புதிய நந்தன்களும் பழைய பார்வைகளும் : கே ஏ குணசேகரனின் கருத்துகள் மீது ஒரு பார்வை

This entry is part of 13 in the series 20010408_Issue

கோபால் ராஜாராம்


தலித் கலை இலக்கியம் பற்றியும், இவை எப்படி மைய நீரோட்டத்தினால் கையகப் படுத்தப் பட்டு பல மிக முக்கியமான கருத்துகளை குணசேகரன் வெளியிட்டுள்ளார். துரதிர்ஷ்ட வசமாக அவருடைய கருத்துகள் புதிய திசைகளில் செல்லாமல், வழக்கமான வாதங்களை முன்வைக்கிறது.

அந்தப் பழைய நந்தன் கதை நமக்குத் தெரியும். ‘தில்லை என்றொரு தலத் ‘தினைத் தரிசிக்க சிதம்பரம் சென்ற அந்த நந்தன் எரிக்கப் பட்டது அன்றைய கதை. இன்றைய நந்தன் என்று இளைய ராஜாவைச் சொல்லலாம். இன்றைய நந்தன் தில்லையைத் தரிசிக்க மட்டுமல்ல, அதன் ஒரு முக்கியமான அங்கமாய் மாறிப் போகிறான். வரலாற்றில் ஏற்பட்டிருக்கிற மிகப் பெரிய மாறுதல் இது. தமிழ்ச் சமூகம் எந்த திசையில் வளர்ந்து வந்திருக்கிறது என்பதன் அடையாளம் இது. துரதிர்ஷ்டவசமாய் இந்த இரண்டுமே குணசேகரன் போன்றவர்களால் விமர்சனம் செய்யப் படுகிறது. அன்று தன் சாதிக்கென்று நியமித்த விதிகளை மீறியதற்குத் தண்டனை பெற்ற நந்தனின் கதை சாதியத்தின் கொடுமைக்கு உதாரணமாகவும், இன்றைய நந்தன் பெறும் அரவணைப்பு ‘மைய நீரோட்டம் தனக்கு வேண்டியவாறு இளைய ராஜாவைத் தகவமைத்துக் கொண்டது இங்கு உணரத் தக்கது ‘ என்பதாக கண்டனத்துக்குள்ளாகிறது.

மைய நீரோட்டம் என்பதே ஐரோப்பியக் கருத்தாக்கம். இந்தியச் சூழலை அலசுவதற்கு இது பயன் படாது. இந்தியாவிலும் சரி, தமிழ் நாட்டிலும் சரி , மைய நீரோட்டம் என்று ஒன்று இருந்ததே இல்லை. சாதீயத்தின் ‘பயன் ‘களில் இது ஒன்று. நந்தன் பெற்ற தண்டனை மைய நீரோட்டத்தில் ஐக்கியமாக அவன் விரும்பியதற்காக அல்ல. தன் சமூக இருப்புநிலையின் விதிகளை மீறியதற்காகும். இன்றைய நிலையில், நகர்மயமான சூழலில், இசை கோவில்களைத் தாண்டி சினிமா என்ற வெகுஜனக் கலை வடிவத்தில் நிலை கொண்டு விட்ட சூழலில் , அந்தப் பழைய விதிகள் செயல் படுவதில்லை. சமூக இருப்பு விதிகள் ஜன நாயகப் படுத்தப் பட்டு விட்டன. அதனால் தான் அடிமைத் தனத்தின், ஒரு சாதியச் செயல் பாட்டின் அடையாளமாய் இருந்த பறை முழக்கம்,- இதனாலேயே இளைய பெருமாள் இதனை விட்டொழிக்க வேண்டும் என்று சரியாக எடுத்த முடிவின் பின்னால் – இன்று தம் இருப்பின் உரத்த ஒலியாகச் செயல் படுகிறது. இந்தப் பரிணாம மாற்றம் , சாதாரணமானதல்ல.

