தத்துவமும், தத்துவத்தின் நடைமுறை அடையாளங்களும்

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

மஞ்சுளா நவநீதன்


திரு சோதிப்பிரகாசம் அவர்களுக்கும் இன்ன பிற ‘சரியான ‘ மார்க்ஸியம் அறிந்த அறிஞர்களுக்கும் :

நான் பொதுவாக என் கட்டுரைகளுக்கு வரும் எதிர்வினைகளுக்கு பதில் எழுதுவது இல்லை. ஏனெனில், அந்தப் பதில்கள் ஏற்கெனவே மூலக்கட்டுரையிலேயே இருக்கும். திருப்பி ஏன் அதனையே எழுதுவானேன் ? மேலும், புரிந்துகொள்பவர்களுக்கு பதில் தேவையில்லை. புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு பதில் எழுதினாலும் பிரயோசனமில்லை. இதுவரை மிகச் சொற்பமே நான் பதில் என்ற முறையில் சொல்லியிருக்கிறேன். பதில்கள் யாருக்காக ? பதில்களை திறந்த மனத்துடன் உள்வாங்கி தம்முடைய முன் நிர்ணயித்த கருத்துகளை மறு ஆய்வு செய்பவர்களுக்காக. அப்படிப்பட்ட திறந்த மனம் தமிழ்நாட்டின் அறிவு ஜீவி வட்டாரத்தில் ஏறத்தாழ இல்லை என்றே சொல்லிவிடலாம்.

என் கட்டுரை மார்க்ஸியத் தத்துவம் பற்றிய விமர்சனம் அல்ல. மார்க்ஸியத்தின் நடைமுறைகள் ஸ்டாலின் வழியாக வெளிப்பட்ட போதும் அதற்கு ‘முற்போக்குச் சாயம் ‘ பூசுகிறவர்கள் பற்றியது.

ஸ்டாலினிஸத்தைப்புரிந்துகொள்ள எனக்கு எஸ் வி ராஜதுரை தேவையில்லை. இந்தியாவில் ஸ்டாலினிஸத்துக்கு கொடிபிடிப்பவர்களைப் புரிந்துகொள்ளவே எஸ் வி ராஜதுரை தேவை. அந்தக் கட்டுரையும் ஸ்டாலினிஸத்தை விமர்சிக்கும் கட்டுரை அல்ல. ஸ்டாலினிசம் உண்மையான மார்க்ஸியமா இல்லையா என்ற வாதம் அல்ல என் கட்டுரை. அப்படிப்பட்ட ‘உண்மையான ‘ மார்க்ஸியத்தைக் கண்டு தேர்கிற எந்த நோக்கமும் எனக்கு இல்லை.

இந்திய ஸ்டாலினிஸ்டுகளின் உள்நோக்கங்களைப் பற்றிய கட்டுரை இது. அதற்கு எஸ் வி ராஜதுரை தவிர வேறெந்த நல்ல உதாரணம் கிட்டும் ?

சோதிப்பிரகாசம் போன்றவர்கள் கம்யூனிஸம் போன்ற மத, தத்துவ நிறுவனங்களில் இருப்பவர்களின் இன்னொரு முகத்தை காட்டுகிறார். அதாவது ஏதேனும் ஒரு தீய விளைவு இந்த மதங்கள் மூலம் நடக்குமாயின், அதற்கு மதம் காரணமல்ல, தனிப்பட்டவர்களது தவறு, அல்லது அதற்கு வேறொரு பெயர் சூட்டி ஒதுக்குவது, வரலாற்றுப் பிழை அல்லது உத்தியளவில் செய்யப்பட்ட தவறு- strategic error- என்று வாதிடுவது.

இரண்டு விதமான காரியங்களை நாம் வகைப்படுத்தலாம். ஒன்று தனிநபர் கொள்கைக்காக அல்லாமல், உணர்ச்சிவயப்பட்டோ, தனிப்பட்ட காரணங்களுக்காகச் செய்வது. மற்றொன்று கொள்கை காரணமாக செய்வது.

