சிரிப்பு

This entry is part of 48 in the series 20060203_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


இப்படி
செடிகளுக்குப் பூத்து
சிரிக்கத் தெரியுமோ தெரியாதோ ?

*
இந்த சிரிப்புக்கு

மாலையில் மெளனமாகும்
மயக்கமில்லை.

காம்பு கைவிடுமோ
கவலையில்லை.

காலத்தின் கட்டாய
கசங்கலில்லை.

சருகாய் கருகும்
சம்பவமில்லை.

இந்த சிரிப்பு

இதயத்தின் நினைவிழையால்
இதழ்களின் உயிர் நெசவா ?

இல்லை
இது
செய்த பூ
சிரிக்கும் காகித பூ.

காகிதமென
கண்டுபிடிக்காத கண்களிடம்
தான்
நிறம் பூசிய நிழலென்று
நிசம் பேசும் சிரிப்பு
சிரிப்பு பூ.

கூவித்திரிபவன்
காசுக்கு கனவு சுமக்கிறான்.

இறக்கிய கூடையை சுற்றி
எண்ணும் நொடியில்
கடைவிரிய பூந்தோட்டம்.
வாங்கி நடை தொடர
நகரும் பூக்கூட்டம்.

வாங்க வந்தோரின் வாகனங்கள்
வரம் வாங்கி நகர்ந்தன
தேராய்… குதிரையாய்…

ஒரு பூ
பிரதிவிராசன் குதிரையில்
சம்யுக்தாவாக சம்மதப்பட்டது.

பாரியின் தேர்
ஒரு
பூங்கொடியோடு புறப்பட்டது.

நடந்து போகும் ஒருத்தனுக்கு
ஒரு
நல்ல பூ துணை போனது.

*
இந்த கூட்டத்தில்
பூந்தோட்டத்தில்

வந்தவர் நின்றவர்
வாங்கியவர் வாங்காதவர்

சிரிப்பாய் சிரிக்க
பூக்கள்…
பூக்கள்… பூக்கள்…

அத்தனையிலும்
ஓர்
ஒற்றை பூ மட்டும்
என்னை
உணர்ச்சிவசப்பட வைக்கிறது.

அது
அவளின் சிரிப்பு.

செய்த பூவாய்
சிரிப்பு.

*
இப்படி
செடிகளுக்கு பூத்து
சிரிக்கத் தெரியுமோ தெரியாதோ…

பட்டுக்கோட்டை தமிழ்மதி
tamilmathi@tamilmathi.com

Series Navigation