இளையராஜா பெறும் அங்கீகரிப்பு பற்றிய குண சேகரனின் விமர்சனம் இன்னமும் சில பிரசினைகளைக் கொண்டது. ‘இளையராஜா தலித் என்னும் தன் அடையாளத்தை மாற்றவும் சிதைக்கவும் முற்படுகிறார். எனினும் இளையராஜா போல் தலித் அடையாளத்தை அனைவரும் மாற்றிக்கொள்ளவோ மறைத்துக் கொள்ளவோ மறுதலித்துக் கொள்ளவோ தயாராக இல்லை. ‘ என்று குண சேகரன் எழுதுகிறார். ஒரு தனிமனிதன் எதன் பிரதிநிதியாகச் செயல் படவேண்டும் ? அடையாளம் என்பது தான் என்ன ? சாதீயம் அடையாளத்தைச் செய்யும் தொழிலாகக் குறுக்கியது. அந்தத் தொழிலை விட்டொழித்தபின்பு எது தான் ‘அடையாளம் ‘ என்று கருதப் படும் ? இளையராஜாவின் முதல் பாடல்களே நாட்டுப் புற இசையின் மேன்மைகளிலிருந்து பிறந்தது. தன் ஆன்மீகச் சார்புகளையோ அல்லது, இறை நம்பிக்கையையோ இளையராஜா என்றுமே மறைத்துக் கொண்டதில்லை. இது மைய நீரோட்டத்தில் தான் கலந்து கொள்ள வேண்டும் என்ற பிரக்ஞை பூர்வமான முடிவு என்று சொல்ல முடியாது. அவருடய ஆளுமையே அது தான். அவர் ஜீயரிடம் செண்றால் அதில் என்ன தவறு ? தலித் ஜீயரிடம் செல்லலாகாது என்று எந்த சாஸ்திரம் சொல்கிறது ? அப்படிச் சொன்னால் அந்த சாஸ்திரங்கள் புறக்கணிக்கப் பட வேண்டும் என்பது தானே நம் நிலைபாடாய் இருக்க வேண்டும் ?

ஏன் தலித்திற்கு அப்படி ஒரு பிரக்ஞை எழலாகாதா ? அவனுடைய ஆன்மீகத் தேடல் அவனை மா ஆனந்த மயீயிடம், சாய் பாபாவிடம் , சங்கராசாரியாரிடம் , பங்காரு அடிகளிடம் கொண்டு செல்லலாகாதா ? தலித்துக்கு ஆன்மீகத் தேடல் இருப்பது அடையாளச் சிதைவா ? எனில் அம்பேத்கர் கோட்டு அணிந்தது எந்த அடையாளத்தினைத் துறக்க ? வெள்ளையர் அடையாளத்துடன் தம்மை இணைத்துக் கொள்ளவா ? அப்படி இருக்குமானால் அதில் தவறென்ன ? சாதீயம் அளித்த அடையாளம் என்ன துறக்கத்தகாத புனிதமான ஒன்றா ?

இளைய ராஜாவிற்குக் கிடைத்த அங்கீகாரமும், தொடர்ந்து தலித் கலை இலக்கிய வடிவங்களுக்குக் கிடைத்த அங்கீகாரங்களும் , இசை-கலை அதிகார நிறுவனங்கள் (Establishment) தம்மைச் சுய விமர்சனம் செய்து கொண்டதன் விளைவு தான் என்று நம்ப இடம் இருக்கிறது. எனவே இது பற்றிய விமர்சனம் உண்மையில் தமிழ் நாட்டின் அமைப்புகள் ஜனநாயகப் படுத்தப் படுவதன் எதிரொலியாகவும், அமைப்புகள் வேறு வேறு சரடுகளினை இனங்கண்டு வளருகிற ஒரு பாராட்டத்தக்க அம்சமாய்த்தான் காணப் பட வேண்டும்.

