விடியும்! (நாவல் – 3)

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


டொறொன்டோவின் விட்டுவீதியான தெருக்களில், இன்னம் வேகமா ஓட்டுங்க டடா என்ற பிள்ளைகளின் தொண தொணப்புக்கு இணங்காமல் வண்டில்மாட்டு வேகத்தில் வழுக்கி சான்ட்ஹோஸ்ட் சதுக்கத்திற்கு வர டானியலுக்கு அரைமணி நேரத்திற்கும் கொஞ்சம் கூடுதலாகவே பிடித்தது. சாதாரணமாக இருபது நிமிடங்களில் வரக் கூடிய தூரம்.

பின்னால் வந்த வண்டிகள் எல்லாமே முந்திக் கொண்டு போவதைக் காண பிள்ளைகளுக்குச் சகிக்கவில்லை. அந்தா அந்தச் சின்ன டொயாட்டா முந்தீற்றுது. இற்ஸ் எ Nம் என்று அப்டிபாவிடம் செல்லாத ஆற்றாமையை அம்மாவிடம் காட்டிச் சினுங்கினாள் அனிதா. சியாமளாவிற்கு டானியலின் ஆமைவேகம் ஒரு பிரச்னையாக இருந்ததில்லை. பிள்ளைகளின் ஆசைக்காக இன்னும் கொஞ்சம் மிதித்தால் நல்லது என நினைப்பாள். சொல்லவும் செய்வாள். இன்று அவளுக்கே எரிச்சலாயிருந்தது.

எந்த எரிச்சலுக்கும் அசைந்து கொடுக்க மாட்டான் அவன். தனியாகப் போகும் போதே எண்பதற்கு மேல் வேகமுள் போகாது. மூன்று லேனாகப் பிரிந்த அகலத் தெருக்களுக்கு இந்த வேகம் பத்தாதுதான். பிள்ளைகளின் விண்ணப்பமோ சியாமளாவின் சிபார்சோ அவனைக் கொஞ்சமுந் தீண்டவில்லை. கவனம் முழுக்க பிடிக்கப் போகும் முயலைச் சுற்றியே வந்தது.

விடாப்பிடியாக நின்றதால் தன் உடும்புப்பிடி தளர்ந்து ஓம் பட்டிருக்கிறான் செல்வம். ஏதோ ஒரு குருட்டு வேகத்தில் காயை நகர்த்திக் கொண்டு வந்தாயிற்று. அதைக் காரியமாக்கி கல்யாணத்தில் கொண்டு முடிப்பதற்கு இன்னும் எவ்வளவோ தரைவேலை செய்ய வேண்டும்.

எப்போதோ ஒருநாள் நல்ல மாப்பிள்ளையிருந்தால் மகளுக்குப் பார்க்கும்படி தேவசகாயம் பேச்சோடு பேச்சாக சொல்லியிருந்தார். அதன் பிறகு ஏனோ அவரும் கேட்கவில்லை, இவனுக்கும் அவகாசம் கிடைக்கவில்லை. இன்று பின்னேரம் ஆறுமணிக்கு எங்கேயும் போக மாட்டார்களே என்று டெலிபோனில் கேட்டு நேரம் நியமித்துக் கொண்டு குடும்பத்தோடு போய்க் கொண்டிருக்கிறான்.

விசயத்தை அவரிடம் டெலிபோனில் சொல்லவில்லை. அவரும் பாய்ந்து விழுந்து கேட்கவில்லை. அவர் அப்படிக் கேட்காததால் மனதில் ஒரு சிறு தொய்வு உண்டாயிற்று. இருபத்தொன்பது வயதுப் பெண்ணை மடியில் கட்டிக் கொண்டு இருப்பவர் விசயம் என்னவென்று விழுந்தடித்துக் கேட்க வேண்டாமோ ? கேட்டிருந்தால் விசயம் இன்னதென சிறிதாக கோடு காட்டியிருப்பான். அதைக் கேட்டுவிடிட்டு டெலிபோனுக்கு அவர் பல்லிளிப்பதை மனக்கண்ணில் பார்த்திருப்பான்.

பிடிமானமில்லாத பிரயாணம் இது என்பதால் ஒரு நிச்சயமின்மை தற்காலிகமாய் கிளர்ந்து வளர்ந்து கொண்டிருந்தது. ஒருவேளை சறுக்கிவிட்டால்! தன்பாட்டில் இருந்தவனை உசுப்பி விட்டதுதான் மிச்சமா ?

என்ன டடா யோசிக்கிறீங்கள் என்று கேட்டாள் சியாமளா. மூத்தவளைப் பெறும் வரை, அவனை அத்தான் என்று அழைத்து வந்தவள் – அனிதா டடா என்று கூப்பிடத்தொடங்கிய காலந் தொட்டு – தானும் டடாக்கு மாறிக் கொண்டாள். அப்படி அழைப்பது அவளுக்கு நிறைவைக் கொடுத்தது. தாய்தகப்பன் பக்கத்திலில்லாத இடத்தில் அவனே எல்லாமாகத் தோன்றும் நெருக்கத்தைக் கொடுத்தது.

வழிமாறி வந்தீற்றீங்களோ ? என்று சியாமளா சந்தேகத்துடன் பார்த்தாள். நாலைந்து தடவைகள் வந்திருந்தாலும் வழி சரியாகப் பிடிபடவில்லை அவளுக்கு.

பாடிக் கொண்டிருந்த ஜிம்றீவ்ஸ் கசட்டை நிறுத்தினான் டானியல். தமிழில் திருச்சி லோகநாதன் சிதம்பரம் ஜெயராமன் பழைய பாட்டுகள் மாதிரி ஆங்கிலத்தில் பிங்கிறாஸ்பி, ஜிம்றீவ்ஸ் பாட்டுக்கள் அவனுக்குப் பிடிக்கும். புதிய பாடல்களில் வாத்தியங்களின் சத்தம் கர்ண கடூரமாக காதைப் பிளப்பது போலிருக்கும். அதற்காக மொத்தமாகத் தள்ளி வைப்பதுமில்லை. நல்லதாகப் பொறுக்கியெடுத்துக் கேட்பான்.

டெலிபோன் செய்துவிட்டு வந்தது நல்லதாகப் போயிற்று. தேவசகாயம் வாசலில் காத்துக் கொண்டு நின்றார். ஊரிலென்றால் கிடுகுவேலியோரமாய் சாறக் கட்டோடு மேலில் ஒரு சால்வைத் துண்டுமில்லாமல் காற்று விழ சுதந்திரமாய் நின்றிருப்பார். இது கனடா. அக்கம்பக்கமெல்லாம் வெளடிளை வெளடிளையாய் மனிதர்கள். பளிச்சென்று வித்தியாசம் தெரியும்.

சிக்கனச் சிரிப்பில் வரவேற்றார் தேவசகாயம். அவர் எப்போதும் இப்படித்தான். பாய்ந்து வழிந்து கதைப்பதில்லை. எல்லாரோடும் மனம் ஒன்றிப் பழகமாட்டார். விரல் விட்டு எண்ணிவிடலாம் அவர் பழகுகிற ஆட்களை. பக்டறியில் டானியலோடு மட்டுந்தான் உள்வீட்டுக் கதை சொல்லும் சகவாசம். மனிதரால் யாருக்கும் தொந்தரவில்லை. ஆனால் கொஞ்ச நேரம் கதைத்து சகஜமாகிவிட்டால் நிறுத்தமாட்டார்.

வயசு ஐம்பத்தைந்து நடக்கிறது. ஜப்பானில் அணுகுண்டு விழுந்த நாற்பத்தைந்தாம் ஆண்டு ஆவணியில் பிறந்தார் எனச் சொன்னதாக ஞாபகம். சரித்திரம் சம்பந்தப்பட்டதால் அச்சொட்டாய் டானியலின் மனதில் வயது பதிந்து விட்டது. சொன்னபோது – அச்சரித்திர நிகழ்ச்சி நிகழ்ந்த காலகட்டத்தில் தானும் இந்தப் ப+லோகத்தில் அவதரித்தது பற்றி அவர் பெருமைப்பட்டுக் கொண்டாரா என்பதை முகக் குறிப்பிலிருந்து டானியலால் அறிய முடியவில்லை.

