வியாழனைச் சுற்றிய காலிலியோ விண்வெளிக் கப்பல் [Galileo Spaceship that orbited Jupiter (1989-2003)]

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


நாமறிந்தவை எல்லைக்கு உட்பட்டவை! நாமறியாதவை கணக்கில் எண்ணற்றவை! புரிந்து கொள்ள முடியாத கரையற்ற ஒரு கடல் நடுவே, சிறு தீவு ஒன்றில் அறிவு படைத்த நாம் அடைபட்டுள்ளோம்! நமக்குத் தொழில் ஒவ்வொரு பிறவியிலும் நாம் மேலும் சிறிது புதுத் தளத்தைக் கைப்பற்றுவதுதான்!

தாமஸ் ஹக்ஸ்லி [Thomas Huxley] (1825-1895)

முன்னுரை: நாசா காஸ்ஸினி விண்கப்பல் சனிக்கோளைச் சுற்ற அனுப்புவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, காலிலியோ விண்வெளிக் கப்பல், வியாழனைச் சுற்றிவர ஏவப்பட்டு, ஏராளமான விஞ்ஞானத் தகவல்களைப் பூமண்டலத்துக்கு அனுப்பியுள்ளது. விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ‘நவீன பெளதிகத்தின் பிதா ‘ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூட்டிய, காலிலியோவின் பெயரைக் கொண்ட நாசாவின் [NASA] விண்கப்பலே, வியாழனை ஆராயும் முதல் ‘விண்ணுளவி ‘ [Space Probe] ஆனது! தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளியின் முகத்திரையை உலகுக்குத் திறந்து வைத்தவர், காலிலியோ! பூதக்கோள் வியாழனைச் சுற்றும் நான்கு துணைக் கோள்களை முதலில் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ!

நாசா 1972 இல் ஏவிய பயனீயர்-10, பயனீயர்-11 [Pioneer-10, Pioneer-11], அடுத்து 1977 இல் அனுப்பிய வாயேஜர்-1, வாயேஜர்-2 [Voyager-1, Voyager-2] ஆகிய நான்கு முன்னோடி விண்சிமிழ்கள் பயணம் செய்து முதன் முதலில் வியாழன், சனிக்கோளின் விஞ்ஞான விபரங்களை உளவி பூமிக்குத் தகவல் தந்தன. 1987 இல் அனுப்பிய காலிலியோ விண்கப்பல் எட்டாண்டுகள் பயணம் செய்த பிறகு, 1995 இல் வியாழக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் இழுக்கப்பட்டு, நீள்வட்ட வீதியில் சுற்றி, ஓர் உளவுச்சிமிழை [Probe Module] வியாழ தளத்தில் இறக்கி, விண்வெளி வரலாற்றில் முதன்மை பெற்றது.

கூர்மையான வெறும் கண்கள் மூலமாகவே வியாழனையும், அதன் நகர்ச்சியையும் விண்வெளியில் காண முடிந்தாலும், விளக்கமாகத் தெரிந்து கொள்ள தொலை நோக்கிக் கருவி மிகவும் தேவைப் படுகிறது. நவீன தொலை நோக்கியில் பார்த்தால் பிரெளன், நீல நிறப் பட்டைகள் தீட்டிய, சப்பையான பொரி உருண்டை போல் காட்சி அளிக்கிறது, பூதக்கோள் வியாழன்.

காலிலியோ விண்கப்பல் வியாழனை நோக்கிப் பயணம்

1989 அக்டோபர் 18 ஆம் தேதி ‘விண்வெளி மீள்கப்பல் அட்லாண்டிஸ் ‘ STS-34 பயணத்தில் [Atlantis Space Shuttle STS-34 Flight], காலிலியோ விண்சிமிழ்களைச் சுமந்து கொண்டு, கானாவரல் முனையில் கென்னடி ஏவுதளத்திலிருந்து அண்ட வெளியைக் கிழித்துக் கொண்டு கிளம்பியது. விண்வெளி மீள்கப்பல் பூமியின் ஈர்ப்பு வெளியில் சிக்கிச் சுழல்வீதியில் [Earth ‘s Orbit] சுற்ற ஆரம்பித்ததும், குறிப்பிட்ட காலத்தில் விண்சிமிழ்கள் சேர்ந்துள்ள ‘முடத்துவ மேல்நிலை ராக்கெட் [Inertial Upper Stage Rocket (IUS)] சுடப்பட்டுக் காலிலியோ விண்கப்பல் சூரிய மண்டலத்தை நோக்கிப் பறந்தது.

