தமிழ்நாடு – வன்முறையின் அரசியலும், சமூக இயலும், 2001 தேர்தலும்.

This entry is part [part not set] of 15 in the series 20010430_Issue

-வ.ஐ.ச.ஜெயபாலன்


தமிழ் நாடு- வன்முறையின் அரசியலும் சமூக இயலும் என்னும் இக்கட்டுரை இரண்டு பந்திகளைக் கொண்டது. “ தமிழ்நாடு – வன்முறையின் அரசியலும் சமுக இயலும்” என்ற முதலாவது பகுதியில் தமிழ் நாட்டின் அக நிலமைகள் ஆராயப் படுகிறது. தமிழ் நாட்டின் வன்முறையின் வரலாறும் வன்முறை முகாமையும் (violent management) தொடர்பாகவே இக்கட்டுரையின் பார்வை குவிகிறது. “இந்தியாவும் தமிழகமும் – வன்முறையின் அரசியலும் சமூக இயலும்” என்கிற இரண்டாவது பகுதியில் தமிழகத்தின் வன்முறைப் பிரச்சினையின் வெளிவாரி நிலமைகள் ஆரயப் படுகிறது. இந்தியாவின் ஒருமைப் பாடும் சவால்களும். இந்தியாவை சீர்குலைக்க முனையும் சக்திகளின் மரபுசார்ந்த அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றமும் இதனால் தமிழ்நாடு, கேரளம், மேற்க்கு வங்கம் போன்ற மாநிலங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் இரண்டாவது பகுதியில் ஆராயப் படுகிறது.

தமிழகம் தொடர்பான என்னுடைய ஆய்வு 1984 – 1987 காலக் கட்டங்களில் மூன்று வருடங்கள் சென்னையிலும் தமிழ் நாட்டின் சில பகுதிகளிலும் வாழ்ந்து திரிந்தும் இக்காலங்களில் சிறிதளவு கேரளத்திலும் டெல்கியிலும் பம்பாயிலும் அலைந்து திரிந்தும் கண்டும் கேட்டும் விசாரித்தும் பற்றிக் கொண்ட அறிதலின் அடிப்படையிலானது. 1999ல் சென்னை சென்றபோது மேலும் சில விசாரணைகளை மேற்கொள்ள முடிந்தது. எனினும் பொருளாதார வசதி கல்வி ஆய்வு நிறுவனங்களது துணை என்பவை இன்மையாலும் நவீன ஆய்வுமுறைகளை பயன்படுத்தி எனது ஆய்வை விரிவுபடுத்த இயலவில்லை.[i] எனினும் என்னுள் வாழ்ந்து, எனது இனத்தின்[ii] தலைமுறைகளைக் கடந்த நினைவுகள் என்கிற சூத்திரக் கயிற்றால் என்னை வழி நடத்தும் எனது முன்னோர்களான சங்கப் புலவர்கள் அலைந்து திரிதலையும் விசாரணையையுமே முக்கிய அறிதல் முறைமையாக கொண்டிருந்தனர் என்பது எனக்கு தன்நம்பிக்கை தருகிறது. விவாதத்தின் ஊடாக மேலும் கற்றுக் கொள்ள எனக்கு உதவ வேண்டுமென வாசகர்களை கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு – வன்முறையின் அரசியலும் சமுக இயலும் ( 1 )

தமிழ்நாடு தொடர்பான ஆய்வுகளில் ஈடு பட்டிருக்கிறவர்களுக்கு தேர்தல் 2001 ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை மிக முக்கியமான தகவல் களஞ்சியமாக விளங்கும்.. சென்ற நூற்றாண்டின் ஐம்பது அறுபதுகளின் பின்னர் தமிழக சமூக, கலாச்சார பொருளாதார வாழ்வில் மீண்டும் அசைவு ஏற்பட்டுள்ள ஒரு பின்னணியில் இந்த தேர்தல் இடம்பெறுகிறது. மாறிவரும் தமிழக வன்முறையின் அமைப்பும் வன்முறை முகாமையும் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இத்தேர்தல் தொடர்பான சேதிகள் ஆர்வம் தரும் என்பதில் சந்தேகமில்லை.