வாம்மா சியாமளா வழியில் எங்கேயும் மினக்கெட்டாங்களோ என்று நினைத்தேன்டி என்று கார்க்கதவை திறந்து கொண்டே கேட்டார் தேவசகாயம்

இது போன்ற சந்தர்ப்பங்களில் முதலில் யாருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்பதை அவர் அனுபவத்தில் அறிந்திருந்தார். மரியாதை நிமித்தம் சியாமளாவின் பக்கமாக நடந்து வழிகாட்டி முன்னே போக, அனிதாவும் திலீபனும் பாய்ந்து போய் அழைக்கும் சுவர் மணியை அழுத்தினார்கள். போகிற இடத்தில் அதையிதை தொடாமல் கையை சும்மா வைச்சுக் கொண்டு இருக்க வேனும் என்று ஜாக்கிரதை காட்டிக் கூட்டிக் கொண்டு வந்த பிரளியற்ற பிள்ளைகள்.

பிள்ளைகள் என்றால் அப்படித்தான் விடு சியாமளா என்று டானியல் சொல்வான். பிள்ளைகளின் பிரளியை வைத்து வளர்ப்பை பிழையாக மற்றவர்கள் மட்டுக்கட்டி விடுவார்கள் என்பது அவள் அபிப்பிராயம். பிரளி பண்ணினால் இனிமேல்ப்பட்டு எங்கேயும் கூட்டிக் கொண்டு போவதில்லையென ஒவ்வொரு முறையும் எச்சரிக்கை செய்தாலும் கூட்டித்தான் வருகிறாள்.

சியாமளா நாங்க வந்து ஏழு வருசமாச்சு. நீர் இன்னம் ஊரிலதான் சீவிக்கிறீர். தம்பிக்கு ஆறு வயசு. இப்பவே தமிழ் என்ன விலை என்று கேட்கிறான். அந்த அளவிற்கு வெளடிளைக்காரக் கலாசாரமும் மொழியும் ரத்தத்திலே ஊறிவிட்டது. இன்னும் ஐஞ்சாறு வருசத்தில் போய்பிரன்டோட வந்து நிற்கப் போகிறாள் மகள். டேற்றிங் என்று இரவுகளில் வெளpயே போகப் போகிறாள். மாத்திரையை மறந்து விடாதே என்று சொல்லி அனுப்ப நீர் தயாராயிருக்க வேண்டும். பதினாறு வயதான பெண்பிள்ளை போய்பிரன்ட் இல்லாமலிருந்தால் அவளிடம் ஏதோ கோளாறிருப்பதாக கருதுகிற சமுதாயம் இது. இந்த லட்சணத்தில் பிள்ளைகளை இப்படி நெருக்கிறீரே என்று ஒருநாள் சொன்னான் டானியல்.

அவன் சிலேடையாக மேலைநாட்டு யதார்த்தம் சொல்லும் போதே அவள் பயந்து போனாள். ஆனாலும் கண்டிப்பான வளர்ப்பில் அவளுக்கு நம்பிக்கை அதிகம். தன் தாய் கண்டித்து வளர்த்ததால்தான் தன்னால் எந்த இடத்திற்கும் ஏற்ற விதத்தில் நடக்க முடிகிறது என்றாள். போகிற இடங்களில் அந்தந்த வீட்டாரின் கவனத்தில் படாவண்ணம் இரகசியத்தில் பிள்ளைகளை கண்ணால் மிரட்டுவது அதற்காகத்தான்.

