விநாயக சதுர்த்தி

This entry is part [part not set] of 33 in the series 20070913_Issue

எஸ். ஜெயலட்சுமி



காலிங் பெல் ஒலித்தது.”மங்களம் வாசலில் யார் என்று பார்” ராஜாராமன் கூப்பிட்டார்.கம்ப்யூட்டரில் உட் கார்ந்து விட்டால் பிரளயமே வந்தாலும் அவருக்குத் தெரியாது.இன்று என்னவோ வாசலில் யார் என்று பார்க்கச் சொன்னாரே அதுவே அதிசயம் தான்.யாராவது சேல்ஸ்மேனாகவோ,அல்லது அப்பளாம் வடாம் விற்பவர்களாகவோ இருக்கும் என்று நினைத்துக் கொண்டே கதவைத் திறந்தாள். கூரியர் என்று கவரை நீட்டியவனிடம் கையழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டு கவரை ராஜாராமனிடம் கொடுத்தாள்

சாப்பிட தட்டு வைக்கட்டுமா என்று கேட்டதற்கு இன்னும் பத்து நிமிஷம் ஆகும், முடித்துவிட்டு வருகிறேன் என்றார். அவர் வருவதற்குள் கிரைண்டரை அலம்பி அரிசியைப் போடலாம் என்று அடுக்களைக்குள் சென்றாள்.மீண்டும் காலிங் பெல் ஒலி. ”என்ன பெல்லோ, எதற்கெடுத்தாலும் பெல்லை அடித்து விடுகிறார்கள் என்று அலுத்துக் கொண்டே கதவைத் திறந்தாள்.வாசலில் நாலைந்து பேர்கள்.பங்குனி உத்திரத்திற்கு சாஸ்தா கோவிலில் அன்னதானம் செய்யப் போகிறார்களாம். அதற்காக வசூல்.ராஜாராமனுக்கு இம்மாதிரி வசூல் செய்கிறேன் என்று வருபவர்களைக் கண்டால் அறவே பிடிக்காது.என்ன செய்ய? அவர் வேறு உள்ளேயிருக்கிறார்.வந்தவர்கள் ரசீது புத்தகத்தை எடுத்தார்கள்.”ரசீதெல்லாம் வேண்டாம். ஏதோ என்னாலானது” என்று பத்து ரூபாய் கொடுத்தனுப்பினாள்.இப்பொழுதெல்லாம் அடிக்கடி எதையாவது சாக்காக வைத்துக்கொண்டு வசூல் வேட்டைக்குக் கிளம்பி விடுகிறார்கள்!

கிரைண்டரில் அரிசியைப் போட்டு ஓட விட்டாள்.அவள் சிந்தையும் சுழல ஆரம்பித்தது.கொஞ்ச காலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறேன் பேர்வழி என்று விநாயகரைப் பாடாய்ப் படுத்துகிறார்கள். மங்களம் சின்னவளாக இருந்தபோது பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் நடந்தது.பிள்ளையார் சிலைகளைத் தேடித் தேடி உடைத்தார்கள்.கொஞ்ச காலம் கழித்துப் பார்த்தால் ஒரேயடியாக எங்கு பார்த்தாலும் பிள்ளையார் சிலைகள் வைக்க ஆரம்பித்தார்கள்.பேட்டைக்குப் பேட்டை, தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோவில்கள்!பஸ் ஸ்டாண்டில்.கடை வாசலில், ஆபீஸ் வாசலில்.ஆஸ்பத்ரி வாசலில்,ரயில்வே ஸ்டேஷனில்,பெரிய வீடுகளில் காம்பவுண்டுக்குள் சின்னப் பிள்ளையார் கோவில் என்று பிள்ளையார் நீக்கமற எங்கும் வியாபித்து விட்டார்!

முன்பெல்லாம் சங்கடஹர சதுர்த்தி என்றால் அவ்வளவாகத் தெரியாத தமிழ்நாட்டில் பிள்ளையார் கோவில், சிவன்கோவில், முருகன் கோவில்களிலெல்லாம் ‘சங்கடஹர சதுர்த்தி’என்று போர்டில் எழுதி வைத்து விடுகிறார்கள்.அன்று கோவிலில் கூட்டமான கூட்டம்! பிள்ளையார் சிலையை உடைத்த காலம் போய் பிள்ளையாரைப் பிடிக்கும் காலமாகி விட்டது!எங்கு பார்த்தாலும் கணபதி ஹோமங்கள் வேறு!யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்பார்கள்.இது யானைமுகப் பெருமான் காலம் போலும்!

வடக்கே பூனாவில் தான் முதலில் விநாயக சதுர்த்தியை விமரிசையாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.பால கங்காதரதிலகர் தான் அரசியல் விழிப்புணர்ச்சியை ஊட்டுவதற்காக பெரிய விநாயகர் பொம்மைகள் செய்து விழா என்ற போர்வையில் மக்களை ஒன்று திரட்டினார் என்று சொல்லக் கேட்டிருக்கிறாள்.பெரிய பெரிய பொம்மைகள் செய்து மிக விமரிசையாகப் பூஜை செய்து கடைசி நாள் ஊர்வலமாக எடுத்துச் சென்று’கணபதி பப்பா மோரியா’ என்று கோஷம் போட்டுக் கொண்டு கடலில் கரைத்து விடுவார்களாம் நாளடைவில் இந்தக் கலாசாரம் மெள்ள மெள்ள தமிழ் நாட்டிலும் பரவ ஆரம்பித்தது.மக்களை ஒருங்கிணைப்பதற்காக ஆரம்பித்த விழாவில் அரசியல் வாடை வீசத்தொடங்கியது.மதக் கலவரங்கள் வெடிக்கவும் இந்த ஊர்வலங்களே காரணமாகி விட்டது.எத்தனை கொலைகள்? எத்தனை துப்பாக்கிச் சூடுகள்?விநாயகர் உண்மையில் இதையெல்லாம் விரும்புகிறாரா?மனிதன் ஏன் கடவுள் பெயரைச் சொல்லி வன்முறையில் இறங்குகிறான்?எந்த மதமும் அன்பைத்தானே போதிக்கிறது?

இப்பொழுதெல்லாம் பிள்ளையாரை இஷ்டம் போல் சித்தரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.கார்கில் பிள்ளையார், கம்ப்யூட்டர் பிள்ளையார்,ஆர்க்கெஸ்றா பிள்ளையார்,கிரிக்கெட் பிள்ளையார்,ராக்கெட் பிள்ளையார்,செல்போன் பிள்ளையார் என்று நவநவமாகப் பிள்ளையார்!பொம்மையில் மட்டுமா?எந்தஒரு கைவேலைப்பாடென்றாலும் பிள்ளையார்!சுவரில் தொங்கவிடும் எல்லாவிதமான கை வேலைப்பாடுகளிலும் நடு நாயகமாக இருப்பவர் பிள்ளையாரே.வெளிநாடுகளிலும் கூட பிள்ளையார் படங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில் ரூபாய்நோட்டில் பிள்ளையார் படம்!அந்த முழுமுதற் கடவுள் அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கிறார்!

இரண்டு வருடங்களாக மங்களம் இருக்கும் பகுதியிலும் விநாயகசதுர்த்தி கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கெனவே மூன்று விநாயகர் கோவில் இருக்கும் இந்தச் சிறிய பகுதிக்கு இந்தக் கொண்டாட்டங்கள் தேவையா?ஒருபுறம் சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்ச்சிப் பிரசாரம், மறுபக்கம் பெரிய விநாயகர் பொம்மைகளைச் செய்து கடலிலும் ஆறு குளங்களிலும் அவற்றைக் கரைத்து நீர் நிலைகளை மாசு படுத்துவது!ராஜாராமனுக்கு தார்மீகக் கோபம் வரும்.அவர் கோபத்திலும் நியாயம் இருப்பதாகவே மங்களத்துக்குத் தோன்றும்.எட்டடி பத்தடி உயரத்திற்கு விநாயகர் சிலை செய்து பந்தல் போட்டு ஒருவாரம் பத்து நாட்கள் வைத்திருப்பார்கள்.ஒலி பெருக்கியில் பாடல்கள் அலறும்!பக்கத்தில் ஒரு உண்டியல்.வசூல் செய்ய வேறு கிளம்பி விடுவார்கள்.இந்த வசூலுக்கெல்லாம் யார் கணக்குக் கேட்கப் போகிறார்கள்?அப்படி ஒரு தடவை வசூல் கோஷ்டி இவர்கள் வீட்டிற்கு வந்தபோது ராஜாராமன் பணம் ஏதும் தரமாட்டேன் என்று மறுத்து விட்டார்.ஏற்கெனவே இருக்கும் பிள்ளையார் கோவில்களை ஒழுங்காகப் பராமரித்தால் போதும் என்று அட்வைஸ் பண்ணி அனுப்பி விட்டார்.பின்னே என்ன? பத்து நாட்கள் கழித்து அந்த பொம்மையை ஊர்வலமாகக் கொண்டுபோய் ஆற்றில் போடப் போகிறார்கள்.ஊர்வலத்தில் மேளத்திற்குப் பதில் பறைக் கொட்டு!~ அநேகமாக இளவட்டங்கள் ஆடிக் கொண்டும் உய் உய் என்று விசிலடித்துக் கொண்டும் வருவார்கள்.அனேகமாக ஆளாளுக்கு ·புல்,குவார்ட்டர் என்று குடித்து விட்டு ஆடிக் கொண்டு வருவார்கள். இதைக் கண்டால் மங்களத்துக்கு இது பிள்ளையார் ஊர்வலமா பிண ஊர்வலமா என்று கூடத் தோன்றும்.

இதுவா பக்தி?கடைசியில் ஆற்றிலோ கடலிலோ அந்தப் பிள்ளையார் படப் போகும் பாட்டை நினைத்தால் ரத்தக் கண்ணீர் வரும். பத்து நாட்களாக வழிபடும் தெய்வமாக,காட்சிப் பொருளாக,வசூலை வாரித் தரும் வள்ளலாக இருந்த அந்தப் பிள்ளையார், அடியும் மிதியும் பட்டு,கை கால்கள் ஒடிக்கப் பட்டு பிய்த்தெறியப்பட்டு,கிரேனில் தூக்கி கடலிலோ ஆற்றிலோ வீசப்பட்ட போது இவள் பதறிப் போனாள்.இப்படியெல்லாம் விநாயக சதுர்த்தி கொண்டாட வில்லையென்று யார் அழுதார்கள்? இதுவா பக்தி, இதுவா பக்தி என்று மனம் கசந்து போனது.ஒரு மசூதியை இடித்ததைப் பொறுக்காமல் எவ்வளவு ஆர்ப்பாட்டம் நடந்தது?அதை அவர்கள் செங்கலும் சிமிட்டியும் கலந்த கட்டிடமாகப் பார்க்கவில்லை.கண்ணெதிரே ஸ்வாமியென்றும் கடவுள் என்றும் வழிபட்ட உருவம் இப்படி சின்னாபின்னமாக்கப் படுகிறதே!இந்த அநியாயத்தைக் கேட்பாரில்லையா? என்று அவள் உடம்பு பதறும்

இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே
என்று பாடினானே பாரதி, அதுபோல் இன்று ஏன் ஒருவரும் பொங்கி எழுவதில்லை என்று ஆவேசம் தோன்றும்.இந்த மதத் தலைவர்களும் மடாதிபதிகளும் இந்த அநாகரீகத்தை எதிர்த்து ஏன் அறிக்கைவிட மாட்டேன் என்கிறார்கள்?.தாங்கள் பேசும் மேடைகளி
லெல்லாம் மக்களிடம் இது பற்றி ஏன் பேசுவதில்லை என்றெல்லாம் யோசிப்பாள்.முட்டாள் ஜனங்களும் இதையெல்லாம் ஆதரிப்பதால் தானே இவ்வளவும் நடக்கிறது?ராஜாராமன் தம்பதிகளுக்கு இம்மாதிரியான விநாயக சதுர்த்திக் கொண்டாட்டங்களில் கொஞ்சமும் உடன்பாடில்லை. இதை எப்படி நிறுத்துவது?இப்படி யோஜனையில் மூழ்கியிருந்த மங்களத்தை ராஜாராமன் குரல் தட்டியெழுப்பியது
”தட்டு வெச்சாச்சா?மங்களம் பரபரவென்று தட்டுக்களை எடுத்து வைத்தாள்.

உங்களுக்கு ஏதாவது நல்ல ஐடியா தோன்றினால் கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்.


vannaijaya@hotmail.com

Series Navigation

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி