ஒர் எழுத்தாளனின் கடைசி கலந்துரையாடல்

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

கே.பாலமுருகன்



அன்று மதியம் வானொலியில் மென்மையான குரலில் ஓர் ஆண் அறிவிப்பாளர் அவரைப் பற்றி சிறு அறிமுகம் செய்துக் கொண்டிருந்தார். முதலில் சரியாக விளங்கவில்லை. பிள்ளைகளின் பேரிரைச்சல் அந்த அறிவிப்பாளரின் குரல் தொனியையும் கடந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

“மூர்த்தி மாணிக்கம்”
என்ற பெயரைக் கேட்டதும் சற்று நெருங்கி வானோலியில் காதுகளைப் புதைத்தேன்.
“இன்று மாலை 5மணிக்கு மூர்த்தி மாணிக்கம் அவர்கள் நம் வானோலிக்காக மருத்துவமனையிலிருந்து கொண்டே பேட்டி அளிக்கவிருக்கிறார். . நேயர்களே அவர் புற்று நோயால் அவதியுற்று தற்பொழுது மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறார்.. 19ஆம் நூற்றாண்டின் ஒரு சிறந்த எழுத்தாளரும் சமூக விமர்சகரும்கூட. . அவர் தனது கடைசி கலந்துரையாடல் என்று நம்முடன் இணையவிருக்கிறார். . தயவு செய்து மறவாமல் அனைத்து இலக்கியப் பிரியர்களும் மாலை 5மணிக்கு மூர்த்தி மாணிக்கத்துடன் இணைந்து கொள்ளுங்கள்”
மனம் பகிரென்று இருந்தது. மூர்த்தி மாணிக்கம் பல வருங்களுக்கு முன்பே காணாமல் போனவர். அதாவது எழுத்துலகிலிருந்து தொலைந்து போனவர். அனேகமாக பலர் அவரை மறந்திருப்பார்கள். அன்மையில் அவர் கதை ஒன்றைத் தற்செயலாகப் பார்த்து படித்ததனால் அவருடைய பெயர் என் ஞாபகத்திலிருந்தது. அவருடைய பல சமூக விமர்சனக் கட்டுரைகள் நல்ல வரவேற்பும் எதிர்வினைகளும் பெற்றவை என்று முன்பு கேள்விப்பட்டதுண்டு.
“மூர்த்தி மாணிக்கம் சமூகத்தை அவர் பாணியில் அணுகப் பார்க்கிறார்”
“மூர்த்தி மாணிக்கம் எல்லாத்தையும் ஆழமா கவனிக்கக்கூடியவர்”
முன்பு எப்பொழுதோ நண்பர்கள் அவரைப் பற்றி பேசியிருக்கிறார்கள். ஏதோ ஒன்று இரண்டு கட்டுரைகளை நான் படித்திருக்கிறேன். சரி, இன்று 5மணிக்கு அவருடைய அந்தக் கடைசி வாக்குமூலங்களைக் கேட்டே ஆக வேண்டும் என்று மனதில் பிடிமானம் உருவாகியது.
எல்லாம் வேலைகளையும் முடித்துவிட்டு 4.30மணி போல வானொலியின் முன் அமர்ந்தேன். சாய்வு நாற்காலி என்பதால் அசைந்தவாறே ஆவலுடன் கண் மூடினேன் மனதில் எதையோ அசைப்போட்டவாறு.
திடீர் விழிப்பு. மணி 5.15 ஆகியிருந்தது. வானொலியில் ஒலி தேய்ந்த குரலில் அவர் பேசிக் கொண்டிருந்தார். அறிவிப்பாளர் என்ன கேள்விக் கேட்டிருப்பார். முகத்தைத் துண்டால் துடைத்துக் கொண்டு வனொலியின் பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டேன்.
“எல்லாத்துக்கோம் அவங்க அவங்க வேலதானே முக்கியம்? அப்படித்தானே வாழ்ந்து பழகிட்டோம்? எவன் எப்படிப் போனா என்னா. . எனக்குக் கஞ்சி தண்ணி கெடைச்சா போதும். . சோறு கண்ட எடம் சொற்கம்னு கெடப்போம். . உலகத்துலெ எவன் வீட்டுலெ மண்ணூ விழுந்தா என்னா? என் வீட்டுக்கூரைலெ மழத்தண்ணீ ஒழுகாமெ இருக்கறெ வரைக்கும் நான் குளிர் காய்வேன். . என் வீட்டுலெ ஓட்டெ உழுந்துருச்சினா வியாக்கியானம் பண்ணிக்கிட்டு ஊர் நியாயம் பேசக் கெளம்பிருவோம், ஆனா அவுங்கலாம் பொதுநலவாதிகள், தலைலெ மகுடம்”
“யேன் சார் இப்படிக் கொதிச்சி பேசறீங்க?”
“ஆத்திரம் தம்பி! இந்தச் சமூதாயத்து மேல அவ்ள ஆத்திரம். . கடசி காலத்துலயாவது இதெகூட நான் சொல்லலனா நான் வாழ்ந்து எந்தப் பயனும் இல்லாமெ போயிறும்”
“ஒங்க ஆத்திரத்திற்கு இந்த மாதிரி சுயநலவாதிகள்தான் காரணும்னு நெனைக்கிறீங்களா?”
“சுயநலவாதிகளுக்கு முதுகு அரிச்சாலும் தன் வீட்டு சுவர்லெதான் சொறிஞ்சிக்குவான் தம்பி! இலக்கியம் வளர்க்கறேனு சொல்லிப் போட்டு, அங்கெ மேடையிலெ ஏறி சந்தன மாலை போட்டு போன்னாடை போத்தி கூவுவான். . அன்பார்ந்த இலக்கிய நெஞ்சகளே வாருங்கள் புதிய இலக்கியத்தைப் படைப்போம்னு. . எல்லோரும் வாயிலெ எச்சில் ஒழுக கைத்தட்டி நிப்போம். . இலக்கியம் அப்படியே மல்லாக்கா படுத்து வளரும். . அவன் அவன் வீட்டு பாத்ரூம்புலெ. . என்னா தம்பி இது? ஒவ்வொரு நிகழ்ச்சிக்குப் பின்னாலயும் ஓர் அரசியல் இருக்கு. . பிறகு எங்கெ இலக்கிய நிகழ்ச்சிகளெ உண்மையான இலக்கியமா கொண்டாட முடியும்? ஒன்னு சொல்றேன் இத்தன வருசத்துலே இங்கெ உண்மையான ஒரு இலக்கிய நிகழ்ச்சி நடந்ததா எனக்குத் தெரியலே. . அவன் வெளியீடறெ புத்தக்கத்துக்கு இவன் கவிதை பாடுவான். . அது நல்ல புத்தகமா எப்படினு தெரிஞ்சிக்காமலேயே ஒரு கொடை வள்ளல் கால்கள் ரெண்டையும் இறுக்கமா வச்சிக்கிட்டு இழிச்சிக்கிட்டு வந்து நன்கொடையெ வாரி எறைச்சி. . அப்பாடா சாமி இலக்கியம் தோ வளர்ந்துச்சி..”
“நல்ல இலக்கிய நிகழ்ச்சியே நடக்கலேனு எப்படி சார் அவ்ள உறுதியா சொல்றிங்கெ?”
(மூர்த்தி மாணிக்கம் தொடர்ந்து நான்குமுறை இரும்பினார்)
“சமூக மாற்றமே இல்லையே? இன்னிக்கு நாளிதழ்லெ வர்றே கதை ஒன்னுலுமே இலக்கியத் தரம் வளர்ந்ததுக்கான அடையாளமே இல்லியே? பாத்திங்களா? கதையோட கடசிலெ அவன் பாட்டுக்கு வாயிலெ வந்ததே வாந்தியெடுத்து வைக்கறானுங்க பிரச்சாரம் என்ற பெயர்லே. இவன் யாரு கதையிலெ ஒரு தீர்மானம் எடுக்கெ? இப்படித்தான் கதை எழுதனுமா? அப்பனா வாசகனுக்கு என்னா வேல? இவன் உடற கதைக்குத் தலையாட்டிக் கிட்டு, சபாஸ் இலக்கியம் வளர்ந்துருச்சுனு வயிற தடவிக்கிட்டு உக்காந்துருக்கனுமா? அப்பெ எங்க தம்பி இலக்கியம் வேற தளத்துக்கு மாற முடியும்? இதுக்குலாம் என்னா அர்த்தம்? சரியான அணுகுமுறைகள் யாருக்கும் கெடைக்கலெ. .”
(தொடர்ந்து நிற்காமல் இரும்பிக் கொண்டிருந்தார்)
இடைவெளிவிட்டு அறிவிப்பாளர் பேசினார்.