உதாரணமாக ஒருவர் மற்றொருவரை உணர்ச்சி வேகத்தில் கொல்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம். இந்தக்கொலைக்கு தனிப்பட்ட காரணங்கள் காரணமாக இருக்கலாம். என் மனைவியை கைபிடித்து இழுத்தாய், என் சொத்தை அபகரித்தாய், என் உறவினர் ஒருவரைக் கொன்றாய் போன்ற பல காரணங்கள். இந்த கொலைக்கும் அந்த நபர் நம்பும் கொள்கைக்கும் (பெரும்பாலான நேரங்களில்) எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. இதன் அடிப்படை அந்த நபர் மேற்கொண்ட கொள்கைகள் அல்ல.

அடுத்து, ஒரு சமூக நிறுவனம் கொண்டிருக்கும் கொள்கை காரணமாக, அந்த நிறுவனத்தின் சார்பாக ஒருவர் இன்னொருவரை கொல்வது. உதாரணமாக மத விசாரணையில், ஒருவர் ஒழுங்கின்றி நடந்துகொண்டார் என்று மதத்தலைவர் அந்த மதத்தைச் சார்ந்தவர் ஒருவரைக்கொல்வது. இதற்கு எந்தவிதமான தனிப்பட்ட காரணமும் இல்லை. அந்த சமூக நிறுவனம் கொண்டிருக்கும் கொள்கையே காரணம். ஆனால், அந்தக்கொலையை நியாயப்படுத்துபவர்கள் பல வழிகளில் முனைகிறார்கள். முதலாவது அந்தக்கொலை நடக்கும் காலகட்டத்திலேயே அந்தக்கொலை அந்தக் கொள்கையின் காரணமாக நியாயம் என்று வலியுறுத்துகிறார்கள். (இதற்கு ‘களை எடுத்தல் ‘, ஜிகாத் போன்ற இடக்கரடக்கல்கள் உபயோகப்படுத்தப்படலாம்). அடுத்தது, அப்படிப்பட்ட கொலைகள் நடக்கின்றன என்பது வெளி உலகத்துக்குத் தெரியாமல் மறைத்தல். அதன் பின்னர் வெளி உலகத்துக்குத் தெரிந்து ‘சாதாரண மக்கள் ‘ அருவருப்பு அடையும்போதும், அந்தக்கொள்கைகளை விட்டு விலகும்போதும், அதனை வேறொரு வழியில் நியாயப்படுத்தல்கள் நடக்கும். இதில் பல வழிகள் இருக்கின்றன. ஒன்று, அந்தக்கொலைகள் ஒரு தனிநபரால் செய்யப்பட்டவை, அவற்றுக்கும் கொள்கைக்கும் சம்பந்தம் இல்லை என்று பேசும் வழி. (ஸ்டாலின் என்ற தனிநபர் செய்த கொலைகள். தனிநபராய் ஸ்டாலின் இப்படிப்பட்ட செயல்களைச் செய்திருக்க முடியுமா என்பது பற்றி யோசிக்கக் கூடத் தெரியாத அறிவாளிகள் இவர்கள். அதற்கு மார்க்ஸியத்தை குற்றம் சொல்வது சரியல்லவாம். ) அடுத்தது, அந்தக்கொலைகளுக்குக் காரணம் ஒரிஜினல் மார்க்ஸிய, மதக் கொள்கை அல்ல, வேறொரு கொள்கை என்று சொல்லி அதற்கு வேறொரு பெயர் சூட்டி ஒதுக்குவது (உதாரணமாக. ஸ்டாலின் செய்தது ‘அரசு மேலாண்மை வாதம் ‘).

