பேரம்

This entry is part [part not set] of 28 in the series 20081218_Issue

அருள்ராஜ் நவமணி



நகரப் பேருந்துகளிலும், மின் ரயில்களிலும் தூங்குகிறவர்கள் வாழ்க்கையில் நிறைய சுவாரசஸ்யங்களைத் தொலைத்தவர்கள் என்பது என் அபிப்பிராயம். மின்வண்டி நிலயங்களில் பேப்பர் கடைகளில் தலைப்புச்செய்திகளை வாசித்துக்கொண்டோ, வெற்றிலை குதப்பிக்கொண்டோ விட்டேத்தியாக அலைபவர்களும் அவ்வாறே.

கிண்டி ரயில் மின்வண்டி நிலையம் உச்ச கட்ட பரபரப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் காலை நேரம்.

“அக்கா ரோசாப்பூக்கா, ரோசாப்பூ. ரூவாய்க்கு ரெண்டு. வாங்குங்க அக்கா. உங்க ட்ரெஸ்ஸுக்குப் பொருத்தமா இருக்கும்.”

பூக்காரி உரத்த குரலில் கத்திக்கொண்டிருந்தாள். ஃபேஷன் டிப்ஸோடு சேர்த்து! பலர் அவளை லட்சியம் செய்யாது ஒடிக்கொண்டிருந்தனர். சில பெண்கள் ரோஜாப்ப்பூக்களை நொட்டம் விட்டு, சிறிது தயங்கி, பின் நேரமின்மை காரணமகவோ வேறென்ன காரணத்தினாலோ நடையைத் துரிடதப்படுத்தினர். சிலர் அவளை ஒரு இடையூறாக எண்ணி முகம் சுளித்தபடி சென்றனர்.

அவளுக்கு பன்னிரண்டு, பதிமூணு வயசுதான் இருக்கும். தினமும் இதே வெளிறிய பாவாடை சட்டையும், எண்ணெய் காணாத தலையுமாய்த்தான் வருவாள். இவ்வளவு தொண்டை கிழியக்கத்தி ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பாள் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. வீட்டில் குடிகார அப்பாவோ, வியாதிக்கார அம்மாவோ இருக்கக் கூடும். அவளை அலட்சியம் செய்து போகிற பெண்கள்மீது கொஞ்சம் எரிச்சல் கூட வரும்.

நாமே வாங்கினால் என்ன என்று அவ்வப்போது தோன்றும்; ஆனால் ஒரு ஆண், அதுவும் காலை நேரம் பூ வாங்குவது கொஞ்சம் அசாதாரணமாகப் படும் எனக்கு. கொஞ்சம் பூக்கள் வாங்கிக் கொண்டுபோய் அலுவலகத்தில் கூட வேலை பார்க்கும் பெண்களுக்கு கொடுக்கலாம். ஆனால் அதற்குக் கூட கொஞ்சம் தயக்கம். இந்த இயலாமையினாலேயே எனக்கு அவளை பெண்கள் தாண்டிச்செல்லும்பொது ஒரு எரிச்சல் கலந்த கோபம் வரும். அதிலும் சிலர், அந்த பூக்களின்மேல் வைத்த கண்ணை எடுக்காமல் நடந்து வந்து, அந்தப் பெண்ணின் முகத்திலே ஒரு எதிர் பார்ப்பை ஏற்படுத்தி விட்டு தாண்டிச் செல்லும்போது கோபமே வரும்.

“ரெண்டு ரோஜா வாங்கிக்கிட்டத்தான் என்ன?” என்று அவர்களிடம் கேட்கத்தோன்றும்.

அப்படியே வாங்க வருகிறவர்களும் பேரம் என்ற பெயரில் பண்ணுகிற ரகளை இரத்தத்தைக் கொதிக்கப் பண்ணும்.

ஒரு நாள் காலை ஒரு 30 வயது மதிக்கத்தக்க பெண் தன் 3,4 வயது மகனுடன் வந்தவள் அவளை நெருங்கினாள். பையன் பளிச்சென்று அரைக்கால் சட்டையும், ஷர்ட்டும் அணிந்திருந்தான். கழுத்தில் டையும் காலில் சாக்ஸும் ஷூஸுமாக ஸ்கூலுக்கு செல்லுவதை பறைசாற்றிக்கொண்டிருந்தான். அவன் காலை அழுத்தி உதைத்து நடந்து வந்த விதம், அவன் எதனாலோ பொறுமை இழந்து இருப்பதைக் காட்டியது. அந்தப் பெண்மணியும் அவசரத்தில்தான் இருந்தாள். இருந்தாலும் அந்த ரோஜப்பூக்கள் அவளைச் சுண்டி இழுத்திருக்கவேண்டும்.

“வாங்கக்கா… வாங்க. ரூவாய்க்கு ரெண்டு அக்கா. எத்தனை வேணும்? ஒரு டசன் தரவா?”

“ஒரு ருபாய்க்கு ரெண்டா? என்ன இப்படி அநியாயமா வெல சொல்றே?”

“ஐயோ இதென்னக்கா வெல? இந்த பூவப்பாருங்க! எவ்ளோ அளகு!”

“வாடிப் போனப்ல இல்ல இருக்கு. நேத்து சயங்காலம் விக்காம கிடந்ததுதானே?”

“என்னக்கா இப்டி சொல்றீங்க. இதெல்லாம் இன்னிக்கு காலேல வாங்கியந்ததுக்கா. ஈரம் கூட அப்பிடியே இருக்கு பாருங்க.”

