எர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்


உயிரினம் (species) என்றால் என்ன ? அதனை எவ்வாறு வரையறை செய்வது என்பது இன்றைக்கு பத்தாம் வகுப்பு மாணவனுக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் அந்த வரையறையை அடைய நூற்றாண்டுகளுக்கு பொறுமையாக உயிரியல் காத்திருந்தது. தம்முள் இனப்பெருக்கம் செய்ய இயலும் – தமக்கு வெளியே இனப்பெருக்கம் செய்ய இயலாத- தனி உறுப்பினர்களைக் கொண்ட குழுவே உயிரினம் என வரையறுக்கப்படுகிறது இன்று. 1942 இல் வெளியான ‘ ‘Systematics and the Origin of Species ‘ எனும் தமது நூலில் இந்த வரையறையை அறிமுகப்படுத்தி விளக்கியவர் எர்னஸ்ட் மெயர். ஒரு உயிரினத்தின் சில தனி உறுப்பினர்கள் தனித்தன்மை கொண்ட நிலவியல் சூழல்களுக்கோ அல்லது சூழலியல் மாறுபாடுகளுக்கோ ஏற்ப தம்மை தகவமைத்துக்கொள்ள நேருகிற போது, தலைமுறைகளுக்கு பின்னர், தமது மூல உயிரினத்துடன் இனப்பெருக்க இணைவு கொள்ள இயலாத அளவுக்கு மாறுபட்டுவிடும் போது புதிய உயிரினத்தோற்றம் ஏற்படுகிறது என்பதனை இந்த வரையறை மூலம் பெற முடியும்.

1904 இல் ஜெர்மனியில் பிறந்த மெயர் பறவை-கண்காணிப்பால் கவரப்பட்டவர். தமது 21 ஆவது வயதில் முனைவர் பட்டம் பெற்று 1928 இன் பிப்ரவரியில் நியூகினியா தேசத்திற்கு கள ஆய்விற்காக அவர் சென்றபோது அவருடன் இருந்த இருநூல்கள் ஹான்ஸ் டெரெய்ச் (Hans Driesch) எழுதிய ‘Philosophie des Organischen ‘ (1899) மற்றும் ஹென்றி பெர்ஹுஸனின் L ‘Evolution Creatrice (1911). இரு ஆசிரியர்களுமே இருபதாம் நூற்றாண்டின் ‘உயிர்சக்தி ‘ வாதிகள் (vitalists). என்ன ஒரு துரதிர்ஷ்டம்! தமது கள ஆய்வுகளில் மெயர் கண்ட பரந்து விரிந்ததோர் பன்மைச் செழுமை கொண்ட உயிருலகின் அடிப்படையை இந்த தத்துவ நூல்களால் விளக்கவோ தம்மில் பிரதிபலிக்கவோ கூட முடியவில்லை. நிலவியல் அமைப்புகளுடன் இயைந்த உயிரினப் பன்மையை நியூகினியாவில் மெயர் கண்டார். இது அவரது அறிவியல் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திற்று. பின்னாளில் மெயர் உயிர்சக்தி வாதிகள் என்றல்ல மேற்கத்திய சிந்தனை மரபின் தர்க்கமும் கணிதமும் சார்ந்த எந்த அமைப்பும் உயிரியலின் சாராம்சத்தை பகுத்தறிந்துவிட முடியுமா என்பதில் பெரும் ஐயம் கொண்டவரானார். இப்பார்வை அவரது இறுதிக்காலம் -2004 இல் தமது நூறாவது வயதில் அவர் எழுதிய ‘உயிரியலைத் தனித்தன்மை கொண்டதாக்குவது எது ? ‘ (What makes biology unique ?) -வரை தொடர்ந்தது. இயற்பியலின் அறிதல் முறைகள் மூலம் உயிரியலின் அறிதல் முறைகளின் மதிப்பு எடைபோடப்படுவதை அவர் விரும்பவில்லை. முழுமைத்துவ அறிதலின் காதலராக விளங்கியவர் அவர். வேறெந்த பரிணாமம் குறித்த மேற்கத்திய நூலில் நீங்கள் வெர்னாட்ஸ்கியை சந்திக்கமுடியும் மெயரின் ‘பரிணாமம் என்றால் என்ன ? ‘ (What is Evolution,2001) என்பதை தவிர. பரிணாமத்தை மரபணு எண்ணிக்கைகளில் ஏற்படும் மாற்றம் எனும் குறுக்கலிய தீர்வினை அவர் ஏற்கவில்லை. இயற்கைத்தேர்வு அழுத்தங்கள் முழுமையான உயிரினத்தின் மீது ஏற்படும் தாக்கமாகும் எனவே இறுதியில் பரிணாம மாற்றத்தை உயிரினம் முழுமையாக ஏற்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டத் தயங்கியதேயில்லை. முதலிலேயே கூறியதைப் போல அவரது உயிரின வரையறை மெண்டலிய மரபணுவியலையும் டார்வினிய பரிணாம அறிவியலையும் ஒருங்கிணைக்க உதவியது என்ற போதிலும் 1950களில் கூட இந்த கணிதவியல் சார்ந்த முயற்சியை விமர்சிப்பவராகவே மெயர் திகழ்ந்தார். ஆனால் உயிரின வரையறையின் அடிப்படையில் மரபணுவியலையும் டார்வினிய பரிணாமத்தையும் இணைத்தது மிகப்பெரிய சாதனை என்பதை அவர் மறுக்கவில்லை. தனிப்பட்ட மரபணுக்களிலிருந்து ஒரு உயிரினத்தின் முழுமையான மரபணுக்கோளமும் (ஜீனோம்) எவ்வாறு பரிணாமத்தில் இயங்குகிறது என்பதே முழுமையான சித்திரமாக – உயிரியலின் சாரத்தினை தொடுவதாக அமையும் என்பது அவரது கருத்து. கவுல்டின் ‘punctuated equilibria ‘ வின் மூலத்தை மெயரில் காணலாம். தமது நூறாவது பிறந்த நாளில் அவர் தம்மை ‘ பரிணாமத்தின் புத்துருவாக்க எழுச்சியின் பொற்காலத்தின் இறுதி ஜீவிதர் ‘ என வர்ணித்தார்.

