இஸ்லாத்தில் உறக்கம் ஒரு நல்ல அமலா ?

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

அ.முஹம்மது இஸ்மாயில், சிங்கப்பூர்


“ராத்திரி பூரா தூக்கமே இல்லை பொரண்டு பொரண்டு படுக்கிறேன்.. தூக்கமே வரலை” என்று நம்மிடையே பலர் புலம்ப கேட்டிருக்கிறோம் ஏன் ? நாமே சில

சமயங்களில் தூக்கமின்றி தவித்திருக்கிறோம்.

“மெத்தய வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை” என்ற பாடல் வரிகளை கேட்டு சற்று அசந்திருக்கிறோம்.

“மெத்தை வாங்கினால் தூக்கம் ஃபிரீ” என்று எந்த கம்பெனியாவது விளம்பரம் செய்து பார்த்ததுண்டா ?

“காசு தர்றேன் தூக்கம் தர்றீங்களா ?” என்று யாராவது கேட்பதுண்டா ?

தூக்க மாத்திரை ஒன்று போட்டால் பத்தாது என்று இரண்டு போட்டு சற்று அயர்பவர்களும் நம்மிடையே உண்டு.

தூக்கம் வராததன் காரணம் என்ன ?.. துக்கமா ?.. துயரமா ?

இடி தலைமாட்டில் விழுந்தாலும் காலையில் எழுந்து ராத்திரி யார் வேகமா குறட்டை விட்டது என்று கேட்பவர்கள் கூட வியாபாரத்தில் 100 ரூபாய் குறைந்தால் அன்றைய தினம் விடிய விடிய தூங்குவதில்லை.. ஒருவேளை தூக்கம் வராததன் காரணம் என்ன ?.. கவலையா ?..

வசதியா இருந்தால் தூக்கம் வராது..அசதியா இருந்தால் தான் தூக்கம் வரும்.. இந்த வாதம் சரியா ?..

பட்டு மெத்தை இருந்து என்ன பயன் ? படுத்தவுடன் பட்டுன்னு தூக்கம் வராவிடில்..

ஒருவர் மருத்துவரிடம் கேட்டாராம், “டாக்டரய்யா.. எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது நீங்க தான்ய்யா வைத்தியம் பண்ணணும்” என்று. அதற்கு அந்த மருத்துவர், “தூக்கம் வரலைன்னா கூட கண்ணை மூடிக்கிட்டு ஆட்டு மந்தையில நிறைய ஆடு இருக்கிறதா நினைச்சுக்குங்க..ஒண்ணு ஒண்ணா எண்ணிக்கிட்டே வாங்க எண்ணி முடிக்கிறதுக்குள்ளே நீங்க தூங்கிடுவீங்க பாருங்க..”என்று சொல்லி அனுப்பி வைத்தாராம். மறுநாள் வந்தவரிடம் மருத்துவர் கேட்டிருக்கார்,”என்னங்க, நான் சொன்ன மாதிரி எண்ணுனீீங்களா ? தூக்கம் வந்ததா ?என்று- வந்தவர் சொன்னாராம்,”அட, நீங்க வேற டாக்டரய்யா! நீங்க சொன்ன மாதிரி தான் நானும் எண்ணுனேன் ஆனால் நான் எண்ணி முடிக்கிறதுக்குள்ளே பொழுதே விடிஞ்சிடுச்சுங்கய்யா..என்னங்கய்யா செய்யலாம்” என்றாராம்.. அன்றிலிருந்து பாவம் அந்த மருத்துவருக்கும் தூக்கம் வருவதில்லையாம்.. பாவம் ராத்திரி எதை எண்ணுவது என்று எண்ணி பெரிதும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாராம்.

பள்ளிப் பருவத்தில் வாத்தியார் கேட்டார்,”நின்று கொண்டே தூங்கும் மிருகம் எது ?” என்று.. “குதிரை” நான் விடையளித்தேன்.. நின்று கொண்டே மனிதன் தூங்க முடியுமா ? இப்போது சிந்திக்கிறேன்.

