இப்படியுமா

This entry is part of 31 in the series 20061123_Issue

சாமிசுரேஸ்


முள்ளந்தண்டினைக் கீறி
நரம்பைக் கவ்விக்கொண்டு முன்னேறுகிறது
குளிர்த்திரவம்

காற்றை எனக்குப்பிடிக்கும்
அது பிரசவிக்கும்
சுக நெடி பிடிக்கும்
ஏனோ அன்றது அழுது சிவந்தது

தலைச்சன் குருவியின் வெறிப்பிதற்றலில்
வெளிறிப்போனது கூடு

மேகவரிகளுக்குள் களங்கம்

வெடித்துச் சிதறும் முகில்த்துளிகளினுள்
காலாவதியானது காலம்

வழித்தெரியும் விழி மொழி
புருவங்களில் உயர்ந்து
மானிடப்பார்வையில் சிதறி
உருக்குலைந்த முடமாய் ஆகுதியாகனது

வலியது மட்டுமே நெடியதாகிறது

தரைகளின் விசும்பலில்
சிலுவைகள் சிதற
புதைகுழிகளின் மேல் மரணமாளிகை

பிறப்பைப் பார்த்தேன்
நீ யாராய்பிறக்கிறாய்

உனக்குள் மட்டுமே
புதையவேண்டிய நிழலை
ஊருக்குள் விதைத்து மரத்துப் போனாய்

நீ மனிதனாய் பிறக்கக்கடவது

அங்கொரு கூடலில்
சிறுவண்டு மனமுருகி
மொழியிழந்து தவிக்கிறது

சீ…
யாராவது முடிசூட்டிக்கொள்ளுங்கள்


sasa59@bluewin.ch

Series Navigation