வாசல் கதவைத் திறந்ததுமே சுவரில் இயேசு பாலகனை கையில் ஏந்தியிருக்கும் கனிவான மேரித்தாயின் படம். ஓல்டரில் பகலிரவு பாராமல் பற்றிப் பற்றி நூரும் விளக்கு. சமையலறையை அண்டிய அளவான ஹோல். செற்றிகளுக்குப் போட்டிருந்த உறைகளில் சலவைக்குப் போய்வந்த வாசனை வந்தது. குழந்தைகளில்லாத வீடு – சுவர்கள் பளிச்சென்றிருந்தது. சுவர் நிறத்திற்குப் பொருத்தமான பச்சை நிற கார்பட். வடிவுக்கு வைத்த மாதிரி கறை படாத டிஜிற்றல் டெலிபோன். அரைவாசி திறந்திருந்த படிக்கும் அறைக்குள் ஸ்கிறீன் சேர்வருடன் கணனி விழித்திருந்தது. தேவைக்கு மேல் எதுவுமில்லாத அடக்கமான வீடு.

போன தடவை வந்ததுக்கு இந்த முறை எல்லாம் கழுவித் துடைத்து துலக்கமாய் வேதக்கார வீட்டின் இயல்பான பாங்கில் இருந்தது. எப்போது வந்தாலும் சுத்தமாயிருக்கும் வீடுதான். இன்று இன்னும் விசேசம். சொல்லிவிட்டு வந்ததால் இருக்கலாம் என எண்ணினாள் சியாமளா.

அம்மா அப்பா மகள் ஆக மூன்று பேர் மட்டும். தொண்ணூறில் கெடுபிடி அதிகமில்லாத போது ஆளுக்கு ஒரு லட்சம் வீதம் மூன்று லட்சம் கட்டி வந்து சேர்ந்தவர்கள். வீட்டுக்கு சொந்தமாக உறுதி முடித்து ஐஞ்து வருசங்கள் ஆச்சாம். தகப்பனும் மகளும் வேலைக்குப் போகிறார்கள். வங்கிடி நிலுவை ஏறுமேயொழிய இறங்க சந்தர்ப்பமில்லை. செல்வம் கொடுத்து வைத்தவன்தான்.

மேரி, சியாமளா அன்ரி வந்திருக்கிறா என்று மகளுக்குச் சொல்லும் போதே மனைவிக்கும் சேர்த்து அவர்களின் வருகை அறிவிக்கப்பட்டது. மகள் மேரி தலையெடுத்தபின் மனைவிக்கான அறிவிப்புகளை இப்படித்தான் செய்து வருகிறார் அவர்.

சியாமளாவின் கை பிடித்து திரேசா அன்ரி படிக்கும் அறைக்குள் கூட்டிப் போக, பிள்ளைகள் பதுங்கிய ப+னைகள் போல சத்தமில்லாமல் தொடர்ந்தார்கள். கணனியைக் கண்டதும் கட்டுப்பாடு காணாமல் போயிற்று. திலீபன் மெளசை ஆட்டி மொனிட்டரில் அம்புக்குறியை வேடிக்கை பார்த்தான். இணையத்துள் புகுந்து படங்கள் பார்க்க விரும்பினாள் அனிதா. வீட்டிலுள்ள கணணியில் புகுந்து விளையாடுவது அவர்கள்தான். மின்னஞ்சல் அனுப்புவதற்கு மட்டும் கணணியைப் பாவிப்பான் டானியல். அதுவும் செல்வத்தின் தூண்டுதலின் பேரில் வாங்கியது. நாளாக, அதன் முக்கியத்துவம் நன்றாகவே புரிகிறது. சியாமளா தூசு தட்டுவதற்காக மட்டும் தொடுவாள். நமக்கெதற்கு வம்பு என எண்ணிக் கொள்வாள்.

பிறகு, வீக்கென்டுக்கு எங்க போனீங்க என்று சம்பிரதாயமாகத் தொடங்கினார் தேவசகாயம். ஹோலில் அவனும் அவரும் மட்டுமே. விசயம் சொல்ல வசதியான தனிமை.

‘எங்கேயும் போகேல்லை அங்கிள். டாவி புதுசு போல கிடக்கு. ‘

‘ஓம் வாங்கி ஒரு மாசமாகுது. ‘

சம்பிரதாயங்களில் நேரம் கடத்த அவனால் முடிவதில்லை. சுற்றி வளைத்து மூக்கைத் தொடும் பழக்கமுமில்லை. என்றாலும் எப்படித் தொடங்குவது என்னும் கடிடத்தில் அவன் சங்கடப்பட்டான். சுவர்க்கடிகார செகன்ட் முள்ளின் நகர்வு டக் டக் என்று பெரிதாக ஒலித்த போது அவன் சுதாரித்துக் கொண்டான்.