பள்ளிகூடத்தில் வகுப்பறையில் தூங்கி வழியாதவர் எவரேனும் உண்டா ? வகுப்பறையில் மாணவர்களை எவ்வாறு விழிப்புடன் வைத்துக் கொள்வது என்று ஒரு பயிற்சி வகுப்பு நடத்தினார்கள். அங்கே சென்றும் நிறைய பேர்கள் தூங்கி வழிந்தார்களாம். வரலாறு பாடம் என்றாலே தூங்கி வழியும் நான் வரலாற்றில் படித்த ஒருவரது உறக்கத்தை கண்டு வியந்துமிருக்கிறேன். யார் அவர் ? உலக மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக தோன்றிய அண்ணலெம் பெருமானார் முஹம்மது நபிகளார் தான் அவர். தெளர் குகையில் அவர்கள் உறங்கியதைப் பற்றித்தான் குறிப்பிடுகிறேன்.

இஸ்லாத்தின் எதிரிகளாம் மக்க நகர் வாழ்ந்த நிராகரிப்பவர்கள் நபியை கொன்று விட துணிந்து அண்ணாரின் வீட்டை அடைந்தார்கள். சதித்திட்டத்தை இறைவன் மூலமாக அறிந்த நபிகளார் தனது தோழர் அபுபக்கர் என்பாருடன் மதினா நகர் நோக்கி புறப்பட்டார்கள். தப்பி செல்லும் வழியில் தெளர் எனும் குகைக்குள் தஞ்சம் புகுந்தார்கள். நிராகரிப்பவர்களோ அண்ணலாரை காணாமல் கொலை வெறியில் தேடி அலைந்தார்கள். அந்நிராகரிப்பவர்களுக்கு தெளர் குகையை கண்டு பிடிப்பது ஒன்றும் அவ்வளவு சிரமமல்ல. வந்து நிச்சயம் சுலபமாக கண்டு பிடித்து விடலாம். ஆனால் தெளர் குகைக்குள் நடந்தது என்ன தெரியுமா ? பெருமானார் அவர்கள் தனது தோழரது மடியில் படுத்து உறங்கினார்கள்.. எப்படி அந்த கட்டத்தில் ஒருவர் உறங்க முடியும் ?.. நினைத்து பார்க்கிறேன்.. ராத்திரி தூங்கும் போது மந்திரி பதவி போயிடுமோ என்ற பயத்தில் நம்மவர்கள் தூங்குவதே இல்லையாம்..ஆனால் இங்கே ரத்த வெறியில் கைக்கெட்டும் தூரத்தில் எதிரிகள் இருந்தும் ஒருவரால் நன்றாக எப்படி உறங்க முடிகிறது. பக்கத்து தெருவில் திருடன் வந்தாலே பத்து நாளைக்கு தூக்கம் வருவதில்லை நமக்கு. ஆனால் இங்கே வாளேந்திய கொடியோர் பக்கத்தில் இருந்தும் பதுங்கியிருப்பவருக்கு உறக்கம் எப்படி வருகிறது ?

என்ன தைரியம் இருக்க வேண்டும் அவர்களுக்கு..சிந்தித்ததில் விடை கிடைத்தது. எதிரிகளின் எதிரே உறக்கம் வருகிறது என்றால் அது உறக்கம் அல்ல அது தான் நம்பிக்கை. இறை நம்பிக்கை..

ஆமாம்..இறைவன் மீது பெருமானார் வைத்த நம்பிக்கை அல்லவா அது.. நபியவர்களின் வாழ்வின் அடிப்படையே இறை நம்பிக்கையில் அமைந்தது தான் என்பதை என்னால் உணர முடிகிறது.

இங்கே உறக்கம் நல்ல அமலாக (இபாதத்தாக) மாறியதை எண்ணிப் பார்க்கிறேன்.. மலைத்து போகிறேன்..

உறக்கம் நல்ல அமலாக மாற முடியுமா ? முடியும்..

dul_fiqar@yahoo.com.sg

Series Navigation

அ.முஹம்மது இஸ்மாயில்

அ.முஹம்மது இஸ்மாயில்