எந்தையும் தாயும்

This entry is part of 30 in the series 20020610_Issue

கோமதி நடராஜன்


ஆடாமல் அசையாமல்,
அங்குலம் நகராமல்,
தந்தை ஆதவன்,
ஓடி ஆடி உழைப்பது போல்
பாவனை காட்டுகிறார்.
நொடி கூட ஓய்வெடுக்காமல்,
அச்சாணியில் சுழன்று கொண்டு
அன்னை பூமி,
அமர்ந்தே இருப்பது போல்
அழகாக நடிக்கிறாள்.
அன்னையும் தந்தையும்
நடிக்கும் போது,
அவர்களின்,குழந்தைகள்,
நாமும் நடித்தால் என்ன ?
பூமியில்
இறக்கி விடப் பட்டதே
இறக்கும் வரை நடிக்கத்தானே!
கோபத்தை மறைத்துக்
கொஞ்சுவது போல் நடிப்போம்.
பிடிக்காதவர்களைப்
பிடித்தவர் போல் நடிப்போம்.
நடிப்பவர்களை,
நம்புவதுபோல் நடிப்போம்.
அன்னையும் நடிக்கிறாள்
தந்தையும் நடிக்கிறார்
நாமும் நடிப்போம் ,
தப்பே இல்லை.

***

ngomathi@rediffmail.com

Series Navigation