அவரது பரிணாமப்பார்வை தன்னை எவ்விடத்திலும் சமரசம் செய்து கொண்டதல்ல. படைப்புவாதிகளால் தங்கள் முக்கிய எதிரியாக அடையாளம் காணப்பட்டவர் அவர். மானுடத்தோற்றம் குறித்த மார்க்ஸிய கற்பனையான ‘கருவி பயன்படுத்தலே மானுட பரிணாமத்தை உருவாக்கியது ‘ என்பதை புறங்கையால் தள்ளியவர் மெயர்.மானுட பிரக்ஞையின் எவ்வாறு பரிணமித்தது என்கிற கேள்விக்கான அவரது பதில் உளவியலாளர்களுக்கு ஒளி அளிக்கும் விளக்கம். ‘உளவியலாளர்கள் கேட்க மிகவும் விரும்பும் கேள்வி இது. இதற்கான பதில் உண்மையில் மிகவும் எளிதானது -விலங்கினங்களின் பிரக்ஞையிலிருந்து. பிரக்ஞை என்பது மனிதர்களுக்கு மாத்திரமேயான ஒன்று என பரவலாகக் நம்பப்படுவதற்கு எவ்வித நியாயமும் கிடையாது. விலங்கினங்களின் நடத்தைகளை ஆராய்பவர்களுக்கு தெரியும் பிரக்ஞை என்பது விலங்குகளில் எந்த அளவு வேரூன்றி பரவலாகக் காணப்படுகிறது என்பது. …எந்த அளவு ‘கீழே ‘ விலங்கினங்களில் பிரக்ஞையின் வெளிப்பாடுகள் உள்ளன என்று கேட்டால் அந்த கேள்வி விவாதத்திற்குரியது. சில (ஒருசெல் விலங்கினங்களான) ப்ரோட்டோஸோவன்களிலும், முதுகுவடமற்ற விலங்குகளிலுமே ‘விலகும் எதிர்வினை ‘யில் பிரக்ஞையின் வெளிப்பாடு உள்ளதெனலாம். எதுவாயினும் மானுடப்பிரக்ஞை என்பது மானுடத்திலேயே முழுமையாக உருவெடுத்தது இல்லை – ஆயின் நீளமான பரிணாம வரலாற்றில் மிகவும் உச்சமடைந்ததோர் புள்ளி என்பது மட்டும் நிச்சயம். ‘ (What is Evolution, பக். 310)

உயிரியல் ஆய்விற்கான தத்துவ அடித்தளத்தை டார்வீனியத்தின் மூலமாக உருவாக்க பாடுபட்டு அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றவர் மெயர். குறுகலியமும் முழுமையியமும் சந்திக்க இயலும் புள்ளிகளை டார்வினியத்தில் காட்டியவர் அவர். இதன் மூலம் டார்வினீய அறிவியல் முன்னகர வேண்டிய பாதையின் தூரத்தையும் இரக்கமும் அச்சமுமின்றி காட்டியவர். உயிரியலாளர்களும் தத்துவவாதிகளும் அவருக்கு பெரிதும் கடன் பட்டிருக்கிறார்கள். நூறாண்டு முழுமையான வாழ்வு வாழ்ந்த இம்மேதை 2005 பிப்ரவரி 3 ஆம் நாள் உயிர் நீத்தார். அன்னாரின் வாழ்க்கையின் மேன்மைக்கு வணக்கங்கள்.

சில அஞ்சலிகள்

ஃ www.nature.com/news/2005/050131/full/050131-19.html

ஃ www.nature.com/news/2005/050131/full/050131-19.html

ஃ www.timesonline.co.uk/article/0,,60-1473218,00.html

அவரது நூல்களில் முக்கியமான சில:

ஃ ‘Systematics and the Origin of Species ‘, NewYork, Coloumbia University Press, 1942

ஃ ‘The Birds of Northern Melanesia Speciation, Ecology, and Biogeography ‘ (Jared Diamond) NewYork, Oxford University Press, 2001

ஃ ‘What is Evolution ‘, London, Phoenix 2002

ஃ ‘What Makes Biology Unique ?: Considerations on the Autonomy of a Scientific Discipline ‘, New York, Cambridge University Press, 2004.

-எஸ்.அரவிந்தன் நீலகண்டன்

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்