இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 26 2001

This entry is part [part not set] of 22 in the series 20010825_Issue

மஞ்சுளா நவநீதன்


சாதீயம் – டர்பனில் இனவாதத்திற்கெதிரான மாநாட்டில்

டர்பனில் இனவாதத்திற்கெதிரான மாநாட்டில் சாதியம் பற்றி விவாதிக்கப் படும் என்பது ஜன நாயக சக்திகளுக்கு ஒரு பெரும் வெற்றி. சாதியம் என்பது சட்டபூர்வமாக இந்தியச் சட்டநெறிகளில் அங்கீகரிக்கப் படாத ஒன்று என்று காரணம் காட்டி இந்திய அரசாங்கம் சாதியம் பற்றி விவாதிக்கலாகாது என்று சொல்லிக் கொண்டிருந்தது. சொல்லப் போனால் இன்றைய நிலையில் இனவாதம் அரசாங்கத்தின் வெளிப்படையான அங்கீகாரத்துடன் எங்கும் இருக்கவில்லை என்பதும் உண்மை. ஆனால் இனவாதக் குற்றங்கள் முழுமையாக ஒழிந்து விட வில்லை. அந்தக் குற்றங்களைக் கண்டு தண்டிக்கவும், களையவுமான அரசின் முயற்சிகள் தயங்கித் தயங்கித் தான் நடைபெறுகின்றன. இது பற்றிய கவனக் குவிப்பை மாநாடு ஏற்படுத்த முடியும்.

இனவாதம் சாதியம் தவிர மிக முக்கியமான ஒரு அநீதி பற்றி இந்த மாநாடு விவாதிக்க வேண்டும் : மத வாதம். இன்றைய நிலையில் மதவாதமே புதிய இனவாதமாக ஆஃபகானிஸ்தானில் தொடங்கி, சவூதி அரேபிய வரையில், நேபாளம் தொடங்கி மலேசியா வரையில் மிக ஆபத்தான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. நான் கூறும் மதவாதம் அடிப்படைவாதம் அல்ல. அடிப்படைவாதமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளாமலே மற்ற மதத்தினரின் உரிமைகளில் தலையிடுவதும், மற்ற மதத்தினரை இரண்டாம் தரக் குடிமக்களாய் நடத்துவதும் நான் குறிப்பிடுகிற மதவாதம். இந்த மத வாதத்திற்குப் பெரும்பான்மைவாதம் என்று பெயர் சூட்டி அரசாங்கங்கள் நியாயப் படுத்துவது , ஜன நாயகச் செயல் பாட்டிற்கு மிகக் கொடூரமான சவாலாய் எழுந்து நிற்கிறது. மத மாற்றத்திற்குத் தடை கோரி ஒரு கும்பல் இந்தியாவில் போராடுவதும், மற்ற மதத்திற்கு மாற முயல்வது தெய்வ நிந்தனைக் குற்றம் என்று மரண தண்டனை விதிப்பதும் எனப் பல நாடுகளில் செயல்பாடுகள் நிகழ்ந்தவாறுள்ளன. இதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இனவாத எதிர்ப்பு மாநாடு நடத்துவதில் பயனில்லை. தென் ஆஃப்ரிகாவின் நிற வெறி அரசைக் காட்டிலும் கூட மோசமான நடைமுறைகளைக் கொண்ட மதவாத அரசுகள் உலகெங்கிலும் உள்ளன. அரசாங்க ஆதரவுடன் சட்டதிட்டங்களின் அரவணைப்புடன் இந்த அநியாயம் அரங்கேறுகிறது.

மதவாதம் தான் இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் இனவாதம் என்ற உண்மையை, சாதியத்தை டர்பனில் விவாதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் கொடுத்து வெற்றி பெற்றுள்ள அறிவாளிகள் இதனைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது ஏன் என்று தெரியவில்லை.

***********

பெரியார் ? அருண்மொழி யார் ? மார்க்ஸ் யார் ?

‘பெரியார் ? ‘ என்று ஒரு புத்தகத்தை அ மார்க்ஸ் என்பவர் எழுதியிருக்கிறார். இது ஒரு முக்கியமான புத்தகம்.பெரியாரின் பார்வைகளைப் பற்றி சில முக்கியமான கருத்துகளைத் தொகுத்து, புரிவிப்பு நிகழ்த்தியுள்ளது.

இந்தப் புத்தகத்தை அடையாளம் என்ற பிரசுர நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழாவில் அருண்மொழி பேசிய பேச்சு ஒரு வலைத் தளத்தில் படிக்க நேர்ந்தது. இவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவராம். வழக்குரைஞர் என்று அறிகிறேன். இவர் பேசிய பேச்சைப் படித்தவுடன் இந்தத் திராவிடர் கழக ஆட்களைத் திருத்த வேமுடியாது என்று எனக்குத் தோன்றியது.

அவர் பேச்சில் முதல் வரியிலேயே பாரதி தாசனின் மிகப் பழமையான தொழுகை மனப்பான்மையை வலியுறுத்தும் பாடலில் தொடங்குகிறார். ‘பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகம் தொழும் ‘ என்ற பாடல் வரிகள் அவை. அதன் பின்பு இதெல்லாம் மார்க்சுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். எங்களுக்கு ஒன்றும் புதிதில்லை என்று மார்க்ஸின் முகத்தில் கரியை அப்புகிறார்.

