சேவியரும் குஜராத்தின் ஆதிவாசிகளும்

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

யோகிந்தர் சிகந்த்


சேவியர் மஞ்சூரான் ஒரு சேசு சபை பாதிரியார். தென் குஜராத்தின் ராஜ்பிப்ளா சமூக சேவைச் சங்கத்தின் மூலம் ஆதிவாசிப் பகுதிகளில் பணி புரிகிறார். இந்துத்துவக் குழுக்கள் இந்தப் பகுதிகளில் பண்ணும் காரியங்கள் பற்றியும் , அது ஆதிவாசிகளுக்கு அதனால் என்ன பலன் என்பது பற்றியும் உரையாடுகிறார். அவர் உரையின் பகுதிகள் :

யோகிந்தர் சிகந்த்ி : உங்கள் அமைப்பு என்ன செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளன என்று சற்றுச் சொல்ல முடியுமா ?

பாதிரியார் சேவியர் : 27 வருடங்களுக்கு முன்பு, பாதிரியார் ஜோசப் இடியகுஞ்ஞள் என்ற சேசு சபை பாதிரியார் இதை ஸ்தாபித்தார். தென் குஜராத்தின் ஆதிவாசிகளுக்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்குலிறோம்.இதையும் தாண்டி நாங்கள் இனி ஆதிவாசிகளுக்கு உணர்வூட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்துத்துவ அமைப்புகள் ஆதிவாசிகளிடையே மிக அதிக அளவில் இந்துக்களாய் அவர்களை மதமாற்றம் செய்வதில் ஈடுபட்டிருப்பதால் , இது மிக அவசரத் தேவையாகிறது. இந்த ஆதிவாசி மக்கள் உண்மையில் இந்துக்களே என்று இந்த இந்துத்துவ குழுக்கள் கூறுகின்றன. இதை எதிர்கொள்ள நாங்கள் ஆதிவாசிகளின் பெருமையைப் பறை சாற்றும் விதமாகவும் அவர்கள் வரலாற்றை அறியும் விதமாகவும் ஒரு பணியை ஆரம்பித்துள்ளோம்.

ஆதிவாசிகளுக்கு சண்டைப் பயிற்சி அளித்து அவர்களுக்குப் பெருமிதமும் தன்னம்பிக்கையும் அளிக்க முயல்கிறோம். ஆதிவாசிகளிடையே 17 பிளாக் பெல்ட் கராதே வீரர்களைத் தயார் செய்துள்ளோம். இவர்களில் ஒரு சிறுமியும் உண்டு. அங்கு பள்ளிப் பிள்ளைகளில் 2000 பேருக்கு இந்த 17 பேரும் பயிற்சி அளிப்பார்கள். ஆதிவாசி வழக்குரைஞர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நாங்கள் பயிற்சி அளிக்கவிருக்கிறோம். அவர்கள் அடையாளத்தை அவர்கள் திரும்பப் பெற வேண்டும், மற்றவர்களால் அவர்கள் சுரண்டப்படக் கூடாது.

போலிஸ் மற்றும் வனத்துறை அலுவலர்கள் அவர்களை மிருகம் போல நடத்தினால் , அதைச் சகித்துக் கொள்ளக் கூடாது என்றும் சொல்கிறோம். தலை தாழ்த்தி ‘நமஸ்தே ‘ என்று சொல்வதற்குப் பதில் ‘ஜெய் ஆதிவாசி ‘ என்று தலை நிமிர்த்திச் சொல்ல வேண்டும் என்று பயிற்சி அளிக்கிறோம்.

ஜெய் ஆதிவாசி மகாசங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். அதில் 6000 பேர் உறுப்பினர்களாய் உள்ளனர். இது மதச்சார்பில்லாத அமைப்பு. எந்த மதமானாலும் ஆதிவாசிகள் இதில் பங்கு பெறலாம்.

யோ சி : நீங்கள் ஆதிவாசிகள் இந்துக்கள் அல்ல என்கிறீர்கள் . ஆனால், இந்த்துத்துவ சக்திகள் இவர்கள் இந்துக்களே என்று அடித்துச் சொல்கிறார்கள் எது சரி ?

பா சே : ஆதிவாசிகள் இந்துக்களே அல்ல. அவர்களுக்கு என்று ஒரு மதம் இருக்கிறது. மதிப்பீடுகள் உள்ளன. இந்தப் பழைய பாரம்பரியங்களை மீண்டும் உயிர்ப்பிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். இந்துத்துவ சக்திகள் இவர்களை இந்துக்களாய் ஆக்கி இந்து வாக்கு வங்கியைப் பெருக்க நினைக்கிறார்கள்.

