஜெய் ராம் – ஓர் ஆர் எஸ் எஸ் பிரச்சாரப் படம் ‘.

—-

aruladiyan@netscape.net

Series Navigation

அருளடியான்

அருளடியான்