எண்ணச் சிதறல்கள் : நவீனத்துவம், உலகமயமாதல், பின் நவீனத்துவம், பிற்போக்கு நவீனத்துவம், வஹ்ஹாபி, இஸ்லாமிய மனக்குறைகள்

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

நேசகுமார்



திண்ணை பற்றிய நினைவுகள் மீண்டும் மீண்டும் மனதில் அலைபாய்கின்றன. எங்கள் வீட்டுத் திண்ணை இன்றில்லை, வீடும் இல்லை. இல்லை என்றால், இல்லாது போய்விட்டது என்று அர்த்தமில்லை, காட்சி மயக்கமே அது. இந்தப்பிரபஞ்சத்தின் புதிர்களில் ஒன்று இது – எதுவுமே இல்லாது போவதில்லை. மாற்றம் மட்டுமே நடைபெறுகின்றது. இந்த மாற்றம் காண்போருக்கு இல்லாதது போன்றதொரு மாயத்தோற்றத்தை தருகிறது. வேனிற்காலத்து நீர் கரைவது போன்று தோன்றினாலும், ஆவியாகி தொக்கி நிற்பது போல இந்த மாற்றம் பெற்ற உருக்களும் ஆங்காங்கே தொக்கி நிற்கின்றன. பார்ப்பவரின் கவனத்தைப் பொறுத்து தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவும் செய்கின்றன. சில சமயம் வெளிப்படையாகவே மீட்சி பெறுவதும் உண்டு.

சென்னப்பட்டினத்தில் படித்து வந்த சித்தப்பா கோடாலியால் திண்ணையில் ஒரு காலைப்பொழுதில் டொம்மென்று இடித்தார். அவருக்குக் கோபம், இப்படிப் பட்ட நாட்டுப்புறத் தோற்றத்தின், பழைய காலத்தின் – கலாச்சாரத்தின் அவலட்சணம் நுழையுமுன்பே உறுத்துகிறதே என்று. வீட்டில் சொல்லிச் சொல்லி யாரும் கேட்காததால், கடைசியாக அவருடைய கோபம் இப்படித்திரும்பியது. இந்த கோடாரிக் கொத்து திண்ணையுடன் நின்றுவிடவில்லை, கூடிய விரைவிலேயே வீடெங்கும் பரவியது. கொல்லைப்புற விறகடுப்பு மருமகள்களுக்கு ஒத்து வரவில்லை, முற்றத்தில் விழும் நீர் வீடெங்கும் பரவியது உறுத்தலாயிருந்தது, அவ்வளவு பெரிய சாமியறை வீட்டில் தேவைப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டுப் பிள்ளைகளுக்கு(பிள்ளைகள் என்பதைவிட அவர்களது இணைகள் என்று சொல்ல வேண்டும்) பழைய கூட்டு முறையில் இருப்பது பல விதங்களிலும் மன அழுத்தத்தை தருவதாக இருந்தது. பழைய முறையை பகுத்தாலே தத்தமது அபிலாஷைகள் நிறைவேறும் என்று அனைவருக்கும் தோன்றியது. இதில் பல நியாயங்களும் இருந்தன.

***

நவீனத்துவம் என்பது சமூகத்தின் பல முகங்களிலும் வந்தமர்ந்து மாற்றங்களைக் கொண்டு வந்த காலகட்டம் அது. வீட்டில் அப்பா நாத்திகராகவும், கம்யூனிஸ்டாகவும் போனார். சின்ன சித்தப்பா நாகரிக யுவனாக மாற விழைந்தார். நடு சித்தப்பாவையும் நவீனத்துவம் தொற்றிக்கொண்டது, ஆனால் அது ஆன்மீக ரீதியில் தொற்றியது. அதைப் பற்றி தனியே விவரிக்க வேண்டும். சுருங்கக் கூறின், மறைந்து போனது திண்ணையும் மூன்று கட்டு வீடும் மட்டுமல்ல, பழைய மரபுகள், பழைய சிந்தனைகள், பழைய வழிமுறைகள் எல்லாமே உலுக்கப்பட்டு மாற்றமோ அல்லது குறைந்தபட்சம் மாற்றமடையும் ஆவலோ அடைந்தன.

இது நல்லதா கெட்டதா என்று இன்றைய தேதியில் திரும்பிப் பார்க்கையில் இரண்டும் கலந்தது என்றே தோன்றுகிறது. திண்ணையும், படுத்து காற்று வாங்கும் முற்றமும் மட்டும் மறையவில்லை. அத்துடன் வீட்டையொட்டி அமைந்திருந்த சந்தும், எடுப்புக் கக்கூஸும் , வாரா வாரம் ஞாயிறன்று வந்து மலம் அள்ளும் தொம்பச்சியும் மறைந்தார்கள். இன்றைய தேதியில் தொம்பச்சி என்று எழுதக் கூட எனக்கு சற்றே கூச்சமாகவும், அநாகரிகமாகவும் இருக்கிறது. இத்தகைய நல்ல மாற்றங்களையும் நவீனத்துவம் கொண்டு வந்தது. நவீனத்துவம், நகரமயமாதல் (Urbanization), உலகமயமாதல் (Globalization) போன்றவற்றிற்கு எதிராக எழுதுவது இன்றைய பின்நவீனத்துவ-மறுமலர்ச்சி காலகட்டத்தில் ஃபேஷனாகிவிட்டாலும், இந்த மாற்றங்கள் நல்லது கெட்டது என்று இரண்டையுமே கொண்டு வந்துள்ளதை நாமனைவரும் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

***

குப்பைக்கூளமாய், இரைச்சலும் எரிச்சலுமாய், முகங்களை அழித்து அசுரத்தனமாக வளர்ந்து பிரும்மாண்டமாய் எக்கி நிக்கும் நகரங்கள் பல சமயங்களில் பல தட்டு மக்களுக்கு ஆசுவாசத்தைத் தரக்கூடியதாகவும், ஜாதி அடுக்குகளை உடைத்து, சமநிலையையும் சுதந்திரத்தையும் அதுவரை மறுக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பதாகவும் இருக்கின்றது. ஊரிலும் நகரத்திலும் தலித்தை விளிப்பதில் ஏற்படும் மாறுதலைக் குறித்து அழகிய பெரியவன் (என்று நினைக்கிறேன்) அழகிய ஒரு கவிதையை மேற்கோளிட்டுக் காட்டியிருப்பார், ஊரில் ஒருமையில் விளிப்பது எப்படி நகரத்தில் மரியாதையாக மாறிவிடுகிறதென்று.