ஒரு ‘சுற்றுச்சிமிழும் ‘ [Orbiter] ஒரு ‘சூழ்வெளி உளவுச்சிமிழும் ‘ [Atmospheric Probe] இணைக்கப் பட்டிருந்த, காலிலியோ விண்வெளிக் கப்பல் இரண்டு முக்கியப் பணிகளை நிறைவேற்றத் தயாரானது. முதல் பணி வியாழனை நெருங்கி, சுற்றுச்சிமிழ் சுழல்வீதியில் விழானைச் சுற்றிவருவது. அடுத்த பணி உளவுச்சிமிழை விடுவித்து, வியாழ தளத்தில் அதை மெதுவாக இறக்குவது. சுற்றுச்சிமிழின் எடை 4760 பவுண்டு. விண்ணுளவியின் விட்டம் 4 அடி, உயரம் 3 அடி, எடை 739 பவுண்டு. 570 வாட்ஸ் மின்சக்தி பரிமாறப் புளுடோனியம் டையாக்ஸைடு [PuO2] பயன்படும் இரண்டு ‘கதிர்வீச்சு வெப்ப ஜனனிகள் ‘ [RTG, Radioisotope Thermal Generators] அமைக்கப் பட்டிருந்தன.

காலிலியோ விண்கப்பல் புகுத்தப்பட்ட விண்வெளிப் பாதை, ‘வீகா ‘ எனப்படும் வெள்ளி-பூமி ஈர்ப்பாற்றல் சுழற்சியில் உந்தும் வேகவீதி [(VEEGA) Venus ->Earth ->Earth Gravity Assisst Path]. வீகா முறையில் முதலில் வெள்ளியைச் சுற்றிப் பரிதியை நோக்கிப் பாயும் விண்கப்பல்! பிறகு பூமியை இருமுறைச் சுற்றி ஈர்ப்பாற்றல் உதவியால் வேகம் மிகையாகி, விண்கப்பல் வியாழனை விரைவில் நெருங்க முற்படுவது.

அவ்விதம் வெள்ளி-பூமியைச் சுற்றும் போது நிலவும் உட்பட்டு விண்சிமிழால் ஆராயப் பட்டது. சூரியனைச் சுற்றி வரும்போது, ‘விண்கற்கள் வளையத்தை ‘ [Astroid Belt] நெருங்கி, முதன்முதல் காஸ்ப்பிரா, ஈடா [Caspra, Ida] என்னும் இரண்டு விண்கற்களை விஞ்ஞானிகளுக்குப் படமெடுத்துக் காட்டியது. முக்கியமாக சூமேக்கர்-லெவி [Shoemaker-Levy 9] எனப்படும் வால்மீன் வியாழக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, வேகமாய் இழுக்கப்பட்டு, தளத்தில் விழுந்து நொருங்கி, எரிந்து போனதைப் படமெடுத்தது.

1995 டிசம்பர் 7 ஆம் நாள் காலிலியோ விண்கப்பல் வியாழக்கோளை அண்டிச் சுழல்வீதியில் சுற்றுவதற்கு 147 நாட்ளுக்கு முன்பு, தன்னுடன் இணைந்துள்ள உளவுச்சிமிழை விடுதலை செய்து தளத்தில் மெதுவாக இறங்க விடுவித்தது. 1995 முதல் இன்றைய நாள்வைரை [2003 ஆகஸ்டு 27] காலிலியோ விண்கப்பல் பூதக்கோள் வியாழனை நீள்வட்ட வீதியில் வட்டமிட்டு, பூமிக்குத் தகவல் அனுப்பி வருகிறது.

வியாழக்கோளின் வடிவமைப்பும், பதினாறு துணைக்கோள்களும்

சூரிய மண்டலத்தின் அகக்கோள்களான [Inner Planets] புதன், சுக்கிரன், பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய பாறைக் கோள்களைப் [Rocky Planets] போன்றில்லாது, புறக்கோள்களில் [Outer Planets] ஒன்றான வியாழன் பரிதியைப் போல் வாயுக்கள் திரண்ட கோளம்! சூடான திடப்பண்டம், திரவ உலோகம் [Liquid Metal] உட்கருவில் சிறிது இருந்தாலும், மேல் தளத்தில் திரட்சியான [Solid] திடப் பொருள் எதுவும் வியாழனில் கிடையாது. பூத வடிவான வியாழன் 9:50 மணி நேரத்தில் வினாடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது.

