வேத வனம் விருட்சம் 11 கவிதை

This entry is part of 52 in the series 20081120_Issue

எஸ்ஸார்சி


உருவும் பெயரும்
வெற்றுத்தோற்றம்
பிரம்மம் தவிர்த்திட
எங்கே அவைகளின் இருப்பு

கயிற்று அரவமே
காணும் காட்சி.
கயிரே காண்பது
பாம்பன்று அறிதல் தெளிவு

தன்னை அறி
அறியாமை
பிறப்போடு இறப்பின் குழப்பம்
தொலையும் காண்

தானே ஒளிரும்
தடைஇலா ஒளி
தொடக்கம் முடிவிலா
மாறிலி எப்போதுமிருக்கும்

பிறப்பிலா அது
சத் சித் ஆனந்தம்
பிரம்மத்தின் உரு
அளந்து விட முடியா
அருங்குணம்

உருவமிலி
தனிச்சிறப்பாய் ஏதுமிலி
பிரித்து அறிய மாட்டாதது
துனை ஏற்காதது
இணை இல்லாதது
சுயமாய் சுதந்திரமாய்
நிறைவாகிய பிரம்மம்.
கண்களுக்குத்தெரியும் பூத உடல்
கண்களுக்கெட்டா சூக்கும உடல்
காரணமாகி நிற்கும் காரண உடல்
இவை அணுகிவிடா பிரம்மம்.
உடல் உயிர்
மனம் புத்தி
வினை ஈறாய்
ஐந்து மூடிகள் கொண்ட
அரும்பொருள் ஆன்மா.

நடப்பு உறக்கம்
ஆழ்ந்த நித்திரை
இவைகடந்து
காணக்கிடைக்கின்ற
மூலகாரணம்

சத் ராஜச தாமச குணங்கடந்து
நன்மைக்கும் தீமைக்கும்
நடு நாயகமாய்
இலங்கும் அது.

சத் சித் ஆனந்தம்
பிரம்மத்தை தொடக்கமாய்ப் பேசும்
சத்தும் சித்தும் வேறல்ல
அறிதலுக்கு சாட்சியே சத்
மெய்யை அறிதல்
வலி யினின்று விடுதலை

பிரம்மம் ஆனந்தக் கடல்
சித்தே ஆனந்தம்
சத் சிதா ஆனந்தம்
பிரம்மமே காட்சிக்கும் காரணத்திற்கும் மூலம்

மனம் இந்திரியங்கள் உயிர் பிரம்மத்தில்
உதிக்கின்றன.
பிரம்ம ஞானம் பிடிபடவே
பிரம்மம் அனுபவமாகிறது.
( சிவ ஞானாம்ருத உபனிசத் )

Series Navigation