ஜாதியத்தின் காரணமாக நடக்கும் குற்றங்களுக்கும் உரிமை மறுப்புக்களுக்கும் எவ்வாறு இந்துமதத்தைக் குற்றம் காண்கிறார்களோ அதே போல, மார்க்ஸியத்தின் காரணமாக நடக்கும் குற்றங்களுக்கும் கொலைகளுக்கும் மார்க்ஸியத்தையே குற்றம் சொல்லவேண்டும். இஸ்லாமின் காரணமாக நடக்கும் குற்றங்களுக்கும் கொலைகளுக்கும் இஸ்லாமையே குற்றம் சொல்லவேண்டும். கிரிஸ்துவத்தின் பெயரால் நடந்த/ நடக்கும் குற்றங்களுக்கும் கொலைகளுக்கும் கிரிஸ்துவத்தையே குற்றம் சொல்லவேண்டும்.

பிராமணியத்திற்கும், சாதித் தீண்டாமைக்கும் இந்துமதத் தத்துவமே பொறுப்பு. சர்வாதிகாரமும், ஜனநாயகமறுப்பும், சிறுபான்மையினரை அழித்தொழிக்கும் பணியும், புத்தர் சிலை உடைப்பும் இஸ்லாமியர் பெரும்பான்மை கொண்ட தேசங்களில் , இஸ்லாமிய ஆட்சியாளர்களின் ஆதரவுடன் நடந்தால், அந்தச் செயல்களுக்கு இஸ்லாமியத் தத்துவமே பொறுப்பாகும். மார்க்ஸியம் பின்பற்றும் ஆட்சிகளில் அடக்குமுறையும் , தனிநபர் ஆட்சியும் நடந்தால் அதற்கு மார்க்ஸியத் தத்துவமே பொறுப்பு.

கார்ல் பாப்பரைப் பற்றி சோதிப்பிரகாசம் அறிந்திருக்கவில்லை என்பதில் எனக்கு எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் நம் ஊர் மார்க்ஸியவாதிகள், ஸ்டாலினிஸ்டுகள் அவரைப்பற்றி எழுதியிருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டும். கார்ல் பாப்பர் வரலாற்று வாதத்தின் அபத்தத்தை மிகத் தீவிரமாக முன்வைத்தவர். ‘வரலாற்றுவாதத்தின் வறுமை ‘ அவருடைய புகழ் பெற்ற நூல். ஆனால் மார்க்ஸுக்கு எதிராக பாப்பரை நிறுத்துவது என் நோக்கம் அல்ல.

****

மார்க்ஸியத்தில் யார் மிகுந்த அறிவு பெற்றவர்கள் என்று தேர்வு நடத்தி மதிப்பெண்கள் இடுவதும் என் நோக்கம் அல்ல. ஒரு தத்துவத்தில் நான் மிகுந்த அறிவு பெற்றவன் என்று வித்வத் சதஸ் நடத்தி விவாதித்து, முடி பிளக்கும் வாதங்களினால் தன்னுடைய புரிவே சரியானது என்று நிறுவ விரும்புகிறவர்கள் நிறுவிக் கொள்ளட்டும். அவர்களிடம் எனக்கு எந்த சர்ச்சையும் இல்லை. நான் தத்துவத்தை அணுகுவது வேறு ஒரு புள்ளியிலிருந்து.

நான் இங்கு தத்துவம் என்று குறிப்பிடுவது : மார்க்ஸ், ஆடம் ஸ்மித் போன்றோரின் பொருளாதாரத்தத்துவம், ஃப்ராய்ட், யங் போன்றோரின் உளவியல் தத்துவம், இந்து, இஸ்லாம், கிருஸ்துவ,பெளத்த மதத்தத்துவங்கள், சுதந்திர சமூகம், சோஷலிசம், கம்யூனிசம், இஸ்லாமிய சமுதாயம், மதச்சார்பற்ற சமுதாயம் போன்ற சமூகப் புனரமைப்புத் தத்துவங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு வார்த்தையாக நான் தத்துவம் என்ற வார்த்தையை நான் இங்கு உபயோகிக்கிறேன்.