வியாழக்கோள் ஐந்தாவது சுழல்வீதியில் [Solar Orbit], சூரியனை சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், 12 பூகோள ஆண்டுகளுக்கு [Earth Years] ஒருமுறைச் சுற்றி வருகிறது. சூரிய வெளிச்சத்தை எதிர்ஒளிக்கும் திறமையில், சந்திரன், வெள்ளி இவற்றுக்கு அடுத்தபடிதான் வியாழக் கோள் கருதப் படுகிறது. பூமியிலிருந்து சுமார் 97 மில்லியன் மைல் தொலைவில் சூரியனைச் சுற்றும் வியாழன், பூமியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு கொண்டது. வியாழனின் பளு [Mass] பூமியைப் போல் 318 மடங்கு மிகையானது. புவி ஈர்ப்பு விசையைப் போல் 2.5 மடங்கு ஈர்ப்பு விசை பெற்றது, வியாழன்.

பூதக்கோளின் மத்திம ரேகை விட்டம் [Equatorial Diameter] 88,700 மைல்! சப்பையான துருவ விட்டம் [Polar Diameter] 83,000 மைல்! வாயுக் கோளமான வியாழன், மிகக் குன்றிய நேரத்தில் [9 மணி 50 நிமிடம்] தன்னைத் தானே வெகு வேகமாய்ச் சுற்றும் சுழற்சியால்தான் துருவங்கள் தட்டையாய்ச் சப்பிப் போயின! பூதக்கோள் வியாழனை 16 சந்திரன்கள் சுற்றி வருகின்றன. 1610 இஇல் காலிலியோ தான் செய்த தொலைநோக்கியில் வியாழனைப் பார்த்த போது, முதலில் 4 பெரிய சந்திரன்களைக் கண்டு பிடித்தார்.

காலிலியோ விண்கப்பலின் திட்டமிட்ட குறிப்பணிகள்

வியாழனைச் சுற்றிவரும் காலிலியோ விண்சிமிழின் [Galileo Orbiter] பணிகள்:

1. வியாழனின் சூழ்வெளிச் சுற்றோட்டம், நகர்ச்சி இயக்கங்களை ஆராய்வது.

2. வியாழனின் மேல்தளச் சூழ்வெளி, காலநிலை, மின்னியல் கோளத்தை [Upper Atmosphere, Ionosphere] உளவு செய்வது.

3. வியாழன் துணைக் கோள்களின் தளவியல், பெளதிக அமைப்பு, இரசாயன மூல அமைப்பு [Geology, Physical State, Morphology] ஆகியவற்றை ஆராய்வது.

4. துணைக் கோள்களின் தளத்தில் கிடக்கும் உலோகத் தாதுக்களின் பரவல், உட்கொள்ளி [Composition Distribution of Surface Minerals] ஆகியவற்றை அறிதல்.

5. துணைக் கோள்களின் முகில் நகர்ச்சி, சூழ்வெளி, காலநிலை ஆகியவற்றை ஆராய்தல்.

6. வியாழன், துணைக் கோள்கள் இடையே எழுகின்ற ‘காந்த கோளத்தை ‘ [Magnetosphere] ஆய்வது.

வியாழ தளத்தை ஆயும் காலிலியோ விண்ணுளவி [Galileo Probe] செய்யும் பணிகள்:

1. வியாழ மண்டலச் சூழ்வெளியின் இரசாயன உட்கொள்ளியை [Chemical Composition] ஆராய்வது. 150 psi அழுத்தம் வரை உள்ள சூழ்மண்டலத்தை உளவு செய்வது.

2. வியாழச் சூழ்வெளியின் முகில் மண்டலத் துகள்களின் பண்புகளை, முகில் அடுக்குகளின் இடங்களை ஆய்வு செய்வது.

3. வியாழக் கோளின் கதிர்வீச்சு வெப்பச் சமப்பாடுகளை [Radiative Heat Balance] சோதிப்பது.

4. வியாழ மண்டலத்தில் நேரும் மின்னல் நிகழ்ச்சிகளைப் [Jovian Lightning Activity] பயில்வது.

5. வியாழக் கோளின் மேல் மண்டலச் சூழ்வெளி உயரம் வரை, மின்னேற்றமோடு ஆற்றல் படைத்த பரமாணுக்களின் திரட்சியை [Flux of Energetic Charged Particles] அளப்பது.