‘அங்கிள் ஒரு வெரி குட் நிய+ஸ். நல்ல மாப்பிள்ளை. பெயர் செல்வநாயகம். என்னுடைய பெஸ்ட் பிறெண்ட். நல்ல குணசாலி. பிசினஸ் அட்மினிஸ்ட்றேசன் கிராஜுவேட். ஐபீஎம்ல ஜுனியர் எக்சிகூட்டிவ். போர் தவுசண்ட் டொலர்ஸ் சலறி. சொந்த ஊர் திருகோணமலை. குடும்பப் பொறுப்பை அவனிடத்தில் கேட்டுப் படிக்க வேனும். ‘

‘பேரென்ன சொன்னீங்க ? ‘

‘செல்வநாயகம். ‘

அவருக்கு எஸ்.ஜே.வி செல்வநாயகம் நெஞ்சில் வந்தார். இனி தமிழ்மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று காலமாவதற்கு முன்னர் அவர் சொன்ன வாசகம், ஏனோ தெரியவில்லை அவரை நினைக்கும் போதெல்லாம் அவருக்கு ஞாபகத்தில் வந்துவிடும்.

‘தாய் தகப்பன் எல்லாம் இங்கேயா ? ‘

‘ஊரில். ‘

‘இதற்குச் சம்மதப்படுவார்களா ? ‘

‘அதுகள் மகனுடைய விருப்பத்துக்கு மாறாகப் போகாதுகள். அவர்தான் சகோதரங்களை ஆளாக்கி விட்டவர். இப்பவும் கடைசித் தங்கச்சியின் கல்யாணத்துக்கு அடுக்குப் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதோடு பொறுப்பு தீர்ந்துவிடும். மேரிக்குத் தோதான பார்ட்னர் அங்கிள். ‘

‘தாங்க்ஸ் தம்பி. ரெண்டு இடம் இந்தா அந்தா என்று வந்தது. எனக்கென்னவோ அவ்வளவா மனசுக்குப் பிடிக்கவில்லை. ஒன்றிருந்தால் ஒன்றில்லை. குணமிருந்தால் படிப்பில்லை. படிப்பிருந்தால் நல்ல தொழிலில்லை. தொழில் இருந்தால் குடிப்பழக்கம். இப்படி பல தினுசு மாப்பிள்ளைகள். இங்கே வந்தாப் பிறகு எங்கள் பொடியள் நிறைய மாறிவிட்டார்கள். ‘

‘செல்வம் அப்படியில்லை அங்கிள். பத்தரைமாற்றுத் தங்கம். ‘

கையோடு கொண்டு வந்த கலர்ப்படத்தை நீட்டினான் டானியல். இருப்பதிலேயே திறமானதாகத் தெரிந்தெடுத்துக் கொண்டு வந்திருந்தான். கண்ணாடி மாட்டிக் கொண்டு படத்தை விழுங்கிப் பார்த்தார் தேவசகாயம்.

‘நிறம் கொஞ்சம் குறைவோ ? ‘

‘ஆள் பொதுநிறம் ‘

தேவசகாயம் அட்டைக்கறுப்புக்கும் கறுப்புக்கும் இடைப்பட்ட நிறம். தமிழர்களின் பெரும்பான்மை வர்ணம். எண்ணை வழிந்த முகம். அது காணாதென்று நல்லெண்ணை தேய்த்து அப்பி இழுத்த தலை. கனடா வந்த பின்னும் நல்லெண்ணையை விடாத பாரம்பரியம்.