ஒரு தத்துவத்தை எப்படி மதிப்பிடுவது ? அந்தத் தத்துவத்தைப் படித்து கரைகண்ட பின்பு மதிப்பிடவேண்டுமா ? அல்லது அந்த தத்துவத்தின் வெளிப்படையாய்த் தெரியும் அடையாளங்களை (visible symbols) வைத்து அந்தத் தத்துவத்தை மதிப்பிடலாமா ? படித்துக் கரைகாண்பது என்றால் என்ன ? மார்க்ஸியம் பற்றிய புத்தகங்கள் ஒரு பெரும் நூலகத்தை அடைத்துக் கொள்ளும் அளவிற்கு உள்ளன. மார்க்ஸியத்தின் தத்துவத்தை எதிர்த்து இதேபோல் ஒரு நூலகம் அளவிற்கு புத்தகங்கள் உள்ளன. இவற்றை எல்லாம் ஒரு வரி விடாமல் படித்து முடிக்க பத்து வாழ்நாள் போதாது. இவற்றைப் படித்து – அல்லது படித்ததாகப் பேர் பண்ணி – அறிஞர்களாகி , தன் பின்னால் பத்துப் பேர் வரவேண்டும் என்று மெத்தப்படித்த தம் புலமையைக் காட்டி அச்சுறுத்துபவர்கள் பற்றி எனக்குக் கவலை இல்லை. அப்படிப் பட்டவர்களின் பின்னால் போகிறவர்கள், கொடிபிடிப்பவர்கள் போகட்டும். இந்தச் சர்ச்சைகளில் எந்தச் சாரமும் இல்லை.

ஆனால் வெளித்தெரியும் அடையாளங்கள் பொருள் உள்ளவை. நம் அன்றாட வாழ்க்கையை, நிதமும் பாதிப்பவை இவையே. எனவே இந்த அடையாளங்கள் தான் என் விமர்சனத்தின் இலக்கு. அந்த அடையாளங்கள் தான், தத்துவம் நடைமுறைப் படுத்தப்படுவதன் நிதர்சனமான உண்மை. அந்த அடையாளங்களே தத்துவமாய்க் காணப்படவேண்டும் – புத்தக மூட்டைகள் அல்ல.

வேடிக்கை என்ன என்றால், ஸ்டாலின் உண்மையான கம்யூனிஸ்ட் அல்ல, அயோதொல்லா உண்மையான முஸ்லிம் அல்ல என்று கதைப்பவர்கள் – அதாவது தம் தத்துவம் முன்வைக்கும் அடையாளங்களை வைத்துத் தத்துவம் விமர்சிக்கப் படக்கூடாது என்று கோருபவர்கள் – தம்முடைய ‘எதிரிகளை ‘ விமர்சிக்கும் போது, எதிரிகளின் உண்மையான தத்துவங்களை விமர்சிப்பதில்லை. அடையாளங்களையே விமர்சிக்கிறார்கள். உதாரணமாக மூலதனவாதம் என்ற தத்துவத்தை விமர்சிப்பவர்கள் , என்ரான், கோகாகோலா, ஐ பி எம் போன்ற கம்பெனிகளின் செயல்பாடுகளை விமர்சிப்பார்கள். மூலதனவாதத்தின் சுதந்திர வர்த்தகக் கோட்பாடு பற்றி விமர்சிக்க மாட்டார்கள். ஆனால் கம்யூனிசத்தின் அடையாளங்களான மாஒ, ஸ்டாலின், லெனின் பற்றிய விமர்சனத்தை முன்வைத்தால், கம்யூனிசத் தத்துவத்தில் தவறில்லை- நடைமுறைப்படுத்தியதில் தான் தவறு என்று பேச ஆரம்பித்து விடுவார்கள். இதன் முரண்பாடு அவர்களுக்குப் புரிவதே இல்லை. இவர்களே கூட தத்துவத்தில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டினால், மார்க்ஸிய விரோதி, இஸ்லாமிய மக்களின் எதிரி, இந்து மக்களுக்கு துரோகி என்று முத்திரை குத்த ஆரம்பித்து விடுவார்கள். தத்துவத்தை விமர்சித்தால் அந்தத் தத்துவத்தைப் பின்பற்றும் மக்களின் எதிரி என்றும், செயல்பாடுகளை விமர்சித்தால், அது சரியாகத் தத்துவம் புரியாதவர்களால் செய்யப் பட்டது என்றும் வாதிடுபவர்கள் எல்லாத் தரப்பிலும் உண்டு. இவர்கள் மனிதத் தன்மையின் அடிப்படையில் வாதிப்பவர்கள் அல்ல. தத்துவம் சார்ந்து அந்தத்தத்துவத்தின் வழியாய் தம்மை முன்னிறுத்தும் அடிப்படையில் சில குறியீடுகளை உருவாக்கி அதன் மூலம் பலன் அடைய முயல்பவர்கள். இவர்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பதால் யதார்த்தங்களினாலும், நிதர்சனமாய்த் தெரியும் முரண்பாடுகளாலும் தம்மைக் குழப்பிக் கொள்ள இவர்கள் விரும்புவதில்லை.

