அழகியநெருடல்

This entry is part [part not set] of 26 in the series 20090416_Issue

சாமிசுரேஸ்



குளிர்பூத்துக் குருதி உறைந்திருந்த
ஓர் நடுநிசியில் கண் விழித்தேன்

முகத்தினில் வந்து மோதும்
பயப்பூவை நுகர்ந்து
உதிரத்தொடங்குகியது உடல்

மரபுப்பெட்டியினுள் பூட்டித்தொங்கும்
நினைவுகளின் உடலை மீறி புற்கள் முளைத்ததனால்
மனக்கூறுகள் பிரித்தெடுக்கப்பட்டு சிதறிக்கிடக்க
பின்னிரவுக்கனவுகள் யாவும்
காற்றில் கரைந்து எதிரிகளாயிருந்தன

*

அந்த ஈழத்து மணல் இடுக்குகளில்
எங்கள் உயிரின் பிறப்பு
இன்னும் ஒளிந்திருக்குமா

என் கைகாலெல்லாம் கீறி
எனைக்கொஞ்சிய எனதாசை ஈச்சமரம்
அந்நியக்காற்றின்கீழ் மூச்சிழந்து போயிருக்குமோ

*

கால்களை நிலத்தில் புதைத்து நிமிர்ந்த போது
என் மொழியுருகி மயானவெளியினால் கடல்கொண்டது.
நான்கு சுவர்களும் என்னுள் இறுக
ஓர் இயலாத்தன்மையினால் அறையப்பட்டேன்

யன்னல் திறந்து வெளிக்கலந்தேன்
இருள்குடித்து அமைதியாய்க் கிடக்கிறது நகர்
வீதியில் தெளித்த முன்தின மழை வெள்ளியாய்ச் சிரித்தது
யாருமில்லாத இரவுத்தெரு
அழகியலை வரைந்தபடி சிரிக்கிறது

*

“எச்சரிக்கை கோரமானவை” என் முகத்திலடித்தது
உயிரல்லவா அது
புன்முறுவல் புதைந்த முகமல்லவா அது
வன்னித்தெருக்களை வரைந்த கால்களல்லவா அது
எப்படிச் சிதைந்தது
பார்க்கமுடியாது கோரமாய்………
நாய்ப்பிறப்பகளா நாம்
ஒரு வரலாறு மெல்லக் கரைந்துகொண்டிருக்கிறது
யாருக்கும் கவலையில்லை
கண்மூடுகையில் காதுகளில் அகோரம்
இனவிபச்சார அரங்காற்றுகையின் இறுதிநடக்கிறது
ம் இன்னும் பொறுமை அவசியம்

யன்னலை விடுத்து
விளக்கை அணைத்து
போர்வைக்குள் புகுந்தேன்
இருள் எனை விழுங்கிக்கொண்டது.


sasa59@bluewin.ch
26.3.2009

Series Navigation

சாமிசுரேஸ்

சாமிசுரேஸ்