கொந்தளிக்கும் செந்திலகம்! பூதக்கோளில் புயல் காற்று!

வியாழச் சூழகத்தில் பொங்கி எழும் வாயு மண்டலம் வடக்கிலும் தெற்கிலும் பாய்ந்து விரிகிறது! மத்திம ரேகைப் பிரதேசத்தை நோக்கி வீசும் காற்று நீண்ட பாதையில் செல்லும் போது, துருவ முனை நோக்கிப் போகும் காற்றுக் குறுகிய பாதையில் அடிக்கிறது. அவ்வாறு திருப்பம் அடையும் காற்றுகள், மேக மண்டல அடுக்குகளை அறுத்துப் பட்டை, பட்டையாய் [Bands] பிரிக்கின்றன! அப்பட்டை நிற மேகங்கள், சுற்றும் அச்சுக்கு ஒப்பாக 24 மணி நேரத்தில் கிழக்கு நோக்கி 11 டிகிரி கோண அளவு திரிந்து மாறுகிறது! புயல் காற்று மத்திம ரேகையில் அடிக்கும் உச்ச வேகம் 360 mph!

மாபெரும் புயல்கள் வியாழ மண்டலத்தில் திடார் திடாரென வீசி அடிக்கின்றன! சூரியனின் தட்ப, வெப்ப மாறுதலால், பூமியில் சூறாவளி, ஹரிக்கேன் ஆகியவை ஏற்படுகின்றன. ஆனால் வியாழக் கோளின் சூறாவளிப் புயல்கள், கொந்தளிக்கும் உட்தள வாயுக் குமிழ்களால் [Gas Bubbles] எழும்பி, அடர்த்தியான முகில் அடுக்குகளைக் கலக்கி அடிக்கின்றன! வாயுக் குமிழ்கள் தாறுமாறான வெப்பத் திட்டுகளை தாங்கிக் கொண்டு, புயல் காற்றுக்களைக் கட்டுப் படுத்த, வியாழனில் மேடு, பள்ளங்கள், மலைகள் ஏதும் இல்லாது, எல்லாத் திசைகளிலும், குறுக்கு நெடுக்காக முறுக்கி அடிக்கின்றன!

வியாழனின் பெயர் பெற்ற ‘மாபெரும் செந்திலகம் ‘ [Great Red Spot] சீரிய தொலை நோக்கி தோன்றிய நாள் முதல், 300 ஆண்டுகளுக்கும் மேலாகக் காணப்பட்டு கொந்தளித்து வருகிறது! செந்திலகம் முட்டை வடிவானது! அதன் கொந்தளிப்புக்குக் காரணம் இன்னும் அறியப் படவில்லை. முகில் ஆட்டத்திற்குச் செந்நிறத்தைத் தருபவை, புறவூதா [Ultraviolet] ஒளியை விழுங்கும், கந்தகம் [Sulfur], ஃபாஸ்ஃபரஸ் [Phosphorus] போன்றவற்றின் இரசாயனக் கூட்டுறுப்புகள் [Compounds]. மாறிக் கொண்டே வரும் செந்திலகத்தின் தற்போதைய பரிமாணம் 16200 மைல் நீளம்; 8700 மைல் அகலம்.

காலிலியோ விண்சிமிழ் சாதித்த வரலாற்று முதன்மை நிகழ்ச்சிகள்

1989 மே 4 ஆம் தேதி ஏவப்பட்ட காலிலியோ விண்வெளிக் கப்பல் [Galileo Spaceship] வியாழக் கோளை 1995 டிசம்பர் 7 ஆம் தேதி நெருங்கி அதன் சுழல்வீதியில் [Jupiter ‘s Orbit] சுற்றி, முதன் முதல் ஓர் ஆய்வுச்சிமிழை [Probe] வியாழ தளத்தில் இறக்கி விண்வெளிச் சரித்திர முதன்மை பெற்றது. அது வியாழக் கோளின் திரண்ட மேக மண்டலத்தைக் கடந்து சென்று, பல நெருக்கப் படங்களை எடுத்தது. சூழ் மண்டலத்தின் புது விஞ்ஞானத் தகவல்களைப் பூமிக்கு அனுப்பி, இறுதியில் தரையை நெருங்கும் போது, பயங்கரச் சூழக அழுத்தத்தில் [சுமார் 150 psi] தொலையனுப்பி [Transmitter] நசுங்கித் தொடர்பு அறுந்து போனது. ஆனால் வியாழச் சுழல்வீதியில் ஒழுங்காய்ச் சுற்றிவரும் காலிலியோ கப்பல் 1997 இறுதி இவரை பூதக்கோளைப் பற்றியும், அதன் சந்திரன்களைப் பற்றியும் தகவல் அனுப்பிக் கொண்டே இருந்தது!

1. சூரிய மண்டல ‘விண்கற்கள் வளையத்தின் ‘ [Astroid Belt] அருகே சென்று, காஸ்ப்பிரா [Caspra] விண்கல்லை நெருங்கிப் படமெடுத்தது.

2. விண்கல் ‘இதாவின் ‘ துணைக் கோள் ‘டாக்டைல் ‘ [Ida ‘s Satellite Dactyl] கண்டுபிடிக்கப் பட்டது.

3. பூமியின் துணைக் கோளான நிலவை நோக்கிப் ‘பன்னிற ஒளிப்பட்டை ‘ [Multispectral Study] ஆய்வு.

4. வியாழச் சூழ்வெளியை ஊடுறுவி முதன்முதல் காலிலியோ விண்ணுளவிதான் தளவியல் தகவல் தந்தது. சூழகத்தில் அகிலாண்ட தூசிப்புயல் கண்டுபிடிப்பு! வியாழனில் வீசும் பேய்க் காற்றடிப்பு 400 mph வேகத்துக்கும் மேல் என்று அறிந்தது! அதன் முகில் மண்டலத்துக்கு மேல் 31,000 மைல் உயரத்தில் புதிய தீவிரக் கதிர்வீச்சு வளையம் [Intense Radiation Belt] கண்டது! வாயேஜர் பயணத்தில் அறிந்ததை விடக் காலிலியோ உளவி குன்றிய அளவு நீர்மையைச் [Moisture] சூழகத்தில் கண்டது.

5. காலிலியோ விண்சிமிழ்தான் முதன் முதலில் வியாழக் கோளைச் சுற்றிவந்து விபரங்களை அனுப்பியது. சமபரப்பான பூமியில் நிகழும் மின்னலில் 10% மின்னொளிதான் வியாழ மண்டலத்தில் தென்பட்டது. ஆனால் வியாழனின் மின்னல் வீச்சுகள், பூமியின் மின்னொளியை விடப் பத்து மடங்கு வலுவுடன் தோன்றின!

6. பரிதியில் உள்ள அளவு [25%] ஹீலிய வாயுவே, வியாழச் சூழகத்திலும் [24%] ஏறக்குறைய இருந்தது.

7. ‘அயோ ‘ துணைக்கோளில் [Satellite Io] எரிமலைக் கொந்தளிப்புகள் தொடர்ந்து நேர்வதால், 1979 இல் வாயேஜர் விண்கப்பல் பயணத்துக்குப் பின்பு, தளப் பீடங்கள் அடுக்கடுக்காய்ப் பெருமளவில் மேவி [Extensive Resurfacing] இருந்தன! கானிமெடே, அயோ துணைக் கோள்களின் [Satellites Ganymede, Io] அகத்தே காந்த மண்டலம் உள்ளதென்று அறிய வந்தது.

8. துணைக்கோள் ஈரோப்பாவின் [Satellite Europa] தரைக்கடியில் ‘திரவ நீர்க்கடல் ‘ [Liquid Water Ocean] இருப்பதற்குச் சான்றுகள் கிடைத்தன!

9. முதன்முதல் சூமேக்கர்-லெவி என்னும் ஒரு வால்மீன் [Shoemaker-Levy 9] வியாழ தளத்தில் மோதி நொருங்குவதை, நேரடியாக காலிலியோ விண்கப்பல் கண்டு படமெடுத்தது.

வியாழன் சுற்றுச்சிமிழ் சாதித்த விண்வெளிச் சாதனைகள்

காலிலியோ ஆய்வுச்சிமிழ் வியாழச் சூழ்நிலையில் உலவும் சூறாவளிக் காற்றின் வேகத்தை அளந்து, நீர் மூலக்கூறுகள் [Water Molecules] இல்லாமையை எடுத்துக் காட்டியது! ஒவ்வொரு ஹீலிய அணுவிலும் 13 ஹைடிரஜன் அணுக்கள் [Atoms] இல்லாது, 6.4 ஹைடிரஜன் மூலக்கூறுகள் [Hydrogen Molecules] உள்ளதை எடுத்துக் காட்டி, வியாழன் சூரிய வாயுக்கள் உருவாக்கிய ஒரு கோள் என்னும் விஞ்ஞான நியதியை மெய்ப்பித்துக் காட்டியது.