அடையாளங்கள் என்பது ஒரு இனக்குழுவின் அடையாளம் என்றிருத்தல் சாதியத்தில் நிகழ்கிறது. ஒரு தனி மனிதன் அந்த அடையாளத்தை முழுமையாகவோ, சில பகுதிகளையோ சுவீகரித்துக் கொள்கிற சுதந்திரத்தை ஜனநாயக நடைமுறை நமக்கு அனைவருக்குமே அளிக்கிறது. நாம் நம் அடையாளங்களிலிருந்து விடுபடக் கொள்கிற எண்ணங்கள் அந்த அடையாளங்களின் அடியாழத்தில் பதிந்திருக்கிற அநீதியை எதிர்க்கும் குரலாகும். உதாரணமாக, தோட்டி மக்கள் நாளை , நாம் இனி மலம் அள்ள மாட்டோம் என்று ஒரு சரியான முடிவை எடுத்தால், தம் சார்ந்த வேலையில் உள்ள உள்ளார்ந்த அநிதியைக் களைய அந்த வேலையை விட்டு வெகுதூரம் போவதே விமோசனம் என்று ஒரு சரியான முடிவை எடுத்தால், உங்கள் அடையாளங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவே மலம் அள்ளுவதை விட்டு விடாதீர்கள் என்று குண சேகரன் வாதிடுவாரா என்ன ? அடையாளங்கள் கலாசார அடையாளங்கள் மட்டுமல்லவே. அதிலும் இந்தியச் சாதீயச் சமூகத்தில் அடையாளம், அவரவர் செய்யும் வேலையுடன் இணைந்ததாயிற்றே ?

எப்படி இந்த அடையாளங்கள் காலப்போக்கில் தம் அசலான முந்தைய அடையாளங்களை இழந்து போய் புதிய அடையாளங்களைத் தரிக்கின்றன என்பதற்கு குண சேகரன் படைப்பிலேயே உதாரணம் கிடைக்கிறது. அவர் பரத நாட்டியத்தை மேட்டுக் குடி மக்களின் கலை என்று அடையாளப் படுத்துகிறார். குணசேகரன் போன்றவர்களே இது போன்ற கட்டுக் கதைகளை நம்பத் தொடங்கிவிட்டால் , மற்றவர்களைப் பற்றி என்ன சொல்ல முடியும் ?

பரத நாட்டியம் கீழ்த் தட்டு மக்களின் கலை வடிவமே. நியாயமாய் இது கோவில் நாட்டியக் கலைஞர்களின் கலையாய் , சதிராய் இருந்தது தான். மேட்டுக் குடி மக்கள் சதிரை இழிவாகக் கருதியதும் சமீபத்திய வரலாறு தான். ருக்மிணி அருண்டேல் இந்தக் கலையை , நகரங்களுக்குக் கொண்டு வந்து பரப்பின பிறகு – குண சேகரன் பாஷையில் சொல்வதானால் மேட்டுக் குடியினர் கையகப் படுத்திய பிறகு — இது இப்போது ‘கெளரவமான ‘வர்களின் கலையாய், குண சேகரன் கூட மேட்டுக் குடி மக்களின் கலை என்று நம்பும் படியான ஒரு பீடத்தில் ஏறி நிற்கிறது. இந்த நிகழ்வை எப்படி இனங்காணுவது ? குணசேகரன் பறை இசைக்கு நிகழ்வதாய்க் குறிப்பிடும் எல்லா விஷயங்களுமே சதிருக்கு நடந்து முடிந்து விட்டது. இன்னும் 50 வருடங்களுக்குப் பிறகு குணசேகரனின் மகன், பறை முழக்கம் போன்ற மேட்டுக் குடி மக்களின் கலையென்று பேசத் தொடங்கினால் ஆச்சரியப் பட எதுவுமில்லை. சிவராம் காரந்த் கர்நாடகத்தில் ‘யட்ச கானம் ‘ கலை வடிவத்தை, நகரமயமாக்கி, செவ்வியல் கலை வடிவம் ஏற்றி , அளவில், நேரத்தில் சுருக்கி அளித்தது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. ந முத்து சாமி , கூத்துக் கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாய் அவர்களை நகர்ப்புறத்தின் மேடைகளில், நியான் விளக்கு வெளிச்சத்தில் கொண்டு வந்த போதும், குண சேகரன் அளிக்கும் விமர்சனம் போன்றே அன்றும் விமர்சனம் எழுந்தது. இந்த விமர்சனங்களை எப்படி இனங்காண்பது ?

இந்த விமர்சனங்களின் ஒரு அடிச் சரடு நகர்மயமாதலை, வணிகக் கலாசாரத்தின் ஒரு பகுதியாக மட்டுமே பார்க்கிறதே ஒழிய இதன் பாரிய கலாசார அர்த்தங்களைக் காணத் தவறி விடுகின்றன. நகர்மயமாதல் ஒரு விதத்தில் ‘ஒன்றே போலான வெளிப்பாடை ‘ (Homogenisation) நாடுகிறது எனில், இன்னொரு புறம், மாற்றுக் கலாசாரங்களும் வெளிப்பாடுகளும் அவற்றிற்குரிய இடத்தை எடுத்துக் கொள்வதைத் தடை செய்வதில்லை. இந்த விதத்தில் சாதியத்திற்கு நேர் எதிரானது நகர்மயமாதலின் கலாசார உருவாக்கம். இது வரவேற்கப்பட மாற்றம் – சாதீயத்தின் வேர்கள் இந்த விதமாயல்லாமல், வேறு எப்படியும் நீங்குவதற்கு வாய்ப்பே இல்லை.

இந்த விமர்சனக்களின் இன்னொரு அடிச்சரடு, பிராமணியம் – அதனால் பிராமணர்கள் — தலித்துகளிற்கு எதிரிகள் , வர்ணாசிரம தர்மத்தின் பாதுகாவலர்கள் எனவே ஜீயர் போன்ற பிராமணிய ஆசாரியர்களிடம் இளைய ராஜா போன்ற தலித்கள் செல்வது ஒரு விதத்தில் சரணாகதி என்ற உள்ளுணர்வு. இது பெரியாரின் கருத்துகளிலிருந்து பெறப் பட்டது. அது சமூகக் குழுக்களை பிராமணர்கள் , பிராமணரல்லாதார் என்று பிரித்தது. பிராமணருக்கும் பிராமணரல்லாதாருக்கும் இருந்த முரண்பாட்டினை முன்னிறுத்திப் போரிடச் செய்தது. அன்றைய காலகட்டத்தில் இது மிகச் சரியான போராட்ட உத்தி என்பதினை மறுப்பதற்கில்லை. ஆனால் தலித்களின் அரசியல் கலாசாரப் பார்வை தலித்கள் – தலித் அல்லாதார் என்பதாகத் தான் இருக்க முடியும், இருக்க வேண்டும் என்ற உண்மை கடந்த 20 ஆண்டுகளாய் உணரப் பட்டு வருகிறது. இன்று தலித்களின் முரண்பாடு வன்னியர், தேவர் போன்ற மேல் சாதியினருடன் தானே தவிர பிராமணியத்துடன் இல்லை என்பது தான் உண்மை. ஆனால் பிராமணியத்துடன் தலித்களைச் சண்டையிட வைக்கிற மேல்சாதித் திராவிடக் கருத்தாக்கத்தில், மேல் சாதியினரின் சுய நலமே உள்ளது. இன்றும் இரட்டை கிளாஸ்களும், ஆலயப் பிரவேச மறுப்பும் நிகழ்கிற ஊர்களில் அதிகாரம் பிராமணர்களிடம் இல்லை. எனில் தலித்கள் ஏன் பிராமணியத்துடன் நிழல் யுத்தம் செய்ய வேண்டும் ?

பறையை யார் வேண்டுமானாலும் முழங்கட்டும். பள்ளுப் பாடல்கள் யாரும் பாடட்டும். பிராமணர்கள் கூத்துப் பயிலட்ட்டும். புலையர்கள் வேதம் முழங்கட்டும். எல்லாக் கலைகளூம் எல்லாருக்கும் ஆகட்டும். கருப்பாயிகள் சுப்ரபாதம் பாடட்டும். குழு அடையாளங்களின் இன இழிவுச் சகதி போக வேண்டுமானால், துறக்க வேண்டிய அடையாளங்களைத் துறக்கத் தான் வேண்டும். புதிய அடையாளங்களைப் பூணுவதன் மூலமே , சாதீயம் கற்பித்த அடையாளத்தின் அபத்தத்தை நாம் முறியடிக்க முடியும்.

இது தலித் விடுதலைக்கு எதிரான நிலையல்ல. இதுவே தலித் விடுதலைக்கு உண்மையான முதல் படி.

Series Navigation