****

பொருளாதார மற்றும் வாழ்வியல் தத்துவங்களில் தான் இந்தச் சிக்கல். நியூட்டனின் தத்துவம் திருத்தப்படவேண்டியது என்று ஐன்ஸ்டான் சொன்னால் அதற்காக யாரும் ஏகே 47-ஐ த்தூக்கிக் கொண்டு வருவதில்லை. ஃப்ராஇய்டின் உளவியல் கோட்பாடுகள் மாற்றப்படவேண்டும் என்று சொன்னால் அது பற்றி உணர்ச்சிபூர்வமாக யாரும் எதிர்ப்புகளை மேற்கொள்வதில்லை. (டார்வின் தத்துவங்கள் மற்றும் வானவியல் தத்துவங்கள் – விஞ்ஞானக் காரணங்களால் அல்லாமல் – தவறாக மதக் கோட்பாடுகளுடன் உரசிப்பார்க்கப் பட்டு உணர்ச்சி வசப்படுகிறவர்கள் உண்டு.அவர்களைப் பற்றி என்ன சொல்ல முடியும் ? அறியாமையின் அளவு கடந்த மகிழ்ச்சியை அவர்கள் பெறட்டும் என்று ஆசீர்வதிக்கலாம்.)

ஆனால் 2000/1400 வருடங்கள் பழசாகிப் போன மதப் புத்தகங்களைப் பற்றி இப்படிச் சொன்னாலோ , அல்லது 150 வருடம் பழைய மார்க்ஸ் புத்தகம் பற்றி இப்படிச் சொன்னாலோ உடனே விமர்சனக் கணைகள் பாயத் தொடங்கிவிடும். மார்க்ஸியர்கள் ‘விஞ்ஞான சோஷலிசம் ‘ என்று இதற்குப் பெயரும் இட்டுவிட்டார்கள். இதற்குச் சற்றும் குறையாமல் :வேதிக் மேதமாடிக்ஸ், மத நூல்களைக் கொண்டு உலகத்தின் வயதை மதிப்பிடுவது என்று ஒரு சுற்று அபத்தங்களுக்குக் குறைவே இல்லை. விஞ்ஞானமே எந்த அளவிற்கு விஞ்ஞானம் என்று அழைக்கத் தக்கது என்று பலரும் விவாதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படிப் பட்ட பழைய தத்துவங்களை ‘விஞ்ஞான ரீதியாக ‘முன்னிறுத்துவது மட்டுமல்லாமல், அதற்காக இயக்கங்களும் கட்டி எழுப்புவது எவ்வளவு நகைப்பிற்கு உரிய செயல் ?

