கள்ளத்தனமான மௌனங்கள்

This entry is part [part not set] of 25 in the series 20091002_Issue

பி.ஏ ஷேக் தாவூது


“அநியாயக்காரர்கள் இழைக்கும் அநீதங்களை விட அவற்றை நீதியான மனிதர்கள் எனப்படுவோர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மெளனமாய் சகித்துக்கொண்டிருப்பது குறித்தே நாம் இந்த தலைமுறையில் வருத்தமுற வேண்டும்” – மார்ட்டின் லூதர் கிங்.

வாழ்க்கையின் முக்கியமான பல தருணங்களில் நாம் கடைப்பிடிக்கும் மெளனங்கள் மிக நல்ல விளைவை ஏற்படுத்தி விடுவதுண்டு. குடும்ப உறவில் கணவன் – மனைவிக்கிடையே வாய்ச்சண்டைகள் முற்றும் போது இருவரில் ஒருவர் கடைப்பிடிக்கும் மெளனம் குடும்பத்தில் விரிசல் வராமல் பாதுகாக்கின்றது. காதலில் கூட மெளனங்கள் சம்மதத்தின் குறியீடாய் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது. காதலை சொல்லும் காதலனிடம் காதலி கடைப்பிடிக்கும் மெளனம் சம்மதமாகவே காதலனால் பறைசாற்றப்படும். சில தருணங்களில் வார்த்தைகளால் விளக்க முடியாத விடயங்களை மெளனங்கள் மிக எளிதில் விளக்கி விடும். சினம் கொள்ளும் போது அதை அடக்கி தன்னுடைய கட்டுக்குள் வைத்து மெளனத்தைக் கடைப்பிடிப்பவனே உண்மையான வீரன் என்று நம் முன்னோர்கள் சொல்லி விட்டு போயிருக்கின்றனர்.

மெளனத்தை கடைப்பிடித்தல் பல சமயங்களில் நல்ல விளைவுகளை ஏற்படுத்திடினும் சில சமயங்களில் கடைப்பிடிக்கப்படும் மெளனங்களே தீமைக்கான தொடக்கப் புள்ளியாக மாறிவிடுகின்ற நிலைமையும் இருந்து கொண்டேயிருக்கின்றன. உதாரணமாக பேருந்திலோ அல்லது மின்சாரத் தொடர் வண்டியிலோ பயணம் செய்யும்போது சபலப் புத்தி படைத்த ஆண்கள் செய்யும் இழிசெயலை பெரும்பாலான பெண்கள் மனதளவில் வெறுத்து எந்த ஒரு எதிர்வினையும் காட்டாமல் அவனிடமிருந்து நகர்ந்து விடுவதால் தான் அடுத்தடுத்த பெண்களிடமும் தொடர்ந்து இந்த தீமைகளை செய்ய துணிந்து விடுகின்றான். மெளனத்தை எங்கு கடைப்பிடிக்க வேண்டுமோ அங்கு கடைப்பிடிக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் மெளனத்தை கடைப்பிடித்தல் ஏற்புடையதன்று.

தீமைகளைக் கண்டு சாதாரணர்கள் கடைப்பிடிக்கும் மெளனங்கள் ஏற்படுத்தும் பின்விளைவுகளை விட அறிவுஜீவிகள் கடைப்பிடிக்கும் மெளனங்களால் ஏற்படும் பின்விளைவுகள் மிகவும் வீரியமானவை. ஏனெனில் அறிவுஜீவிகள் தான் சமூகத்தில் கருத்தியலை உருவாக்குபவர்கள். இப்படி உருவாக்கப்படும் கருத்தியல்களை தான் எதிர்காலத்தில் வரலாறாக நம்முடைய வருங்காலத் தலைமுறை படிக்க வேண்டியதிருக்கும். நாளைய தலைமுறை எதை வரலாறாகப் படிக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்யும் இத்தகைய அறிவுஜீவிகளே தீமைகளை கண்டும் காணாதது போல நடந்து கொண்டால் சாதாரணர்களின் நிலையை நாம் விளக்கத் தேவையில்லை.

2004 ல் குஜராத் முதல்வர் மோடியை கொலை செய்ய வந்த லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகள் என்று காரணம் கற்பிக்கப்பட்டு 19 வயது நிரம்பிய இளம் பெண் இஷ்ரத் ஜெஹான் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ரானா, ஜிஷான் ஜௌஹார் ஆகியோர் குஜராத் காவல்துறையால் அநியாயமாக கொல்லப்பட்டனர். ஆனால் இது போலி என்கவுண்டர், திட்டமிட்ட படுகொலை என்று அகமதாபாத் பெருநகர நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது. இந்தக் கொடூரக் கொலைகளுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளையும் நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. ஒரு கல்லூரி மாணவியை சர்வதேச தீவிரவாதியாக சித்தரித்து அவருடன் கூட இருந்த மாணவர்களையும் படுகொலை செய்த இந்த நிகழ்வை வலிமையான அளவில் கண்டிக்க தவறி விட்டது அறிவுஜீவி சமூகம். ஒன்றிரண்டு அருந்ததி ராய்க்களும் தருண் தேஜ்பால்களும் கண்டித்தல் மட்டும் போதாது. நீதிமன்றத்தில் சத்தியம் வென்ற போதும் சரியான அளவில் மக்களை போய் அது சென்றடையவில்லை.

காஷ்மீரிலும் நக்சல் பாரிகள் அதிகமுள்ள மாநிலங்களிலும் இத்தகைய போலிப் படுகொலைகள் காவல் துறையினரால் நடத்தப்படுவது வழக்கமான சடங்காகி விட்ட போதிலும் அவற்றை உரிய முறையில் கண்டிக்காமல் அறிவுஜீவி சமூகம் கடைப்பிடிக்கும் ஆழ்ந்த மெளனங்கள் இந்த போலிப் படுகொலைகளை தொடர்கதையாக்கி விடுகின்றன. போலிப்படுகொலைகளைப் பற்றிய உண்மைகள் நீதிமன்றத்தில் வெளியானால் மற்ற மாநில அரசுகள் குறைந்தபட்சம் நீதிமன்றத்தின் தீர்ப்பையாவது மதித்து நடக்கும். ஆனால் மோடியின் குஜராத் மாநில அரசு குற்றமிழைத்த அதிகாரிகளை காப்பாற்றுவதில் முனைப்புடன் பணியாற்றுகின்றது. மேல் முறையீடு என்று காலத்தை கடத்தும் உத்தியை திறமையாக கையாண்டு கொண்டிருக்கிறது.

இறுதியாக ஈழத்துக் கவிஞர் பஹிமா ஜஹானின் கவிதையிலிருந்து சில வரிகள்.

“அகாலத்தில் திணித்து
நீயும் கைப்பிடி மண்ணிட்டு மூடிய ஓரிடம்
மெளனத்தின் ஆயிரம் ஈட்டிகளை – இனித்
தினந்தோறும் உனை நோக்கி ஏவும். ”

மனிதநேயம் என்ற ஒன்றே மரித்து விட்ட மனதிற்கு சொந்தக்காரர்களாகாகவும், பதவிகளைப் பெறுவதற்காக சுயநலனுடன் மக்களை மத அடிப்படையில் பிரிக்கும் ஆட்சியாளர்களுக்கும் பல வேளைகளில் பதவி உயர்வு பெறுவதற்கும் சில வேளைகளில் ஆட்சியாளர்களின் கட்டளைகளுக்காகவும் இந்த போலிப்படுகொலைகளை செய்து முடித்த, அதிகார போதையில் இருக்கும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் மட்டுமல்ல. கள்ளத்தனமான மெளனங்களை கடைப்பிடிக்கும் அறிவுஜீவிகளுக்கும் இந்த கவிதை வரிகள் பொருந்தும்.

பி.ஏ ஷேக் தாவூது
pasdawood@gmail.com

Series Navigation

பி.ஏ ஷேக் தாவூது

பி.ஏ ஷேக் தாவூது