பெரியாரின் கருத்துகள் புத்தகங்களில் அடைபட்டுக் கிடப்பதனாலேயே, அவை ‘பேசப் பட்டு ‘ வந்தன என்ற முடிவுக்கு வருகிறார் அருண்மொழி. ஒரு ஆளுமையைப் புரிந்து கொள்வது என்பது வெறும் பெரியாரின் மேற்கோள்களைக் காட்டுவது மட்டுமல்ல. அவற்றின் சாராம்சம் என்னவென்று பார்த்து, அவற்றின் இன்றைய பொருத்தம் பற்றியதாகவும் இருக்க வேண்டும். தேசியம் என்ற கருத்தாக்கத்தை மாறாத ஒரு கருத்தாக்கமாக மாற்றித் தான் இன்றைய திராவிட இயக்கத்தினர் பேசி வருகின்றனர். இதை மறுப்பது – பெரியாரின் வழி நின்று – அ மார்க்சின் முக்கிய பணி. சைவ வேளாள மரபிற்கு அவர் எதிரானவர் அல்ல என்று அருண்மொழி நிறுவுவதற்காக அவர் எப்படி மறைமலை அடிகளுடன் ஒன்று பட்டு இருந்தார் என்பதைச் சுட்டுகிறார். பெரியார் போன்றோரின் செயல்பாடுகளில் ஒரு தற்காலிக செயல்திட்டத்தை முன்னிட்ட ஒரு அம்சமும், நிரந்தர தொலை நோக்குச் செயல் திட்டமும் உண்டு. இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்காக மற்றவர்களுடன் சேர்ந்து போரிட்ட போதே , அவர் சைவ வேளாளப் பெரியவர்களின் சாதியத்தைக் கண்டனம் செய்திருக்கிறார். அதே போலத் தான் திருக்குறள் மாநாட்டில் பெரியார் ஈடுபாடு கொள்வதும். திருக்குறளை உலகப் பொது மறை என்றோ, அய்யன் என்றோ தூக்கிப் பிடிக்க அவர் தயாரில்லை. தற்காலிகமாக , பகவத் கீதை cult-க்கு எதிரான ஒன்றாகத் தான் திருக்குறளை முன்னிறுத்துகிறார். குறள் cult ஆகுமெனில் அதையும் அவர் தூக்கியெறியக் கூடியவர் தான் என்பது தான் மார்க்ஸ் ஆய்வின் வழிக் கருத்து.

பெரியார் வழி வந்தவர்களாயிற்றே இவர்கள் திறந்த மனத்துடன் கருத்துகளை அணுகுவார்கள் என்று எண்ணியோ என்னவோ, அல்லது திராவிடர் கழகத்தினருடன் உரையாடலை ஏற்படுத்த முடியும் என்றோ என்னவோ மார்க்ஸ் அருண்மொழியை அழைத்திருக்கலாம். பாவம் மார்க்ஸ்.

******

ஆர் எஸ் எஸ் – கிறுஸ்தார்கள் சந்திப்பு

ஒரு நல்ல முன்னேற்றம் இது. ஆர் எஸ் எஸ் நிறுவனமும் கிறுஸ்தவப் பேராயர்களும் தில்லியில் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். இந்தச் சந்திப்பில் கிருஸ்தவ மதத் தலைவர்களிடமிருந்து உண்மை கற்றாவது, ஆர் எஸ் எஸ் நிலைபாடான மத மாற்றத்திற்குத் தடை என்ற ஜனநாயக விரோத எண்ணத்தைக் கைவிடும் என்று நம்புவோம். கட்டாய மத மாற்றம் என்று பொய்யைப் பரப்புவதையும் ஆர் எஸ் எஸ் நிறுத்த வேண்டும். கிருஸ்தவ அமைப்புகள் எதுவும் ரகசியமான முறையில் பணியாற்றுவதில்லை. எனவே இப்படிப் பட்ட குற்றச் சாட்டுகள் ஆதாரமின்றிக் கூறப் படும்போது அதனை மறுக்க வேண்டிய கட்டாயமும், கடமையும் , இன்னமும் கிருஸ்துவ நிறுவனங்களுக்கு ஏற்படுகிறது.

இது போல் ஆர் எஸ் எஸ் முஸ்லீம் மதத் தலைவர்களுடன் உரையாடத் தொடங்க வேண்டும்.

*********

பிரதமர் – பாதுகாப்பு மந்திரி – ஆர் எஸ் எஸ் பிடியில்

ஆர் எஸ் எஸ் என்ற அமைப்புடன் தம் தொடர்பை இவர்கள் துண்டிக்கத் தயாரில்லை. இதன் ஊது குழலாய், மத மாற்றம் பற்றிய சட்டங்களை விவாதிக்க வேண்டும் என்று ஒரு முறை வாஜ்பாய் சொன்னார். இப்போது ஜஸ்வந்த் சிங் -கும் நான் ஆர் எஸ் எஸ் என்று அறிவித்துக் கொள்கிறார்.

பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை சிறிது நம்பிக்கை அளிக்கிற நேரத்தில் இவர்கள் இப்படி செய்வது பாகிஸ்தானின் நம்பிக்கைக்கு உகந்ததாய் இராது என்று கூட இவர்களுக்குத் தெரியவில்லையா ?

****

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்