“இந்தக் கதையெல்லாம் வேணாம். எட்டணாவெல்லாம் ரொம்ப அதிகம் ஒரு ரோஜாவுக்கு. ரூவாய்க்கு மூணு தருவேன்னா சொல்லு. வாங்கிக்கிறேன்”

“யக்கா, கட்டாதுக்கா. இவ்ளோ பூவையும் வித்தாத்தான் எதோ கொஞ்சம் மிச்சம் வரும். அதயும் விட்டுட்டா நாங்க எப்ப்டி சாப்டுறது?”

“அப்ப சரி. எனக்கு வேணாம்.” – நகரத் தொடங்குகுகிறாள்.

“இருக்கா, இருக்கா. ஆசையா வாங்க வந்திட்டு இப்படி போறீங்க. வங்கிட்டுப் பொங்கக்கா” – கெஞ்சலாக வருகின்றன வார்த்தைகள்.

“முக்கா ரூபாய்க்கு ரெண்டுன்னா குடு. இல்லேன்னா ஆளை விடு. என்ன சொல்றே?”

பூக்காரப் பெண் சற்றே யொசித்தாள். ரயில் வரும் நேரம். வந்து விட்டால் வாடிக்கையாளர் போய் விடலாம். வேறு வழியில்லை.

“சரிக்கா. காசக் குடுங்க.”

இரண்டு ரூபாய் நோட்டை நீட்டினாள்.

“சில்லரை இல்லியக்கா?”

“இருந்தா ஏன் நோட்டைக் குடுக்கிறேன்?”

பூக்காரி சில்லரையை எண்ண்த் தொடங்கினாள். அந்தப்பெண் பூக்களை நோக்கிக் கைகளைக்கொண்டு போனாள்.

“இருங்கக்கா. நான் எடுத்துத் தாரேன்.” ஒரு ரூபாய் நாணயமும், சில சில்லரை நாணயங்களையும் அவள் கையில் கொடுத்துக்கொண்டே பூக்காரி பதறினாள்.

அந்தப் பெண் கவனிப்பதாயில்லை.

“யக்கா, எல்ல பூவும் ஒரே மாதிரிதான்க்கா. கைய உள்ளே விட்டா பூவெல்லம் கசங்கிடும்கா. மேலாப்ல இருக்கற பூவை எடுத்துக்கோங்க.”

ஒரு வழியாக வியாபரம் முடிந்து, அம்மாவும் பையனும் நடக்க ஆரம்பித்தனர்.

பேரம் படிந்துவிட்ட பூரிப்பில், ஒரு பூவைத் தலையில் செருகிக் கொண்டாள். இன்னொன்றை கைப்பையில் யாருக்கோ பத்திரப்படுத்திக் கொண்டாள். அல்லது அடுத்த நாளுக்காகவும் இருக்கலாம்.

மீதிக்காசைப் பர்சினுள் போடப்போனாள். பட்டென்று அவள் கையிலிருந்த காசுகளைப் பையன் பறித்தான். பறித்த வேகத்திலே சில காசுகள் உருண்டு ஓடின. பையன் கையில் ஒரு ரூபாய் நாணயம்.

“என்னடா பண்ணறே? பாரு காசெல்லாம் கொட்டிப்போச்சி”.

அவன் கையுலுள்ள ஒரு ரூபயைக்காட்டி, “வெயிட் பாக்கப் போறேன்” என்றான் பக்கத்திலுள்ள எடை மெஷினைக்க் காட்டி.

“சீக்கிரம்டா. ரயில் வர்ர நேரமாச்சி.” என்று சொல்லியவாறே அவள் நின்றாள். பையன் மெஷினிடம் போனான். ஏற்கெனவே அதில் ஒருவன் ஏறி சும்மா நின்று கொண்டிருந்தான். இவனைக்க் கண்டும் காணாதவன்போல் சில பல கணங்கள் நின்று, பின் இறங்கிப் போனான்.

“ரயில் வந்திருச்சிடா. ஓடி வா” என்று கத்தினாள் தாய்க்காரி. ரயில் நிலையத்துக்குள் நுழைந்து விட்டது.

பையன் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டுவிட்டு, வரப்போகும் சீட்டுக்காக காத்திருந்தான். ஏதோ கடமுடவென்று சத்தம் கேட்டதே தவிர, சீட்டு வந்த பாடில்லை.

பொறுமை இழந்த தாய், மகனை இழுத்துக் கொண்டு ரயிலை நோக்கி ஓடினாள். பணம் போனால் போகட்டும். ரயிலை விட்டால் இன்னும் அரை மணி நேரம் வீண் அல்லவா?

ஒரு ரூபாயை விழுங்கிய மகிழ்ச்சியில் எடை எந்திரம் துப்பிய எடை மற்றும் அதிர்ஷ்ட வாசகம் கொண்ட துண்டுச் சீட்டு எடுப்பாரின்றி அநாதையாகக் கிடந்தது.

இதையெல்லாம் கவனிக்க நேரமின்றி, ரயிலிலிருந்து இற்ங்கியவர்களை நோக்கித் தன் கவனத்தைத் திருப்பினாள் பூக்காரி.

“அக்கா ரோசாப்பூக்கா, ரோசாப்பூ. ரூவாய்க்கு ரெண்டு. ….”


arulraj52@yahoo.com

Series Navigation

அருள்ராஜ் நவமணி

அருள்ராஜ் நவமணி