ராகு காலம்

This entry is part of 18 in the series 20011007_Issue

வந்தியத்தேவன்


பாம்பு வந்து நிலவைத் தின்ன கிரகணமுன்னு சொன்னாங்க,
தவளைக்கு மணமுடிச்சா மழை வருமுன்னு சொன்னாங்க,

பிறர் சொன்னதெல்லாம் நம்பினாயே மனிதா மனிதா,
சகுனம் பார்த்து சகுனம் பார்த்து வெம்பினாயே மனிதா.

காவிகளை கண்டவுடன் காலில் விழுந்த மனிதா,
அவன் நல்லவனா கெட்டவனா கணிக்க மறந்த மனிதா,

கடவுளை காண்பிக்க உன்னை கண்ணை மூடச் செய்து,
அவன் உன் கரன்சிகளை களவாடிப் போனதென்ன மனிதா மனிதா.

பயந்து பயந்து வாழ்வதென்ன மனிதா,
உன் பகுத்தறிவு போனதெங்கே மனிதா மனிதா.

நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்து நலிந்து போன மனிதா,
உன் கோளாறுக்கெல்லாம் கோள்களை குறை சொல்லாதே மனிதா மனிதா.

தன்னம்பிக்கையை தாயத்தாக கட்டிக்கொள் என் மனிதா,
தெளிந்த சிந்தையை திருநீறாக பூசிக்கொள் என் மனிதா,

நல்லதே நடக்குமென்று நம்பிக்கையிருந்தால்,
நாள் என் செய்யும் கோள் என் செய்யும்.

எல்லாம் சரிதான் , கவிதை ஏன் இன்னும் முடியவில்லை,
ஒ! ராகு காலத்தில் தொடங்கிவிட்டேனா ?

Series Navigation