வியாழனின் சூழகத்தில் பெரும்பான்மையாகப் பரவி யுள்ளது வாயு மண்டலமே! ஹைடிரஜன், ஹீலியம், கார்பன் மனாக்ஸைடு [CO], ஹைடிரஜன் ஸல்ஃபைடு [H2S], ஹைடிரஜன் ஸயனைடு [HCN], மீதேன் [Methane], ஈதேன் [Ethane], அம்மோனியா, அஸடிலீன் [Acetylene], ஃபாஸ்ஃபீன் [Phosphine], நீர்மை [Moisture], நீர்ப்பனி போன்றவை வியாழ மண்டலத்தில் தென்பட்டன.

வாயு மண்டலப் புறத்தோல் [Outer Layer] 600 மைல் உயரம் உள்ளது. அதற்குக் கீழே இருக்கும் அடுக்கில் அழுத்தமும், வெப்பமும் மிகுந்திருப்பதால், ஹைடிரஜன், ஹீலிய வாயுக்கள் திரவமாகி [Liquid Gases] அடுத்து உட்கருவில் 3 மில்லியன் பூவழுத்தத்தில் [Earth Atmosphere, 45 மில்லியன் psi] வாயு உலோகமாய் [Metallic Hydrogen] பாறைபோல் இறுகிப் போனது!

சூரியன்போல் வாயுக் கோளமான வியாழனின் உட்கருவில் போதிய உஷ்ணமும், அழுத்தமும் இல்லாததால், அணுப்பிணைவு இயக்கம் [Nuclear Fusion Reaction] தொடர முடியாமல் போனது. அதனால் வியாழன் ஓர் விண்மீனாக [Star] மாற முடியாமல், சூரியனின் துணைக் கோளாகச் சுற்றி வருகிறது. வியாழன் சூரியனைப் போல் ஓர் விண்மீனாக மாற வேண்டுமானால், அதன் தற்போதைய பளுவைப் போல் 80 மடங்கு வாயுப் பண்டம் தேவைப் படுகிறது!

வியாழனின் வளையங்களும், சுற்றிவரும் பதினாறு சந்திரன்களும்

சனிக்கோளின் இடையில் அணிந்திருக்கும் ஒளிமிகு வளையங்களைப் போன்று, வியாழனுக்கும் தனிப்பட்ட நலிந்த, பிரம்மாண்டமான சில வளையங்கள் இருஇப்பதை வாயெஜர் படமெடுத்து அனுப்பியது. சனி, வியாழன், யுரானஸ் [Uranus] போன்ற பூதக் கோள்கள் யாவும், மாபெரும் வளையங்களை மத்திம ரேகை மட்டத்தில் [Equtorial Plane] அணிந்துள்ளன. 4040 மைல் அகண்ட வியாழ வளையத்தின் தடிப்பு சுமார் அரை மைல்! 88700 மைல் விட்டமுள்ள வியாழ வளையத்தின் வெளிமுனை, வியாழ மையத்திலிருந்து 35,000 மைல் தூரத்தில் உள்ளது! வளையத்திற்கு உள் எல்லை எதுவும் இல்லாது, சுழலும் துணுக்குகள் வியாழக் கோளோடு ஒன்றாய்க் கலந்து விடுகின்றன. உடைந்து போன துணைக் கோள்களின் பாறைகள், தூசிகள், பனிக்கற்கள் போன்றவை வளையத்தில் சிக்கி, வியாழனைச் சுற்றி வரலாம் என்று கருதப் படுகிறது.

பூதக்கோள் வியாழனை 16 சந்திரன்கள் சுற்றி வருகின்றன. 1610 இல் காலிலியோ முதன் முதலில் வியாழனைப் பார்த்த போது, 4 பெரிய சந்திரன்களைக் கண்டு பிடித்தார். முதல் தொலை நோக்கிக் கருவி அமைக்கப்பட்ட போது, ஜெர்மன் விஞ்ஞானி ஸைமன் மாரியஸ் [Simon Marius] தனியாகக் கண்டு அவற்றை நிரூபித்துக் காட்டினார். நான்கு சந்திரன்களும் முதலில் கண்டு பிடித்தவர் நினைவாகக், காலிலியோ துணைக்கோள்கள் [Galilean Satellites] என அழைக்கப் படுகின்றன.