****

சரி தத்துவங்களுக்கும், நடைமுறைகளுக்கும் உள்ள உறவு என்ன ? ஒரு தத்துவத்தினது என்று சொல்லிச் செய்யப்படும் நடைமுறைகள் அந்தத் தத்துவத்திலிருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்க முடியும் ? நடைமுறைக்கு அதன் மூலாதாரமான தத்துவம் எந்த அளவிற்கு பொறுப்பேற்க வேண்டும் ? இந்தக் கேள்விகளை எதிர்கொள்ளாமல் தத்துவம்-நடைமுறை பற்றிய விவாதமோ புரிதலோ சாத்தியமே இல்லை.

உதாரணமாக சீனம். இன்று சீனம் மார்க்ஸியக் கோட்பாடுகள் எவற்றையுமே பாவிப்பதில்லை. கம்யூனிஸ்டுக் கட்சி என்று ஒன்று அடக்குமுறைக்காக இருக்கிறதே தவிர அதன் கம்யூனிஸ்டு அடையாளங்கள் எதும் மிச்சமில்லை. ஆனாலும் ஏன் கம்யூனிஸ்டுக் கட்சி கலைக்கப்படவில்லை ? காரணம் ‘மார்க்ஸிய ‘ தத்துவம், சமூகக்கட்டுப்பாட்டிற்கும், சுதந்திர மறுப்புக்கும் வழங்கும் அங்கீகாரம், சீன ஆளும் வர்க்கத்திற்குத் தேவையாய் இருக்கிறது. மார்க்ஸியத் தத்துவம் வழங்கும் சர்வாதிகாரத் தத்துவம் சீனத்தின் ஆட்சியாளர்களுக்குப் பயன் படுகிறது. வர்க்கப் போராட்டம் என்ற தத்துவம் அடிப்படை நம்பிக்கை என்றால் அதன் வழியில் எல்லா போர்களுமே வர்க்கப் போராட்டமே என்ற நம்பிக்கை. ஆட்சியாளர்கள் தம்முடைய வர்க்கம் தான் நசுக்கப் பட்ட வர்க்கம் என்று முன்னிறுத்த அறிவுஜீவிகளுக்குக் குறைவா என்ன ?

ஒரே நேரத்தில் விடுதலை பெற்ற இந்தியாவும் பாகிஸ்தானும் நேர் எதிரான ஆட்சி முறையினைத் தேர்ந்தெடுத்ததற்கு , இந்துமதம் ஜனநாயகத்திற்கு அணுக்கமாய் இருப்பதாகவும், இஸ்லாம் ஜனநாயக மறுப்புத் தத்துவம் என்று சொல்ல முடியாதா ? அர்த்தமற்ற ஃபத்வாக்கள் இடப்பட்டதற்கு இஸ்லாமிய மதத்தத்துவம் காரணம் அல்ல என்று சொல்ல முடியுமா ? தலித்துகள் மீது நிகழும் அடக்குமுறைக்கு இந்து மதக் கோட்பாடு காரணம் அல்ல என்று சொல்ல முடியுமா ? அமெரிக்காவில் பூர்வகுடிகள் அழிக்கப்பட்டதற்கு கிருஸ்துவ மதத் தத்துவம் காரணம் அல்ல என்று சொல்ல முடியுமா ? இன்றும் மக்கள் பாவப்பட்ட ஆன்மாக்களை அறுவடை செய்வதை முக்கிய நோக்கமாய் முன்வைக்கும் போப் மதத்தலைவராய்ப் பெருமை கொள்ள முடிந்திருக்கிறது தானே ? எனில் தத்துவம் சரிதான், நடைமுறைகள் தான் சரியில்லை என்று பேசுவது அபத்தமான செயல் அல்லவா ?