அதே போன்று உலகமயமாதலும் பல மாற்றங்களை திடுமென கொண்டுவந்து நிறுத்துகிறது. மனித உரிமைகள் குறித்து இன்று நாம் கொண்டிருக்கும் கருத்துக்கள், விழிப்புணர்வு பெற்றுக்கொண்டிருப்பது, கருத்துச் சுதந்திரம் பற்றிய கருத்துக்கள் என்று இதெல்லாம் கூட உலகமயமாதலால் வந்திறங்குகின்றன அல்லது துரிதப்படுத்தப்படுகின்றன. அதனால்தான் பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தப்பட்ட பெண்ணுக்கு தண்டனை தரும் சவுதி அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ள நேர்ந்தது. இதுவும் உலகமயமாதலால் விளைகின்ற நன்மைதான்.

***

மேலே செல்லுமுன் இந்த தண்டனை பற்றி குறிப்பிட வேண்டும். இந்த தண்டனை ஏனெனில், அவள் ஷரீயத்து சொல்கிறபடி தனது கணவன் அல்லது தந்தையுடன் வெளியே போகாமல் தனியே போய்விட்டாள், வேறு ஆணைச் சந்தித்து கடவுள் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று விதித்திருக்கிறாரோ அதற்கு முரணாக நடந்து கொண்டு ஆண்களை கற்பழிக்கத்தூண்டி குற்றம் புரிந்துவிட்டாள். சவுதியில் ஒடுக்கப்படும் ஷியா பிரிவைச் சேர்ந்தவளாக இருப்பதுவேறு வஹ்ஹாபிகளை கோபம் கொள்ளச் செய்துவிட்டது. பொதுவாகவே வஹ்ஹாபிகளுக்கு ஷியாக்கள் துரோகிகள், வழிகேட்டில் இருப்பவர்கள் எனவே மாற்று மதத்தவர்களுக்கு கொடுக்கும் இரண்டாம் மட்ட திம்மி நிலையைக் கூட அவர்களுக்கு வழங்கக்கூடாது , புனிதமான சவுதியில் அவர்கள் இருப்பதே அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாகும் என்ற எண்ணம் உண்டு. சவுதி அரச குடும்பத்திற்கெதிரான தீவிர வஹ்ஹாபிகளின் பெரிய குறைகளுள் ஒன்று இந்த ஷியாக்களை அழிக்காமல் வாழ விட்டது.

ஒரு பெண் தனியே வாழக்கூடாது என்று சொல்வது மனுதர்மத்தை ஒத்திருக்கிறது என்பதை இங்கே குறிப்பிடவேண்டும். சொல்லப்போனால், இஸ்லாத்தின் அனைத்து கோட்பாடுகளுமே ஒரு காலத்தில் உலகெங்கும் இருந்திருக்கக் கூடும் (அப்படியே இஸ்லாமும் சொல்கிறது ). இத்தகைய கடவுள் பற்றிய கருத்துக்களிலிருந்து, கடவுள் பற்றிய இத்தகைய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் விளைவாக சமூகத்தின் பலவித அம்சங்களை கட்டுப்படுத்த விழைந்த மதவாதிகள், கடவுளுக்கும் மனிதர்களுக்குமான இடைத்தரகர்களின் ஷரீயத்துகளிலிருந்து, மனுதர்மங்களிலிருந்து உலகம் வெளியே வந்துவிட்டது பலவிதங்களில். ஆனாலும் இத்தகைய ஒரு பிற்போக்கு நிலையை மதநம்பிக்கையின் காரணமாக மீண்டும் மீண்டும் சிந்திக்காமலேயே இஸ்லாமிஸ்டுகள் முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

***

கடவுள் எப்படி ஒரு சாரார் மீது, அவர்களின் கலாச்சாரம் மற்றும் மதநம்பிக்கைகள் காரணமாக கோபம் கொள்ள முடியும், தனியே ஒரு பெண் நடந்து போனால் அது எப்படி கடவுளுக்கு கோபத்தைத் தரக்கூடியதாக அமையும் என்றெல்லாம் நம்மைப் போன்ற பேமானிகளுக்கு (ஈமான் – இறை நம்பிக்கை இல்லாதவர்கள் , காஃபிர்கள்) தோன்றலாம்.

இந்த மனநிலையைப் புரிந்துகொள்ள பிற்போக்கு நவீனத்துவம் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பிற்போக்கு நவீனத்துவம் (Retro-Modernism) கூட சமுதாயத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் பற்றிக் கொள்கிறது. வீட்டில் இருக்கும் மர நாற்காலியை தூக்கி காயலான்கடையில் போட்டுவிட்டு பள பளவென்று ப்ளாஸ்டிக் நாற்காலி வாங்கி வைக்கிறோமே, இளநீரை அருந்துவதை விட்டு விட்டு காஃபி டே யில் போய் அறுபது ரூபாய் கொடுத்து கபூசினோ குடிக்கிறோமே, கோயிலில் மார்பிள் ஃப்ளோரிங் போட்டு தூண்களில் ஆயில் பெயிண்ட் அடிக்கின்றோமே, வீட்டிலிருந்து துணிப்பை எடுத்துச் சென்று காய்கறி வாங்குவதற்கு சங்கோஜப்பட்டுக்கொண்டு பாலிதீன் பையில் வாங்கி வருகிறோமே – இத்தகைய மூடத்தனமான, ஆழ்ந்த சிந்தனையில்லாது மேம்போக்கான நவீனச் சிந்தனையையே நான் பிற்போக்கு நவீனத்துவமாக காண்கிறேன்.

இது மிகவும் ஆபத்தானது மட்டுமல்லாது ஆட்கொண்டவரின் மனதை மயக்க வல்லதும், தனது எளிமையினால் பார்த்தீனியம் போன்று விரைந்து பரவக்கூடியதாகவும் இருக்கிறது. மனித மனதின் விசித்திரங்களுள் ஒன்று இந்த பிற்போக்கு நவீனத்துவத்தில் மயங்கி ஆட்படுவது. பின்பு திடீரென ஒரு நாள் விழிப்புணர்வு பரவும் காலகட்டத்தில் இதை உதறித்தள்ளினாலும் இடைப்பட்ட காலகட்டத்தில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திச் செல்ல வல்லதாயிருக்கிறது இந்த பிற்போக்கு நவீனத்துவம். நவீனத்துவத்திலாவது கெட்டதும் இருக்கிறது, நல்லதும் இருக்கிறது. பின் நவீனத்துவமோ ஆழ்ந்த சிந்தனைகளின் விளைவாக நவீனத்துவத்திலிருந்து மீட்சி பெற்றமையால் ஒவ்வாத தீயவைகளை நீக்கி பழமையை அதன் குறைபாடுகளைக் களைந்து மீட்டுக் கொண்டு வந்து புத்துணர்வை அளிப்பதாக இருக்கிறது. ஆனால், இந்த பிற்போக்கு நவீனத்துவத்தில் எவ்வித நன்மைகளும் இருப்பதில்லை, வெறும் அழிவு தான் – நமக்கே தெரியாதவாறு நம்மையும், நம்மைச் சுற்றியிருப்போரையும் பெரும் அழிவுக்குட்படுத்திவிட்டு செல்கிறது இந்த பிற்போக்கு நவீனத்துவம்.

***

வஹ்ஹாபிகளின் மனோபாவம் இந்த பிற்போக்கு நவீனத்துவத்தையே எனக்கு நினைவுபடுத்துகின்றது. அவர்களுக்கு தாம் மிகவும் நவீன சிந்தனையுடையவர்கள், பகுத்தறிவுடன் கூடிய கடவுள் கோட்பாட்டை உடையவர்கள், தங்களது கடவுள் கோட்பாடு உன்னதமாகவும், பகுத்தறிவுடன் கூடியதாகவும் இருப்பதால் தாங்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் மற்றவர்கள் ஒடுக்கப்பட வேண்டியவர்கள் என்ற எண்ணம் இருக்கிறது.

ஆனால், வன்முறை பற்றிய பயம் இல்லையென்றால் வஹ்ஹாபிகளால் ஒரு தெளிவான விவாதத்தில் தங்களது பகுத்தறிவு கடவுட் கோட்பாட்டின் அம்சங்களை உரக்கச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் மேலுக்கு பகுத்தறிவு போன்று தோன்றினாலும் இவையெல்லாம் எங்கோ அரேபியாவிலும், பாரசீகத்திலும் உருவாக்கிய ஏடுகளினடிப்படையில் சமூகத்தை கட்டுப்படுத்த விழையக் கூடியதாக இருக்கிறது. ஆம், முஹம்மது என்பவர் யார், என்ன சொன்னார் என்று எப்படி நம்புவது? குரான் மற்றும் ஹதீஸ் அடிப்படையிலேயே இந்த நம்பிக்கைகள் வஹ்ஹாபி போன்றவர்களின் மனதில் தோன்றுகின்றன. குரான் முஹம்மதின் மறைவுக்கு மிகவும் பிற்காலத்தில் பலவித மாற்றங்களுக்கு உட்பட்டு உருவானதை இன்றைய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். பல முக்கியமான மாற்றங்கள் குரானில் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதும் சரியோ தவறோ ஒரு குரானை மட்டுமே அரசு அதிகாரபூர்வமான குரானாக அறிவித்து ஏனைய குரான்களை எரித்துவிட்டதாலும், அதற்குப் பின்பும் குரான் தொடர்ந்து அடித்து திருத்தப்பட்டு எழுதப்பட்டிருப்பதை அரபு நாட்டு மசூதியொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட குரான் சுவடிகளை ஆய்ந்து பார்க்கும்போது கண்டுபிடித்திருப்பதையும் இன்று செய்திகளில் பார்க்க முடிகிறது. சீரா மற்றும் ஹதீதுகள் விஷயத்தில் முஸ்லீம்களிடையேயே ஒத்த கருத்து கிடையாது ஒரு குழு இன்னொரு குழுவின் ஏட்டை திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது என்று குற்றம் சாற்றும் நிலையில் இவற்றின் அடிப்படையும் தகர்ந்து போகிறது. ஆனால், நம்பிக்கையாளனின் மனநிலையோ தனது நம்பிக்கை வலுவான அடிப்படையில் அமைந்திருப்பதான ஒரு கனவு நிலையில் காலம் தள்ளிவருகிறது. இவற்றைப் பற்றி விரிவாக இன்னும் எழுதலாம்தான், இப்னு வராக் போன்றவர்கள் தொகுத்து அளிக்கின்ற ஆதாரங்களை மேற்கோள் காட்டலாம்தான் ஆனால், எப்படி பேசினாலும் நாம் அவதூறு சொல்வதாகவும், அவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகவும் குற்றம் சாட்டப்படுவோம். ஏனையோரைப் பார்த்து இஸ்லாம் சுட்டுகின்ற ஏராளமான விரல்களில் ஒன்று திரும்பி அங்கே நீண்டாலும் கூட அது பெரும் இரைச்சலை இஸ்லாமிஸ்டுகளிடமிருந்து ஏற்படுத்துகிறது – மலர்மன்னனின் மீதான வஹ்ஹாபியின் மனக்குமுறல் இத்தகைய மனப்பாங்கின் நல்லதொரு எடுத்துக்காட்டு.

***

இந்த வஹ்ஹாபிகளின் மனப்பாங்கு பொதுவான இஸ்லாமிய மனப்பாங்கின் அதீத பிரதிபலிப்பே ஆகும். இஸ்லாமிய மனக்குறை என்பது ஒரு அடியில்லா குழியைப் போன்றது (bottomless pit) அவர்களை மட்டுமல்ல, அந்த மனக்குறைகளுக்கு அஞ்சினால் நம்மையும் ஒட்டுமொத்த சமுதாயத்தையுமே முடிவில்லா சுழலுக்குள் ஆழ்த்திட வல்லது.

ஆம், இன்று (திண்ணையில் எழுதும்) வஹ்ஹாபிக்கு மலர்மன்னன் முகமதியர் என்று குறிப்பிட்டு முஸ்லீம்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகக் குறையிருக்கிறது. நாளை அம்பேத்காரின் சிலையை வைப்பதும், பெரியாரின் சிலையை வைப்பதும் கூட அவரது மனத்தை காயப்படுத்திவிடும். இது ஜோக் அல்ல. காஷ்மீரில் இன்றைய மத பயங்கரவாதத்தின் ஆரம்பக் கட்டத்தில் காந்தியடிகளின் சிலையை கோர்ட் வளாகத்தில் வைக்க முயன்றபோது அங்கிருந்த மதவாதிகளின் உணர்வுகள் இப்படியே புண்பட்டன. பம்பாய் படத்தில் முஸ்லீம் பெண்ணை இந்து ஒருவன் மணந்ததாகக் காட்டியபோது – இதற்கு முன்னோடியாக மகாராஷ்டிரத்தில் ஒரு நாடகத்தில் இதே போன்று காட்டியபோது அவர்களின் மனம் புண்பட்டது. மணிரத்தினத்தின் வீட்டில் பைப் வெடிகுண்டு வீசி இந்த மனக்குறையைக் கொஞ்சம் தீர்த்துக் கொண்டார்கள்.

இன்று தஸ்லிமா இந்தியாவில் இருப்பது முஸ்லீம்களின் மன உணர்வுகளை புண்படுத்துகின்றது. நாளை ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ விற்பனையாவது முஸ்லீம்களைப் புண்படுத்தும். ‘நீயா நானா’வில் அன்னிய ஆண்களுக்கு மத்தியில் பர்தா போடாமல் சல்மா உட்கார்ந்து பேசுவது ‘உலக முஸ்லீம்களின் மத உணர்வுகளையெல்லாம்’ புண்படுத்திவிட்டதாக கூச்சல் எழும், ரசூலின் கவிதைகளும் கட்டுரைகளும் புண்படுத்தும் (படுத்திவிட்டது ஏற்கெனவே), மசூதிக்கு முன்னால் மேள தாளத்துடன் செல்லும் காவடி மனதைப் புண்படுத்தும், மார்கழி மாதத்தில் ஒலிக்கும் பாட்டுக்கள் ஈமானிகளின் மனதை ஏகமாய் புண்படுத்தும் (எங்கள் ஊரில் ஒவ்வொரு மார்கழியிலும் ஒரு காலத்தில் இது முஸ்லீம்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது), சினிமா – நாடகம் – கலைகள் – நாட்டியம் – ஓவியம் (சவுதியில் பல வஹ்ஹாபிகள் போட்டோ எடுப்பது குஃபார், இறைமறுப்பு, இறைவனுக்கு ஒவ்வாதது என்று கருதுகிறார்கள், ஓவியர்கள் சைத்தானின் கையாட்கள் என்பதும் வஹ்ஹாபிகளின் நம்பிக்கை) – ஆணுக்கு சமமாக பெண்கள் பணி புரிவது புண்படுத்தும் (வஹ்ஹாபிகளின் சுவனபுரியாம் சவுதியில் பெண்கள் காரோட்டுவது கூட ஒழுக்கக் கேட்டை விளைவிப்பதாக, மதத்துக்கு எதிரானதாக பல வஹ்ஹாபிகளால் கருதப்படுகின்றது) இப்படி நாகரிக சமுதாயத்தின் அனைத்து அம்சங்களுமே ஒன்றன் பின் ஒன்றாக ஈமான் அதிகம் கொண்ட இஸ்லாமிய சகோதரர்களின் மனதைப் புண்படுத்துவதாக அமைகிறது.

இதன் முடிவுதான் என்ன?

அர்த்த நாசம் தான். தாலிபான்கள் உருவாக்க நினைந்த ஒரு சமூகத்தைப் போல உலகம் முழுவதையும் ஆக்கிட வேண்டும் என்ற ஈமானிய சிந்தனையின் வெளிப்பாடே இது போன்ற மனக்குறைகள், கோரிக்கைகள். நாகரிக சமுதாயம் இத்தனை நூறாண்டுகள் பாடுபட்டு முன்னோக்கி நகர்ந்த அனைத்து விஷயங்களிலும் பின்னோக்கிப் போய், 1400 வருடங்களுக்கு முன்பு அரேபியப் பாலைவனத்தில் நிலவிய கொடும் சமுதாயத்தையே உதாரணமாகக் கொண்டு செயல்படும் இவர்கள் (கல்லால் அடித்துக் கொல்வது, கையை வெட்டுவது, கண்ணைப் பிடுங்குவது என்று) உருவாக்கிட நினைப்பது தமிழ்நாட்டையும் இந்தியாவையும் தாலிபான் தேசமாக்க வேண்டும் என்பதே. அதுவும் கூட சிலருக்கு ஒவ்வாததாக இன்னும் அதீத அடக்குமுறையைக் கொண்ட சமுதாயமே ஆதர்ச சமுதாயமாக இருக்கலாம். ஆம், காட்டுமிராண்டி தேசமான சவுதியே சரியான முறையில் செயல்படவில்லை என்று பல வஹ்ஹாபிகள் மனம் புண்பட்டு துப்பாக்கி ஏந்திவிட்டார்கள். பின் லேடனின் மனக்குறைகளுள் இதுவும் ஒன்று. சினிமா, டிவி, பகிரங்க விவாதம் என்று எல்லாமே ஈமானிகளின் மன உணர்வுகளைப் புண்படுத்தாத அளவுக்கு தணிக்கை செய்தும் சவுதியின் செயல்பாடு பல இஸ்லாமிஸ்டுகளை புண்படுத்தி, இன்னும் அதீதமான கட்டுப்பாடுகளைக் கொண்ட சமுதாயத்தை தோற்றுவிக்க தூண்டுகிறது.

***

உலகெங்கும் இஸ்லாமிஸ்ட் மனோபாவம் இப்படியே இருக்கிறது. அதனாலேயே இஸ்லாமிய நாடுகள் ஜனநாயகத்தை அனுமதிக்க மறுக்கின்றன. எங்கெங்கெல்லாம் ஜனநாயகம் இருக்கிறதோ அங்கெல்லாம் தீவிர இஸ்லாமியர்கள் இது போன்ற ஜனநாயகத்துக்கு, சுதந்திர சமூகத்துக்கு முரணான கோரிக்கைகளை முன்வைத்து, ஜனநாயகத்தின் மூலமே ஜனநாயகத்துக்கு சாவு மணி அடிக்க விழைகிறார்கள். மற்ற நாடுகளில் இல்லாமல் இஸ்லாமிய சமூகங்களில் மட்டும் ஏனிந்த நிலைமை. ஏனெனில், வஹ்ஹாபிகளின் மனோபாவம் இஸ்லாத்தின் அடிப்படையோடு சம்பந்தப்பட்ட ஒன்றாகும்.

ஆம், ஒரு விதத்தில் இஸ்லாமே இப்படித்தான். தினசரி என் வீட்டுக்கு அருகிலிருக்கும் மசூதியிலிருந்து ‘அல்லாஹ்வே கடவுள், முஹம்மதுவே நபி’ என்ற கோஷம் எழுகிறது. இது அடிப்படையில் பிள்ளையாரும் கடவுள், முருகனும் கடவுள், மாரியம்மனும் கடவுள் என்று கருதும் என் உள்ளத்தை புண்படுத்துவதாக இருக்கிறது. முஹம்மதுவே நபி என்ற கூப்பாடு வள்ளலாரையும், வள்ளிமலை சுவாமிகளையும், அவ்வையாரையும், ராமகிருஷ்ண பரமஹம்சரையும் கடவுளை அறிந்தவர்களாக, கடவுள் நிலையை அடைந்தவர்களாக, கடவுளோடு ஒன்றியவர்களாக கருதும் எனது மனதைப் புண்படுத்துவதாக இருக்கிறது. அல்லாஹ் கடவுள் இல்லை, முஹம்மது நபியில்லை என்று சொல்வது முஸ்லீம்களின் மனதைப் புண்படுத்துவதாக இருந்தால், இதுவும் என் மத உணர்வுகளை, மன உணர்வுகளை புண்படுத்துகிறதே அதற்கு என்ன செய்வது?

இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டபின்பு டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்டிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரது படைப்புகளுள் மிகவும் பிடித்ததாக நான் குறிப்பிட்டிருந்தது மேலே கண்ட கேள்விகளை கேட்டிருந்த ஒரு கட்டுரையைத்தான். டென்மார்க்கின் முஹமது கார்ட்டூன் விவகாரம் உலகை உலுக்கிய சமயத்தில் அவர் ஒரு கட்டுரையில் முஸ்லீம்களின் இந்தக் கோரிக்கைக்கு தலைவணங்குவது நாளை முஸ்லீம்களுக்கு எதிராக திரும்பக்கூடும் என்று தெரிவித்திருந்தார். ஏனெனில், இஸ்லாத்தின் அடிப்படையே சிலை வழிபாட்டாளர்களை, கிறித்துவர்களை, யூதர்களை விமர்சிப்பதும், குறை சொல்வதும், வசைபாடுவதாகவே இருக்கிறது. திருக்குரானில் பெரும்பான்மையான வசனங்கள் இப்படிப்பட்டவையே. மற்ற மதத்தவர்களின் மனம் புண்படுவதால் இவற்றையெல்லாம் நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தால் இஸ்லாம் என்னவாகும்? மற்ற மதக்கோட்பாடுகளை விமர்சிக்காமல் இஸ்லாம் இருக்க முடியாது. இதுவரை அப்படி இருந்ததும் இல்லை. ஆனால், இதையே மற்றவர்கள் செய்ய முயலும் போது அது பெரும் கூக்குரலை இஸ்லாமிய சமூகத்தில் எழுப்புகிறது.

***

நம்பிக்கையாளர்களின் மனநிலை வித்தியாசமானது. எந்த நம்பிக்கையை நாம் கேள்வி கேட்கிறோமோ, அந்த நம்பிக்கையையே அடிப்படையாக வைத்து நமது கேள்வியை எதிர்கொள்ளும் விசித்திரத்தை இங்கேதான் காணலாம். முஹம்மது இறைத்தூதர் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், குரானில் சொல்லியிருக்கிறது என்பார்கள். தான் இறைத்தூதர் என்ற அடிப்படையில் குரானை முஹம்மது கடவுளிடமிருந்து பெற்றதாக சொல்லியிருக்கும் நம்பிக்கையையே கேள்விகேட்கும்போது எப்படி இந்த வாதம் நிற்கும்? ஆனால், இது எது குறித்தும் நம்பிக்கையாளர்களுக்கு கவலை கிடையாது. முஹம்மது நபிமார்களின் வழியில் தொன்று தொட்டு இருக்கும் இஸ்லாத்தை பரப்பவந்தவர் என்பது முஹம்மது சொல்லியது. அதை ஒப்புக்கொண்டால் முஹம்மதை இறுதி இறைத்தூதர், முஹம்மது காட்டிய வன்கடவுளள உண்மையான கடவுள் என்று மலர்மன்னனும் நேசகுமாரும் ஏற்றுக்கொள்ள நேரிடும் என்பது வஹ்ஹாபிகளுக்கு புரியாது. புரிகிறது போன்று சொல்ல வேண்டும் என்றால், முஹம்மது இறுதித்தூதர் என்று சொல்லவில்லை, அது முஸ்லீம்களின் பிற்காலத்தய திரிப்பு, மிர்ஸா குலாமே இறைத்தூதர் அவர் சொல்லியுள்ளவையே சரியான கடவுளின் கருத்து என்பது அகமதியா முஸ்லீம்களின் நம்பிக்கை. இதை வஹ்ஹாபி ஏற்கவேண்டும், மாறாகச் சொன்னால் அஹமதிக்களின் மனம் புண்படுகிறது என்றால் அதை வஹ்ஹாபி ஏற்பாரா? அடிப்படையில் பார்த்தால் முஹம்மது சொன்னதாக முஸ்லீம்கள் நம்பும் அதே விஷயத்தையே அகமதியாக்களும் சொல்கிறார்கள். என்ன வித்தியாசம் என்றால் முஹம்மது இயேசுவின் வார்த்தைகளை கிறித்துவர்கள் திரித்துவிட்டார்கள், தம்மிடம் கடவுள் பேசி சரியான மதபோதனைகளை வழங்கினார் என்றார். மிர்ஸா குலாம் அஹமதோ, முஹம்மது சொன்னதை முஸ்லீம்கள் திரித்துவிட்டார்கள், சரியான போதனையை தமக்கு கடவுள் வணங்கினார் என்றார். முஹம்மதுவுக்கு கடவுள் கனவில் வஹி அறிவித்தாரென்றால், நாகூர் ஆண்டவருக்கும் கடவுள் வஹீ அறிவித்தார் (அப்படிப்பட்ட வஹீ வரும்போது நாகூர் ஆண்டவர் நிற்கும் இடத்தில் பள்ளமே விழுந்துவிடுமாம், முஹம்மதின் ஒட்டகம் பளு தாங்காமல் நொடித்துப் போனது போன்று). எங்கள் பக்கத்து ஊரில் முத்தம்மாவுக்கும் தான் வஹீ வரும், கூரான கத்தி மீது நின்றாலும் வஹீ வந்த நிலையில் கத்தி காலை வெட்டாது – இந்த கேள்விகளுக்கு முடிவுதான் என்ன?

ஆனால், இந்த தர்க்கங்கள் எதுவும் நம்பிக்கையாளர்களிடம் எடுபடாது. அஹமதிக்கள் தங்களது கடவுட் கோட்பாட்டை வன்முறையின் மூலம் நிலை நாட்டி வஹ்ஹாபிகளின் முன்னோரை கத்தி முனையில் மதம் மாற்றீயிருந்தால் இன்று ஒரு வேளை வஹ்ஹாபி, அஹ்ஹாபியாக மிர்ஸா குலாம் அஹமது சொன்னதை அலர்மன்னன் ஒப்புக்கொள்ளாதது உலக அஹமதிக்களையெல்லாம் மனம் புண்படச் செய்துவிட்டது என்று புலம்பிக்கொண்டிருக்கக் கூடும், நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகள் செய்யும் செப்படி வித்தை இது. வன்முறையும், அமானுடத்தைப் பற்றிய பயமும், தமது முன்னோர்கள் அனுபவித்த பயங்கரமும் தம்மையும் பயங்கரவாதிகளாக மாற்றும் மாயம் இது. பாலியல் வன்முறைக்குட்பட்டோர் நாளாவட்டத்தில் அந்த வன்முறையை ரசிக்க ஆரம்பித்துவிடவோ அல்லது அதே வன்முறையை பிறர்க்கு செய்திட முயலவோ முயலும் விநோத விசித்திரமே இது.

***

வஹ்ஹாபியின் கட்டுரையில் முகமதியர் என்று முஸ்லீம்களை குறிப்பிடுவதால் மனம் புண்படுவதாக சொல்லிக்கொண்டே பார்ப்பனர், சங்கராச்சாரி என்பது போன்ற பதங்களை பயன்படுத்துவதை அவர் சற்றும் தவறாக எண்ணவில்லை – இதுவே இஸ்லாமிஸ்ட் எதேச்சாதிகார மனோபாவம். என்னைக் கேட்டால் பார்ப்பனர் என்று ஏசுவதும், சங்கராச்சாரியார்களையும் இந்து மதத்தையும் ஏசுவதையும் (இதே திண்ணை வஹ்ஹாபி ஒரு முறை சனாதானக் குட்டை என்ற பதத்தை இந்து சமுதாயத்தைக் குறித்து பயன்படுத்தியிருந்தார்) அனைத்தையும் விமர்சிப்பதையும், கேள்விக்குள்ளாக்குவதையும் வரவேற்க வேண்டும் என்பேன். ஆம், விமர்சனங்களை தாங்கிக் கொள்வது நாகரிக சமுதாயத்தின் அடிப்படைகளுள் ஒன்று. விமர்சனங்களை அது எவ்வளவு நமது மனதைப் புண்படுத்துவதாக இருந்தாலும் அனுமதிப்போம் – இதுவே நமது நம்பிக்கைகளை, கலாச்சாரத்தை, வழக்குகளை புடம்போட வல்லது. விமர்சனங்களிலிருந்து மீளாத அளவுக்கு மோசமாயிருக்கும் எதுவும் அழிந்து போவதைக் குறித்து விசனப்படக் கூடாது என்பதே எனது கருத்து.

ஆனால், இஸ்லாமிய பகுத்தறிவைப் போலவே இஸ்லாமிஸ்ட் மனோபாவமும் எல்லாவற்றையும் பகுத்தே தனக்கொரு நீதி, நியதி மற்றவர்களுக்கொரு நீதி நியதி என்ற ரீதியிலேயே சிந்திக்கிறது. தெற்குத் தஞ்சையின் ‘நான் இந்து அல்ல’ போர்டைப் பற்றி பேசும் வஹ்ஹாபியோ, பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையை புகழும் நாகூர் ரூமியோ அதே பகுத்தறிவுக் கொள்கையை தம்மைச் சார்ந்தவர்கள் பின்பற்றுவதை விரும்புவதில்லை. ‘கங்கைச் சமவெளிக்கு வெளியே ஏன் அவதாரங்கள் இல்லை’ என்று கேட்டுக் கொண்டே ‘இஸ்லாத்தில் ஏன் பெண் நபி இல்லை’ என்று கேள்வி கேட்பவரை மண்ணைவாரித்தூற்றும் விசித்திரத்தை இந்த நண்பர்களிடமே காணமுடிகிறது. ஆனால், அதே போர்டு வீடுகள் நாளையே குறிவைக்கப்படும் என்பது நமது நாத்திகர்களுக்கும் புரிவதில்லை. மவுலானா மவுதூதி, நாத்திகத்தையும், சிலை வழிபாட்டையும், மேற்குலகின் நாகரிகத்தையும் ஒரே தட்டில் வைத்து அனைத்துமே குஃபார் – ஒழிக்கப்பட வேண்டியது என்கிறார். இதில் சந்தேகமிருந்தால், எதாவது ஒரு மசூதிக்கு முன்பாக சென்று கடவுள் பேசினார் என்று சொன்னவன் முட்டாள் என்று அதே போர்டு ஆசாமிகள் போர்டு வைத்துப் பார்க்கட்டும், இஸ்லாத்தின் பகுத்தறிவும் அமைதித்தன்மையும் உடனடியாக புரிந்துவிடும்.

சவுதியில் ஒரே குற்றத்தைப் புரிந்த இந்துவுக்கு வேறு தண்டனையும், முஸ்லீமுக்கு வேறு தண்டனையும், ஆணுக்கொரு தண்டனையும், பெண்ணுக்கொரு தண்டனையும் தருவதைப் போன்ற – இஸ்லாத்தின் அடிப்படை மனோபாவத்துடன் சம்பந்தப்பட்ட விஷயம் இது. விமர்சனங்களை இஸ்லாத்தால் தாங்கிக் கொள்ள முடியாது. ஏனெனில் தொடந்து இத்தனை நூற்றாண்டுகள் விமர்சனத்தை அடக்கியே பழகிவிட்ட, அதன் விளைவாக தாங்கள் மதிப்பளிக்கும் விஷயங்களின் அபத்தங்களைப் புரிந்து கொள்ளாமலேயே இருந்துவிட்டதன் விளைவு இது. ஆனால், இது திண்ணை வஹ்ஹாபியின் பாணி, மனோபாவம் மட்டுமல்ல, அவர் தம்மைப்போன்ற வஹ்ஹாபிகளின் தலைவராக கருதும் மதநிறுவனரின் மனப்பாங்காகவும் இருக்கும் நிலையி, அந்த நிறுவனரின் செயல்பாடுகள் அனைத்தும் பின்பற்றப்படக் கூடியவைகளாக , கேள்விக்கு அப்பாற்பட்டவையாக கருதும் நிலையில் இந்தச் சுழலுக்கு முடிவும் இல்லை குறைந்தபட்சம் இன்றைய சூழலில் என்றே தோன்றுகிறது.

***

இது சூழல் மாறும்போது முடிவுக்கு வரும். பிற்போக்கு நவீனத்துவத்தின் வாழ்நாள் மனித நாகரீகத்தின் வாழ்நாளில் ஒரு சிறு துளிதான். மில்லியன் ஆண்டுகளை அநாசாயமாக சந்தித்துவிட்ட இப்புவிக்கு ஆயிரத்தைந்நூறு ஆண்டுகள் எம்மாத்திரம்?

ஆனால், இடைப்பட்ட காலகட்டத்தில் பொது சமூகம் கொடுக்கும் விலை படு பயங்கரமாக இருக்கும். ஆம், இஸ்லாமிஸ்டுகளின் கோரிக்கைக்கு அடிபணிவது போட்டி மதவாதத்தை உருவாக்கி (Competitive fundamentalism) அனைத்து சமூகங்களையுமே அந்தந்த மதத்தைச் சேர்ந்த தாலிபான்களாக மாற்றிவிடும். இதுவே இன்று இந்தியா எதிர்நோக்கும் பெரிய சவால். ஹெச்.ஜி.ரசூல் விஷயத்தில் மவுனம் காத்தால் அடுத்து தி.கவின் பிரசுரங்கள் குறித்து கேள்வி கேட்கும் இந்து முண்ணனிக்கு பொது சமூகம் என்ன பதில் வைத்திருக்கிறது? மலர்மன்னன் முகமதியர்கள் என்று சொல்வது இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்துவதாக ஒப்புக்கொண்டால் ‘இந்து என்றால் திருடன்’ என்று சொல்லிய தமிழக முதல்வரை என்ன சொல்வது?

இஸ்லாமிய மனக்குறைகளுக்கு மதிப்பளிப்பது கடைசியில் சமூகம் முழுவதையுமே போட்டி போடும் மதக்குழுக்களின், மத அடிப்படைவாதிகளின் கையில் ஒப்படைத்துவிடுவதற்கு வழிகோலிவிடும். இஸ்லாத்தின் மிகப் பெரிய பயங்கரம் இஸ்லாம் அல்ல, நாம் இஸ்லாமைப் பார்த்து இமிடேட் செய்வதே. ஆம், இந்து தாலிபான்களை உருவாக்கும் வலிமை வஹ்ஹாபிகளுக்கு உண்டு. தெற்குத்தஞ்சையில் வஹ்ஹாபி சொல்லும் ‘நான் இந்து அல்ல’ போர்டுகளையும் மீறி ஊருக்கூர் காவிக்கொடி முளைப்பதை அங்கே செல்பவர்கள் காண முடியும். திராவிட இயக்கங்கள், கம்யூனிஸ இயங்கங்கள் ஆகியவற்றின் பாசறைகளை வஹ்ஹாபிகளின் செயல்பாடுகள் இப்படித்தான் மாற்றிவருகின்றன.

இஸ்லாமிய பயங்கரவாதத்தின் வார்ப்பில் இந்து பயங்கரவாதம் உருவானால், கிறித்துவ பயங்கரவாதம் உருவானால் அவை இஸ்லாமிய பயங்கரவாதத்தைவிட படு பயங்கரமானதாக, நுண்ணியதாக , ஆழ்ந்து செயல்படுவதாக அமைந்துவிடும். ஆம், துக்கினியூண்டு இஸ்ரேலை இத்தனை இஸ்லாமிய நாடுகள் எதிர்கொள்ள முடியவில்லை என்னும்போது ஆயிரம் இஸ்ரேல்கள் உருவானால் என்ன ஆகும்? பொருளாதார ரீதியாக இஸ்லாமிய உலகம் மேற்கின் பிணைக்கைதியாக இருக்கிறது. ஆம், நாளையே மத்திய கிழக்கு நாடுகள் எதிரி நாடாக பிரகடனம் செய்யப்பட்டால் எதிரிச்சொத்து (enemy property) என்ற அடிப்படையில் அரேபியாவின் வளமனைத்தும் மேற்கால் முடக்கப்பட்டுவிடும், இஸ்லாமிய நாடுகளின் ஆயுத பலமனைத்தும் மேற்கையே சார்ந்திருக்கிறது, ஒரு ஃபைட்டர் ப்ளேனின் ஸ்க்ரூவைக் கூட அரபு நாடுகளால் செய்ய முடியவில்லை – இப்படிப்பட்ட ஒரு பலகீனமான நிலையில், மற்ற சமூகங்கள் தங்களைப் போன்று மாறவில்லை என்ற ஒரே காரணத்தால் தம்மால் எதையும் செய்துவிட முடியும் என்ற இறுமாப்புடன் எதேச்சாதிகாரம் செய்ய முயலும் வஹ்ஹாபிகளின் நிலை, ஒட்டு மொத்த இஸ்லாமியச் சமூகத்திற்குமே நாளடைவில் சுருக்குக் கையிற்றை கொண்டு வந்துடக் கூடும். இஸ்லாமிய சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டிருக்கும் எவரும், நவீனத்துவத்தின், பின் நவீனத்துவத்தின் பலன்களை அங்கே கடத்த முற்பட வேண்டுமே தவிர பிற்போக்கு நவீனத்துவத்திற்கு மேலும் மேலும் அதைத் தள்ள முயலக்கூடாது.

***

எங்கள் வீட்டுத் திண்ணை மறையவில்லை. திண்ணையின் மறைவு ஒரு metaphor, குறியீடு அவ்வளவே. இன்று திண்ணை வேறு வகையில் நம்மிடையே இருக்கிறது, இணைய விவாதக்களங்களாக, அரட்டை அரங்கங்களாக, அச்சு ஊடக விவாதங்களாக. தோற்ற மாற்றம் மட்டுமே நடைபெற்றுள்ளது. வன்முறையின் மூலம் இதனையும் நாளை வஹ்ஹாபிகள் முடக்கலாம்தான். ஆனால், வேறு வடிவில் திண்ணைகள் ஆங்காங்கு முளைக்கும் – ஏனெனில் சுதந்திரம் மற்றும் கேள்விகள் மனிதமனத்தின் அடிப்படை விசித்திரம். இருளில் ஆழ்வது ஒரு விசித்திரமெனில், கொஞ்ச நேரம் இருளில் இருந்தபின்பு வெளிச்சத்தையும் சுதந்திரக் காற்றையும் நோக்கி நகர்வது நமது பிரபஞ்சத்தின் இயல்பான குணம்.

நேச குமார்.

http://nesamudan.blogspot.com

Series Navigation

நேச குமார்

நேச குமார்