‘வயசென்ன டானியல் ? ‘

‘ரெண்டாயிரம் பங்குனி வந்தா முப்பத்தேழு முடியுது. குடும்பத்துக்காக இவ்வளவு நாளும் தன்னைக் கவனிக்காமல் இருந்திற்றார். ‘

‘வயசு வித்தியாசம் கொஞ்சம் கூட மாதிரித் தெரியுது ‘

‘நேரில் இன்னம் நல்லாயிருப்பார் அங்கிள். ‘

அவர் படத்தை மீண்டும் பரிசோதனை பண்ணினார். ஒரு தொலைக்காட்சிப்பெட்டி வாங்குவதற்கே ஏழெட்டுக் கடைகள் ஏறியிறங்கி ஆயிரத்தெட்டுக் கேள்விகள் கேட்பவர் தேவசகாயம். திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று படித்தும் இருக்கிறார். விடுவாரா!

டானியல் தொடர்ந்தான்.

‘எங்கட அப்பா அம்மாவுக்கு எட்டு வயசு வித்தியாசம். எனக்கும் சியாமளாவுக்கும் ஏழு வயசு. யோசிச்சுப் பாத்தால் இப்படி வித்தியாசமிருக்கிறது பல விதத்தில நல்லது போலத் தெரியுது. கடிட நடிடம் தெரிஞ்ச வயசு. எதிலையும் நாக்கைக் கடிச்ச மாதிரி நிதானம் முன்னுக்கு வரும். எடுத்த உடன கை ஓங்க வராது. நல்லா உறைஞ்ச தயிர் மாதிரி அன்பு கெட்டியாயிருக்கும். கனடாவில எனக்குத் தெரிஞ்சு நல்ல மாப்பிள்ளை எடுக்கிறது கடிடம். ஊரிலயிருந்து இறக்குமதி பண்ணுவதற்கும் அடுக்குப் பண்ணவே வருசக் கணக்காகும். நம்பிக் காலையும் விட முடியாது. ‘

அவரது கண்களைப் பார்த்துக் கொண்டே அடுக்கினான் டானியல். வயது ஒரு பிரச்னையா ? வயதைத் தடையாக நினைப்பாரானால் அது அவரது மடைத்தனம். இன்னும் ஒரு வருசம் போனால் மேரிக்கு மாப்பிள்ளை தேடுவது இலேசில்லை. ஏன் இந்தக் கிழவருக்கு இது விளங்கவில்லை!

‘நீங்க இவ்வளவு சொல்லும் போது நான் என்ன செய்ய முடியும். மாப்பிள்ளை எனக்குப் பிடிச்சிருக்கு தம்பி. குடும்பம் எப்படி ? ‘

‘அங்கிள், இரண்டு பக்கத்துக்கும் நான் வேண்டியவன். எதையும் மறைக்க மாட்டேன். முழுக்க முழுக்க என்னை நீங்கள் நம்பலாம். ‘

எனக்குத் தெரியும் டானியல் என்று அவர் நன்றியோடு அவனைப் பார்த்தார்.

‘உங்க நம்பிக்கைக்குப் பாத்திரமாக நான் இருப்பேன் அங்கிள். தகப்பன் ரிடையர்ட் போஸ்ட் மாஸ்டர். அயலுக்குள் மனுசனுக்கு நல்ல மரியாதை. செல்வமும் ஒரு தங்கச்சியும். செல்வத்திற்கு பதினாலு வயசில் தாய் தவறிப் போயிற்றா. தகப்பன் இரண்டாந் தாரம் கட்டினார். அதில் ரெண்டு தங்கச்சிமாரும் ஒரு தம்பியும். எல்லாரையும் இவர் கரை சேத்திற்றார். கடைசித் தங்கச்சிக்கு இப்ப வீடு கட்டி முடியுது. தம்பி ஏலெவல் எடுத்திற்றார். சின்னம்மா தங்கமான மனுசியென்று சொல்லுவான் செல்வம். அல்லைதொல்லையில்லாத குடும்பம். ‘

‘ஆக்கள் கத்தோலிக்கம் தானே ? ‘

‘இல்லை சைவம். ‘

சொல்லிவிட்டு மனுசன் என்ன சொல்லப் போகிறாரோ என்ற குழப்பத்தில் சொண்டைக் கடித்தான் செல்வம்.

(தொடரும்)

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்