எனவே எங்கள் அமைப்பில் ஆதிவாசிகளின் முன்னோர்களின் கதையைக் கூறி, ஊடுருவல் செய்த ஆரியர்கள் எப்படி அவர்களை அடிமைப் படுத்தினார்கள் என்று சொல்கிறோம். இப்போது முன்போலவே புதிய ஊடுருவல்காரர்கள் வந்து காட்டைக் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இவர்கள் வியாபாரிகள். ஆதிவாசிகளை ‘கீழ்ச்சாதி ‘ மக்கள் என்று இவர்கள் சொல்கிறார்கள்.

இந்த ஆதிவாசிகள் இந்துக்களாய் மாறும்போது இவர்களின் பல மனிதாபிமான உணர்வுகள் போய் விடுகின்றன. இந்த உணர்வுகளைப் பாதுகாக்க வேண்டும் என்பது எங்கள் திட்டம். தம்முடைய தனி அடையாளத்தில் இவர்கள் பெருமிதம் கொண்டால் தான் இந்தத் திட்டம் சாத்தியம். இந்துக்களாய் ஆவதன் மூலம் இவர்கள் தாழ்வு மனப் பான்மையைத் தான் பெறுகிறார்கள்.

யோ சி: மதமாற்றம் எந்த அளவு இங்கே பரவியுள்ளது ?

பா சே: முதலில் ஒரு சாது வருவதில் இது தொடங்குகிறது. இந்துத்துவ அமைப்புகள் இவரை அனுப்பியிருக்கலாம். ஆர் எஸ் எஸ் பிறகு ஒரு கணேசர் விக்கிரகத்தை அனுப்பும். சாது இந்தச் சிலைக்கு பூசாரி ஆகிவிடுவார். சாது இந்தச் சிலையைக் கும்பிடுமாறு ஆதிவாசிகளைக் கேட்டுக் கொள்வார். விக்கிரகா ஆராதனை இந்த மக்களுக்கு அன்னியமானது.

ஆதிவாசிகள் பாடவும் ஆடவும் வெகுவாக விரும்புகிறார்கள். அதனால் இந்துத்துவ அமைப்பு ஆடல் பாடல் ஏற்பாடு செய்து ஆதிவாசிகளைப் பங்கு பெறச் செய்கிறது. ஆதிவாசிகள் மேல்சாதியினரை நம்பியிருப்பதால் இந்துக்களாய் ஆகிவிட்டால் அவர்களுக்கு மதிப்புக் கிடைக்கும் என்று எண்ணுகிறார்கள். அவர்களுக்கு இது ஒரு வாழும் வழி ஆகிவிடுகிறது.

யோ சி : இந்த் ஆதிவாசிகள் முஸ்லீம்களைப் பெருமளவில் தாக்கிக் கொன்ற சம்பவங்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள் ?

பா சே: இது ஓரளவு பொருளாதார விஷயம். பஞ்ச காலத்தில் ஆதிவாசிகள் ஏழ்மையினால் தம் வீடுகளை விட்டுச் சென்று வேலை தேடவேண்டியதாகிறது. சிலர் முஸ்லிம்களிடம் வேலைக்கு சேருகிறார்கள். ஆதிவாசிகளை முஸ்லீம்கள் இந்த சமயத்தில் மிக மோசமாய் நடத்துகிறார்கள்.

சில ஆதிவாசிப் பகுதிகளில் முஸ்லீம்கள் கடை வைத்திருக்கிறார்கள். இந்துத்துவ அமைப்புகள் ஆதிவாசிகளிடம் இந்த முஸ்லீம் கடைக்காரர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லி மனம் திருப்புகிறார்கள். பல இடங்களில் ஆதிவாசிகளுக்கு இவர்கள் சாராயம், முஸ்லீம்களைத் தாக்க வில் , அம்பு வழங்குகிறார்கள். மேல்சாதி இந்துக்கள் இங்கே வந்து ஆதிவாசிகளிடையே , முஸ்லீம்கள் மீதும் , கிறுஸ்துவர்கள் மீதும் வெறுப்பை உண்டு பண்ண முயல்கிறார்கள்.

யோ சி : இந்துத்துவ அமைப்புகள் கிறுஸ்துவ அமைப்புகள் மீதும் இதே போல் குற்றச்சாட்டு சுமத்துகிறார்களே ? நீங்கள் ஆதிவாசிகளைக் கிறுஸ்துவ மதத்திற்கு மாற்ற முயல்வதாய்க் கூறுகிறார்களே ?

பா சே : பழைய மதமாற்ற மிஷனரி பாதையிலிருந்து கிருஸ்துவக் குழுக்கள் வெகு தூரம் வந்துவிட்டன. கத்தோலிக்கக் குழுக்கள் மீது தான் இவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் . காரணம் – கத்தோலிக்க அமைப்புகள் தெ குஜராத்தில் கல்வி பரவவும், ஆதிவாசிகள் விழிப்புணர்வு பெறவும் காரணமாய் இருந்திருக்கிறார்கள். ஆதிவாசிகள் விழிப்புணர்வு பெறுவது மேல்சாதி இந்துக்களை அச்சுறுத்துகிறது. இதனால் தான் இவர்கள் கிறுஸ்துவர்கள் மீது தாக்குதலை நடத்துகிறார்கள்.

இது வெறும் மதம் சம்பந்தப் பட்ட விஷயம் அல்ல, பொருளாதாரம் சம்பந்தமான விஷயம். கத்தோலிக்கப் பள்ளிகள் மதமாற்றத்தில் தீவிரம் காண்பித்தால் இந்த இந்துத்துவ ஆட்களே தம் குழந்தைகளை கிறுஸ்துவப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்களே ?

யோ சி : கிறுஸ்துவர்களும், முஸ்லீம்களும் இணைந்து போராட தென் குஜராத்தில் ஏதும் வழியுண்டா ?

பா சே : குஜராத்தில் கிறுஸ்துவர்களும், முஸ்லீம்களும் தொடர்பு கொள்வெதே இல்லை. சில கிறுஸ்துவ அமைப்புகள் , பாதிக்கப் பட்ட முஸ்லீம்களுக்குக் நிவாரண உதவி செய்தது உண்மை தான் என்றாலும், இருவருக்கும் இடையே பல தவறான புரிதல்கள் உள்ளன. ஆனால் கிறுஸ்துவர்கள், முஸ்லீம்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் இரு சாராரையும் ஒன்றுபடவைத்துள்ளது. இந்துத்துவ ஃபாசிஸ்ட் குழுவை கிறுஸ்துவர்களும் முஸ்லிம்களும் இணைந்து போராடுவது மிக முக்கியம். ஆனால் இது வெறும் கனவே.

யோ சி : உங்கள் பணியில் மதத்தை எப்படி அணுகுகிறீர்கள் ?

பா சே : நாங்கள் எந்த மதத்தையும் பிரசாரம் செய்வதில்லை. மதப் பாகுபாடு இன்றி எல்லா ஆதிவாசிக் குழுக்களுடனும் நாங்கள் பணி புரிகிறோம். ஆதிவாசிகள் இந்துக்கள் அல்ல என்று அவர்களிடம் நாங்கள் கூறும்போது, புதிய மத அடையாளத்தை நாங்கள் சுமத்தவில்லை. அவர்களுடைய உண்மையான வரலாற்றைத் தெரிவித்து, எப்படி இந்துத்துவ சக்திகள் திரித்துச் சொல்கிறார்கள் என்று மட்டுமே சொல்கிறோம்.

அவர்களை கிறுஸ்துவர்கள் ஆக நிர்ப்பந்தம் செய்வதில்லை. மாறாக நல்ல மனிதர்களாய் ஆகுமாறு தான் சொல்கிறோம். ஒரு கிறுஸ்துவன் என்ற முறையில் இது தான் என் கடமை. கோவிலில் அல்லது மசூதியில் அல்லது சர்ச்சில் பிரார்த்தனை புரிவது எளிது, ஆனால் ஒருவரின் நம்பிக்கை எப்படி நசுக்கப் பட்டவர்களுக்காக பணி புரிய உந்துதல் அளிக்கவேண்டும் என்பது தான் உண்மையான சவால். ஒருவர் கிறுஸ்துவ மதமோ அல்லது வேறு மதமோ தழுவ விரும்பினால் அவர் அந்த மதத்தைத் தழுவ சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும்.

***

தி நியூஸ் என்ற பாகிஸ்தான் பத்திரிக்கை ஞாயிறு மலரில் வெளிவந்த பேட்டி

***

Series Navigation

யோகிந்தர் சிகந்த்

யோகிந்தர் சிகந்த்