அவை நான்கும் விண்வெளியில் மின்னுவதால் கூரிய கண்பார்வை உடையவர் எவரும் கண்டு விடலாம்! பெரிய சந்திரன்கள் நான்கின் பெயர்கள்: கானிமெடே [Ganymede], காலிஸ்டோ [Callisto], அயோ [Io], யூரோப்பா [Europa]. பெரிய சந்திரன்களுக்குப் பெயரிட்டவர், ஸைமன் மாரியஸ். 3165 மைல் விட்டம் உடைய கானிமெடே எல்லா வற்றுக்கும் பெரிய சந்திரன். சுமார் 642,000 மைல் தூரத்தில் வியாழனைச் சுற்றி வருகிறது. மற்ற 12 சந்திரன்களில் மிகவும் சிறுத்தது 10 மைல் அளவு, பெருத்தது 170 மைல் அளவு.

விண்ணுளவிச் சிமிழ் ஆய்வுகளை முடிக்குமுன் அகால முடிவு!

காலிலியோ உளவி 1995 இல் வியாழக் கோளின் திரண்ட மேக மண்டலத்தைக் கடந்து சென்று, பல நெருக்கப் படங்களை எடுத்தது. சூழ் மண்டலத்தின் புது விஞ்ஞானத் தகவல்களைப் பூமிக்கு ஒரு மணி நேரம் அனுப்பி, இறுதியில் தரையை நெருங்கும் போது, பயங்கரச் சூழக அழுத்தத்தில் [சுமார் 150 psi] தொலையனுப்பி [Transmitter] நசுங்கித் தொடர்பு அறுந்து போனது. ஆனால் வியாழச் சுழல்வீதியில் ஒழுங்காய்ச் சுற்றிவரும் காலிலியோ கப்பல் 1997 இஇறுதி மாதங்கள் வரை பூதக் கோளைப் பற்றியும், அதன் பெரிய சந்திரன்களைப் பற்றியும் தகவல் அனுப்பிக் கொண்டே யிருந்தது!

காலிலியோ விண்கப்பல் 2002 நவம்பரில் உள்வட்டத் துணைக்கோள், ‘அமல்தியா ‘ [Inner Satellite Amalthea] அருகில் பயணம் செய்தது. 2003 பிப்ரவரி 26 நாசா வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘காலிலியோ விண்கப்பலில் உந்து எரித்திரவம் [Propellant] தீர்ந்துபோன நிலையில் தெரிவதால், விண்சிமிழ் தொடர்ந்து சுற்றவும் முடியாது; தொடர்ந்து மின்னனுப்பிக் கம்பத்தை, புவிநோக்கித் திருப்ப இயலாமல், தகவல்கள் யாவும் தடைப்பட்டுப் போகும் ‘ என்று கூறியது. அதற்குள் காலிலியோவைக் கட்டுப்படுத்தி வரும் பூலோகக் குழுவினர், விண்கப்பல் வியாழத் தளத்தில் விழுந்து நொருங்கும் பாதையில் செல்ல முடுக்கி விடுவர்! உச்ச சமயத்தில் [1997] பணிசெய்த 300 விஞ்ஞானிகள் குறைக்கப் பட்டு, 2002 முதல் 30 பேரே காலிலியோ திட்டத்தில் வேலை பார்த்து வருவதாக அறியப்படுகிறது. திட்டமிட்ட காலிலியோ விண்வெளிக் கப்பலின் பணிகள் யாவும் முடிந்து, அது 2003 செப்டம்பர் 21 ஆம் தேதி, வியாழத் தளத்தில் மோதி நொருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தகவல்கள்:

1. Galileo Project Information www.nssdc.gsfc.nasa.gov/planetary/galileo.html

2. Exploration of the Planets By: Brian Jones [1991]

3. Jupiter By: Garry Hunt & Patrick Moore

4. Galileo Orbiter & Probe By: Michael Wilcox [Nov 16, 1995]

5. Solar System Exploration: Mission Jupiter, Galileo

6. Astronomy By: Reader ‘s Digest [1998]

7. Galileo Project: www.jpl.nasa.gov/galileo NASA/JPL Press Release [Feb 26, 2003]

*************************

jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா