திசை மாறும் திருமாவளவன்

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

ஜெ. ரஜினி ராம்கி


அம்பேத்காருக்கு பின்னர் அனைத்து தலித் மக்களின் நம்பிக்கையையும் பெற்ற

தலைவர்கள் இன்று வரை உருவாகாத சூழலில் நாடெங்கும் பிரிந்து கிடக்கும்

தலித் அமைப்புகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தால் மட்டுமே

தலித்துகளால் இந்திய அரசியல் அரங்கில் முன்னுக்கு வரமுடியும் என்கிற

நிலையில் திருமாவளவன் செல்லும் திசை அரசியல் நோக்கர்களால் கூர்ந்து

கவனிக்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தலித் அமைப்புகளின்

எதிர்காலம் என்பது திராவிடக் கட்சிகளின் கருணைப் பார்வையை சார்ந்தது

என்பது வெளிப்படை. ஜாதி சங்கமாக தொடங்கப்பட்டு இன்று தமிழக அரசியல்

வானில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கும்

பா.ம.கவின் வழியில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பத்திருக்கும்

திருமாவளவனின் முடிவு புத்திசாலித்தனமானது. தலித் என்கிற குறுகிய

வட்டத்திற்குள் மட்டுமே சுழன்று கொண்டிருக்காமல் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின்

மூலம் பெரும்பான்மையானவர்களை அவரால் எட்டமுடியும். இது திருமாவளவன்

என்கிற தனிநபருக்கு கிடைத்த அரசியல் வெற்றி. தலித் மக்களுக்கு கிடைத்த

வெற்றி அல்ல.

காந்திஜியை விட பிடிவாதமாக இருந்து அம்பேத்கார் வாங்கித் தந்த

தனித்தொகுதியால் தாழ்த்தப்பாட்டவர்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை

திருமாவளவன் புரிந்துகொண்டிருக்கிறார். தனித்தொகுதியால் ஜாதி

பாகுபாடுகள் அதிகரிக்குமே தவிர ஜாதிகளற்ற சமுதாயத்தை உருவாக்க துணை

நிற்காது. அனைத்து சாதிகளை சேர்ந்த தமிழர்கள் ஒன்றுபட்டு தமிழகத்தின்

ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும் என்கிற தனது ஆசையை சமீபத்திய தமிழ்

பாதுகாப்பு இயக்கத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதே பேச்சில்,

ஜாதிகளை ஒழிக்காத வரை தமிழனால் முன்னேற முடியாது என்றும்

பேசியிருப்பதுதான் நெருடுகிறது.

அனைத்து ஜாதிகளையும் ஒருங்கிணைப்பது என்பது நடைமுறையில் சாத்தியமா

இல்லையா என்பது வேறு விஷயம். அப்படி ஒருங்கிணைப்பது அரசியல் களத்தில்

வலுவாக இருக்கும் திராவிடக் கட்சிகளை அசைத்துப்பார்க்க உதவும் என்பதும்

உண்மைதான். ஆனால், ஜாதியுணர்வு சகல மட்டத்திலும் அதிகரித்து வரும்

நேரத்தில் வருங்கால தமிழ் சந்ததியினருக்கு பெரிய ஆபத்தாக முடியும் செயல்

இது. திராவிடக் கட்சிகளாலேயே ஒரு மொழிக்கொள்கையை சரிவர

அனுசரிக்க முடியவில்லை. ஒரு மொழிக்கொள்கையை கடுமையான

அமல்படுத்தினாலும் அதனால் தமிழ் மொழிக்கு எள்ளளவும் ஏற்றமில்லை. ஹிந்தி

எதிர்ப்பு போராட்டம், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எந்த உதவியும்

செய்யவில்லை என்பது உறுதியாகிவிட்ட நேரத்தில் இந்தி மற்றும் ஆங்கில

ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக தமிழ் பாதுகாப்பு இயக்கம் ஒரு

மொழிக்கொள்கையை கடுமையாக பின்பற்றும் என்று அறிவித்திருப்பது மக்களை

மீண்டும் திராவிடக்கட்சிகளையே நாடி நாடாள வைத்துவிடும்.

ஒட்டுமொத்த தலித்துகளின் ஆதரவை திருமாளவன் பெற்றிருக்கிறாரா என்கிற

கேள்விக்கு இதுவரை தெளிவான பதிலில்லை. அமைப்பு ரீதியாக தலித்

மக்கள் இன்னும் பிரிந்துதான் கிடக்கிறார்கள். இந்நிலையில் அனைத்து

ஜாதியினரையும் ஒன்றுபடுத்துவது என்கிற நோக்கம் நிறைவேறும் பட்சத்தில்

அதனால் தலித் மக்களுக்கு எவ்வித பயனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

முதலில் திருமாவளவன் தான் சார்ந்த சமூக மக்களின் நம்பிக்கையை

பெற்றாகவேண்டும். இல்லாவிட்டால், மற்ற சமுதாய தலைவர்களிடம்

திருமாவளவன் முன்வைக்கும் கருத்துக்களுக்கு மதிப்பு இருக்காது. ஆனால்,

திருமாவளவனோ தலித் என்கிற குறுகிய வட்டத்திலேயே சுழன்று கொண்டிருக்க

வேண்டாம் என்கிற தமிழறிஞர்களின் வற்புறுத்தலினால் டாக்டர் ராமதால் உடன்

தமிழ் மொழிக்காக கைகோர்த்திருப்பதாக சொல்கிறார். திருமாளவனுக்கு

அவரது புதிய அரசியல் குரு சொல்லும் ஆலோசனையையே நினைவுப்படுத்தலாம்.

‘தம் சார்ந்த சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபட மறுக்கும் எப்பேர்ப்பட்ட

பெரிய மனிதரையும் விழிப்புணர்ச்சி பெற்று வரும் எந்த சமுதாயமும்

எதிர்காலத்தில் மன்னிக்கவே மன்னிக்காது ‘ (கனல் 5/15 பத்திரிக்கையின்

தலையங்கத்தில் டாக்டர் ராமதாஸ்).

—-

Series Navigation

ஜெ. ரஜினி ராம்கி

ஜெ. ரஜினி ராம்கி