ஆயுட் காவலன்

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)


நீ
அட்சய பாத்திரம்
அமுதசுரபி

வள்ளல்
நான்

சிக்கனம் இல்லையெனில்
வாழ்க்கைக்குச்
சிக்கல் என்று
பெயர் வைப்பார்கள்

சேமிப்பு என்பதை
மெளனம் என்று
மொழிபெயர்க்கலாம்

மெளனம்
ஞானத்தடமென்று தெரிந்தும்
ஆர்ப்பாட்டங்களில் இறங்கி
கைகலப்புக்கு
வழிகாட்டுகிறாய்

நீ
என் வாயிற்காவலன்

ஆயுட் காவலனும்
நீதான்

நாவலன்
பாவலன்
என் பட்டப்பெயர்கள்

பெருமைக்கும்
சிறுமைக்கும்
உன் கருமமே
கட்டளைக்கல்

நீ
தவமிருந்தால்
நான் ஞானி

நீ
விரதமிருந்தால்
நான் யோகி

நீ
விருப்பம்போல் வாழ்ந்தால்
நான் ரோகி

உன்
அடக்கமின்மையால்
எனக்குப்
‘பெரியவாய் ‘ என்று
பெயர்

வீரியம் பார்த்து
விதைக்கத் தவறினால்
அறுவடை என்பது
பதர்களின் குவியல்

நீ என்
ஆயுதம்

காயிருப்பக்
கனிகவர்ந்தால்
நீ என்
பே(ா)ராயுதம்

நான் என்பது
‘நா ‘ இல்லாமல்
இல்லை

நான் என்பதில்
பாதி
நீ அல்லவா

நான் வேறு
நீ வேறு அல்ல
இனி
நாம் என்பதை
நிலை நாட்டுவோம்
—-
ilango@stamford.com.sg

Series Navigation

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