****

மேற்கண்ட உதாரணங்களில் எதிர்மறையான செயல்களை மட்டுமே சுட்டியிருப்பதால், இந்தத் தத்துவங்களின் எல்லா அம்சங்களும் எதிர்மறையானவை என்ற தோற்றம் கொள்ளலாம். அப்படி இல்லை. இந்தத் தத்துவங்களின் நேர்மறையான அம்சங்கள் நிச்சயம் உண்டு.

ஒற்றை இறைத் தத்துவம் மூலமாக மற்ற கலாசாரங்களின் கடவுள் நம்பிக்கையை இழிவு செய்யும் எதிர்மறைப் போக்கு இஸ்லாம் , கிறுஸ்துவ மதத் தத்துவங்களில் உண்டு என்றாலும், தத்துவம் – குறிப்பாக கிருஸ்துவ மதத் தத்துவம் – காலப்போக்கில் நிச்சயம் பல மாற்றங்களை அடைந்துள்ளது. சமீபத்தில் போப் ஜான் பால், பரிணாமத் தத்துவத்தை முழுக்க நிராகரிக்க வேண்டியதில்லை, கடவுள் படைத்தார் என்பதை ‘ஒரு குறிப்பிட்ட காலத் துணுக்கில் நிகழ்ந்த பெளதீகப் படைப்பு ‘ என்று புரிந்து கொள்ள வேண்டியதில்லை என்று சொன்னதும் இதில் அடங்கும். யூத வெறுப்பைக் கைவிட்டு , யூதர்களை கிருஸ்துவர்களின் மூத்த சகோதரர்களாய் அங்கீகரித்தது சமீபத்தில் தான் நடந்தது.

மார்க்ஸியத் தத்துவத்தை மேற்கொண்டவர்கள் மூலமாக தொழிலாளர்கள் பல சலுகைகளையும், வெற்றிகளையும் பெற்றுள்ளனர். மார்க்ஸியத்தில் வெளிப்படையாய்ச் சொல்லப் படாவிடினும், இன்றைய காலத்தை ஒட்டி, பெண் விடுதலை, சூழல் மாசு எதிர்ப்பு என்று இடதுசாரிகள் செயல்படுகின்றனர். இது எப்படி நிகழ்கிறது ? ஒரு தத்துவத்தின் எழுச்சியின் காலப் பின்னணியில் தத்துவத்தைப் புரிந்து, மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப தத்துவத்தின் கருத்துகளை மாற்றியும், விலக்கியும், சேர்த்தும் வருகிற ஒரு சூழலுக்கு இணக்கமாய்த் தத்துவமும், தத்துவத்தைப் பின்பற்றுவோரும் இருக்கும்போது தான் இது சாத்தியம் ஒரு வரியை மாற்றக் கூடாது என்று வார்த்தைகளின் புனிதத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கும் மூர்க்கத்தின் முதல் பலி மனிதாபிமானமே.

இந்தப் பிரசினைகளுக்குள் சிக்காமல், தத்துவத்தின் எளிய புரிதல்களை மேற்கொண்டு கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் பின்பற்றும் தத்துவம் அவர்களைப் பொறுத்தவரையில் சில எளிய சடங்குகள்: ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவின் அங்கமாக உணரச்செய்து , அதன் மூலமாக பாதுகாப்பும் சமூக உறுப்பாளர் என்ற sense of belonging-ம் தருகிற அடையாளம். அவ்வளவே. ஆனால். தத்துவத்தின் பெயரைச் சொல்லி அவர்களைக் குழப்பி, தம்முடைய சுயநலத்திற்குப் பயன்படுத்தும் கும்பல்கள் இறுகிய , இருண்ட ஒரு பாதையில் இவர்களை இட்டுச் செல்கின்றனர். ஸ்டாலினிஸ்டுகளும், மத அடிப்படைவாதிகளும் இந்த ,இருண்மையையே வெளிச்சம் என்று சாதிக்கும் எஸ் வி ராஜதுரை போன்றவர்களும் தான் மிக ஆபத்தானவர்கள்.

—-

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்