“நீங்க சொல்றது தனிப்பட்ட கருத்து மாதிரி தெரியுதுங்க ஐயா. . ஆனா பிறரைக் கேட்டால் அவங்க இலக்கியம் உயிரோடத்தான் இருக்கு இந்த மண்ணுலேனு சொல்வாங்க, எல்லாம் அவங்க அவங்க பார்வை கண்ணோட்டம்தானே?”
“எதுயா இலக்கியம்? இலக்கியம்னா என்னானே தெரியாமே இலக்கியத்தெ ஒரு புரிதலுக்குள் கொண்டு வந்து கட்டிப் போட்டு வச்சி நகர விடாமெ வச்சிருந்தா? அடுத்த தலைமுறை பாவங்க தம்பி! அவங்களுக்குக் கிடைக்க போறது என்னா? 30 வருசத்துக்கு முன்னலேந்து மாறாமல் இருக்கும் இலக்கியமா? அவங்க அதைதான் எதிர் கொள்ளனுமா? பிரச்சாரம் இல்லெ தம்பி! அறிவுரை கூறுவதும் இல்லை இலக்கியம்னா. . யாருக்குப் புரியுது? நீதி கதைகளே போதும் போல இந்த மாதிரி ஆளுங்களுக்கு. . பிறகு நவீன இலக்கியம்? தலைத்தெறிக்க ஓடிருவானுங்க”
“எது சரியான இலக்கியம்னு நீங்க நினைக்கிறீங்க?”
“எது சரி எது தப்புனு சொல்ல நான் வரலே. . இன்னோனு எல்லோரும் புரிஞ்சிக்கனும்,. நேத்து நான் இலக்கியத்தெ புரிஞ்சி வச்சிருந்த அளவுகோல் இன்று மாறுப்பட்டு நிக்கும்.. வளந்து வந்து பரவும். . என் மனசுக்குள்ளெ ஆத்மாக்குள்ளெ என் உடல் முழுக்க நானும் அதுவுமாக அது நானுமாக என்று இலக்கியம் பிண்ணி பிணைந்திருக்கும்.. என் வாழ்வு என் வாழ்வைச் சார்ந்த மற்றுமொருவனின் வாழ்வு அவனைச் சார்ந்திருக்கும் பிறர் உயிர்களின் வாழ்வு என்று எல்லோருடைய வாழவும்தான் இலக்கியம். .அது வேற இல்லெ தம்பி!”
(அவருக்கு மூச்சிரைத்தது)
“என்னாலெ இவ்ளதான் சொல்ல முடியும் தம்பி. . உபதேசம் புராணம் எல்லாம் உபயோகப்படாது தம்பி! நல்லா நிமிந்து நிண்டு உங்க பக்கத்துலே பாருங்க. . உங்க வீட்டுக்கு முன்னெ ஓர் அழகான சிறுமி வெளையாடிக்கிட்டு இருப்பா, அவெ சாப்ட்டு ரெண்டு நாள் ஆயிருக்கலாம், நீங்க வழக்கமா சாப்ட போகும் சாப்பாட்டுக் கடையெ சுத்திப் பாருங்க, கையேந்தி சாப்பாட்டுக்கு நிக்றவுங்க இருப்பாங்கெ, நீங்க பேருந்துலெ பயணம் செஞ்சி பாருங்க, கடற்கரையோரம் நடந்து பாருங்க, இரவு சந்தைலெ நுழைஞ்சி பாருங்க. . இலக்கியம் தானா வளரும். . அதுக்குனு தனியா மேடை ஏறி, மை செட் பண்ணி கத்தனும்னு தேவையே இல்லெ, நன்றி”
அவருடைய பேட்டி அத்துடன் முடிவு பெற்றது. கடைசியாக ஏதோ சொல்ல வருகிறார் என்று நினைத்த போது, கடுமையாக இரும்பி வைத்தார். மூன்றாவதுமுறை இரும்பும் போது நிகழ்ச்சியின் அலைவரிசை மாறியது. அவ்வளவுதான்.
எழுந்து நின்று வேளியே நடந்தேன். காற்று மென்மையாக வீசிக் கொண்டிருந்தது. இந்த மண்ணில் இலக்கியம் எப்படி இருக்கிறது? வெட்கமாக இருந்ததால் யாரையும் பார்க்க பிடிக்கவில்லை. வீட்டிலிருந்து வெளியேறி நடந்தேன்.
முடிவு
கே.பாலமுருகன்
மலேசியா


bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்