முன்னம் பிராமணர் பிராமணரிலிகள் என அணி பிரிந்த போது வன்முறைக்கான வாய்ப்பு அதிகம் இருக்கவில்லை. வன்முறைக்கான உள் ஆற்றல் ஒரு அணியாக இருந்த பிராமணரிலிகளிடமே இருந்தது. பல்வேறு பிராமணரிலி சாதியினர் மட்டுமன்றி பெரும்பாண்மையான இந்துக்களும் மற்றும் முஸ்லிகளும் கிறிஸ்தவர்களும் பிரமணரிலிகள் அணியிலேயே இருந்தனர். இதனால் வன்முறையை கட்டுப்படுத்தி முகாமை (manegement ) செய்தல் இலகுவாக இருந்தது. இப்பொழுது பிராமணரிலி அணி குலைந்து வருகிறது. வன்முறைக்கான உள்ளாற்றல் உள்ள பல்வேறு சாதி, மத பிரிவினரும் முஸ்லிம்களும் இன்று பழைய குடைஅணியில் இல்லை. அவர்களது நடத்தைகளை ஒழுங்குபடுத்துமளவில் இன்னும் புதிய குடைஅணிகள் உருவாக வில்லை. இதனால் வன்முறை முகாமை தற்காலிகமாக நெருக்கடியான ஒரு காலக்கட்டத்துள் நுழைந்துள்ளது.

2001 தேர்தலில் வன்முறைக்குத் தோதான வகையில் அணிகள் பிரிந்திருக்கிறது. ஜாதி, மத ரீதியாக கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா அம்மையார் தலைமையின்கீழ் இரண்டு பட்டுள்ளது. எனினும் புதிய நிலமையில் முன்னெப்போதையும் விட வன்முறைச் சூழலை கட்டுப் படுத்த வேண்டிய வரலாற்று கடமை கட்சிகளதும் கூடணிகளதும் தலைமைகளின் தலையில் சுமத்தப் பட்டுள்ளது. அண்மையில் டாக்டர்.கிருஸ்ணசாமி குமுதம் பேட்டியில் (28.04.2001) திமுக கூட்டணியில் சேர்ந்த தேவர் ஜாதி கட்சியான மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர் சேதுராமனை வரவேற்றுத் தெரிவித்த கருத்துக்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. “என்றாவது ஒருநாள் சகோதரர் சண்டைகள் நிறுத்தப் படவேண்டும் நாங்கள் அதற்க்கு எப்போதும் தயாராக இருக்கிறோம். அவர்கள் எங்களுடன் இணைந்திருப்பதன் மூலம் அவர்களும் தயாராக இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.” என அவர் தெரிவித்திருக்கிறார். அதுபோல திருச்சியில் நாடாளுமன்ற தொகுதி தலித் எழுமலைக்கு ஒதுக்கப் பட்டுள்லது. அவரது வெற்றிதொடர்பாக ஜெயலலிதா அம்மையார் மற்றும் டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் ஜாதி உணர்வுகளுக்கு அப்பால் பட்டு பணிபுரிகிறபோது ஜாதி உணர்வை தாண்டி தமிழக அரசியல் மேம்பட வாய்ப்புள்ளது. இவை தமிழ்நாட்டில் நேர்மையாகவும் உறுதியாகவும் வன்முறை முகாமைப் பணிகள் இடம்பெற்று ஜாதிய மோதல்கள் தடுக்கப் படுமானால் முற்போக்கான திசையில் வரலாறு தன் பணியை செய்யும் என்பதற்கான நல்லா சமிக்கையாகும்.

தமிழ்நாட்டின் நகர்மயமான பகுதிகள் தி. மு.க, கிராமப் புறங்கள் அ. இ.அ.தி.மு.க என்கிற வகையில் ஏற்பட்டிருந்த பிழவு இம்முறை மேலும் தீவிரப் பட்டிருக்கிறது. இதற்கு உலகமயமாதல், தரள மய இறக்குமதிக் கொள்கை என்பவற்றின் நலன்கள் நகருக்கும் அதன் பாதிப்புகள் கிராமங்களுக்குமாக பகிரப் படுகிற சூழலும் ஒரு காரணமாகும்.[iii]. மேலும் தேர்தல் போட்டிகள் கிராமப் புறங்களிலேயே மையப் பட்டுள்ளது. இத்தகைய பின்னணியில் பார்க்கிறபோது சாதிய முரண்பாடுகளும் அதிக முணைப்பைப் பெற்றுள்ள கிராமப் புறங்களில் வன்முறை சாத்தியங்கள் அதிகம் உள்ளது என கருதுகிறேன். இச்சாத்தியங்களை கையாள விரும்பும் அன்னிய சக்திகள் குறிப்பாக தென் இலங்கையையும் கேரளத்தையும் தளமாக்கி தூத்துக்குடி கன்னியாகுமரி கரையோரங்களாலும், தமிழ்நாட்டின் மேற்கு எல்லையோரங்களாலும் ஊடுருவிச் செயல் படுவது இரகசியமானதல்ல. இதைவிட மற்றொரு சிறு பிரிவு நேபாளத்தில் இருந்து பம்பாய், பங்களூர், கைதராபாத்தூடாகச் செயல்படுகிறது. இப்பின்னணிகளை வைத்துப் பார்க்கிறபோது 2001 தேர்தலிலும் எதிர்காலத்திலும் தமிழகத்தின் மேற்கு எல்லை மாவட்டங்களும் மற்றும் அதி தெற்கு மாவட்டங்களும் வன்முறை முகாமை தொடர்பான புதிய சவால்களை எதிர்கொள்ளக்கூடும்.

திருச்சி நாடாளுமன்றத்தொகுதியில் இந்துத்துவ அணிகள் மலையாள உயர் சாதியினரான சுகுமாரன் நம்பியாரை நிறுத்தியிருப்பது கோயம் புத்தூரைப் போல திருச்சியிலும் வெளிநாட்டு பின்னணியுள்ள கேரள இந்து முஸ்லிம் தீவிர வாத அணிகள் பலப் பரீட்சையில் ஈடுபடக்கூடிய சூழலை தோற்றுவிக்கலாம். மேலும் தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி போன்று ஏற்கனவே தமிழர் மலையாளிகள் உறவில் முறுகல் ஏற்ப்பட்டுள்ள மாவட்டங்களை திருச்சி நிலமைகள் பாதிக்கக்கூடும். முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக மேற்படி விவகாரத்துடன் தொடர்பில்லாத சென்னைமா நகரைச் சேர்ந்த ஒரு தெலுங்கர்களது அமைப்பு கேரள அலுவலகம் ஒன்றிம்முன் ஆர்ப்பாட்டம் செய்தமை இங்கு நினைவுகூரத்தக்கதாகும்.

2

தமிழக வன்முறை வரலாற்றில் அளவுரீதியாக பெரும்பாலான மோதல்கள் சாதி தன்மை கொண்ட மோதல்கள் என்றே கருதுகிறேன். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தவிர்த்து பெருமளவிலான அரச வன்முறையோ பிராமணரிலிகளின் அரசியல் வன்முறையோ தமிழகத்தில் இடம்பெற்றதில்லை. ஆனால் அண்மைக் காலங்களில் தமிழக வன்முறையின் அமைப்பில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த சில தசாப்தங்களில் வெளியார் சம்பத்தப்பட்ட மத, அரசியல் வன்முறைகள் தோற்றம் பெற்றுள்ளது. வெளிமாநிலத்தவர்/வெளியார் சம்பந்தப் பட்ட வன்முறைகளில் வரலாற்று ரீதியாக முக்கியமானவை என பின்வரும் ஆறு விடயங்களை அடையாளம் காண்கிறேன்.

1. தென் தமிழ் நாட்டில் கன்னியாகுமரி இணைப்பு போராட்டத்தின்போது பட்டம்தானுப் பிள்ளையின் மலையாள இனவாத அரசு தமிழருக்கு எதிராக ஏவி விட்ட இனவாத அரச வன்முறை.

2. தென் இந்திய நக்சலைட் இயக்கங்களின் உருவாக்கமும் அவற்றின் வன்முறைகளும் அவற்றை ஒடுக்கிய அரசுகளின் வன்முறைகளும். தமிழகத்தில் நக்சலைட் இயக்கத்தினரை வன்முறையாக ஒடுக்கிய திராவிட கட்சி அரசுகள் மேற்படி இயக்கம் வலுப்பெறக் காரணமாக இருந்த சமூக பொருளாதார கலாச்சார ஏறத் தாழ்வுகளை அகற்ற தவறிவிட்டன. குறிப்பாக மாவட்டங்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகள், நிலச் சீர்திருத்தம் தொடர்பான சமூக பொருளாதார பிரச்சினைகள் தொடர்கின்றன.

3. கர்நாடக தமிழர் மற்றும் கர்நாடகத்தில் புலம்பெயர்ந்து பணியாற்றிய தமிழகத் தமிழர்கள்மீது கர்நாடக அரசின் மறைமுக ஆதரவோடு இடம்பெற்ற வன்முறை. இது இன்னமும் முறையாக அனுகித் தீர்க்கப் படவில்லை.

4. இலங்கை அரச கடற் படைகளால் கேட்பாரின்றி தொடற்ச்சியாக தமிழக மீனவர்கள்மீது கட்டவிழ்த்து விடப் பட்டுகிற படுகொலைகளும் வன்முறைகளும். இது கேட்பாரின்றித் தொடர்கிறது.

5. கேரள தொடர்பு உறுதி செய்யப் பட்ட மத வாத மோதல்கள். மண்டைக்காடு இந்து கிறிஸ்தவ மோதல்கள், மற்றும் கோயம்புத்தூரில் வலுப்பெற்ற இந்து முஸ்லிம் முரண்பாடுகளும்,[iv] அதைத் தொடர்ந்த முஸ்லிம் தீவிர வாதிகளின் வெடி குண்டுத தாக்குதலும் . இதுவும் தீர்க்கப் படாத பிரச்சினையாகும்.

6. 1980 பதுகளின் நடுப்பகுதியில் தோற்றம் பெற்று 1992 வரை தொடர்ந்த ஈழத் தமிழ் போராளிகளி அமைப்புகளின் வன்முறை. மேற்படி வன்முறை இலங்கையில் 1987 – 1990 காலக்கட்டத்தில் இந்திய அமைதிப் படை விடுதலைப் புலிகளுக்கு எதிரான அநாவசியமான யுத்தத்திலும் ஈழத் தமிழருக்கு எதிரான பயங்கரவாதத்திலும் ஈடுபட்ட காலக் கட்டங்களில் தமிழகத்தில் தீவிரப் பட்டு ராஜீவ் காந்தி படு கொலை வரை தொடர்ந்தது.

மேற்குறிப்பிட்டவற்றுள் கன்னியாகுமரி இணைப்புத் தொடர்பான வன்முறையின் வரலாறுபற்றிய விரிவானதோர் கட்டுரை சின்னக் குத்தூசி அவர்களால் எழுதப் பட்டுள்ளது (குமுதம் – 22, 26.4.2001). ஏனைய பற்றி வன்முறை முகாமை நோக்கில் சிறிது ஆராயலாம்.

3

கர்நாடகத்தில் தமிழருக்கு எதிராக இளைக்கப்பட்ட வன்முறையில் கர்நாடக அரசின் பங்கும், இதைத் தடுக்க மத்திய அரசு செயல்படாதமையும் தமிழ் மக்களை, குறிப்பாக வட மாவட்ட தமிழர்களை ஆழமாகப் பாதித்துள்ளது. தமிழருக்கு எதிரான கர்நாடகக் கொடுமைகளைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு ஒரு துரும்பைத் தன்னும் அசைக்கவில்லை. கருநாடக தமிழர்களது உயிரையும் உடமைகளையும் காப்பாற்றும் வகையில் மத்திய அரசை உடனடியாக செயல்படுமாறு நிர்பந்திக்கும் ஆர்வமோ பொறுப்புணர்வோ அன்று முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மையாருக்கோ எதிர்க் கட்சித் தலைவரான கலைஞர் கருணாநிதிக்கோ இருக்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவின் தேசியக் கட்சிகள் மட்டுமன்றி இடதுசாரிக் கட்சிகளும் தமது வரலாற்றுக் கடமையில் இருந்து தவறிவிட்டன.

1980பதுகளில் இருந்தே மத்திய அரசுகள் திராவிட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களது தயவில் தங்கியிருக்கின்றன. இருந்தும் ஜெயலலிதா அம்மையாராலோ, கலைஞராலோ தமிழருக்கு எதிரான கர்நாடக வன்முறைகளை தடுக்கும் வகையில் மத்திய அரசைச் செயல்பட வைக்க முடியவில்லை என்பது தமிழகத்து வட மாவட்டங்களைச் சேர்ந்த சில இளைஞர்களை வன்முறை பாதையில் தள்ளியிருக்கிறது. இதுதவிர இன்னமும் கர்நாடகச் சிறைகளில் அநீதியான முறையில் பல தமிழர்கள் அடைபட்டுள்ளனர். இப் பிரச்சினை தொடர்பாக பழ. நெடுமாறன் அக்கறை காட்டிய போதும் அவரால் இப்பிரச்சினையை தேசிய அளவில் அனைத்துக் கட்சி மட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை..

மேற்படி சம்பவங்கள் தென் இந்திய தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள வரலாற்று ரீதியான அதிற்சி இந்திய ஒருமைப்பாட்டில் அக்கறை உள்ளவர்களால் அலட்சியப் படுத்தக் கூடியதல்ல. கர்நாடகத் தமிழர்களுக்கு இளைக்கப் பட்டுள்ள அநீதிகள் பற்றி இன்றுவரை இந்திய அரசோ, கர்நாடக அரசோ அடையாளம் கண்டு ஆவன செய்யவில்லை. இந்திய அறிவுத்துறைகூட இதனை அலட்சியப் படுத்திவிட்டது

இந்திய அரசினதும் கட்சிகளதும் தலைவர்களின் இத்தகைய பொறுப்பின்மை இளைஞர்களை மேலும் வன்முறையின் பக்கமே தள்ளும். ஏனெனில் தமிழ் மாநில தேசியவாதத்தின்மீதான கர்நாடக வன்முறையின் பின்விழைவுகள் இப்பொழுதுதான் புலப் பட ஆரம்பித்துள்ளது. கைதுகள், சித்திரவதைகள், சிறைப் படுத்தல்கள் மூலம் இப்பிரச்சினையை தீர்த்தல் சாத்தியமில்லை. தமிழக இந்திய அறிஞர்கள் அண்மைக்காலத்தில் வீரப்பனுடன் சம்பந்தப்பட்டுகிற தமிழ் இளைஞர்களின் தீவிரவாத வரலாற்றை நுட்பமாக ஆராயவில்லை என்றே தோன்றுகிறது.

ஈழப் போராட்டமல்ல, ஈழப் போராளிகளுமல்ல கர்நாடக தமிழருக்கு கர்நாடக அரசின் ஆதரவோடும், மத்திய அரசின் புறக்கணிப்போடும் இடம்பெற்ற வன்முறைகள்தான் தமிழ் நாட்டில் தோற்றம் பெற்ற மேற்படி தமிழ் தீவிரவாதத்தின் மூலமாகும். கர்நாடக வன்முறையில் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் வன்னியர்கள் பறையர்கள் மற்றும் வடதமிழ் நாட்டைச்சார்ந்த ஏனைய சாதினராவர். கலைஞர் இப்பிரச்சினையின் அடிப்படையை புரிந்து கொண்டதற்க்கும் ஜெயலலிதா அம்மையாரால் இப்பிரச்சினையை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதற்கும் மேற்படி பிரச்சினையின் சமூக புவியியலே அடிப்படை. தமிழ் நாட்டில் அரசியல் ரீதியாகவல்ல காவல்துறை வன்முறை சார்ந்தே நக்சலைட் இயக்கம் நசுக்கப்பட்டது. இன்றுவரை தேசிய, மாநில மட்டத்தில் நக்சலைட் இயக்கத்தின் கோரிக்கைகள் பல அரசியல் ரீதியாக அணுகப் படாவில்லை. நக்சலைட் இயக்கத்தின் வழி வந்த புதிய அமைப்புகள் இந்தியாவை சுயநிர்ணய உரிமையுள்ள பல் தேசிய இன நாடாக கருதுகின்றன . இத்தகைய பின்னணிகளிலும் இப்பிரச்சினை ஆராயப் படவேண்டும்.

கர்நாடக அரசுகளின் தமிழர் விரோத நடவடிக்கைகளே வீரப்பனையும் மற்றும் விரப்பனுடன் தொடர்பு கொண்டிருக்கும் தமிழ் தீவிர வாதிகளையும் இணைக்கும் புள்ளியாக இருந்தது. . இன்றுவரை தமிழக கர்நாடாக பொலிசாரும் வனத்துறையினரும் காட்டு எல்லைப் புற மக்கள்மீது புரிந்ததாக அறியப் படுகிற பால்வதை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணையோ நடவடிக்கையோ இடம்பெறவிலை. வீரப்பன் மற்றும் வீரப்பனுடன் தொடர்பு கொண்டுள்ள இளைஞர்களின் பிரச்சினையை சாம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்கள் தொடர்பாக ஜெயபிகாஸ் நாராயணன் கையாண்ட அரசியல் வழி முறைகளில் அணுகித் தீர்பது அவசியம். இத்தனை பிரச்சினைகளை வைத்துக் கொண்டு வீரப்பனை தியாகியாக கொன்றுபோடுவது நீண்டகால வன்முறை சார்ந்த பின்விழைவுகளை ஏற்படுத்தும்.

( -தொடரும் )

[i] திரு. சின்னக் குத்தூசி போன்ற தமிழக அரசியல் சமூக வரலாற்று ஞானிகளுக்கே இத்தகைய உதவிகள் கிடைக்க வில்லையே.

[ii]ஈழத் தமிழர்கள் தமிழர்களும் மலையாளிகளும் சிறிய அளவில் ஆந்திர வடுகர்களும் கன்னடத்து பண்டாரங்களும் சேர்ந்த இனமாகும். எனக்கு துயரம் தருகிற விடயம் ஈழத் தமிழரது மீட்சியை எதிர்க்கிற இந்திய மேலோர்களுள் பலர் பலர் மலையாளிகளாகவும் பிராமணர்களாகவும் இருப்பதுதான். ஈழத்தமிழர் மத்தியில் பிராமணர் ஆதிக்கமுமில்லை பிராமணர் எதிர்ப்புமில்லை.

[iii] இந்தியாவை அதன் இராணுவமல்ல மூடப் பட்ட பொருளாதார அடிப்படையில் பலப் பட்ட சமூக சக்திகள்தான் இதுவரை கட்டிக் காத்தன. இந்தியா மூடுப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி பின்வாங்கிச் செல்வது சாத்தியமில்லை. அதேசமயம் உலகமயமாதல், தாராளமயமாதல், தனியார் மயமாதல் தொடர்பாக வெளியாரின் முன்னுரிமைகள் கோரிக்கைகள் அடிப்படையில் செயல்படுவதும் ஆபத்தானது. விவசாயப் பொருட்களின் கட்டற்ற இறக்குமதியால் இந்தி வட்டிகையும் கேரளா போன்ற சில மாநிலங்களும் மிக மோசம்மான நெருக்கடிகஈஐ எதிர்நோக்கும். தேயிலை, ரப்பர், வாசனைத் திரவியங்கள், கடல் உணவு என்பவை இறக்குமதி யாகும் ஒரு சூழலில் திரைகடல் ஓடி திரவியம்தேடும் மார்க்கங்களும் சுருங்கும் ஒரு நிலமையை சமாளிக்க கேரளா தயாராக இல்லை. இருந்து தமிழக வன்முறை முகாமை தொடர்பாக அமைதியும் நட்பும் சுபீட்சமும் உள்ள கேரளாவும் ஈழமும் அவசியமான நிபந்தனைகளாகும். எதிர்காலத்தில் மேற்க்கு வங்கத்திலும் தமிழகத்திலும் அமைதியை பேணாமல் இந்திய ஒருமைப் பாட்டை பரமரிப்பது சாத்தியமில்லை. எதிர் கால இந்தியாவையும் இராணுவத்தால் கட்டிக் காப்பது சாத்தியமில்லை. மாநில சுயாட்சி, மொழிகலின் சமத்துவம் சமூக நீதி அடிப்படையில் அமைந்து அதன் அடிப்படையில் புதிய சமூக சக்திகள் வளர்ந்தால் மட்டுமே ஒருமைப் பாட்டு சாத்தியம்.

[iv] மேற்படி கோயம்புத்தூர் இந்து முஸ்லிம் மோதல்களில் இந்துக்களுக்கு பொலிசாரின் ஒரு பகுதியினர் துணைபோனதாக குற்றச் சாட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இடம் பெற்ற சாதிக் கலவரங்களிலும் பொலிசாரின் ஒரு பகுதியினர் உயர் சாதியினருக்கு சார்பாக நடந்ததாக குற்றச் சாட்டுகள் உண்டு. இதன் உச்சாக் கட்டம் தமிரபரணி கரையில் நிறைவேறியது. இது ஆபத்தான போக்காகும். இத்தகைய பொலிஸ் நெறி தவறல்கள் தொடர்பாகக் கடும் நடவடிக்கை எடுக்கப் படாதமை வன்முறை முக்காமை தொடர்பாக தமிழகம் எதிர் நோக்கும் மற்றொரு பாரிய பிரச்சினையாகும். இது தேர்தல் சமயத்தில் இத்தகைய குற்றச் சாட்டுக்கு ஆளான பொலிஸ் அதிகாரிகள் பணியில் இடுபடுதல் ஆபத்தானதாகும்.

Series Navigation